தாயகம் நோக்கிய பயணம்

பெற்றதாயும் பிறந்தபொன் நாடும்
நற்ற வானிலும் நனிசிறந்தனவே

என்ற நல்மொழிக்கு இணைதான் ஏது. புலம்பெயர் வாழ்வில் பல ஆண்டுகள் கடந்து வாழ்ந்தாலும் பிறந்த நாட்டை, ஊர், உறவுகளை, நட்புக்களைச் சந்தித்து, ஒன்றுகூடி உண்டு குடித்து மனம்விட்டுக் கலந்துபேசி மகிழ்வது எவ்வளவு ஆனந்தம். இவற்றை வார்த்தைகளால் விபரிக்கமுடியாது. அனுபவித்தால்தான் அதன் தார்ப்பரியத்தை விளங்கிக் கொள்ளலாம்.

இந்தவருட கோடை விடுமுறையில் நான் பிறந்த தேசமான இலங்கைக்கு யேர்மனியிலிருந்து சென்றிருந்தேன். நிண்டநேர விமானப்பயணத்தின் பின் 18.8.18 அதிகாலை தாயக மண்ணில் காலடி வைத்தபோது என்னையறியாத ஒரு உணர்வு, ஒரு ஆனந்தம், ஒரு மகிழ்ச்சி. இந்த விடுமுறையின் போது வடமாகாண முதலமைச்சரைச் சந்திக்க வேண்டும் என நான் ஏற்கனவே திட்டமிட்டிருந்தேன்.
2018 யூலைமாதம் வடமாகாண முதலமைச்சருக்கு நான் யேர்மனி யிலிருந்துவந்து தங்களைச் சந்திக்க விரும்புகிறேன் எனக் கடிதம் அனுப்பி இருந்தேன். அதற்கு அவர்கள் 28-8-2018 தேதியன்று கைதடியிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்திப்பதற்குப் பதில் அனுப்பியிருந்தார். அதன்படி நானும் எனது ஊர் காந்தி சனசமூக நிலையத்தின் தலைவர் திரு ஆ.பாலேந்திரன் செயலாளர் திரு சி.றஞ்சித் ஆகியோர் சென்றிருந்தோம்.

கௌரவ முதலமைச்சர் நீதியமைச்சர் திரு.சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் ஏற்கனவே நேரம் குறிப்பிட்டபடி காலை பத்து மணிக்கு தமது அலுவலகத்தில் எங்களை வரவேற்றார். மரியாதையின்படி அவருக்கு நான் பொன்னாடை ஒன்றை அணிவித்துக் கௌரவித்தேன். புலம்பெயர்வாழ் எழுத்தாளர்கள், மற்றும் ஊடகங்கள் பற்றியும் மண் சஞ்சிகையின் 28வருடகால செயற்பாடுகளையும் குறிப்பாக ஆதரவற்ற பிள்ளைகளுக்கு எமது வாசகர்கள் செய்துவரும் உதவிகள் எனப் பல விடையங்களை எடுத்துரைத்ததுடன்
நாட்டின் அரசியல் நிலவரங்களையும் மாகாணசபை விடையங்களையும் சுமார் ஒரு மணிநேரம் கலந்துரையாடினோம்.

எனது ஊர் காந்தி சனசமூகநிலையம் சார்பில் மகஜர் ஒன்றையும் நியைலத்தலைவர் கையளித்தார். நமது விடையங்களை எல்லாம் செவிமடுத்த முதலமைச்சர் அவர்கள் எதிர்காலத்தில் உங்கள் தேவைகள், நிலைப்பாடுகள் பற்றி எழுத்துமூலம் அறியத்தரும்படியும் கேட்டுக்கொண்டார். ஒரு திறமைமிக்க முதலமைச்சர், ஒரு உயர்நீதிமன்ற இளைப்பாறிய நீதி அரசர், மேலாக நல்லதோர் மனிதர் இவரைச் சந்தித்த பெருமையும் மகிழ்வோடும் அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றோம்.


பலவருடங்களாக எமது மண் சஞ்சிகையூடாக வாசகர்களின் பெரும் நிதி உதவியால் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள ஜெயபுரம் (ரூத் மிஷன்) சிறுவர் இல்லத்திற்கும் உதவிவருகிறோம். 31.08.2018 அன்று எனது பிறந்தநாள் பரிசாக அந்த இல்லத்தின் பாவனைக்காக ஒரு கை மடிக்கணனி ஒன்றை அன்பளிப்பாக வழங்கினேன். மேலும் இல்ல நிர்வாகி வணக்கத்துக்குரிய சகோதரி கிளாடிஸ் ஜெயரட்ணம் அவர்களிடம் இந்த இல்லத்தின் தேவைகளுக்காக 25.000-00 ரூபாவையும் வழங்கினேன்.
இப்படியாக எனது 2018 விடுமுறை நல்லமுறையில் கழிந்ததை எண்ணி ஆனந்தப்படுகின்றேன். இம்முறை கிழக்கு மாகாணத்திற்குச் செல்லும் வாய்ப்புக் கிட்டவில்லை. இருந்தும் அவர்களுக்கான சேவைகள் தொடர்கின்றன. வடபகுதியின் பல ஊர்களுக்கும் சென்று பல உறவுகள் நண்பர்களைச் சந்தித்ததில் பெரும் சந்தோசம். அன்பர்களே இக்கட்டுரையை வாசிக்கும் நீங்கள் எதாவது கருத்துக்கள் இருப்பின் என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள்…..பயணங்கள் முடிவதில்லை…..

— வ சிவராஜா

918 total views, 1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *