ஆயுத வியாபாரிகள் ஆசைப்பட்ட போர்!

ஆப்கன் மண்ணிலிருந்து வெளியேறும் முடிவை அமெரிக்கா எடுப்பதற்கு முன்பே, அடுத்த களம் உக்ரைன்தான் என்பது திட்டமிட்டு உருவாக்கப்பட்டது

தி.முருகன்

ஒரு போர்க்களத்தில் யாரும் கவனிக்காத பகுதியில்தான் முக்கியமான சம்பவங்கள் நிகழும். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் இரண்டு வாரங்களைத் தாண்டிய நிலையில், பலரும் கவனிக்க மறந்த மூன்று விஷயங்கள் முக்கியமானவை.

ழூ இரண்டாம் உலகப் போரில் பல நாடுகளின் அழிவுக்குக் காரணமாக இருந்தது ஜெர்மனி. அதன்பின் ஆயுதங்களுக்குச் செலவழிக்கவே கூச்சப்படுகிற நாடாக அது இருந்தது. முதல்முறையாக இப்போது ரஷ்யாவைப் பார்த்து பயந்து இராணுவ பட்ஜெட்டுக்கு 8,35,000 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறது.

ழூ சீனா வரும் ஆண்டுக்கான இராணுவ பட்ஜெட்டைக் கடுமையாக உயர்த்தியுள்ளது. 17,73,000 கோடி ரூபாய் என்பது இதுவரை இல்லாத செலவு.

ழூ உலகின் மிகப்பெரிய ஆயுத நிறுவனங்கள் அமெரிக்காவின் ரேத்தியான் மற்றும் லாக்ஹீட் மார்ட்டின். ஹஉக்ரைன் பிரச்னையால் நமக்கு நல்ல வியாபாரம் கிடைத்துள்ளது’ என்று இந்த இரு நிறுவனங்களும் வெளிப்படையாகத் தங்கள் முதலீட்டாளர்களிடம் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளன. இரண்டுமே ஏவுகணைகளை அதிகம் தயாரிக்கும் நிறுவனங்கள். பணவீக்கம் காரணமாக அமெரிக்காவின் பல ஆயுத நிறுவனங்களின் பங்குகள் சரிவை நோக்கிப் போய்க்கொண்டிருந்தன. உக்ரைன் போர் ஆரம்பித்த நாளிலிருந்து அவற்றின் மதிப்பு உயர்ந்துவருகிறது.

ஒரு போரைப் பேரழிவாகவும் உயிரிழப்பாகவும் எளிய மக்கள் பார்த்துப் பதைபதைக்கின்றனர். கௌரவப் பிரச்னையாகவும், சண்டையில் ஏதோ ஒரு பக்கம் நிற்க வேண்டிய நெருக்கடி நிலையாகவும் தேசத் தலைவர்கள் கருதித் தூக்கம் தொலைக்கின்றனர். ஆயுத வியாபாரிகளோ, தங்கள் வியாபாரம் சூடுபிடிக்கும் என்று உற்சாகம் அடைகின்றனர்.

மரணத்தையும் அழிவையும் வைத்தே ஆயுத வியாபாரம் நடக்கிறது. உலகின் பெரிய நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் எல்லா ஆயுதங்களும் நன்றாக விற்க வேண்டும் என்றால், அவர்களுக்கு ஒரு போர் தேவை. ஆப்கானிஸ்தானை மையமாக வைத்து தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய போர், ஈராக், சிரியா என்று பல நாடுகளுக்குப் பரவி ஆயுத நிறுவனங்களை வாழ வைத்தது. ஆப்கன் இப்போது தாலிபன் கைகளுக்குப் போய்விட்டது. ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு காணாமல்போய்விட்டது. ஆப்பிரிக்க தேசங்களில் நிகழும் உள்நாட்டுப் போர்களால் ஆயுத வியாபாரம் பெரிதாக நடப்பதில்லை.

இந்த அமைதியைக் குலைத்து ஒரு பெரிய போர் நடந்தால்தான் ஆயுதங்களுக்குத் தேவை ஏற்படும். புதிய ஆயுதங்களைப் பரிசோதனை செய்து பார்க்கவும், யார் உருவாக்கிய ஆயுதங்கள் வலிமையானவை என்பதை நிரூபிக்கவும் போரே சரியான வழி.

ஆப்கன் மண்ணிலிருந்து வெளியேறும் முடிவை அமெரிக்கா எடுப்பதற்கு முன்பே, அடுத்த களம் உக்ரைன்தான் என்பது திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. 2017-ம் ஆண்டே உக்ரைனுக்கு அமெரிக்க நிறுவனங்கள் ஆயுதங்களை விற்க ஒப்புதல் அளித்தார், அப்போதைய ஜனாதிபதி ரொனால்ட் ட்ரம்ப். ஹஇது சமாதான முயற்சிகளைச் சிக்கலாக்கி, ரஷ்ய ஜனாதிபதி புடினை போர்முனைக்குக் கொண்டுவந்து நிறுத்தும்’ என்று அப்போதே பலர் எச்சரித்தனர். ட்ரம்ப் போய் ஜோ பைடன் வந்தபிறகும் இது மாறவில்லை. அமெரிக்க ஏவுகணைகள் அடுக்கடுக்காகப் போய் அங்கே இறங்கியதைப் பார்த்து வெகுண்டார் புடின். விளைவாகப் போர் வந்திருக்கிறது.

உலகின் ஆயுத சந்தையை கட்டுப்படுத்தும் முதுல் 5 நாடுகள், அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, சீனா மற்றும் பிரான்ஸ். உலக நாடுகள் பயன்படுத்தும் 75.9 சதவிகித ஆயுதங்களை இவையே வழங்குகின்றன. இஸ்ரேல், இத்தாலி, தென் கொரியா, ஸ்பெயின் மற்றும் பிரிட்டன் ஆகியவை அடுத்த இடங்களில் இருக்கும் ஐந்து நாடுகள். இவை 14.4 சதவிகித ஆயுதங்களை வழங்கின்றன.

இவற்றில் குறிப்பாக அமெரிக்காவும் ரஷ்யாவும் மட்டுமே 57 சதவிகித ஆயுத சந்தையை வசப்படுத்தி வைத்துள்ளன. உலகின் முதல் 10 ஆயுத நிறுவனங்களில் அமெரிக்காவில் மட்டுமே ஐந்து உள்ளன. உலகின் பெரிய ஆயுத நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின், டாங்கிகளை அழிக்கும் ஏவுகணைகளை உக்ரைனுக்குக் கொடுத்திருக்கிறது. பிரிட்டனில் இருக்கும் சாப் நிறுவனம், டாங்கிகளை அழிக்கும் ராக்கெட் லாஞ்சர்களைக் கொடுத்திருக்கிறது. ஜெர்மனி, இத்தாலி, துருக்கி போன்ற நாடுகளும் உக்ரைனுக்கு ஆயுதங்களை விற்றிருக்கின்றன. வரலாற்றில் முதல்முறையாக ஐரோப்பிய யூனியன் தன் செலவில் ஆயுதங்களை வாங்கி உக்ரைனுக்குக் கொடுப்பதாக அறிவித்துள்ளது. இயற்கைச் சீற்றங்களின்போது உதவி செய்வதற்காகத் தன்னார்வலர்களை அழைப்பதுபோல, தங்களுக்காகப் போர் புரிய தன்னார்வலர்களை அழைத்திருக்கிறது உக்ரைன். ஆயுதங்களின் வாசமே அறியாத பலர் போர்க்களத்தில் இப்போது ஆயுதமேந்தி நிற்கிறார்கள். மொத்தத்தில் ஆயுத வியாபாரம் சூடுபிடித்துவிட்டது.

இந்தச் சூழலில் சாமர்த்தியமாக இன்னொரு விஷயத்தையும் செய்ய நினைக்கிறது அமெரிக்கா. ஒட்டுமொத்தமாக ரஷ்யாவின் ஆயுத வியாபாரத்தை முடக்கிவிட்டு, அதைத் தன்வசப்படுத்தும் முயற்சியே அது. போர் விமானங்கள், கவச வாகனங்கள், ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள், எலெக்ட்ரானிக் போர் அமைப்புகள், ஏவுகணைத் தடுப்பு அமைப்புகள் போன்றவற்றைச் செய்யும் 22 ரஷ்ய நிறுவனங்களுக்கு அமெரிக்கா பல்வேறு தடைகளை விதித்திருக்கிறது. ஹஇனி புதிதாக ஆயுத விற்பனை செய்வதோ, ஏற்கெனவே விற்ற ஆயுதங்களுக்குப் பராமரிப்புப் பணி செய்வதோ இனி இந்த நிறுவனங்களுக்குக் கடினமாக இருக்கும்’ என்கிறது அமெரிக்கா.

ரஷ்யாவுக்குப் பெரும் வருமானத்தைத் தருவது ஆயுத ஏற்றுமதிதான். அவர்கள் பெரிதாக மேற்கத்தியத் தொழில்நுட்பங்களை நம்பி இல்லை. அதனால் இந்தத் தடை தங்களை ஒன்றும் செய்யாது என்கிறார்கள் அவர்கள். தாக்குதல்களைத் தாங்கி நிற்கும் அளவுக்கு வலிமையான போர் வாகனங்களைச் செய்வதற்கான மெட்டலர்ஜி நுட்பம், சென்சார் மற்றும் ராடார் தொழில்நுட்பம் போன்றவற்றில் அமெரிக்காவைவிட ரஷ்யா சிறப்பாக உள்ளது. காஷ்மீரின் உறைபனிச் சூழலிலும், அரேபியாவின் தகிக்கும் பாலைவனத்திலும் தடையில்லாமல் இயங்கும். விலையும் குறைவு. அதனாலேயே ரஷ்யப் போர்க்கருவிகள் பலராலும் விரும்பப்படுகின்றன. இந்தியா, சீனா, எகிப்து, அல்ஜீரியா, வியட்நாம், ஈரான், லத்தீன் அமெரிக்க நாடுகள் போன்றவை ரஷ்ய ஆயுதங்களை அதிகம் பயன்படுத்துகின்றன.

ரஷ்யாவின் ளு-400 ஏவுகணைத் தடுப்பு அமைப்பை இந்தியா வாங்கியுள்ளது. அடுத்து ஏ.கே 203 துப்பாக்கிகளை ரஷ்யாவும் இந்தியாவும் இணைந்து இந்தியாவில் தயாரிக்கவுள்ளன. உலகின் மிக வேகமான ஏவுகணையாகக் கருதப்படும் இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணையை மேம்படுத்த ரஷ்யா உதவி செய்யவுள்ளது. அமெரிக்காவின் தடை இந்தத் திட்டங்களை என்ன செய்யப்போகிறது என்று தெரியவில்லை.

இரண்டாம் உலகப்போர் நடந்த நேரத்தில்தான் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் பெரிய ஆயுத நிறுவனங்கள் உருவாகின. போர் முடிந்ததும் அமெரிக்க ஜனாதிபதி ஐசன்ஹோவர், ஹஹஎந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் பெரும் ஆயுத நிறுவனங்களை வளர்த்துவிட்டோம். அவை அகோரப்பசியுடன் இயங்குகின்றன. முடிவில்லாத போர்களே தங்களுக்குக் கொழுத்த லாபம் கொடுக்கும் என்று அவை நினைக்கின்றன. அவற்றின் அதிகார வேட்டை, ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக மாறும்” என்று எச்சரித்தார்.
அது நிஜம் என்பதை ஒவ்வொரு போரும் நிரூபிக்கிறது.

945 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *