AI எழுதும் கட்டுரைகள்

ஒரு படைப்பாளி இன்னொரு படைப்பாளியைப் போல எழுதி சாதிப்பதில்லை.
ஆனால், அதை ஏ.ஐ சாத்தியமாக்கித் தரும்.
எந்த ஒரு படைப்பை எழுதினாலும் தொழில்நுட்பம் படைப்பாளிக்கு
பேனாவாக இருக்கலாமே தவிர மூளையாக இருக்கக் கூடாது
சேவியர்
ஏ.ஐ எழுதும் கட்டுரைகள் எனும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுத ஆரம்பித்த போது அதை சாட் ஜிபிடியிடமே கேட்டால் எப்படி இருக்கும் என யோசித்துப் பார்த்தேன் ! கேட்டால் நான்கு பக்கத்துக்கு நீட்டி முழக்கி ஒரு கட்டுரை தரும் என்பதில் இம்மியளவும் சந்தேகமில்லை. அது சுவாரஸ்யமாய் இருக்கலாம் என்பதிலும் சந்தேகமில்லை. ஆனால், இவற்றில் என்ன ஜீவன் இருக்கிறது ? இவற்றில் என்ன ஆத்மார்த்தம் இருக்கிறது என்று யோசித்தால் கவலையாக இருக்கிறது.
கட்டுரை என்பது வெறும் தகவல்களின் திரட்டல்ல, அவை பூக்களைக் கோத்து மாலையாய் எழுதும் கலை. எழுதும் போதே எழுத்தாளர் ஒவ்வொரு மலராய் எடுக்கிறார், ரசிக்கிறார், அதன் வாசனையை நுகர்கிறார், அதை மாலையாய்க் கட்டும் போது வாசகன் என்ன மாதிரியான உணர்வை அடைவான் என்பதை யோசிக்கிறான். அந்த மாலை வாசகனைக் கவருமா, வாசகனின் வாழ்க்கைக்குப் பயனுள்ளதாய் இருக்குமா என யோசிக்கிறான். எந்த வகையிலும் எதிர் மறை சிந்தனைகளைப் பகிரக் கூடாதென கவனமாய் இருக்கிறான். ஆனால், ஏ.ஐ அப்படியெல்லாம் யோசிப்பதில்லை. தனது அல்காரிதம் எதை அள்ளிக் கொண்டு வருகிறதோ அதைத் தோரணம் கட்டித் தோளில் தருகிறது.
அந்த மாலை, திருமண வீட்டுக்கானதா ? அல்லது கல்லறைத் தோட்டத்துக்கானதா எனும் கவலையே அதற்கு இல்லை. அந்த மாலையில் வாழ்த்துகள் விழுமா, கண்ணீர் விழுமா என அது சிந்திப்பதில்லை.
மகாத்மாவைப் பற்றி எதுவும் அறியாமலேயே, மகாத்மா காந்தியின் வாழ்க்கையை எழுதி முடிக்கும். காந்தீய சிந்தனைகளையெல்லாம் அது அசைபோடுவதில்லை. அப்படியே கையை உதறிவிட்டு, கோட்சேயின் வாழ்க்கை வரலாறை எழுதப் போய்விடும். அது தான் ஏ.ஐ செய்யும் வேலை.
கற்பனையாய் ஒரு தேசத்தை உருவாக்கும். நமது கற்பனைகளை அதன் காதில் கொட்டினால், அது அதன் கற்பனையையும் சேர்த்து ஒரு புதிய உலகைப் படைக்கும். ஆனால் அதில் ஒரு சிற்பியின் கவனமோ, அல்லது தனது உயிரை ஊற்றும் ஒரு கலைஞனின் ஜீவனோ இருக்காது. வேண்டாம் என்றால் அடுத்த கணமே கலைத்துப் போட்டு விட்டுக் கடந்து போய்விடும்.
ஒரு காலத்தில் எல்லாவற்றையும் படைப்பாளியே கற்பனையில் உருவாக்க வேண்டும். ஆதி முதல் அந்தம் வரை அது அவனுடைய உயிர் மூச்சாய் இருந்தது. அதன் பின் கூகிள் வந்து வேலையை சுலபமாக்கியது. அது தகவல்களைத் தந்து உதவியது. ஒரு கொத்தனாருக்குக் கையாள் இருப்பதைப் போல அது இருந்தது. ஆனால் இப்போது சேட் ஜிபிடிகளின் காலம். இங்கே கொத்தனாரே வெளியேற்றப்பட்டு விட்டார். படைப்புகளுக்கான மரியாதை வலுவிழந்து வருகிறது. ஒருவர் நூற்றுக்கணக்கான நாவல்களை சேட்.ஜிபிடி வைத்தே எழுதி பணக்காரர் ஆகிவிட்டார் என ஒரு கட்டுரையை சமீபத்தில் படித்தேன் ! வியப்பாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது.
கவிதை எவ்வளவு புனிதமாய் இருந்தது ! இன்று, நாம் கேட்பதைக், கேட்கின்ற மொழியில் கவிதைகளாய் எழுதித் தருகிறது தொழில்நுட்பம். ஆனால் அதில் நாம் உணர்கின்ற கவித்துவ சிலிர்ப்பு மட்டும் வருவதே இல்லை. காதல் கவிதைகளை எழுதும் ஏஐக்களுக்கு ஒரு காதலியின் வருடல் தெரியுமா ? அல்லது காத்திருந்தலின் அவஸ்தை தெரியுமா ? அல்லது ஒரு நிராகரிப்பின் வலி புரியுமா ? இவை எதுவும் இல்லாத கவிதைகள், கவிதைகளா என்ன ?
ஒரு காலத்தில் நமது அப்பாக்கள் காலத்தில் நூறு பேரோட லேண்ட் லைன் நம்பரையும், விலாசத்தையும் நினைவில் வைத்திருப்பார்கள். அவர்கள் பாக்கெட்டில் ஒரு சின்ன நோட் புக் இருக்கும். செல்போன் ஆதிக்கம் செலுத்திய பின் இன்றைக்கு நமக்கு அதிக பட்சமாக மூன்றோ, நான்கோ எண்கள் தான் நினைவில் இருக்கும். மற்றதெல்லாம் போனை நோண்டினால் தான் கிடைக்கும் ! அது தானே நிலமை !
முன்பெல்லாம் அண்ணாச்சி கடைகளில் நூறு பொருட்கள் வாங்கினால் கூட ரெண்டே நிமிடத்தில் மனக்கணக்காகவே எவ்வளவு ஆச்சு என்பதைச் சொல்வார். ஆனால் இன்றைக்கு ? கேல்குலேட்டர் இல்லாவிடில் ஒன்றும் நடக்காது என்பது தானே நிலை ? அதே நிலை தான் கிரியேட்டிவிட்டி எனப்படும் படைப்பாற்றலுக்கும் நிகழும். எந்த அளவுக்கு ஏ.ஐ ஐச் சார்ந்திருக்கிறார்களோ, அந்த அளவுக்கு அவர்களுடைய கற்பனைத் திறன் வற்றிப் போய் விடும்.
ஆனாலும் ஒட்டு மொத்தமாக தொழில்நுட்ப வளர்ச்சியை உதறித் தள்ளவும் முடியாது. ஒரு காலத்தில் நூலகம் நூலகமாக ஏறி இறங்கி மாதக் கணக்காகத் திரட்டிய தகவல்களை விட நூறு மடங்கு அதிக தகவல்களை இவை வினாடிகளில் தந்து விடுகின்றன. அதுவும் துல்லியமான தகவல்களைத் தேடி எடுத்துத் தருகிறது. கடினமான தலைப்புகளைக் கூட எளிமையாய் எழுதித் தரவும் செய்கிறது.
இதற்கு எந்த விதமான உணர்ச்சிகளும் இல்லை. எனவே ஒருவரைப் பற்றியோ, ஒரு விஷயத்தைப் பற்றியோ எழுதும் போது கொஞ்சமும் சார்பு நிலையற்ற வகையில் இவை எழுத முடியும். அவனைப் பிடிக்கும், இவரைப் பிடிக்கும், அந்த கொள்கையைப் பிடிக்கும் என்றெல்லாம் ஏ.ஐ. பேசாது. அது உள்ளதை உள்ளபடி சொல்லும். ஒரு வகையில் நடுநிலையான ஒரு பார்வைக்கு ஏ.ஐ தரும் கட்டுரைகள் பயனளிக்கும்.
ஒவ்வொரு படைப்பாளிக்கும் ஒவ்வொரு ஸ்டைல். ஜெயகாந்தனின் எழுத்து நடை இது, கல்யாண்ஜியின் எழுத்து நடை இது, வைரமுத்துவின் நடை இது, கலீல் ஜிப்ரானின் கவி நடை இது என வாசிக்கும் போதே ரசிகன் கண்டுணரலாம். ஒரு படைப்பாளி இன்னொரு படைப்பாளியைப் போல எழுதி சாதிப்பதில்லை. ஆனால், அதை ஏ.ஐ சாத்தியமாக்கித் தரும். பலருடைய ஸ்டைலில் அது எழுதும். பெரியவர்களுக்கு, இளையர்களுக்கு, சிறுவர்களுக்கு என ஆளுக்குத் தக்கபடி தனது எழுத்தை மாற்றவும் செய்யும். இவையெல்லாம் நேரத்தை சேமிக்கவும், ஒரு செய்தியை அழகாய் பல தரப்பு மக்களுக்குக் கொண்டு சேர்க்கவும் பயன்படும்.
ஆளை விடுப்பா, டயர்டா இருக்கு நாளை எழுதி தரேன் என ஏ.ஐ சொல்லாது. இதென்ன புதுசா கற்பனை பண்ண வேண்டியிருக்கு என சொல்லாது. இந்தக் கட்டுரையை எழுத நிறைய வாசிக்கணும், நிறைய டிராவல் பண்ணணும், நிறைய பேர் கூட பேசணும்.. நிறைய டைம் ஆகும், நிறைய செலவும் ஆகும் என சொல்லாது !
இப்படி தொழில்நுட்பத்தால் வருகின்ற பயன்களும் ஒரு புறம் இல்லாமல் இல்லை. எனவே, எந்த ஒரு படைப்பை எழுதினாலும் தொழில்நுட்பம் படைப்பாளிக்கு பேனாவாக இருக்கலாமே தவிர மூளையாக இருக்கக் கூடாது ! படைப்பாளிக்கு தொழில்நுட்பம் உபயமாக இருக்கலாமே, இதயமாக இருக்கக் கூடாது. இந்த சிந்தனையை மனதில் வைப்போம். படைப்பை வனைவோம், தொழில்நுட்பத்தின் பாக்கெட்டிலிருந்து உருவி எடுக்காதிருப்போம்