அறளை பெயர்தல்
வயதாகும்போது மூளை மங்குதலைத் தடுத்தல் – நடைப்பயிற்சி
Dr.எம்.கே.முருகானந்தன் – இலங்கை
உடற் பயிற்சி உடல் நலத்திற்கு அவசியமானது என்பது இப்பொழுது பெரும்பாலானவர்களுக்குப் புரிந்திருக்கிறது. இருந்த போதும் அவர்கள் எல்லோரும் அதனைச் செய்வதேயில்லை. அதற்குக் காரணங்களாக இவற்றைச் சொல்லலாம்.
முக்கியமாகச் சோம்பல். பலருக்கும் தங்களது வழமையான வேலைகளைத் தவிர புதிய விடயங்களில் ஈடுபடுவதற்குத் தயக்கமும் சோம்பலும் இருக்கிறது.
புதிய விடயங்களுக்கு நேரம் எவ்வாறு ஒதுக்குவது என்பது தெரிவதில்லை.
“எனது உடல் ஆரோக்கியமாக இருக்கிறது.” எனக்கு ஏன் உடற்பயிற்சி என்பது பலரது விதண்டா விவாதம் ஆகும். கண்கெட்டாற் பிறகு சூரிய நமஸ்காரம் ஏன் எனப் பேச்சுக் சொல்வார்கள். நோய் வராமல் தடுப்பதற்கே முக்கியமாக உடற்பயிற்சி தேவை. நோய் வந்து முட்டிய பின் அல்ல.
உடற் பயிற்சிகளில் மிகவும் எளிதானதும், எல்லோராலும் செய்யக் கூடியதும், சுலபமானதும் நடைப் பயிற்சிதான் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. இந்த நடைப் பயிற்சியானது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என்பதை பல மருத்துவ ஆய்வுகள் சுட்டிக் காட்டியுள்ளன.
ஆனால் நடைப்பயிற்சிக்கும் அறிவாற்றல் குறையாது இருப்பதற்கும் தொடர்பு உள்ளது என புதிய மருத்துவ ஆய்வு சொல்கிறது.
65 வயதிற்கு மேற்பட்ட 300 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்படுதப்படனர். அவர்கள் தினமும் எவ்வளவு தூரம் நடக்கின்றனர் என்பது கண்டறியப்பட்டது. உடனடியாகவும், 9 வருடங்கள் கடந்த பின்னரும் அவர்களது மூளையை MRI ஸ்கான் செய்து பார்த்தனர். ஒவ்வொரு வாரத்தில் 6 முதல் 9 மைல் தூரம் நடந்தவர்களது மூளையிலுள்ள ஆரோக்கிய பகுதியின் (Gray matter) கனவளவு அதிகரித்திருக்கக் காணப்பட்டது.
எனவே இவர்களது அறிவு சார்ந்த செயற்பாடுகள் குறைவதற்கான சாத்தியங்கள் குறைவாகும். அதாவது மூளை மங்குவதற்கான சாத்தியங்கள் குறைவு. ஆயினும் நடக்காதவர்களின் மூளையின் ஆரோக்கியமான பகுதியில் அவ்வாறான நல்ல மாற்றம் அவதானிக்கப்படவில்லை. ஏற்கனவே செய்யப்பட்ட சில ஆய்வுகளின் மூலம் நல்ல உடற்பயிற்சிகள் செய்வதனால் கலங்களில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்பது தெரிய வந்தது. இப்பொழுது நடைப் பயிற்சியும் அவ்வாறே நல்ல மாற்றங்களைக் கொண்டுவரும் என்பது தெரிகிறது.
வேறு எதற்காவது அல்லாவிடினும், எதிர்காலத்தில் அறளை பெயர்ந்து, பிள்ளைகளுக்கும் சொந்த பந்தங்களுக்கும் சுமையாகவும் தொல்லை கொடுப்பாது இருப்பதற்காகவாவது தினசரி நடைப் பயிற்சி செய்யுங்கள்.
அறளை பெயர்தலைத் தடுக்க நவீன தொழில் நுட்பங்களில் ஈடுபாடு காட்டுவதும் உதவும்
முது வயதில் மூளை மங்காதிருப்பதற்கு அறளை பெயர்தலைத் தடுக்க, இன்றை வாழ்விலிருந்து விடுபடாமல் நவீன விஞ்ஞான தொழில் நுட்ப முன்னேற்றங்களில் தொடர்ச்சியாக ஈடுபடுவது உதவும் என்பது முன்னொரு ஆய்வில் தெரியவந்தததை நினைவுபடுத்தலாம்.
கம்பியூட்டர், இணையம், மொபைல் போன் போன்ற நவீன சாதனங்களை, இவை எனக்கு முடியாதது என ஒதுக்கிவிடாது பயன்படுத்துவது நன்மை பயக்கும். பழவகைகள், நார்ப்பொருள் உணவுகள், இலைவகை உணவுகளை தினசரி உணவில் தாராளமாகச் சேர்ப்பதும் அவசியமாகும்.
உடற்பயிற்சி அவசியம் என்பதை வைத்தியர்களும் சரி நோயாளிகளும் சரி ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால், வைத்தியர்கள் சொல்லும் அளவிலான பயிற்சியைச் செய்ய பலருக்கும் முடிவதில்லை. உடலால் முடிவதில்லை என்பது ஒரு காரணம், நேரம் கிடைப்பதில்லை என்பது இரண்டாவது காரணமாகும்.
Dr.Timothy S.Church தலைமையிலான குழுவினர் ஒரு ஆய்வு செய்தனர். அதன் முடிவுகள் துயுஆயு 2007:இதழில் அன்று வெளியாகியிருந்தன. மாதவிடாய் நின்றுவிட்ட, அதீத எடையுள்ள, உடலுழைப்பு அற்ற 464 பெண்களை உள்ளடக்கிய ஆய்வு அது. ஆறு மாதங்கள் செய்யப்பட்டது. உடற்பயிற்சியே செய்யாதவர்கள், வெவ்வேறு அளவிலான பயிற்சிகளைச் செய்தவர்கள் என நான்கு பிரிவினராக வகுத்துச் செய்யப்பட்ட ஆய்வு அது.
தினசரி 10 நிமிடங்கள் அதாவது வாரத்தில் 75 நிமிடங்கள் மட்டும் பயிற்சி செய்தவர்களுக்குக்கூட அவர்களது இருதயத்தினதும் சுவாசப்பையினதும் ஆரோக்கியமானது எந்தவித பயிற்சிகளையும் செய்யாதவர்களை விட அதிகரிக்கிறது என அவ் ஆய்வு புலப்படுத்தியது. ஆனால், இந்தளவு பயிற்சியானது ஒருவரின் எடையைக் குறைக்கவோ, பிரஸரைக் குறைக்கவோ போதுமானதாக இல்லை என்பது உண்மைதான். ஆயினும், வயிற்றின் சுற்றளவைச் சற்றுக் குறைக்கிறது. இது பொதுவான ஆரோக்கியம் அதிகரிக்கிறது என்பதற்கான ஆரம்ப அறிகுறி என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு குறைந்த அளவிலான பயிற்சி செய்து உடல் ஆரோக்கியம் மேம்பட்டால் பிற்பாடு கூடியளவு பயிற்சி செய்வதற்கான உடல் நிலையையும் மேலும் தொடர்ந்து பயிற்சிகளைத் தொடர்வதற்கான மன ஊக்கத்தையும் பெறுகிறார்கள். இவ்வாறு தொடர்ந்து செய்யும்போது மேலும் கூடிய உடல் ஆரோக்கிய எல்லைகளை எட்டுகிறார்கள் என்பதே முக்கியமானது.எனவே, சோம்பிக் கிடக்காதீர்கள். சிறிய அளவிலான உடற் பயிற்சியையாவது ஆரம்பியுங்கள். படிப்படியாக அதிகரியுங்கள். உடல் நலம் நாடி வரும், பிரஸர், கொலஸ்ட்ரோல், நீரிழிவு, மாரடைப்பு, பக்கவாதம் யாவும் விலகி ஓடும்.
![]()
