லண்டன் நரிகளின் நகரம்
இளைய அப்துல்லாஹ்- லண்டன்
லண்டன் நகரத்தில் மத்திய நகர்ப்புறத்தில் நரிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. அவைகள் செழிப்பான வாழ்க்கை வாழுவதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றன. மதிப்பீடுகளின்படி, நகரத்தில் சுமார் 10,000 முதல் 15,000 நரிகள் உல்லாசமாக வாழ்கின்றன, உணவுக்காக அலைய வேண்டியதில்லை. குப்பைத் தொட்டிகளை கவிழ்த்து அவைகள் உணவுகளை தேடி உண்கின்றன. தோட்டங்கள் மற்றும் பூங்காக்களில் தங்குமிடம் தேடுவதன் மூலம் நகர வாழ்க்கைக்கு ஏற்றவாறு நரிகள் மாறிவிட்டன.
முதல் உலகப் போரின் முடிவில் இருந்து நரிகள் லண்டனில் வாழுகின்றன., மேலும் அவற்றின் எண்ணிக்கை கடந்த மூன்று தசாப்தங்களில் அதிகளவில் அதிகரித்துள்ளது. லண்டன் வனவிலங்கு அறக்கட்டளை லண்டன் நகரத்தில் மட்டும் 15,000 நரிகள் இருப்பதாக மதிப்பிட்டிருக்கிறது. லண்டனின் சில பகுதிகளில் சதுர கிலோமீட்டருக்கு 18 நரிகள் வரை உள்ளன. 1930களில் இருந்து நகரத்தில் நரிகள் காணப்படுகின்றன. என்று ஆய்வுகள் சொல்கின்றன. லண்டன் நரிகள் சந்தர்ப்பத்தை பொறுத்து சர்வ உண்ணிகளாக மாறி விட்டன. அதாவது அவை பல்வேறு வகையான உணவுகளை உண்கின்றன. அவற்றின் உணவில் முதன்மையாக மனித கழிவுகள், எஞ்சிய உணவுகள், பழங்கள் மற்றும் காய்கறி மிச்சங்களையும் உண்ணுகின்றன. அவை குப்பைத் தொட்டிகளை கவிழ்த்துப்போடுவதால் இங்கே லண்டன் நகர சபைக்கு பெரும் சிக்கலாக நரிகள் உள்ளன.
நரிகள் திறமையானனவை அவை கொறித்துண்ணிகள், எலிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. என்றும் ஆய்வுகள் சொல்கின்றன. அவை பெரிய பூங்காக்களில் உல்லாசமாக இருப்பதற்கும், இரவு நேரங்களில் தங்கள் இனச்சேர்க்கை செய்வதற்கும் தங்கள் துணைகளுக்கு ஒலி எழுப்பி அழைக்கின்றன. ஆனால் இலங்கை நரிகளைப்போல லண்டன் நரிகள் ஊளையிடுவதில்லை.
தோட்டங்கள், பெரிய பூங்காக்கள் மற்றும் கைவிடப்பட்ட கட்டிடங்களில் வாழுகின்றன. இங்குள்ள உணவு மற்றும் தங்குமிடங்களைப் பயன்படுத்தி, நரிகள் லண்டன் நகர வாழ்க்கைக்கு ஏற்றவாறு மாறிவிட்டன.அடர்த்தியான தாவரங்கள் உள்ள இடங்களில், அவை சிறிய குகைகள் துளைகளை தோண்டி எடுக்கின்றன. அவற்றில் வாழப்பழகி விட்டன.நரி வளை இருக்குமிடத்தில் உணவின் எச்சங்கள் மற்றும் நுழைவாயிலுக்கு அருகில் நரி மலம் இருப்பது, நுழைவாயிலுக்கு நன்கு தேய்ந்த பாதைகள் மற்றும் நுழைவாயிலைச் சுற்றி ஒரு விரும்பத்தகாத மணம் வீசுவது. லண்டன் வாசிகளுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றன.
நகர வாழ்க்கை ஆபத்துகள் இல்லாதது அல்ல: நரிகளின் எண்ணிக்கையில் 60 சதவீதம் ஒவ்வொரு ஆண்டும் கார் மற்றும் வாகனத்தால் அடிபட்டு இறக்கின்றன. சிலர் நரிகளை தலைநகரின் வனவிலங்குகளில் ஒரு சுவாரஸ்யமான விலங்காக வரவேற்கிறார்கள். நரிகளைப் பற்றிய பெரும்பாலான புகார்கள் வீட்டுத்தோட்டங்களை நாசப்படுத்துவதாக வருகின்றன. தோட்டங்களில் அவற்றின் இருப்பு பற்றிய அசூசை பலரிடம் காணப்படுகிறது.
இங்கிலாந்தில் மட்டும் 3லட்சத்து 50 ஆயிரம் நரிகள் உள்ளன,” “ஏப்ரல் மாதத்தில் நரிகள் பிறக்கும் போது அதுதான் உச்சக்கணக்கு ஆனால் வீதியில் வாகனத்தில் அவை அடிபட்டு 60 வீதம் இறக்கின்றன. இறப்பு விகிதத்துடன், அது எளிதாக 150,000 ஆகக் குறையக்கூடும்.” நரிகள் தொடர்பான ஆய்வாளர் ஸ்காட்டின் கூற்றுப்படி, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நரிகள் முதலில் லண்டனில் கணக்கெடுக்கப்பட்டன. பின்னர் நாடு முழுவதும் உள்ள நகரங்களில் எண்ணிக்கை தொடங்கின. 1980களில், நகர்ப்புற நரிகளின் எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டது.
14 ஆண்டுகள் வரை வாழும் நரிகள் இருந்த போதிலும், ஐந்து நரிகளில் நான்கு இரண்டு வயதுக்கு முன்பே இறந்துவிடுகின்றன. அப்படியானால் அவை ஏன் இவ்வளவு அதிகமாகத் தோன்றுகின்றன? ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, லண்டனில் தெருவில் ஒரு நரியைப் பார்த்ததாகக் கூறுபவர் அரிதாவே இருந்திருப்பார். முன்பு நரிகள் நகரத்தில் வசிக்கவில்லை. அவை சுற்றி காடுகளில் இருந்தன, நிழலில் இருக்க அதிக விருப்பம் கொண்டவை. அவை.பரந்த நகர பூங்காக்கள் அதிக இடத்தை அவைகளுக்கு பகல் வேளைகளில் அளிக்கவில்லை, ஏனெனில் பகலில் நாய்கள் சுற்றித் திரிகின்றன, மேலும் நரிகளை நாய்கள் வாழும் இடத்தில் அவை அண்ட விடுவதில்லை. நாய்கள் இருக்கும் இடத்திற்கு நரிகள் போக மாட்டா. நரிகள் நடமாடும் மனிதர்களைத் தாக்குவது சாத்தியமில்லை என்றாலும் கடந்த பத்தாண்டுகளில் நகரங்களில் நரிகள் குழந்தைகளைத் தாக்குவதாக அறிக்கைகள் உள்ளன. பலருக்கு நரிகள் பிடிக்காது, ஏனெனில் அவை, அசுத்தமானவை, மற்றும் நரிகளின் இனச்சேர்க்கை காலம், பொதுவாக டிசம்பர் அல்லது ஜனவரியில், உடலுறவில் அதிக சத்தத்தை இரவில் எழுப்புகின்றன. அதுவும் மனிதர்களுக்கு பிரச்சனையாக இருக்கிறது.
கிழிந்த திறந்த குப்பைப் பைகளின் கழிவுகளை நரிகள் துப்புரவு செய்கின்றன என்கிறார் அவர்., ஆனால் வூட்ஸ் அத்தகைய நடத்தைக்கான பழியை குப்பைப் பைகளை பசியுடன் கிழிக்கும் நரிகள் மீது அல்ல, வெளியே விட்டுச் செல்லும் குடியிருப்பாளர்கள் மீது சுமத்துகிறார். இருப்பினும், “மாங்கே” எனும் நோய் நரிகளால் பரவுகின்றது என்று நம்பப்படுகிறது.இது ஒருவகை சிரங்கு நோய், பொதுவாக, மாங்கே மனிதர்களுக்கு பரவாது, இருப்பினும் விதிவிலக்குகள் உள்ளன. சில வருடங்களுக்கு முன்பு, முன்னாள் வோக் ஆசிரியர் அலெக்ஸாண்ட்ரா {ல்மேன் தனது வடமேற்கு லண்டன் வீட்டில் சோபாவில் ஒரு நரியைக் கண்ட பிறகு சர்கோப்ட்ஸ் ஸ்கேபி கேனிஸ் நோயால் பாதிக்கப்பட்டார். “மீண்டும் ஒரு நரி என் அருகில் வருவதை நான் அஞ்சுகிறேன்,” என்று அவர் பின்னர் கூறினார். இப்படி பல சிக்கல்களுக்கு மத்தியில் தான் நரிகள் லண்டனில் வாழுகின்றன.
மறுமுனையில், நரிகளை நேசிக்கும் நகர மக்களுக்கும் பஞ்சமில்லை, அவர்களில் சிலர் நரிகளுக்கு உணவளிக்கும் சர்ச்சைக்குரிய நடவடிக்கையை எடுக்கிறார்கள். பலர் நரிகளுக்கு தவறான வகை உணவுகளை – கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த எஞ்சியவற்றை – மற்றும் தவறான வழியில் – கையால் அல்லது வீட்டின் பின் கதவிலிருந்து உணவளிப்பதாக குறிப்பிடுகிறார். நகர்ப்புற நரிகள் தங்கள் நாட்டு நரிகளை விட உடலியல் ரீதியாக வேறுபடத் தொடங்கியுள்ளன என்பதற்கான சில சான்றுகளும் உள்ளன, ஒரு ஆய்வு அவற்றின் மூக்குகள் சிறியதாகவும், மூளை அளவு குறைவாகவும், பாலியல் இருவகைத்தன்மை (நாய் நரிக்கும் நரிக்கும் இடையிலான உடல் வேறுபாடு) குறைவாகவும் இருப்பதைக் காட்டுகிறது. உண்மை என்னவென்றால நரிக்கு இயற்கையான வாழ்விடம் இல்லை. மனிதர்களைப் போலவே, அவை எங்கு வேண்டு மானாலும் வாழ்கின்றன.
அவற்றைப் அச்சமாக சித்தரிப்பதற்குப் பதிலாக, நாம் ஏற்கனவே காடுகளில் பல விலங்குகளை இழந்துவிட்டோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும், பின்னர் “ஒரு படி பின்வாங்கி, நரிகள் நாம் பார்க்கக்கூடிய ஒரு அற்புதமான, அழகான வனவிலங்குகள் என்பதை நாம் பார்க்க வேண்டும்” என்று நரிகள் தொடர்பான ஆய்வாளர் ஸ்காட் கூறுகிறார். நகர்ப்புற கட்டுக்கதைகளை மறந்துவிட்டு, நகர்ப்புற நரியைப் பாருங்கள் என்கிறார் ஸ்காட்.
அப்போதைய மேயர் போரிஸ் ஜான்சன் லண்டன் நரிகளை “அச்சுறுத்தல்” என்று அழைத்தார். ஆனால் பிரதமர் மாளிகைக்கு முன்னாலும் மன்னரின் பக்கிங்கம் மாளிகைக்கு முன்னாலும் லண்டன் நரிகள் இரவில் சுதந்திரமாக நடமாடுவதை நான் பல இரவுகளில் கண்டிருக்கிறேன். ஆனால் லண்டன் நகரத்தோடு அவைகள் சுதந்திரமாக வாழப்பழகிவிட்டன. அவை லண்டனில்தான் தம் வாழ்க்கையை வாழ்ந்து முடிக்க வேண்டும்.
இது எனது பக்கங்கள் பாருங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள் http://mnmanas.blogspot.com/ http://mnmanas.wordpress.com/
![]()
