மலைக்க வைத்த மலையகம்
க.ஆதவன் (ஆதவன் கதிரேசர்பிள்ளை) என்னும் பெயர் இலக்கிய உலகில், குறிப்பாக ஈழத்துத்தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறிமுகமான பெயர்களிலொன்று. பேராதனைப்பல்கலைக்கழகப் பட்டதாரியான இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் மெய்யியற் துறையில் நிரந்தர விரிவுரையாளராக , 1981-1983 காலகட்டத்தில் பணி புரிந்தவர். கவிதை, நாவல், சிறுகதை, கட்டுரை, நாடகம், சினிமா, தத்துவம் எனப்பல்துறைகளிலும் தன் பங்களிப்பினைச்செய்து வருபவர். ‘தீர்த்தக்கரை’, ‘புதுசு’ எனச் சஞ்சிகைகள், பத்திரிகைகள் மற்றும் இணைய இதழ்களில் இவரது பல்வகைப்பட்ட படைப்புகள் வெளியாகியுள்ளன. நோர்வேயிலிருந்து வெளியான ‘சுவடுகள் ‘ சஞ்சிகையில் வெளியான இவரது ‘மண்மணம்’ புகலிடத் தமிழ் இலக்கியத்தில் வெளியான முக்கியமான நாவல்களிலொன்று. தத்துவம் பற்றிய இவரது கருத்துகளைத் தாங்கிய ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளிவந்த ‘மெய்யியல் கற்றல் கற்பித்தல்’ என்னும் தொடரும் முக்கியமான இவரது பங்களிப்புகளிலொன்று.
நீங்கள் ஒரு கோப்பை தேநீர் ஆற அமர இருந்து அழகாக பருகவும், பல கோணங்களில் படம் எடுத்து மகிழவும், மலையகத்தில் தொழிலாளிகள் படும்பாடு கண்டு திகைத்தேன்.
ஒரு நாள் அவர்களின் முதுகில் உள்ள கொழுந்துக்கூடையின் சுமையை விட குடும்பச்சுமையை நேரில் பார்த்து மனம் நொந்தேன்.
நான் தினம் புகைக்கும் ஒரு நாளுக்கான சிகரட் காசை விட அவர்களது ஒரு நாள் கூலி குறைவானது.
ஒரு தொழிலாளி க்கு அன்று ஒருநாள் புகையைத்துறந்து அந்த காசைக் கொடுத்தேன்.
எனக்கும் ஒருநாள் ஆகினும் கர்ணன் ஆக ஆசைதான். அந்த ஒருநாள் கர்ணனும் என் செயலை ஆமோதித்தான்,
இத்தனை துயரங்கள் மலிந்த கூலி வேலைகள் மத்தியிலும், கூத்தும், கும்மாளமும் என கவலைமறந்து கலை வாழ்வு வாழும் அம்மனிதர்களையும், அந்த மலைகளையும் பார்த்து மலைத்தேன்.
அதனைச் சொட்டுச் சொட்டா உங்களுடன் பகிர்கின்றேன்.
க. ஆதவன்.
200 ஆண்டுகளாய் அடிமையாய் வாழ்ந்த நிலத்தில்.. 25 ஆண்டுகளின் பின் கால் பதிக்கும் ஒரு சிறு மானிடன் நான்.
மூதாதயர் வழி வந்த பழிச்சொல்
தோட்டக்காட்டான்.
முகத்திடை கோபம் வருகிறது.
வடக்கத்தியான்
எனும் போது..
என்
மனம் வெடித்துச் சிதறுகிறது.
கொழுந்து கிள்ளப் போகிற ஒரு தாயை நினைக்க்கிறேன்.
மணியொன்று டான் டான் என ஒலிக்கக் கேட்டாள். மடிமீது தவழ்ந்திருந்த மகவைப் போட்டாள்-
கவிஞர் கதிரேசபிள்ளை அன்றெழுதியது.
அப்பா அந்த உழைப்பாளிப் பெண்களைப் பார்த்திருக்கிறார்.
மகவைப் போட்டாள் எனுஞ் சொல் நெஞ்சள்ளுகிறது.
அப்பாவிற்கு,முதல் அப்போயின்மென்ற் சீறீபாதக்கல்லூரி ஹற்றன்.
கவி மனசு.
அங்ஙனம் எழுதியது.
நான் அதே ஹற்றனில் நிற்கிறேன். இப்போ.
சிறீபாதவில்…யூனிபோம் போட்டபடி மாணவச் செல்வங்களைப் பார்க்கிறேன்.
மனதினுள் இனம் புரியாத கீதம் கேட்டுக் கொண்டேயிருக்கிறது.
இங்கே காண்பது மரம் ஏறி பழம் புடுங்கிய ஆச்சியின் பூட்டீ.
குடுகுடுவென்று பள்ளத்தாக்கில் ஓடுகிறது அந்த நீரோடை போல.
பூட்டியையும் பூட்டியையும் பூட்டி வைப்பதே பெரும் பாடு.
ஒன்று மரமேறும்
மற்றது பள்ளமேகும்.
வாழ்வின்
தத்துவம் மெல்லெனப் புரிந்ததெனக்கு.
அதிசய மனுஷி.
86 வயசு. ஒரு பொழுதும் வைத்தியரை நாடவில்லை.
அதிசய மனுஷி. 86 வயசு.
மாமரத்திலேறி என்னைப் பிரமிக்க வைத்த என் பேத்தி. மலையகப் பயணத்தில்..கண்டுகொண்ட என் தாய்.
என் மாணவி ப்ரியாவின் பேத்தி.
200 ஆண்டுகள் வாழுவாளாக்கும்.
ஏன் இந்த மக்களும் மரமும் நீரலைகளும் மகிழ்வாய் இல்லையெனும் கேள்வி நெஞ்சில் பாரமாய் இறங்கிற்று.
நவகாலனித்துவத்தின் வெளிப்பாடு என்பார் மாக்சியர்கள்.
எனக்கேனோ அக் கருத்தில் உடன் பாடில்லை.
இந்த நிலத்திற்கும் இம் மக்களுக்கும்,
இச்சிறு கொழுந்துகளுக்கும் ஏதோ நிகழ்ந்திருக்கிறது.
-டேய். இதில் நிப்பாட்டு-
போனேன்.
மரத்தின் கீழ் தியானம் செய்தேன்.
குளித்தேன்.
இன்னமும் கேள்விக்குப் பதிலில்லை
![]()
