கட்டுப்பாடு

  • தமிழினி பாலசுந்தரி-நியூஸ்லாந்து

வடைக்கு அரைத்தேன்
கொஞ்சம் தண்ணீர் கூடிவிட்டது
தலையில் அடித்துக் கொண்டனர்
சுற்றி இருந்தோர்
கொஞ்சம் மா கலந்து வடை சுட்டேன்
வடைக்குள் மாவா? கூடியது கோபம்
சுட்ட வடையும் சூட்டுடனேயே
முடிந்தும் விட்டது
எனினும் கோபம் அப்படியே
இங்கு மாவல்ல பிரச்சினை
வழமையை மாற்றியதே!

நோக்கம்

நீ எப்போதும் மேலே
ஏறிக்கொண்டு இருப்பது
பெரிதல்ல…
பெருமை கொள்
நீ கீழே இறங்குவதும்
ஒருவரை மேலே
உயர்த்துவதற்காயின்!

சின்ன விடயம் தான்

சின்ன விடயம் தான்
பெரிதாய் ஒன்றுமில்லை
பூந்தொட்டிக்கு தண்ணீர்
விட வேண்டும்
நாளைக்குப் பார்க்கலாம்
என்று விட்டுவிட்டேன்
நாளையும் வந்தது
மீண்டும் …
சின்ன விடயம் தான்!

கடுகுக்கதை – உண்மையும் பொய்யாகி

ஐயாவும் எவ்வளவோ சொல்லிப்பார்த்தார்.
அம்மம்மா ஐயாவை லேசில விடுறதாயில்லை.
பிரச்சனை இதுதான் – ‘இரவு படுக்கேக்கை
ஓடின சுவர் மணிக்கூடு, சாமம் மூன்று மணிக்கு
நிண்டிட்டுது’ என்று ஐயா அம்மம்மாவிடம்
சொல்லியிருக்கிறார். உடனே அம்மம்மா,
‘ஏனப்பா நீங்கள் மூன்று மணிக்கு எழும்பின்னீங்கள்’
என்று கேட்டிருக்கிறார். அதுக்கு ஐயா,
‘தான் இப்ப ஆறு மணிக்குத்தான் எழும்பினனான்’
என்றிருக்கிறார். ‘மூன்று மணிக்கு எழும்பாட்டி எப்படி மணிக்கூடு
சாமம் மூன்று மணிக்கு நிண்டது என்று சொல்லுறியள்,
என்னை ஏமாத்தலாம் என்று நினைக்காதேங்கோ’,
இது அம்மம்மாவின் குரல் உச்சக் கோபத்தில்.
ஐயாவைப் பார்க்கப் பாவமாயிருந்தது – இருந்தும்
இதை எப்படித்தான் அவர் புரியவைக்கப் போறார்
என்ற ஆர்வக்கோளாறில் நான்!

1,230 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *