போதைச் சுனாமி

vm359

நாம் எப்போதும் எதிரிகளால் மட்டும் வீழ்வதில்லை.
இன்று போதைப் பொருள் பாவனையாலும் வீழ்கிறோம்.

  • சேவியர்

போதைப் பழக்கம் என்பதை ஏதோ தனி மனித ஒழுக்கக் கேடு என நினைத்து இயல்பாகக் கடந்து விடுகிறோம். ஆனால் அது தனி மனிதன் சார்ந்த விஷயம் அல்ல, அது ஒரு சமுதாயத்துக்கு விடப்படும் அபாய ஒலி. தேசத்துக்கு விடப்படும் எச்சரிக்கைக் குரல். மனுக்குலத்துக்கே கொட்டப்படும் அழிவின் முரசு.

போதை ஒரு தனிமனிதனை மட்டும் அழித்துவிட்டு அடங்கி விடுவதில்லை. அது கிளர்ந்தெழும் கலைகளின் கால்களை வெட்டிச் சாய்க்கிறது. கலாச்சாரத்தின் பாதைகளில் பெரும் பள்ளம் பறிக்கிறது. குடும்பங்களின் அன்புச் சங்கிலிகளை உடைத்து எறிகிறது. மனுக்குலத்தின் நம்பிக்கைக்குச் சாவுமணி அடிக்கிறது.

மனிதனுடைய மூளை மங்கலாகும்போது எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. போதை மனிதனின் மனதையே முதலில் சாய்க்கிறது. போதை கொண்டு வரும் முதல் சவால் பண இழப்போ, புகழ் இழப்போ, உறவு இழப்போ அல்ல ! அது தெளிவு இழப்பு. மனிதனுக்கு இயல்பாய் இருக்கின்ற சிந்தனையில் கொண்டு வரும் சிதைவு. அவனுடைய செயல்பாடுகளில் இருக்க வேண்டிய நேர்த்தியில் கொண்டு வருகின்ற தொய்வு. சிறப்பாய்த் திட்டமிட்டு, கனவு கண்டு, செயல்படுத்தும் மூளையை முடக்குவதே போதை செய்கின்ற முதல் பணி ! அதுவே சதுரங்க விளையாட்டில் வெட்டப்படும் முதல் காய் !

மனித மூளை முடங்கும்போது மனிதன் முடங்குகிறான். அவனைச் சார்ந்த உலகமும் முடமாகத் தொடங்குகிறது. உலகின் மிகவும் கொடுமையான சிறைச்சாலை என்பது இரும்பினால் கட்டப்பட்டதல்ல, அது போதையினால் கட்டப்பட்டதே ! மூளை எனும் கூர்மையான கத்தியை போதை கொஞ்சம் கொஞ்சமாய் துருப்பிடிக்க வைக்கிறது. காலம் செல்லச் செல்ல, ஒரு வைரத்தை வெட்ட வேண்டிய கத்தி, ஒரு காய்கறியைக் கூட வெட்ட முடியாமல் முழுமையாய் செயலிழந்து விடுகிறது.

தேசிய போதை சிகிச்சை மையத்தின் புள்ளி விவரக் கணக்கின் படி 3.1 கோடி இந்தியர்கள் இன்றைக்கு போதை சார்ந்த நோய்களினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இது தேசத்தின் மிகப்பெரிய சவால். போதையின் பிடியில் கிடக்கும் மனம் உற்சாகம் இழக்கும், வீரியம் இழக்கும், உணர்வுகளை இழக்கும், எளிதில் கோபமடையும், நிலையாமையை அணிந்து கொள்ளும். மொத்தத்தில் வேலை, பணம், புகழ், உறவு அனைத்தையும் இழக்கும்.

நம்மைச் சார்ந்த மக்களில் யாராவது இத்தகைய போதையின் வழியில் நடப்பதையோ, கிடப்பதையோ கண்டால், அவர்களை அவமானத்துடன் பார்த்துக் கடக்காமல், கரிசனையுடன் நெருங்கி உதவுவதே சக மனிதராய் நாம் செய்ய வேண்டிய பணியாகும்.

கலை உலகத்தை எடுத்துக் கொண்டால், கலைகளில் உச்சம் தொடும் கலைஞர்கள் கூட பாதி வழியில் போதையில் சிக்கிக் கொண்டு முழுமையாய் அழிந்து விடுவதைப் பார்க்கிறோம். கலைக்கு தெளிவு அவசியம். கற்பனை சக்தி அவசியம். அவற்றையே போதை முதலில் படுகொலை செய்கிறது.

நம்மைச் சுற்றி பல எழுத்தாளர்கள், நடிகர்கள், இசையமைப்பாளர்கள் போதையினால் வீழ்ச்சியடைந்து, மாட்சியிழந்து அழிந்து போனதை நாம் கண்டிருக்கிறோம். திறமை எந்த அளவுக்கு அவர்களை உச்சத்தில் சுமந்து சென்றதோ, அந்த அளவுக்கு போதை அவர்களை பழியின் பள்ளத்தாக்கில் போட்டுப் புதைக்கிறது. விஷத்தைச் சுமந்து கொண்டே அழகியலைப் படைக்க முடியாது. போதை, ஒரு ஓவியனின் வண்ணக் குடுவையில் இருக்கும் வண்ணங்களைக் கவர்ந்து சென்று விடுகிறது. பின் அவனுடைய தூரிகையைத் திருடுகிறது. கடைசியில் ஓவியனையே திருடிவிடுகிறது.

ருNழுனுஊ சொல்கின்ற புள்ளி விவரம் திடுக்கிட வைக்கிறது. சர்வதேச அளவில் கலைஞர்களில் 18 விழுக்காடு பேர் போதையினால் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது அது. அவர்களுடைய மன அழுத்தம், படைப்பு வறட்சி, வீழ்ச்சி அனைத்துக்கும் போதையே காரணமாய் மாறிவிடுகிறது.

எந்த ஒரு கலை விழாவிலும் போதை சமாச்சாரங்களை இணைக்காமல் இருக்கின்ற ஒரு குறைந்த பட்ச துவக்கத்தை நாம் உருவாக்க வேண்டும். போதைக்கு எதிரான கலைப் படைப்புகள் சமூகத்துக்குத் தேவை. அவை கலைகளைப் பார்ப்பவர்களுக்கும், படைப்பவர்களுக்கும் பயனளிக்கும்.

போதையில் கிடக்கும் ஒரு நபரை மீட்பது என்பது, அவரைச் சார்ந்த பத்து பேரைக் காப்பாற்றுவதற்குச் சமம். ஏனெனில் எல்லா போதை சிக்கல்களும், உறவுச் சிக்கல்களில் தான் சிக்கிக் கிடக்கும். ஒவ்வொரு போதை மாயைக்குப் பின்னும், சிதிலமடைந்து அழும் ஒரு குடும்பம் இருக்கும். ஒவ்வோர் பலவீனமான போதை மனிதனுக்குப் பின்னும் கண்ணீர் விடும் பெற்றோரின் கதறல் கதைகள் இருக்கும்.

போதை மனிதர்களின் இணையரும், பிள்ளைகளும் சொல்ல முடியாத அதிர்ச்சி வாழ்க்கையையே தினம் தினம் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். போதை நம் வீட்டின் கதவைத் தட்டுவதில்லை, உடைக்கிறது ! அது நம் வாழ்க்கையை அசைப்பதில்லை, சிதைக்கிறது. தனியே ஒரு மனிதன் போதையோடு வைத்துக் கொள்ளும் உறவு, சமூக உறவுகளை நீர்த்துப் போகச் செய்கிறது. இந்தியாவில் நடக்கும் வன்முறை நிகழ்வுகளில் நாற்பது விழுக்காட்டுக்கு போதையே அடிப்படையாய் இருக்கிறது.

குடும்பங்களில் இத்தகைய போதையின் முதல் சுவடு நுழையும் போதே மிகக் கடுமையாய் அதை எதிர்க்க வேண்டும். வெளியே சொன்னால் அவமானம் என அடக்கி வைத்தால் அது பூதாகரமாகி பின்னர் வெளியே தெரிய வரும். விதையாய் இருக்கும்போதே உடைப்பது எளிது, மரமாய் வளர்ந்தபின் அழிப்பது கடினம்.

சும்மா ஒரு டைம்பாஸ் என ஆரம்பமாகும் போதை தான், டைமையே விழுங்கி ஏப்பம் விடும். மனிதனுடைய மிகப்பெரிய அவலமான பொழுதுபோக்கு இந்த போதை தான். பணத்தை கொஞ்சம் கொஞ்சமாய் இழுத்து, அழித்து நம்மை நடுத்தெருவில் நிர்வாணியாய்க் கொண்டு வந்து நிறுத்தும். முதலில் நம் பாக்கெட்டைக் காலியாக்கும், பின் குடும்பத்தைக் காலியாக்கும், பின் நம் எதிர்காலத்தையே காலியாக்கும் !

சும்மா ஒரு புள்ளி விவரம் சொல்ல வேண்டுமென்றால் இந்தியாவில் ஆண்டொன்றுக்கு இந்த போதையினால் வருகின்ற நோய்கள், குற்றங்கள், பொருட் சேதங்கள் இவற்றுக்காக செலவிடப்படும் தொகை எவ்வளவு தெரியுமா ? ஒன்றரை இலட்சம் கோடிகள் !!! இது ஒரு தேசத்தின் முதுகெலும்பையே முடமாக்கி விடுகிறது.

பொருளாதாரப் பாதுகாப்பு, நல்லொழுக்கம், போதையினால் விளைகின்ற தீமைகள் போன்றவற்றை குழந்தைப் பருவத்திலிருந்தே பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். புற்று நோய் மையங்களில் ஒரு நாள் பயணம் செய்து வருபவன் வாழ்நாள் முழுவதும் புகை பிடிக்கத் தயங்குவான். அத்தகைய பார்வையிடல் அனுபவங்களை சிறு வயதிலிருந்தே பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும்.

சிறு வயதுக் கல்வி ஒரு நாட்டின் எதிர்காலத்துக்கான சேமிப்பு. நாடு எப்போதும் எதிரிகளால் வீழ்வதில்லை. தன் நாட்டு மக்களின் பழக்கங்களாலேயே வீழ்கிறது. எப்படி மத வெறி ஒரு நாட்டைச் சூறையாடி மனிதாபிமானமற்ற நிலமாக ஒரு செழிப்பின் நிலத்தை உருவாக்குதோ, அதே போல தான் போதையும். எப்படி ஜாதி வெறி ஒரு சமூகத்தை குருதிக் கடலில் மூழ்கடிக்குதோ அதே போல தான் போதையும். எப்படி இனவெறி ஒரு நிலப்பரப்பையே கபளீகரம் செய்யுதோ அதே போல தான் போதையும். எனவே தான் போதை என்பதை தனி மனித ஒழுக்கப் பிரச்சினை என பார்க்காமல் சர்வதேசப் பிரச்சினையாய்ப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது.

ஒரு மரத்தில் பூச்சி அரிக்கத் தொடங்கினால் அது முதலில் வெளியே தெரியாது. சில ஆண்டுகளுக்குப் பின் வளர்ச்சியில் தேக்கம் தெரியும், கனி கொடுப்பதில் மலட்டுத் தன்மை தெரியும், பல ஆண்டுகளுக்குப் பின் திடீரென ஒரு நாள் மரம் முழுமையாய் கீழே சாயும். அப்படித் தான் போதையின் தாக்குதலும் இருக்கும்.

இந்தியாவின் போதைப் பொருள் பயன்பாடு கடந்த பத்தாண்டுகளோளில் முப்பது விழுக்காடு அதிகரித்திருப்பதாய்ச் சொல்கிறது ஒரு புள்ளி விவரம். பதினைந்து வயது முதல் முப்பத்தைந்து வயது வரை உடையவர்களை இது தீவிரமாய்த் தாக்குகிறது. எனவே தான் இதை மிகவும் நுணுக்கமாகவும், விரைவாகவும், ஆழமாகவும் சிந்திக்க வேண்டியது அவசியம்.

சிந்திப்போம் ! போதை என்பது ஒரு பலவீனமல்ல, அச்சுறுத்தல் !
போதை என்பது உயரம் அல்ல, துயரம்.

எனவே,
போதையற்ற சமூகம் நம் கனவாய் அல்ல,
முடிவாய் இருக்கட்டும் !

Loading