தமிழர் தாயகத்தில் பிம்ப அரசியல்: யார் பொறுப்பு?
70 ஆண்டுகால போராட்டத்துக்கு
ஈழத்தமிழர்கள்
சாவுமணி அடிக்கிறார்களா?
ஈழத்தமிழ் மக்கள் 70 ஆண்டுகளுக்கு மேலாக எதற்காக போராடினார்கள்- எதனை அடைவதற்காக இலட்சக்கணக்கான உயிர்களை மண்ணுக்கு தியாகம் செய்தார்கள் என்ற அந்த ஒப்பற்ற வரலாறு இன்று திசை திரும்புகிறதோ என்ற ஒரு அச்சம் தமிழ் தேசியத்தையும் தமிழர் மண்ணையும் நேசிப்போரிடம் எழத்தொடங்கியிருக்கிறது. ஜே.வி.பி. ஃ தேசிய மக்கள் சக்தி ஆட்சி மலர்ந்து ஒரு வருடங்களும் சில மாதங்களும் நிறைவடைந்திருக்கின்றன. இந்த ஆட்சிக்கு தமிழ் மக்களுடைய ஆதரவும் இருந்தது என்பதற்கு அப்பால்,அனுரகுமார திஸாநாயக்க வடக்குக்கு விஜயம் செய்யும் ஒவ்வொரு தடவையும் தென்னிலங்கையின் வரவேற்பு போன்று அவருக்கு வடக்கிலும் இடம்பெறுவது கவலைக்குரிய விடயமாகும். அதைவிட, புதிய ஆட்சியாளர்கள், தமிழ் மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்பதைப்போன்று வடக்கில் பிரசாரம் செய்வது பெரும் கொடுமையாகும்.இந்த நிலைமை தொடருமானால் 70 ஆண்டுகால போராட்டத்தின் தியாகங்கள் – அர்ப்பணிப்புகள் – இழப்புகள் அனைத்தும் சிங்கள பேரினவாதிகளின் கோர முகங்களுக்குள் மூழ்கடிக்கப்பட்டுவிடும் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்கமுடியாது.
அனுர வடக்குக்கு பயணம் செய்தால் இலங்கையின் வேறு எங்கு சென்றாலும் இல்லாத அளவுக்கு அவருடைய பிம்பம் பிரபல்யமாக்கப்படுகிறது.அவர் அங்கு சென்று ஒருவரின் தோளின்மீது கைபோட்டாலும் அது பெரும் பேசுபொருளாக்கப்படுகிறது.அதேபோல், அவரது வடக்கிற்கான அனைத்து நிகழ்ச்சி நிரல்களும் தமிழ் மக்களை கவர்ந்தவை போன்றும் அவர் தமிழ் மக்களின் தலைவர் போன்ற ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டு வருகிறது.இந்த பிம்ப அரசியல் தமிழர் தாயகத்தில் எத்தகைய அபாயத்தை உருவாக்கப்போகிறது என்பது தொடர்பில் தமிழ் தலைவர்களோ தமிழ்த்தேசியத்தின் பால் நின்று பயணிப்பவர்களோ இன்னும் சிந்திக்கவில்லை என்பது பெரும் கவலைக்குரியது.
தேர்தல் காலத்தில் தமிழ் மக்களிடத்தில் பிரச்சினைகள் (ஒருசிலவாவது) இருப்பதாக ஒத்துக்கொண்ட அனுரா அணி இன்று அப்படி எதுவும் இல்லை போன்று நடந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.காணாமல் போனோர் என்ற ஒரு விடயம் தமிழர் தாயகத்தில் இருந்ததாகவோ, அல்லது அரசியல் கைதிகள் பலர் சிறைகளில் இருக்கிறார்கள் என்பது பற்றியோ அல்லது பல ஆயிரம் மக்கள் இடம்பெயர்ந்து இன்றும் தங்களது சொந்த நிலங்களுக்கு திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள் என்பது பற்றியோ அல்லது பல ஆயிரம் ஏக்கர் நிலம் இன்னும் இராணுவத்திடம் இருக்கிறது என்பது பற்றியோ வாய் திறக்காது, ஒரே நாடு-ஒரே மக்கள் என்ற தங்களது தாரக மந்திரத்தை தமிழர் தாயகத்திலும் பிரசாரப்படுத்தும் கைங்கரியத்தையே அனுர தரப்பு மேற்கொண்டுவருகிறது.அதற்கு அணுரவின் தமிழ் அடிவருடிகளும் ஒத்தூதி வரும் அதேவேளை, தமிழ் தேசியவாதிகள் என்று கூறிக்கொள்வோர் தங்களது தேர்தல் அரசியலுக்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும்,கடந்தகால ஜனாதிபதிகள் யாழுக்கு செல்லும் நேரங்களில் வீதிகளில் நின்று போராடிய காணாமல் போனோரின் உறவுகளையும் தற்பொழுது காணமுடியவில்லை.இந்த நிலைமைகள் தமிழர் தாயகத்தில் புதியதாக இருக்கும் அதேவேளை,தமிழ்தேசியத்தின் இருப்புக்கு பெரும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியிருக்கிறது.அனுர அரசு ஆட்சிக்கு வந்து 16 மாதங்கள் கடந்தும் தமிழ் மக்கள் விடயத்தில் எந்த விவகாரத்திலும் ஒரு அடிகூட முன்னேற்றம் ஏற்படவில்லை.முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதைவிட,ஒரு அடிகூட எடுத்துவைக்கப்படவில்லை.முன்னைய அரசுகள் கூட ஏதோவொரு சாட்டுக்காவது ஒருசில அரசியல் கைதிகளை விடுதலை செய்திருந்தார்கள்,ஒருசில காணிகளை மக்களிடம் ஒப்படைந்திருந்தார்கள்.ஆனால் இந்த அரசு அப்படியெல்லாம் தமிழ் மக்களிடம் பிரச்சினை இருப்பதாக காட்டிக்கொள்ளவே பின்னிற்கிறார்கள்.
ஆனால் இந்த ஆபத்தான சூழ்நிலைகளை ஒன்றுகூடி ஆராயும் ஒரு அறிவார்ந்த-தைரியமான சமூகம் தமிழர் தாயகத்தில் இருப்பதாக தெரியவில்லை.எது நடந்தாலும் நடக்கட்டும் நாம் எங்களுடைய வேலையே பார்ப்போம் என்ற மனநிலை கொண்டவர்களே இன்று தமிழ் மக்கள் மத்தியில் தலைவர்களாகவும் புத்திஜீவிகளாகவும் செயற்பாட்டாளர்களாகவும் இருக்கிறார்கள்.ஆக குறைந்தது தையிட்டி விகாரைக்கு எதிராக அண்மையில் போராடியவர்கள் கூட ஜனாதிபதியின் யாழ் விஜயாத்தின் பொது ஒரு அடையாளத்துக்காகவாவது போராடவில்லை.இது தான் இன்றைய ஈழத்தேசத்தின் அரசியல் போராட்டத்தின் நிலைமை.
தமிழினத்துக்கு இன்று தேவை தேர்தல் அரசியல் செய்பவர்கள் அல்ல் இன விடுதலைக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் சமூகத்தின் கனவை நிறைவேற்றித்தரும் போராளிகளே.நாளுக்குநாள் தமிழர் தாயகத்தை கபளீகரம் செய்யும் செயற்பாடுகள் மும்முரமாக நடைபெறுகின்றன. அதேபோல்,மக்களின் மனங்களை மாற்றி அவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் வேலைகளும் தடல்புடலாக இடம்பெற்றுவருகிறது.நீண்டகாலமாக மண்ணுக்காகவும் உரிமைக்காகவும் போராடிய ஒரு இனம் இவ்வாறு இருக்க முடியாது.அப்படி ஒரு இனம் மாறுமானால் அந்த இனம் இந்த பூமிப்பந்தில் வாழ்வதற்கு தகுதியில்லாத ஒரு இனமாகவே அடையாளப்படுத்தப்படும். செல்வத்தாலும் வீரத்தாலும் அறிவாலும் உயர்ந்திருந்த ஒரு இனம்; அவை அனைத்தும் அழிவதற்கு காரணமான தரப்புகளுக்கு கூஜா தூக்கும் ஒரு சமூகமாக மாறுவது அந்த இனத்தின் பெரும் சாபக்கேடாகும்.
ஜே.வி.பி.அரசாங்கம் தமிழர்களுக்கு நெருக்கமான ஒரு அரசாங்கம் இல்லை.பேரினவாதத்தின் அதியுச்ச இயக்கம் தான் இன்றைய ஆட்சியாளர்கள்.தமிழர்களுக்கு எதிராக இந்த இயக்கம் செய்தது பல.இன்று அவர்கள் நல்லவர்கள் வேஷம் போட்டு தமிழ் மக்களுடைய வாக்குகளை பெற்றிருக்கிறார்கள்.மிக விரைவில் மாகாண சபை தேர்தல் நடைபெறும் என்ற பேச்சுக்களும் ஸ்ரீலங்காவின் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில்,மேலும் மேலும் தமிழர்களின் மனங்களை வென்று தமிழர் தாயக மாகாண சபைகளையும் கைப்பற்றும் நிகழ்ச்சி நிரல்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் ஒரு சூழ்நிலையில்,தமிழ் மக்கள் தங்களது நிலம்,உரிமை,சுதந்திரம் போன்றவற்றை மனதில் நிறுத்தி தங்களது முடிவுகளை எடுப்பது காலத்தின் தேவையாகும்.1948 ல் பிரித்தானியர் இந்த நாட்டை விட்டு அகன்ற பின்னர் தமிழர் தாயக பகுதியில் தமிழ் மக்களின் இனப்பரம்பலை மாற்றிமைக்கும் செயற்பாடுகள் தொடர்ந்து இடம் பெற்று வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது. கல்லோயா திட்டத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டமிட்ட செயற்பாடுகள் இன்று தையிட்டி திஸ்ச விகாரை வரையில் நீட்சி பெற்றதாகவே காணப்படுகிறது.மிக அண்மைக்காலமாக வடக்கு கிழக்கு பகுதிகளில் மரபுரிமை சார்ந்த சவால்களாக மயிலத்தமடு மாதவனை மேச்சல் தலை விவகாரம், கன்னியா வெந்நீர் ஊற்று, வவுனியா வெடுக்கு நாறி மட விவாகரம், முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் , தையிட்டி திஸ்ஸ விகாரை என விடயங்கள் முடிவுக்கு வராமல் மூடி மறுக்கப்படும் நிலையே காணப்படுகின்றன. தொல்பொருள் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், வன வள திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகார சபை சபை போன்ற நிறுவனங்களூடாக தமிழர்களுடைய இனப்பரம்பலையும் இன அடையாளங்களையும் அழிக்கும் செயற்பாடுகள் தொடர்ந்தவண்ணமே உள்ளது. இவற்றுக்கு எதிராக தமிழ் மக்கள் ஓரணியில் திரண்டு ஒரு எதிர்ப்பை கூட காட்டமுடியாத நிலையில் இருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.மாறாக இந்த அநியாயங்களை அரங்கேற்றிவரும் ஒரு அரச தலைவருக்கு இத்தனை மரியாதை கொடுப்பது தமிழ் இனத்தின் இன்றைய இயலாமையை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
நீண்டகால போராட்ட வரலாற்றை கொண்ட ஒரு இனம் அந்த போராட்ட பாதையிலிருந்து ஒரு சிறுதுளி கூட விலகாமல் இருந்தால் மாத்திரமே அந்த போராட்டத்துக்கான நீதி என்றோ ஒரு நாள் கிடைக்கும். ஆனால்,இத்தனை உயிர்களை தியாகம் பண்ணிய ஒரு இனத்தின் போராட்ட வடிவம் மிக குறுகிய காலத்துக்குள் தடம் புரள்வது ஈழ தமிழினத்தில் மாத்திரமே. அப்படியென்றால் 70 ஆண்டு போராட்டம் எதற்கு?அந்த போராட்டத்தில் மரணித்த உயிர்களின் தியாகங்கள் தேவையற்றவையா? என்பதை ஒவ்வொரு ஈழத்தமிழர்களும் மனதிலிருந்து சிந்திப்பது காலத்தின் தேவையாகும்.
அதைவிட தமிழ் தரப்புகள் என்று கூறிக்கொள்வோர் இவற்றுக்கு எதிராக தமிழர் தாயகத்தை ஓன்று திரட்ட முடியாத கையறு நிலையில் இருப்பது தமிழர்களின் சாபக்கேடாகும்.தமிழ் மக்கள் ஒற்றுமைப்பட்டு இவற்றுக்கு எதிராக திரண்டெழும் வரையில் பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரல் மேலும் மேலும் வீச்சு பெற்று தமிழரின் தாயகத்துக்கான ஆபத்தை நெருங்கிவிடும் என்பதை கூறிவைக்கின்றோம். முதலில் தமிழ் மக்கள் தெளிவடைய வேண்டும். இந்த 70 ஆண்டு போராட்டத்தில் அனைத்தையும் இழந்தவர்கள் தமிழ் மக்களே.ஆகவே அவர்களுடைய செயற்பாடுகள் ஆரோக்கியமாக இருக்கவேண்டும்.ஏனோ தானோ என்று செயற்பட முடியாது. ஆகவே தமிழ் மக்கள் தான் தெளிவான பாதையை தெரிவு செய்ய வேண்டும்.எம்மை யார் ஆட்சி செய்ய வேண்டும்?; எமக்கான விடுதலையை யார் பெற்றுக்கொடுப்பார்கள்? என்பதில் மக்கள் தெளிவடைய வேண்டும். மாவீரர் நாளுக்கு ஒன்றிணைவது போல், நினைவேந்தல்களுக்கு ஒன்றிணைவது போல் ஈழத்தமிழர்களுடைய விடுதலைக்கும் தமிழருக்கு எதிராக நிகழும் சம்பவங்களுக்கு எதிராகவும் தமிழ் மக்கள் ஒன்றிணைவது அவசியம். அது காலத்தின் கடமை.
![]()
