ஒவ்வொரு வீடும் இருண்டிருக்கும் அவ்வீட்டின் தாய் விழிக்கும் வரைஆஹா ! உயிரினும் இந்த பெண்மை இனிதடா !

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என வீட்டுக்குள் பெண்களைப் பூட்டி வைத்த காலத்திலேயே பெண் விடுதலைக்குப் பாடுபட்ட பாரதி கண்ட இலட்சியப் பெண் இவள்.
இனிமையும் மென்மையும் அன்பும் பொறுமையும் மட்டுமே பெண்களின் அணிகலன்கள் என்று இருந்த நிலையை மாற்றி இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம் என பெண்களுக்கு புது விதி சமைத்த பாரதி கண்ட இலட்சியப் பெண், நெஞ்சில் நீதியை ஆபரணமாக்கினாள். கரங்களில் புத்தகங்களைப் புனைந்தாள். வாக்கினில் வலிமை சேர்த்தாள். நிமிர்ந்த நன்னடையினில் அறமும், நேர்கொண்ட பார்வையில் திறமும் , துணிவெனும் துணியும் தரித்தாள்.
யார்க்கும் எளியனாய் யார்க்கும் வலியனாய் யார்க்கும் அன்பனாய் யார்க்கும் இனியனாய் வாழத் தெரிந்தவள் . சாஸ்திரங்களும் , நவீன விஞ்ஞானங்களும் கற்றுத் தெளிந்தவள் . பிறநாட்டு நூல்களை தமிழ் மொழியில் எழுத வல்லவள். வெளிநாட்டவரும் வணங்கும் வகையில் நம் கலாசாரங்களைப் பேணத் தெரிந்தவள். ஆம் ! பாரதி கண்ட இலட்சியப் பெண் இவள் .
சோர்விலாள். அச்சமிலாள். கேட்டிலும் துணிந்து நிற்பாள் . குன்றென நிமிர்ந்து நிற்பாள். சொல்வது தெளிந்து சொல்வாள் .மானம் காத்து நிற்பாள். பணத்தினைப் பெருக்கவும் தெரிந்திருப்பாள். தானத்திலும் சிறந்திருப்பாள். தனி ஒருவர்க்கு துயர் வரினும் ஜகத்தினை அழிக்கும் சினம் கொள்வாள். ரௌத்திரம் பழகியிருப்பாள். கருணை வடிவாகி நிற்பாள். கவியும் கலையும் மேவிட ஞானரதத்தினில் சென்றிட வல்லவள். செய்யும் தொழிலே தெய்வம் என எவ்வித வேலைகளையும் விரும்பியே பொறுப்பேற்பவள்.
ஆம் ! பாரதி கண்ட இலட்சியப் பெண் இவள்.
பெண் குழந்தையை செல்வக் களஞ்சியம் என்றும். தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம் ஓருருவாய் சமைந்த காதலியே யோகம் என்றும் , மனைவியே சக்தி என்றும் , போற்றித் தாய் என்றும் ஆண்கள் கொண்டாடும் வகையில் அறிவிலோங்கி வையம் தழைக்க வாழ்பவள்.
தனைத் தான் ஆளத் தெரிந்தவள். தன்னிகரில்லா வாழ்வினை தன் வசமாக்க வல்லவள். ஆணையிட்டால் அடிபணியாள் ஆனால் இப்பிரபஞ்சமே இவளுக்கு சேவகம் செய்யும். ஆம் ! பாரதி கண்ட இலட்சியப் பெண் இவள்.
மெய்யுருவாகி பெண்ணுரு போந்து நிற்பது தாய் சிவசக்தி என்று அறியும் ஆற்றல் நமக்கு இருந்தால், அவள் கையினை கண்ணில் ஒற்றி களித்து நின்றாடுங்கள், போற்றி போற்றி வாழி பல்லாண்டு என்று பாடிடுங்கள். ஆம் ! பாரதி கண்ட இலட்சியப் பெண் இவள்.இவள் எம்மை பெற்ற தாயாகவும் இருக்கலாம்.
அன்றாடம் உழன்று மடியும் சுமை வரினும் , அன்புடையோர் சுகத்தினில் இன்பம் கண்டு மீண்டும் உயிர்க்கும் தாய்மையின் தவத்தினால் இயங்குகிறது இப்புவி. ஒவ்வொரு வீடும் இருண்டிருக்கும் அவ்வீட்டின் தாய் விழிக்கும் வரை ( கலீல் கிப்ரான் ). வாழ்வின் வெளிச்சம் பெண். ஆதாலால் தான் பாரதி புதுமை பெண் ஒளி வாழி பல்லாண்டு என்று வாழ்த்துகிறார்.
ஆதலினால் பெண்மையைப் போற்றுவோம். அவர்கள் தன்மையைப் பேணுவோம். கண்முன் ஓர் பெண்வரின் கடவுள் என்று எண்ணுவோம். பெண்ணை பெண்ணாக வாழ விடுவோம். வந்த வாழ்வின் பயன் கிட்டும். இவ்வையம் சிறக்கும். வசந்த கணங்கள் மலரும். அன்பும் ஆனந்தமும் அமைதியும் எங்கணும் நிலவும். நம் உயிர் நிறையும்.
2025 சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி வெற்றிமணி ஊடாக கௌரவம் பெற்ற அனைத்து பெண் ஆளுமைகளையும் பாரதி கண்ட இலட்சிய பெண்களாகவே தரிசித்து வாழ்த்திப் பணிகிறேன்.