விம்பத்தின் பெருவெளியில் மற்றுமொரு புள்ளி

இது கவிதை பேசும் நேரம். இலங்கை, இந்தியா, புகலிட நாடுகள் என்று பரவிக்கிடக்கும் தமிழ்க் கவிஞர்களின் படைப்புகளை லண்டன் அரங்கில் கொண்டு சேர்க்கும் பெருங் கனவு நிஜமாகும் நேரம். சாத்தியமா?

கொஞ்சம் சாத்தியம் இல்லைதான். பதினேழு கவிதை நூல்களின் தெரிவு என்பது சிறு துளி. ஈழத்தின் ஐந்து தலைமுறைக் கவிஞர்களில் பதினொரு ஈழத்துக் கவிஞர்களைத் தெரிவு செய்தவர், சில காலம் கழித்து ஐம்பத்தியொரு கவிஞர்களை முதல் தொகுப்பிற்காகக் கண்டுபிடித்திருந்தார். மிகுதித் தொகுப்புகளில் இன்னுமொரு நூறு பேரின் பட்;டியலை அவர் வைத்திக்கக் கூடும். இன்னுமொரு பல்கலைக் கழகக்காரர் ஈழத்து எல்லாக் கவிஞர்களையும் அசுரவரிசையில் அடுக்கி ஒரு அபத்தத் தொகுப்பை வெளியிட்டிருந்தார். இம்மாதிரிக் கவிஞர்களின் பட்டியல் கவிதையை கவிதையாக நோக்காது, அதிகாரத்தில் உள்ளவர்களைப் பிரீதி செய்யவும், அந்தந்த நேர அரசியல் சூழலுக்கு இசைவாக ஒத்தோடியும் தயாரிக்கப் படுபவை ஆகும்.

இத்தகைய சூழலில் சிறந்த கவிதைத் தொகுப்புகளைத் தேர்வதென்பது சிரம சாத்தியமானதாகவே தெரிகிறது. இந்தக் கவிதை விமர்சன அரங்கில் விமர்சனத்திற்கான கவிதைகளை தெரிவு செய்வதில் நாங்கள் நிறையவே கஷ்டப்பட நேர்ந்திருக்கிறது. ஈழத்துக் கவிதை வெளியீடுகள் பற்றி மிகத்துல்லியமான தரவுகள் எம்மிடமில்லை. தமிழகத்தின் கவிதை வெளியீடுகள் குறித்து எந்த அனுமானமும் செய்வதற்கில்லை. புகலிட நாடுகளின் நிலையும் இத்தகையது தான். இந்நிலையில் ‘நாங்கள் சமகாலக் கவிஞர்கள் இல்லையா? ஏன் எங்கள் கவிதைகள் தெரியப்பட வில்லை’ என்று கேள்விகள் எழக்கூடும். அதற்கு எங்களிடம் பதில்கள் இல்லை.

ஆனால், இங்கு தெரிவு செய்யப்பட்டிருக்கும் கவிதைத் தொகுதிகள், புறந்தள்ளிவிட்டுப் போகக்கூடிய தொகுப்புகள் அல்ல என்று நாம் துணிவுடன் கூறமுடியும். சமகாலக் கவிதை அரங்கில் பேசப்படப் போகும் இக்கவிதைத் தொகுதிகளின் தேர்வு அனைவருக்கும் திருப்திதரும் என்று நாங்கள் நம்பத்தயாராக இல்லை. இந்த அரங்கில் ஒரு தொகுதிக் கவிதைகளும் தொடர்ந்து மற்றுமொரு அரங்கில் இன்னுமொரு தொகுதி நூல்களும் கவனத்திற் கொள்ளப்படும். எனினும் எங்கள் தெரிவினை மேலும் மேலும் செழுமைப்படுத்துவதற்கான முயற்சிகளில் விம்பம் தீவிர ஈடுபாடு கொண்டுள்ளது.

எந்த குழு நோக்கமுமின்றி, மிக விரிந்த அடிப்படையிலேயே இந்தத் தேர்வு நிகழ்ந்துள்ளது. இந்த கவிதை நூல்களின் மீது விமர்சனப்பார்வையை செலுத்தக்கூடிய விமர்சகர்களை லண்டனிலேயே பெறமுடிந்திருப்பது மகிழ்ச்சி தருவது.இந்த நிகழ்வில் அருந்ததி ரத்னராஜ், த.சௌந்தர் ஆகிய இரு ஓவியர்களின் படைப்புகள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. தமிழ்மக்களின் மத்தியில் ஓவிய ரசனையை மேம்படுத்தியாக வேண்டிய தேவையை விம்பம் உணர்கிறது. விம்பம் அவாவும் கனவுகளில் அதுவும் ஒன்று.

விம்பத்தின் இந்த இலட்சியப் பயணத்தில் எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், ஓவியர்கள், திரைப்படத்துறை சார்ந்தோர், பத்திரிகை யாளர்கள்,நாடகக்கலைஞர்கள், புகைப்படக் கலைஞர்கள், கலை இலக்கிய சுவைஞர்கள் அனைவரோடும் கைகோர்த்துச் செல்ல முனைகிறது. இன்றைய சமகால கவிதை அரங்கும் ஓவியக்கண்காட்சியும் புதிய தரிசனங்களை தந்து, புதிய உணர்வுகளைக் கிளர்த்தும் என நம்புகிறோம்.

பி.குறிப்பு:
விம்பம் தனது பயணத்தில் தொடர்ந்தும் மாதாமாதம் எம்மவர்க்கு மீண்டும் மீண்டு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகின்றது. தனியொரு மனிதனாக இருந்து இதனை வழிநடத்தும் ஓவியர் கிருஷ்ணராஜா குறித்து எல்லோரும் வியந்து கொண்டனர்.

என்னுடைய ஒரு கண்
ஏழு கடல் ஏழு மலை தாண்டி
தென்படாத காதலின் காட்சியை நோக்குகிறது
இன்னொரு கண்ணோ மையலுற்று
காமத்தின் ஆற்றை அளக்கப் பார்க்கிறது
எல்லாக் காதல்களின் உயிரும்
ஏழு கடல் ஏழு மலை தாண்டி இருக்கிறது
அதனால்தான்

அத்தனை பத்திரமாக
யாருக்கும் வசப்படாமல்
யாவரும் தேடியபடி
ஆனால் ஆறோ முயன்றால் கடக்கக் கூடியது
ஓரளவு பிடித்த உடல் வாசனைகள்
ஓரளவு பிடித்த முக பாவனைகள்
ஓரளவு பிடித்த படாடோபங்கள்
ஓரளவு பிடித்த ஒருவரை யொருவர்
சிரமமின்றி ஒரு பாலத்தைக் கட்டிவிட முடியும்
மௌவல் முகைகள்
கண் சிமிட்டும் அக்கரைக்கு
எப்போதாவது
ஆற்றின் மேல் உன்னோடு
நான் கட்டிய பாலத்தை
என் கனவில் காண்கிறேன்
அதே ஆற்றில்
வேறொரு பாலத்தில்
உன்னைப் போலொருத்தி
என்னைப் போல் யாரோடோ

எப்போதுமே

பதைபதைத்து
கனவில் கட்டிய பாலத்தைக் கைவிட்டு
நிஜத்துக்குத் திரும்புகிறேன்
ஆறென்ற பெயரில் சாக்கடைகள் ஓடும்
போஸ்டர்களை அசை போடும்
எலும்புகளே உடல்களான அடிமாடுகளின்
நகரத்துக்கு அங்கே
ஒரு வெக்கை அறையில்
யாரோ கடுகடுத்து அழைக்கத்
திடுக்கிட வென்றே
என் பெயர் கொண்ட
நிஜத்துக்கு

— மு. நித்த்யானந்தன்

788 total views, 1 views today

1 thought on “விம்பத்தின் பெருவெளியில் மற்றுமொரு புள்ளி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *