இடம் பெயர முதல் இருந்த யாழப்பாணம் இப்ப வரை இல்லை! பிரி(யா)விடை

  • Dr. T. கோபிசங்கர்.யாழ்ப்பாணம்

9 ஜூலை 1995 காலமை ஆசுபத்திரீ; காலமை கணேசரட்ணம் சேர் ward round இல படிப்பிக்கேக்க patientஐ விபரங்கள் சரியாக் கேட்டு வைக்கேல்லை எண்டு senior group இல எல்லாரையும் wardக்கு வெளீல கலைச்சு விட்டிட்டார். ஆர்டை நோயாளி எண்டு சேர் கேக்கேக்க ஒற்றுமையா காட்டிக் குடுக்காம விட்டிட்டு பிறகு “எல்லாம் அரவிந்தனால” எண்டு பெட்டைகள் விரலை நீட்ட, நான் canteenஇல சாப்பிட்டிட்டு வாறன் எண்டு அரோ போனான்.

படிப்பை மட்டுமே மூச்சாயும் மூலதனமாயும் நினைச்சு வந்திருந்த எல்லாப் பொம்பிளைப் பிள்ளைகளும் சில பெடியளும் “சேர் இனிமே இப்பிடி நடக்காது” எண்டு சொல்லிக் காலில விழ, “சரி , இண்டைக்கு இரவும் நிண்டு எல்லாரும் full history யும் கேட்டு வையுங்கோ” எண்டு கணேசர் சொல்ல, “ஓம் சேர்” எண்டு சொன்னது நல்லூர் முருகனுக்கே கேட்டிச்சுது.

பின்னேரம் போல “அடேய் இண்டைக்கு கணேசர் medicos nite க்கு உhநைக பரநளவ ஆப் போறாராம் நாங்கள் பின்னேரம் வரத்தேவேல்லை” எண்டு சிலர் வெளிக்கிட “சேர் சொன்னாக் கட்டாயம் வருவார்” எண்டு பெட்டைகள் வெருட்ட வெளிக்கிட்ட பெடியள் திருப்பி நிண்டிச்சினம்.

ஆர்வக்கோளாறுக்காரர் எல்லாம் அண்டைக்கு வயித்துநோ, கட்டி வெண்டு வந்த ஆளை வைச்சு கட்டி கரைஞ்சு போற அளவுக்கு அமத்திப் பாக்க சிலர் மட்டும் Nursing பழக வந்த பிள்ளைகளோட “சள்” அடிச்சுக்கொண்டு இருந்திச்சனம். புத்தகத்தைப் படிச்சு ஏறாத அறிவை தலைக்கு கீழ படுக்க வைச்சு ஏத்திக் கொண்டு சிலர் இருந்திச்சினம். பாவம் இந்த குறூப் அண்ணாமாரும் அக்காமாரும் மட்டும் இரவிரவா ஆஸ்பத்திரீல நிக்க மருத்துவபீடம் களைகட்டி இருந்திச்சுது.

பின்னேரம் medical faculty Raggingநேரத்தில பாத்தோண்ணயே பிடிச்சதும் சரிவராம, “பழகப் பழகப் பிடிச்சிடும் எண்டு ஒண்டாப் படிச்சதும் சரிவராம கடைசி நாள் வரை முயற்சியை கைவிடாம தன்டை காதல் அம்புகளை இசை ரொக்கற்றில விட்டுக்க கொண்டிருந்தார் ஒரு அண்ணா. மருத்துவ பீட farewell நிகழ்வில இது எப்பவுமே நடக்கிறது. இவர் விட்ட இசைத்தூதுக்கு இணை எங்கடை பீலிங்குக்கு ஏத்த மாதிரி மழை மட்டும் பெய்யத் தொடங்கிச்சுது. முதலாவது வருசத்தில கம்பஸில நடக்கிற ஒவ்வொரு நிகழ்வுக்கும் புதுசா வாறாக்கள் தான் எடுபிடி , ஆனாலும் எங்களுக்கும் எல்லாத்திலேம் பங்கு கிடைக்கும்

கட்டி முடிக்காத இப்பத்தைய hoover Auditorium சுவருக்கு பாயைக் கட்டி வைச்சதால பேர் வந்த “பாய்க்கடை” . இந்தப் பாய்க்கடைப் பக்கம் காத்து வாங்கிறதுக்காக போன கூட்டம் நல்ல “கணகணப்போட” திருப்பி வந்திச்சுது. வந்த குறூப் சும்மா நிக்காமல் சுதியோட வந்து சோகப்பாட்டுக்கும் லயத்தோட ஆடத் தொடங்கிச்சுது. இந்த ஜோதீல பலர் சேர நல்ல பிள்ளைக்கு நடிச்சுக் கொண்டிருந்த சிலர் மட்டும் “வாங்கோ சேந்து குறூப்பா படம் எடுப்பம்” எண்டு சொல்லீட்டு இரகசியமா ரெண்டு பேரா போச்சினம் .

படம் எடுக்கிறதை எட்டிப் பாப்பம் எண்டு போய்ப் பாத்தா இந்த ஊர்க்காரர் இந்தப் பள்ளிக்கூட காரர் எண்டு தேடிக் கூப்பிட்டும் தங்கடை சோடிகளோட இணைஞ்சும் படம் எடுத்துக்கொண்டு இருந்திச்சினம் கொஞ்சப் பேர். சோடிகளோட இணையாத பல பேர் இசையோட இணைஞ்சு இருத்திச்சினம். பெய்த மழையில கேட்ட பெரிய இடி உள்ளயா வெளியையா எண்டு தெரியாத அளவு உச்சம் தொட்டிருந்தது பிரியாவிடைப் partyல. மேடைக்குப் பக்கத்தில கொஞ்சப்பேர் “ குரங்குகள் போலே மரங்களின் மேலே“ எண்டு பாட்டை கும்பலா பாடமாக்கிக் கொண்டு இருந்திச்சினம், கடைசியாப் பாடிறதுக்கு. பிரியிற சோகம் பெரிசாக ஆடிற இடத்தை தாண்டி ஆக்கள் இருக்கிற இடத்தையும் ஆக்கிரமிக்கத் தொடங்கிச்சினம்.

நாசூக்கா , நாகரீகமா “ நாங்கள் வெளிக்கிடிறம்“ எண்டு கொஞ்சக் காஞ்சிபுரம் கட்டினவையும், டை கட்டினவையும் வெளிக்கிடத் தொடங்கிச்சினம். உடுக்கேறியும் கலை வராத ஆக்களுக்கு கலவைப் பானம் குடுத்து ஆட வைக்க முயற்சிகள் தீவிரமா நடந்து கொண்டிருந்திச்சுது.

இரவு ஆசுபத்திரி:
வெளீல பெய்த மழையும் இடிச்ச இடியையும் தாண்டி அங்க எங்களை விட்டிட்டு party போடிறவங்களை திட்டிக்கொண்டிருந்த Studentsக்கு ஆசுபத்திரீல இருந்து “கணேசரட்ணம் சேருக்கு“ அம்புலன்ஸ் போகத் தான் ஆசுபத்திரி எல்லாம் தெரிய வந்திச்சுது ஒருக்கா மட்டும் கேட்ட இடி இறங்கினது நவாலி church க்க எண்டு.

பள்ளிக்கூடக் காலத்தில ஆனந்தராஜா சேரை சுட்டிட்டாங்களாம் எண்டு கேட்ட உடன எப்பிடி கிரவுண்ட் வெறிச்சோடி ஆசுபத்திரி நிரம்பிச்சுதோ அப்பிடித்தான் இண்டைக்கும் நடந்திச்சுது மருத்துவபீடம் வெறிச்சோடி ஆஸ்பத்திரி நிரம்பிச்சுது.

ஆசுப்பத்திரில இருக்கிற ஓரு அம்புலன்ஸை அனுப்பி என்ன செய்யிறது, எத்தினை வாகனம் தேவை எண்டு நிர்வாகம் யோசிக்க ஓட்டோ, மோட்டசைக்கிள், Land master எண்டு நிண்ட எல்லா வாகனத்திலேம் காயக்காரர் வந்திறங்கிச்சனம். வந்தவனுக்குப் பதிவு ஒண்டும் போடாமல் நேர வாட்டில விட்டிட்டு, பெரிய காயக்காரரை வாநயவசந க்கு கொண்டு போகத் தொடங்கிச்சினம். ஒப்பிரேசன் தியட்டருக்க போய்ப் பாத்தா ஒரு trolley இல ரெண்டு மூண்டு பேராக் கிடத்தி இருச்சினம். theatre வாசலிலியே ஒப்பிரேசனுக்கு எடுக்க முதலே ஒவ்வொரு உயிராப் பிரியத் தொடங்கிச்சுது.

வீம்பா அறிக்கை விட்டு நான் டொக்டரா வாறது தான் நோக்கம் எண்டு பாலர் வகுப்பிலயே சொல்லிப் படிச்சு வந்த வெள்ளைக் கோட்டுக் கார Senior அக்கா மார் இறந்ததுக்கெல்லாம் உயிர் கொடுக்க முயற்சிச்சு சரிவராதெண்டு அறிஞ்சு விக்கி விக்கி அழுது கொண்டு நிண்டிச்சினம். கடைசியா OPD யில வந்திறங்கின Tractor ஆல இறங்கக்கூடிய ஆக்கள் இறங்கி வர, இறங்க ஏலாததுகளை தூக்குவம் எண்டு போய் கையைப்பிடிச்சுத் தூக்கினவனுக்கு கைமட்டும், காலைப் பிடிச்சவனுக்கு கால் மட்டும் கிடைச்சுது. முழுசா ஒண்டு கூட இருக்கேல்லை. எல்லாத் துண்டையும் இறக்கீட்டு அண்டிரவு முழுக்க கையெது காலெது எண்டு பாத்த JIG Saw Puzzle மாதிரி பொருத்தீட்டு அடையாளம் கண்டு பிடிச்சாக்களை அப்பிடியே கட்டிக் குடுத்து விட்டிச்சினம் Death certificate கூட இல்லாமல்.
அடுத்தநாள் விடியாத பொழுதில்

செத்தவை ஆரார் எண்டு பேப்பர்காரான் தான் கண்டுபிடிச்சுப் போட்டிருந்தான். பொறுக்காத பொருந்தாத துண்டுகளின் கணக்கு எத்தினை எண்டு இப்பவரை தெரியாது. இந்த சோகத்தை ஊர் அழுது முடியமுதல் அடுத்தடுத்த ஊரிலேம் இடம் பெயர்வு வர எட்டுச் செலவு எட்டாமலும், அந்திரட்டி அந்தரிச்சும் போனது.

உலக வரலாற்றில் முதன் முதலாக ஒரு இனமே மரதன் ஓடியது!
இடம்பெயர்வு 30.10.1995

“ பல்கலைக் கழகம் அகதி முகாமானது” எண்ட தலைப்போட ஒரு நாள் உதயன் வர அதோட சனம் ஒதுங்கின இடம் எல்லாம் அகதி முகாமாக மாற, அண்டின சனத்துக்கு அண்டைக்கு சமைச்சதை பிரிச்சுக் குடுத்துச் சாப்பிட்டிட்டு அடுத்த வேளை கூட சமைக்கலாமா இல்லையா எண்டு சனம் யோசிச்சுக் கொண்டு இருந்திச்சுது.ஸ்பீக்கர் வைச்சு ரோடு ரோடாப் போய் வெளிக்கிடச் சொன்னதை கேக்காம ரெண்டு நாள் பொறுத்துப் பாப்பம் எண்ட சனம், துவக்குச்சூட்டுக்கும் அசையாத சனம், குண்டு விழுந்தாலும் வரமாட்டேன் எண்ட சனம் எல்லாம் கடைசீல வீம்பைக் கைவிட, உலக வரலாற்றில் முதன் முதலாக ஒரு இனமே மரதன் ஓடியது. உயிரற்றதை எல்லாம் அப்பிடியே விட்டிட்டு, மனமில்லாமல் அடை வைச்ச முட்டையைக் கூட அரை உயிரோட கொண்டு போச்சுது.படிப்புமில்லை இனி ஓடிப் பயனும் இல்லை எண்ட சிலர் மட்டும் திருப்பி அடிப்பம் எண்டு அண்ணை வழி போக வழமை போல மற்றவர் எல்லாம் மந்தைகளாய் பிரிந்தனர்.

நான் தான் முன்னுக்கு ஓடிறன் எண்டு வந்தவனெல்லாம் நிண்ட இடத்திலேயே ஓடிக் கொண்டிருந்தான். யாழ்ப்பாணத்தில இருந்த நாவக்குளிப் பாலத்துக்கால சனம் எல்லாம் தென்மராட்சிக்கு, பிரசவிச்சு வெளீல வரக் கஸ்டப்படிற பிள்ளை மாதிரி முக்கி,மூச்சு முட்டி, இஞ்சி இஞ்சியாய் அசைஞ்சு கொஞ்சம் கொஞ்சமாய் வந்துது. “அறுந்து போவாங்கள் இப்பிடி செய்யிறதுக்கு ஒரேடியா குண்டைப் போட்டு எல்லாரையும் சாக்காட்டி விடலாம்” எண்டு ஒரு கிழவி சொன்னது ஆருக்கு கேட்டிச்சோ தெரியேல்லை அவனடிச்ச செல் நீர்வேலி தரவை வரைக்கும் வந்து விழ குடும்பமா, குறூப் குறூப்பா ஓடத் தொடங்கினவை எல்லாம், கூட்டத்தில தாங்கள் எங்க நிக்கிறம் எண்டும் தெரியாம தங்களைச் சுத்தி ஆர் நிக்கினம் எண்டும் தெரியாம தேடிறதையும் கை விட்டிட்டு தனித்துப் போக, வாழக்கைச் சங்கிலிகள் கன அறுந்து போய் தனி வளையங்களாகியது.

விடை பெறாமலே பிரிஞ்ச கம்பஸ் பிரியாவிடையும், சொல்ல முடியாமலே போன இடம் பெயர்வுகளும் கன பேரை பிறகு சேர்க்கவே முடியாத பிரிவிடையாப் போனது தான் சோகம். ஒண்டும் மட்டும் உண்மை இடம் பெயர முதல் இருந்த யாழப்பாணம் இப்ப வரை இல்லை, இனிமேலும்……

129 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *