எமிலியைத் தேடி ஒரு பயணம் !
கால்களில் சக்கரமும் தோள்ப்பட்டைகளில் இறக்கைகளும் இருப்பதாக நினைத்துக்கொண்டு ஊரெல்லாம், நாடெல்லாம் சுற்றி வரும் காலம் போய், இணைய வளையிலும் வீட்டுச்சிறையிலும் இருக்கும் நாட்களைத் தந்திருக்கிறது 2020, இருப்பினும் அழகான பயணங்களின் நினைவுகளை அசைபோட, அடுத்துவரும் அழகிய நாட்களில் மேலும் பயணப் பட இந்த நாட்களை செலவழிக்கலாம் !
பல நாட்கள் கழித்து முன்னர் எழுதிய நாட்குறிப்பை திறந்து பார்த்தபோது என்றோ ஒருநாள் ஒளித்துவைத்த மயிலிறகைப் போன்று முன்னால் தோன்றியது அந்தப் பயணம், பாரிஸ் பயணம். பாரிஸ் என்றதும் கண்முன்னால் விரிவது விண்ணுயர் ஈபில் கோபுரம், ஆனால் இந்த பாரிஸ் பயணம் அதனைத் தேடி அல்ல, அவளைத் தேடி, “எமிலியைத் தேடி…”
யார் அந்த எமிலி ?
இந்த எமிலி ஒரு பிரெஞ்சு திரைப்படத்தில் வரும் கதாபாத்திரம், அடடே இதையெல்லாம் தேடியா ஒரு பயணம் என்று நீங்கள் கேட்கலாம், பயணிப்பவர்கள் பலவிதம், ஊரைத்தேடி, உறவைத்தேடி பயணிப்போர்க்கு இடையே இந்த எமிலியைத் தேடி பயணிக்க என்ன காரணம் ?
2001 இல் பிரெஞ்சு மொழியில் ” டுந குயடிரடநரஒ னுநளவin ன’யுஅéடநை Pழரடயin” என்ற திரைப்படம் வெளியாகிறது, படத்தின் நாயகியாக ஆதரி தாத்தூ நடிக்கிறார், ஒரு சாதரணமான படமாக ஆரம்பித்து பின்னர் அந்த திரைப்படத்திற்கே உரிய சின்ன சின்ன அழகான விடயங்களால் உலகமக்கள் பலரை கவர்ந்துவிடுகிறது அந்தப்படம்.
ஒரு பாரிஸ் நகர்புறத்தில் கதைக்களம் அமைத்து அந்த நகரினூடே எமிலியை ஒரு அதிகம் பேசாத தனித்திருக்கும் கதாநாயகியாக எமிலியை படைத்து, அவளை சுற்றியிருக்கும் மனிதர்கள் வாழ்க்கையில் அவளை சின்ன சின்ன மகிழ்ச்சியை கொண்டுவரும் தேவதையாக நடமாடவிட்டிருப்பார் இயக்குனர்.
படத்தின் கதையை சொல்லாமல் சில வரிகளை மட்டும் சொல்கிறேன், அது உங்களை இந்தப் படத்தை பார்க்கத்தூண்டலாம், ஏன் பாரிஸ் நோக்கி பயணிக்கவும் தூண்டலாம் !
இளவயதில் தயக்கமும் தனிமையும் கொண்ட பெண், பாரிஸ் நகரத்தின் ஒரு காபி கடையில் வேலைசெய்துகொண்டு தன்னை சுற்றியுள்ளவர்கள் வாழ்க்கையில் சின்ன சின்ன மகிழ்ச்சித் தருணங்களை கொண்டு வந்து பின்னர் காதலில் விழுந்து தன்னுடைய காதலனை எவ்வாறு காதல் நகரம் பாரிஸில் கைப்பிடிக்கிறாள் என்பதே கதைச்சுருக்கம்.
அன்றாட வாழ்க்கையில் பல காரணங்களுக்காக அழகான சின்ன சின்ன விடயங்களை நாம் மறந்துவிடுகிறோம், அதையெல்லாம் எடுத்து கோர்த்தது போல இந்தத் திரைப்படம் அமைந்திருக்கும். பாரிஸ் நகரத்தில் முக்கிய சுற்றுலா இடங்களில் எல்லாம் கதாநாயகி வலம் வருவது போல அமைக்கப்பட்டிருக்கும், அவள் அதிகம் பேசாமல் ஒரு குறுபுன்னகை மட்டும் புரிவதுபோல கதை செல்ல அவள் செல்லும் இடங்கள் எல்லாம் நமது மனத்திலும் பதிந்துவிடுகின்றன.
பாரிஸ் நகரத்திற்கு சென்று சென் நதி ஓரத்தே அமர்ந்து சற்று கண்ணைமூடி எமிலி நடமாடிய இடங்களை கண்முன்னே ஓடவிட்டு சுற்றிவந்தால் நீங்கள் பாரிஸ் நகர்முழுதும் சுற்றிவந்துவிடலாம். இதுபோல் எமிலியை மனதில் வைத்துக்கொண்டு பாரிஸ் நகரம் சுற்றிவருவது நான் மட்டுமல்ல பலர்.
உதாரணம், திரைப்படத்தில் எமிலி வேலை செய்வதாக வரும் கடை இன்றைக்கு புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக மாறியிருக்கிறது, பலரும் அங்கு வந்து அந்தக் கடை முன்னே நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொள்கின்றனர்.
சாதாரண திரைப்படம் தானே என்ன இருக்கிறது இதில் என்றால், இதைக் கேளுங்கள், சமீபத்தில் கண்ணாடித் தவளையின் ஒரு அரிய இனம் கண்டுபிடிக்கப்பட்டது, அதனை கண்டறிந்த அறிஞர் அதற்கு எமிலி என்று பெயர் சூட்டினார், அதற்கு அவர் சொன்னது அந்தத் திரைப்படத்தில் சின்ன சின்ன விடயங்கள் கூட அழகாக காட்டப்பட்டிருக்கும் அதுபோல் இந்த பிரபஞ்சத்தில் இந்த சிறிய கண்ணாடித் தவளை இனமும் அழகானது தான் அதனால் அந்தப் பெயரை சூட்டினேன் என்றார்.
“மாடமாளிகைகள் கட்டி சீமாட்டியாய் வாழ்வதில் இன்பம் இல்லை அவளுக்கு !
கடைக்காரன் அறியாமலே தானிய மூட்டைக்குள் கைவிட்டு விளையாடுவதிலும், உறைந்து போன கிரீமின் மேல்பகுதியை ஸ்பூனால் தட்டியும், தேவதையைப் போல் மற்றவர்களின் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றுவதில் இன்பம் அடைந்த அதிகம் பேசாத, நண்பர்கள் இல்லாத, பெண்களின் அடையாளம் எமிலி!
நீங்களும் ஒருமுறை எமிலியை பார்த்துவிட்டுட்டு அவள் நடமாடிய பாரிஸ் நகரினூடே நடந்து ரசித்து வாருங்களேன் !
-தனசேகர்.பிரபாகரன், தமிழ்நாடு;
1,480 total views, 3 views today