கறுப்பின மக்களின் வாழ்க்கை எமக்கும் முக்கியம்.

கறுப்பன் கறுப்பி என்றே நாம் சொல்வோம்
கறுப்பின மக்கள் என்று சொல்வதில்லையே!

கடந்த சில கிழமைகளில் சமூகவலைகளில் பல தமிழ் இளைஞர்கள் என்னை நாடினர். Black Lives Matter என்ற தற்போது மிக விஞ்சிய போராட்டத்தை பற்றி வீட்டிலோ, தமிழ்ச்சமூகங்களிலோ பேசும்போது, எதிர்ப்பைச் சந்தித்ததாக சொல்லி இருந்தனர்.
„எங்களுக்கே எத்தனை பிரச்சனைகள் இருக்க, நாங்கள் ஏன் அடுத்தவன் பிரச்சனைக்கு போவான்?“ எனச் சிலர் சொல்ல, சிலரோ „ தமிழீழப்போராட்டத்தைப் பின் தள்ள வந்த சதி தான் இது!“ எனச் சொல்லி உள்ளனர். சரி, கேள்வியை எழுப்புவோம், நாம் ஏன் கறுப்பு மக்களின் உயிர்கள் முக்கியம் எனப் போராடவேண்டும்?

முதலில் பிளைக் லைவ்ஸ் மேற்றர் (Black Lives Matter) என்றால் என்ன எனப் பார்க்கலாம். கறுப்பு மக்களின் அமைப்பு ரீதியான இனவாதத்தை எதிர்த்துப் போராடும் முன்னீடு இது. போலிசாரின் வன்முறையால் இழந்த கறுப்பு மக்களின் உயிர்களுக்கு நியாயம் கோரும் திட்டம். கறுப்பு மக்கள் (ஐரோப்பாவிலும் கூட) பொலிசார் விசாரணைகளுக்குள் அகப்பட்டால் அளவுக்கு மிஞ்சிய கொடூர வன்முறைகளைச் சந்திக்கின்றனர். காரணமின்றி அடித்தோ, சுடப்பட்டோ இறக்கின்றனர். இவர்கள் உயிரழப்பிற்கு காரணமான அதிகாரிகளிற்கு எந்தவித தண்டனைகளும் கிடைப்பதில்லை. இதனால் கறுப்பின மக்களின் உயிர்கள் முக்கியமின்றிப் போகின்றன. இப் போராட்டம் George Floyd இறந்ததும் தொடங்கியதல்ல, 2013ம் ஆண்டு 17வயது சிறுவன் Trayvon MartinI கொடூரக்கொலை செய்த பொலிஸ் அதிகாரிக்கு அமெரிக்க அரசாங்கம் தண்டனை விதிக்காததால் தொடங்கியது. கறுப்பு மக்களை வெள்ளை மக்களுடன் ஒப்பிட்டால் நீதிக்கு மாறான வகையிலே மட்டுமே தண்டனைகளை அனுபவிக்கின்றனர்.

தமிழ் மக்கள் எங்களிடையே இனப்பாரபட்சங்கள் பல உள்ளன. கறுப்பு மக்களுக்கு எதிராக எங்கள் மனங்களில் கருத்துகளும், பேச்சுவார்த்தைகளில் சொற்களும் உள்ளன. கறுப்பின மக்கள் என்று சொல்லாமல், „கறுப்பன், கறுப்பி“ என்று சொல்லுவது அவர்களிளிடயே உள்ள மனிதத்தை பறித்து தரக்குறைப்புச் செய்கிறது. இப்படி எம்மைத் தரம் கூட்டி நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். இந்த தப்புக்கணக்கை ஆதரிக்க வெள்ளை மேலாதிக்க சமுதாயமும் எங்களை Model Minorityயாக நிலைப்படுத்துகிறது.

தங்களுக்கு வழங்கிய வேலையை குறையிலாது செய்து, தங்களுக்கு வகுக்கப்பட்ட இடங்களில் இவர்கள் இருப்பதால் குழப்பமில்லாத இனங்களை Model Minority என்பர். கறுப்பு மக்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக தங்களது சம உரிமைகளுக்கு போராடுவதால் அவர்களுடைய போராட்டம் எந்தளவு மூடிமறைக்க முயற்சிக்கப்படுகிறதோ, அதே அளவு படர்ந்து தொடர்கிறது. எந்தக் கறுப்பின மனிதரை நினைத்தாலும் அடக்குமுறையின் வரலாறு எதிரொலிக்கிறது. இதனால் நான் தமிழ்ழிழப் போராட்டம் தரம் குறைந்தது, பின்வாங்க வேண்டியது எனச் சொல்லவில்லை. எவ்வளவு வராலாற்றுக்கணக்கான அடக்குமுறைகளின் ஒற்றுமைகள் இருந்தாலும், இருதரப்பினர் வராலாறும் ஒன்றல்ல. எங்கள் வரலாற்றிக்கோ, அவர்கள் வரலாற்றிற்கோ கனதி; கூட என அவற்றை போட்டியிட வைப்பதோ, ஒன்றெனச் சொல்வதோ, நியாயமாகாது என்பதே நான் சொல்வது. புற்று நோயாளியிடம் சென்று, AIDS வியாதியும் உள்ளதுதானே, இதில் எது தரம் கூடியது என்று கேட்போமா?

நாம் ஏன் கறுப்பு மக்களின் குரல்களை ஆதரிக்க வேண்டும்?
கறுப்பு மக்களின் செலவிலேயே நாம் பலமுறைகளிள் வாழ்ந்து வருகிறோம். ஓவ்வொரு தமிழ்க்கடைகளிலும் கணிசமான எண்ணிக்கையில் கறுப்பின வாடிக்கையாளர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். அவர்களுடைய மரக்கறி, சிகை அலங்காரப்பொருட்கள், ஒப்பனைப் பொருட்கள் என பலவித கலாச்சாரப் பண்டங்களை விற்று எமது பொருளாதரத்தைப் பாதுகாக்கிறோம். ஈழத்தமிழ் மக்கள் மாத்திரம் கொள்வனவு செய்யும் தமிழ்க்கடைகள் நிலைத்திருக்குமா? ஆகவே எமக்கு தமிழ்க்கடைகள் இருப்பதற்கு, அவர்களும் ஒரு முக்கிய காரணம்.

எமது இரண்டாம் தலைமுறையினர் விரும்பிக் கேட்க்கும் Hip-Hop இசை கூட கறுப்பு மக்களினது தான். Hip-Hop என்பது அடக்கப்பட்டவர்களின் இசை என இருக்க, எம்மினத்தவரும் அதைத் தத்தமது ஆக்கிக்கொண்டனர். இருந்தாலும் அடக்கப்பட்ட கறுப்பினத்திடம் தான் அதுவும் அதன் நாகரீகமும் முதலில் தோன்றின. நாங்கள் Hip-Hop நாகரீகத்தின் படி தொப்பியை அணிந்து, அகலாமான அந்தக் கால்ச்சட்டைகளை அணிந்த வண்ணம், புருவத்தில் கோடுகளையும் முடிவெட்டில் பின்னல்களையும் அணிவது கறுப்பினக் கலாசாரத்தை பின்பற்றுவதே. அவர்கள் செலவிலும், கலாசாரத்திலும் வாழ்ந்த வண்ணம், அவர்கள் குரல்களுக்கு காதுகொடுக்காது போவது, அடக்கிவைக்கும் வெள்ளையினத்தில் இருந்து எம்மை அது ஒருபோதும் வேறுபடுத்தாது.
கறுப்பின உயிர்கள் முக்கியமே இன்றும் என்றும் தமிழருக்கு முக்கியமே.

-ராம் பரமானந்தன்

1,746 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *