எங்கடை ஊர் வெள்ளைக் கடல் மீனுக்கு எப்பவும் கடும் கிராக்கி.வெள்ளைக்கடல் எண்டது புன்னாலைக்கும் காரைநகருக்கும் இடைப்பட்ட பரவைக்கடலாகும் அது கிழக்கை அராலியிலை இருந்து ஊரிவரைக்கும் மேற்கே தினகரன் பிட்டி பொன்னாலை வரைக்கும் பாலத்தின்ரை ரெண்டு பக்கமும் நீண்டு கிடக்கும்.கோடையில புருசனோடை சண்டை போட்டுக் கோவிச்ச பொம்பிளையின்ரை முகம் மாதிரிக் காஞ்சு போயிருக்கும் மாரி எண்டால் வெளிநாட்டால கனகாலத்துக்குப்பிறகு வந்த புருசனைக் கண்ட பொம்பிளையின்ரை முகம் மாதிரி அலை பொங்கப் பொங்கப் பூரிச்சுப்போய் இருக்கும்.
ஓரா ஒட்டி திரளி விளை பூஞ்சைக்கண்ணி மதணன் கொய் பாலை கயல் மணலை திருவன் கீளி கலவாய் நண்டு இறால் எண்டதுதான இஞ்சை அதிகமாக பிடிபடும்.இறால் வெள்ளை இறாலோ கறுப்பு இறாலோ ஒரு அளவுக்கு மேலால் வளராது சில ஆக்களின்ரை மனம் மாதிரி .அது மாதிரி நண்டும் பெரிசா வளராது. பெரிசா வளராத இறாலைக் கூனியெண்டும் நண்டை குசுக்காய் நண்டெண்டும் சொல்லுவம்.
சில மீன்கள் சில சீசனுக்கே பெருமளவு பிடிபடும்.உதாரணமாக ஓரா மாரியிலும் கீளி பங்குனி சித்திரை மாதங்களிலும் அதிகம் பிடிபடும்.மாரி காலத்தில் கடல் அளவுக்கு மிஞ்சி நிரம்பின காலத்தில் மீன்கள் பாலத்தின்ரை ரெண்டு பக்கமும் ரோட்டுக்கு மேலாலை கட்டாக்காலி மாடுகள் வெளி பாயுறது மாதிரி பாஞ்சு போறதைப் பார்க்கலாம். முந்தி சில வேளேகளில மண்டான் எண்டிற பெரிய ஊசியைப் பாவிச்சு ரோட்டில் நிண்டு மீனைக் குத்திப்பிடிக்கிறதையும் பாக்கலாம்
பனி காலங்களில இறால் அதிகம் பிடிபடும்.பாலத்தை அண்டியுள்ள ஊர்களில உள்ளவை இறால் வலை படுத்திருப்பினம் . அநேகமாக இரவில அவை சயிக்கில்களில வலையளைக் காவிக் கொண்ணந்து கடலில போடுவினம் . விடியக்காலமை வலையளைப்பிரிச்சு இறால்களைப் பொறுக்குவினம்.
இரவில கடலில நிலவுக்குப் போட்டியா எரியிற சூளை விளக்குகள் பார்க்கத் நல்ல வடிவாயிருக்கும். இறால் பிடிபாடு காரணமாக வாற சண்டை சச்சரவுகள் சில வேளேகளில் வெட்டுக் குத்திலும் முடிஞ்சிருக்குது.
முந்திக் காலமயிலை பெண்டுகளும் ஆம்பிளையளுக்குக்குப் போட்டியா தலையில ஓலைத்தொப்பி போட்டபடி, சீலையை முழங்கால் வரை உயர்த்திக்கட்டிகொண்டு, சிலர் இடைக்கட்டு மட்டும் கட்டியிருபினம், வரிசையில நிண்டு கரப்புகளைப் பாவிச்சு நண்டு இறால் பிடிப்பினம்.
நாங்கள் புன்னாலை பாலத்திற்குப் போய் இல்லாட்டில் வலந்தலைச்சந்திக்குச் போய் காலமை இல்லாட்டிப் பின்னேரங்களில் மீன் வாங்கிக் கொண்டு வருவம். வாங்கியந்த பிறகு அரிவாளில வைச்சு செதில்களைச் சீவியெடுத்துப்போட்டு பேந்து சின்ன சின்ன துண்டுகளா குழம்புக்கு சொதிக்கு பொரியலுக்கு எண்டு வெட்டுவம். இறால் நோண்டுறதுக்கும் கீளி நோண்டுறதுக்கும் கொஞ்சம் பொறுமை வேணும்.ஆச்சி கீளி நோண்டின பிறகு மண்சட்டியிலை வைச்சு கையால சுத்திச் சுத்தி தேய்ப்பா அப்பதான் பிரால் வெடில் போகும் எண்டு சொல்லுவா.
குழம்புக்கு எண்டு ஆச்சி அம்மியில தேங்காய் மல்லி மிளகாய் வைச்சு நல்ல விழுதாக வரும் வரை அரைச்சு உருட்டி உருண்டையாக எடுத்து போடவேண்டிய உள்ளி வெங்காயம் கருவேப்பிலை மண்சட்டியிலை போட்டுக்கூட்டிக்கறி விறகு அடுப்பில் வைப்பா. குழம்பு மணம் வேலிக்குள்ளால வெளிக்கிட்டு றோட்டுக்குப் போகும். இதே மாதிரி பொரியலுக்கும் உப்பு மிளகாய் அரைச்சு கலக்கி பொரிப்பா குழம்பு மணத்துக்குப் பின்னால பொரியல் மணம் வால் பிடித்துக்கொண்டு போகும். சொதியும் தேங்காய் உள்ளி இஞ்சி வைச்சு அரைச்சே கூட்டிவைக்கப்பா.
பொரியல் கொஞ்சம் அப்பு கள்ளுக்கு பைற்சுக் கெண்டெடுப்பார். கீளிப் பொரியல் எண்டால் கொஞ்சம் கூடக்குறைய சிரட்டைக்கை அள்ளிக்கொண்டு போவார். கிழவி எட விழுவானே நான் பெடியளுக்கெண்டு பொரிச்சா நீ கள்ளுக்கெண்டு கொண்டு போறாயே நாசமாப் போவாயெண்டு அன்பாப் பேசுவா.ஊரரசிச் சோறும் இந்தக்கறியளும் சாப்பிட்ட நானுட்பட்ட தலைமுறை குடுத்து வைச்ச தலைமுறை அதிலும் வெள்ளைக்கடல் கயல் மீன் குழம்பிற்கு நிகராக இன்னொரு கறி இன்னும் கண்டுபிடிக்கேல்லை எண்டுதான் சொல்ல வேணும்.
![]()
