தெளிவு
- கலாசூரி திவ்யா சுஜேன்
இந்தப் பரபஞ்சத்தோடு முற்றிலும் ஒன்றாகிக் கலந்து நிறைந்த பாரதியின் நம்பிக்கையில் தெளிவு என்பது வாழ்வின் மையப்புள்ளியாக ஜொலிக்கிறது.
“எல்லாமாகிக் கலந்து நிறைந்த பின்
ஏழைமை யுண்டோடா?-மனமே!
பொல்லாப் புழுவினைக் கொல்ல நினைத்த பின்
புத்தி மயக்கமுண்டோ ?”
தெளிவு என்பது மந்திரச் சொல். அதனிடை நின்றே இன்பம் பிறக்கும். துன்பத்தின் மூலமே தெளிவின்மை தான் என்று உணரும் வரை ஒன்றை விட்டு மற்றோர் துயரில் உழன்று கொண்டே இருக்கும் உள்ளம். அறிவின் அடிப்படை தெளிவு. அன்பின் ஆதாரம் தெளிவு. அறிவும் அன்பும் நிறைந்த வாழ்வு அறத்தின் வழியே பயணிக்கும். தெளிவு இருந்தாலே உள வீரம் கொண்டு செயல்படலாம். செயல்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். மண்ணில் இருந்து விண்ணைத் தொடுவதும் சாத்தியமாகும். சாத்தியமற்ற செயல்களும் சாதாரணமாகும். சதா ரணமென வாழ்வோர்க்கு உதவிடவும் முடியும். முடியாதென்ற எண்ணம் முடியும். முழுவதும் உணரும் ஞானவொளி வீசும்.
பாரதி “தெளிவு” என்ற சொல்லை அறிவு, உறுதி, அன்பு, சத்தியம், ஆன்மிகம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பாக எடுத்துக்காட்டுகிறார். அவர் பார்வையில் தெளிவு என்பது அறிவின் வெளிச்சம் மட்டும் அல்ல. அது உண்மையுடன் வாழும் வாழ்க்கை முறையும், மன உறுதியும், அன்பின் பெருக்குமாகும்.
அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி
அகத்திலோ அன்பினோர் வெள்ளம்
பொறிகளின் மீது தனியரசாணை
பொழுதெல்லாம் நினது பேரருளின்
நெறியிலே நாட்டம் கரும யோகத்தில்
நிலைத்திடல் வேண்டும்; குறி குணம் ஏதும்
இல்லாதாய் அனைத்தாய்க் குலவிடு தனிப்பரம் பொருளே!
தொல்காப்பியர் “அறிவியல்” பகுதியில் அறிவின் தெளிவு பற்றி இவ்வாறு சொல்கிறார்:
அறிவுடைமை தெளிவுடைமை யாவனவே
பொருளுடைமை யாவனவே யென்கொல் —
கருவுடைமை யாவனவே யென்கொல்
அறிவுடைமை யாவனவே யென்கொல்.
அறிவு பெற்றிக்க வேண்டும். அதனைத் தெளிவாகக் குழப்பம் இல்லாமல் உணர வேண்டும் என்பதன் மூலம் தொல்காப்பியர் அறிவு, தெளிவு, உறுதி, உண்மை ஆகியவை ஒன்றோடொன்று இணைந்தவை என்பதை வலியுறுத்துகிறார்.
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல் அறிவு வேண்டும்
திருவள்ளுவர் தெளிவை அன்பு, அறிவு, தேற்றம் (உறுதி), அவாவின்மை ஆகிய நான்கு பண்புகளின் ஒருங்கிணைப்பாகக் கூறுகிறார். இந்நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனே “தெளிவுடையவன்” என்று திருவள்ளுவர் கூறுகிறார்.
அன்பறிவு தேற்றம் அவாவின்மை
இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு.
தெளிவு என்பது பிறரிடம் கருணையுடன் அன்பாக இருத்தல் , உண்மையை உணரும் அறிவு, மன உறுதியுடன் ஐயமின்றி செயல்படும் திறன், பேராசை தவிர்த்தல் என்ற நான்கு பண்புகளை இணைத்து வளமான வாழ்விற்கான அடிப்படைக் கோட்பாட்டை ஏழு சொற்களுக்குள் அடக்கி தமிழுக்குப் பெருமை சேர்க்கிறார். பெரு வியப்பினைத் தருகிறார்.
தெளிவு என்பது உண்மையை அடையும் வழி என்று சோக்கிரட்டீஸ் சொல்ல , தெளிவு என்பது “மொழியின் நேர்மை” மற்றும் “சிந்தனையின் ஒழுங்கு”என்கிறார் அரிஸ்டாட்டில்.
தெளிவுறவே அறிந்திடுதல், தெளிவுதர மொழிந்திடுதல்; சிந்திப பார்க்கே களிவளர உள்ளத்தில் ஆநந்தக் கனவுபல காட்டல் கண்ணீர்த் துளிவரஉள் ளுருக்குதல்இங் கிவையெல்லாம் நீஅருளும் தொழில்க ளன்றோ? (பாஞ்சாலி சபதம்)
மனக்குழப்பம் இல்லாமல், தீர்மானம் எடுக்கும் திறன் தான் தெளிவு என்கிறது உளவியல் துறை. மேலைத்தவர் நோக்கிலும், விஞ்ஞானத்திலும்,உளவியலிலும், யோகா நிலையிலும், பாரதி மண்ணுலகில் இருந்த காலத்திற்கு முற்பட்டோர் கருத்திலும், பிற்பட்டோர் கோட்பாட்டிலும் தெளிந்து மொழிந்தவை யாவும் பாரதியின் கவிதைகளில் தரிசிக்கலாம்.
இனி என்னைப் புதிய உயிராக்கி –
எனக்கேதுங் கவலையறச் செய்து –
மதிதன்னை மிகத் தெளிவு செய்து –
என்றும்சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!
அன்பால் சிவனை உணர்ந்தால் தான் தெளிவு கிடைக்கும், மாயை நீக்கி, மனம் தெளிவுறச் செய்வது சிவபெருமான் அருள் என்று சிவஞானத்தால் தெளிவை தரிசித்த மாணிக்கவாசகர் அறிவினால் அறிய முடியாதான் அருளினால் தெளிவுறுவன் என்கிறார்.
செய்க செயல்கள் சிவத்திடை நின்றெனத்
தேவனுரைத் தனனே;-மனமே!
பொய்கருதாம லதன்வழி நிற்பவர்
பூதல மஞ்ச வரோ?
ஆன்ம வொளிக்கடல் மூழ்கித் திளைப் பவர்க்
கச்சமு முண்டோ டா?-மனமே!
தேன்மடை யிங்கு திறந்தது கண்டு
தேக்கித் திரிவ மடா!
ஆழ்ந்து கருதி ஆய்ந்தாய்ந்து பலமுறை சூழ்ந்து, தெளிந்து, பின் சூழ்ந்தார்க் கெல்லாம் கூறிக் கூறிக் குறைவறத் தேர்ந்து, நினைவெல்லாம் நீயாக பாரதி நிறைந்த வாழ்வு இனிதிலும் இனிது .
![]()
