எதிரணியின் ‘gotta go home’ போராட்டத்தை அரசாங்கம் எவ்வாறு கையாளப்போகிறது?


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ உடனடியாக பதவி விலகி ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் என எதிரணி கோரியுள்ளது, இந்தக் கோரிக்கையை முன்வைத்த ஆர்ப்பாட்டப் பேரணிகளையும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும், ஜே.வி.பி.யும் ஆரம்பித்துள்ளன. பழவவய பழ hழஅந என்ற கோஷத்துடன் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. அரசாங்கத்தைப் பொறுத்தவரை இதனையிட்டு அலட்டிக்கொள்ள அவர்கள் தயாராகவில்லை என்பதை உணரமுடிகின்றது,

கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது அதிகரித்துவரும் மக்களின் அதிருப்தியை கடந்த செவ்வாய்கிழமை மாலை கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டப்பேரணி வெளிப்படுத்தியிருக்கின்றது. விலைவாசி பலமடங்காக அதிகரித்திருப்பதும், அத்தியவசியப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடும் மக்கள் மத்தியில் கடும் சீற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. மக்களின் இந்த உணர்வுகளைப் புரிந்துகொண்டு தக்க சமயத்தில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி இந்தப் பேரணியை நடத்திமுடித்திருக்கின்றது.

ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிடுவதுதான் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் இலக்கு எனவும், அதனை தடுக்க முற்படுவது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம் எனவும் புலனாய்வுப் பிரிவினர் அறிக்கை ஒன்றைக் கொடுத்திருந்தார்கள். அதனையடுத்தே – ஜனாதிபதி செயலகத்தில் அன்று மாலை நடைபெறவிருந்த நிகழ்வுகள் அவசரமாக இரத்துச் செய்யப்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடைபெறவிருந்த சந்திப்பும் ஒத்திவைக்கப்பட்டது, ஜனாதிபதி உட்பட முக்கிய அதிகாரிகள் அங்கிருப்பதையும் தவிர்த்துக்கொண்டார்கள். மக்களின் சீற்றத்தை கட்டுப்படுத்த முடியாததாக இருக்கும் என்பதை அரச தரப்பு புரிந்துகொண்டிருந்தது.

ஜனாதிபதி செயலக முன்வாயிலை தகர்த்துக்கொண்டு உள்ளே செல்ல முற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை அதிரடிப்படையினர் தடுத்துவிட்டார்கள். ஜனாதிபதி செயலக உள்வாயில்வரை ஆர்ப்பாட்டக்காரர்கள் சென்றிருப்பது இதுதான் முதல் முறை. இது ஒரு எச்சரிக்கையும் கூட. ஆனால், மக்கள் மத்தியில் காணப்படும் இந்த சீற்றத்தை எதிரணி எவ்வாறு பயன்படுத்தப்போகின்றது என்பதில்தான் அடுத்த கட்டம் உள்ளது. மாவட்டம் தோறும் ஆர்ப்பாட்டப்பேரணிகளை இதேபோல நடத்துவது ஐக்கிய மக்கள் சக்தியின் உபாயமாக இருக்கின்றது. இதன்மூலமாக நாடு முழுவதிலும் மக்கள் எழுச்சியை ஏற்படுத்தலாம் என அவர்கள் கணக்குப் போடுகின்றார்கள்.

தலைநகரில் பல்லாயிரக்கணக்கானோரைத் திரட்டி ஆர்ப்பாட்டப்பேரணி ஒன்றை, அதிஉயர் பாதுகாப்பு வலயமாக உள்ள ஜனாதிபதி செயலகம் வரையில் நடத்த முடியும் என்பதை ஐக்கிய மக்கள் சக்தி உணர்த்தியிருக்கின்றது. அத்தியவசியப் பொருட்களின் விலை உயர்வு, தட்டுப்பாடு என்பவற்றை முன்னிலைப்படுத்தியே இந்த ஆர்ப்பாட்டப்பேரணி நடத்தப்பட்டதால், மக்களைத் திரட்டுவது இலகுவானதாக இருந்துள்ளது. வாழ்வாதாரப் பிரச்சினையால் சீற்றத்துடனிருந்த மக்கள் பெருமளவளில் தாமாகவே முன்வந்து பேரணியில் இணைந்துகொண்டார்கள்.

ஜனாதிபதி வீட்டுக்குச் செல்ல வேண்டும் பழவவய பழ hழஅந என்ற கோசமே இங்கு முன்னிலைப்படுத்தப்பட்டது. ஆளும் மொட்டு அணியில் அண்மைக்காலத்தில் உருவாகியிருக்கும் உள்கட்சி மோதல்களும், இரண்டு அமைச்சர்கள் பதவிகளிலிருந்து தூக்கப்பட்டமையும் சிங்கள மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. ஜனாதிபதி மீதான அதிருப்தியையும் அதிகரித்திருந்தது. ஆளும் கூட்டணிக்குள்ளேயே ராஜபக்சக்கிள் மீதான அதிருப்தி தீவிரமடைந்திருந்தது. ஆர்ப்பாட்டப்பேரணி வெற்றிகரமாக அமைந்தமைக்கு இவை அனைத்தும் காரணமாக இருந்திருக்கலாம்.

சஜித் பிரேமதாசவைப் பொறுத்தவரையில் இது தனிப்பட்ட முறையிலும் அவருக்கு ஒரு வெற்றி என்று சொல்ல முடியும். காரணம்: சம்பிக்க ரணவக்க உள்ளுக்குள் இருந்துகொண்டே சஜித்துக்கு தொடர்;தும் குடைசல் கொடுத்துக்கொண்டிருக்கின்றார். ராஜபக்சக்களை எதிர்கொள்வதற்கு அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரைத்தான் களத்தில் இறக்க வேண்டும் என்பதுடன், அதற்குப் பொருத்தமானவர் சம்பிக்க ரணவக்கதான் என ஒரு தரப்பு முயற்சிகளை முன்னெடுக்கின்றது. சம்பிக்க ரணவக்க இதனை இலக்காகக்கொண்டே 43 ஆவது படையணி என்ற அமைப்பையும் உருவாக்கியிருக்கின்றார்.

இந்த நிலையில், ராஜபக்‌ஷக்களை எதிர்கொள்வதற்கான வல்லமை தனக்குத்தான் இருக்கின்றது என்பதை இந்தப் பேரணியின் மூலம் சஜித் உணர்த்தியிருக்கின்றார். அவரது உரையிலும் அந்தத் தொனியை உணர முடிந்தது. தன்னுடைய ஆளுமையை, தலைமைத்துவத்தை வெளிப்படுத்த இந்தப் பேரணியை சஜித் பயன்படுத்தியிருந்தார். ஆனால், அரசுக்கு எதிரான இந்தப்போராட்டம் இதனுடன் முடிந்துவிடப்போகின்றதா அல்லது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமா என்ற கேள்வி ஒன்றுள்ளது. போராட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படாவிட்டால், அரசாங்கத்துக்கு பாதிப்பு எதுவும் இருக்காது.

ஐக்கிய மக்கள் சக்தி எனது பலத்தை காட்டியிருக்கும் நிலையில் ஜே.வி.பி.யும் தமது பலத்தை வெளிப்படுத்துவதற்காக இவ்வாறான போராட்டம் ஒன்றை வெள்ளிக்கிழமை முன்னெடுத்தது. பேரணிகளை நடத்துவதிலும், அதற்கான ஆட்களைத் திரட்டுவதிலும் ஜே.வி.பி.க்கு நிகராக மற்றொரு கட்சி நிற்க முடியாது. அதனால், மீண்டும் ஒரு முறை ஜே.வி.பி.யினால் கொழும்பு ஸ்தம்பிதமடைந்தது. எதிர்காலத்தில் வேறு சில நகரங்களும் முடக்கப்படலாம்.

ஆனால், இந்தப் பேரணிகளால் மட்டும் அரசாங்கத்தை மாற்றியமைப்பதோ அல்லது அரசாங்கத்தின் போக்கை மாற்றுவதோ சாத்தியமாகப் போவதில்லை. எந்தளவுக்கு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் ஜனாதிபதி வீட்டுக்குச் செல்லப்போவதில்லை. கோட்டாபாயவைப் பொறுத்தவரையில் அவருக்கு இன்னும் 3 ஆண்டுகள் உள்ளன. பாராளுமன்றத்தில் கொண்டுவரக்கூடிய குற்றப்பிரேரணை ஒன்றினால் மட்டுமே அவரைப் பதவி விலகச்செய்ய முடியும். ஆனால், அதற்கான சாத்தியம் மிகவும் குறைவு.

நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷ தொடரும் நிலையில் பாராளுமன்ற பெரும்பான்மையைக் கைப்பற்றுவதன் மூலம் மட்டும் எதனையும் சாதித்துவிட முடியாது. சந்திரிகா ஜனாதிபதியாக இருந்தபோது பிரதமராக இருந்த ரணிலுக்கு நடந்ததும், பின்னர் மைத்திரி ஜனாதிபதியாக இருந்தபோது ரணில் பிரதமராக இருந்து தடுமாறியதும் உண்மைக்கால உதாரணங்கள். இதனை சஜித் பிரேமதாசவும் உணர்ந்திருப்பதாகவே தெரிகின்றது.

அதனால்தான், பாராளுமன்றத்தை இலக்கு வைக்காமல் ஜனாதிபதியை இலக்குவைத்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டம் அமைந்திருந்தது. ஜனாதிபதி வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்பது பிரதான கோசமாக முன்னிலைப்படுத்தப்பட்டது அதற்காகத்தான். சஜித் பிரேதாசவும் தனது உரையில் ஜனாதிபதி வீடு செல்ல வேண்டும். ஜனாதிபதித் தேர்தலை உடன் நடத்த வேண்டும் என்று முழங்கினார். ஆனால், கோட்டாபாய இந்த ஒருநாள் போராட்டத்துக்குப் பயந்துகொண்டு வீட்டுக்குச் செல்லும் ரகம் அல்ல. அதுவும் சஜித்துக்குத் தெரியும்.

அப்படியானால், கட்சிக்குள் தனது பிடியைப் பலப்படுத்துவதற்கும், அடுத்த ஜனாதிபதி வேட்பாளர்தான்தான் என்பதை உறுதிப்படுத்தவும்தான் இந்த பேரணியை சஜித் ஏற்பாடு செய்திருந்தாரா? அல்லது விரைவில் நடைபெறக்கூடிய மாகாண சபைத் தேர்தல்கள் அல்லது உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக அரசின் மக்கள் செல்வாக்கை ஆட்டங்காணச் செய்வதுதான் அவரது இலக்கா?

எப்படியிருந்தாலும், ராஜபக்சக்களுக்கு சாகமான ஒரு நிலை இப்போது இல்லை. ஆனால், இதனைப் பயன்படுத்தி ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த எதிரணி முற்படும் எனவும் எதிர்பர்க்க முடியாது. தற்போதைய பிரச்சினைகளை தாமே சுமக்க வேண்டிய நிலை இதனால் ஏற்படும் என்ற அச்சம் அவர்களுக்குள்ளமையும் இதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம். ஆனால், அரசின் செல்வாக்கை குறைப்பதும், வரப்போகும் மாகாண, உள்ளூராட்சித் தேர்தல்களுக்குத் தயார்படுத்துவதும் அவர்களது இலக்காக இருக்கலாம்.

714 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *