காதலில் பச்சை மஞ்சள் சிவப்பு.

0
vm248

  • ஜூட் பிரகாஷ் (மெல்பேர்ண்)

ழுடு முடித்து யுடு படிக்கத் தொடங்கும் பெடியளிற்குள் ஒரு மாற்றம் வரும். அரும்பு மீசை துளிர்விட, காதலும் அரும்பும். அந்த வயதில் எல்லா பெடியளும் யாரோ ஒரு பெட்டையை கட்டாயம் மனதிற்குள் காதலித்துத் தான் இருப்பார்கள். சிலர் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று வந்த அந்த காதல் உணர்வை மனதிற்குள் பூட்டி வைத்து சாகடிப்பார்கள். வேறு சிலர் அந்த பெட்டைக்கு காதலை தெரிய வைக்க சுழற்றோ சுழற்றென்று சுழற்றத் தொடங்குவார்கள். சுழற்றும் சிலர் காதலை பெட்டையிடம் ஏதோவொரு வகையில் வெளிப்படுத்துவார்கள்.

காதலை அறிவித்தவர்களில் அரிதாய் சிலருக்கு பச்சை சிக்னலும், கனபேருக்கு சிவப்பு சிக்னலும், அநேகமான பலரிற்கு மஞ்சள் சிக்னலும் வரமாய் கிடைக்கும். ஒரு பெட்டையை மனதிற்குள் காதலிக்கும் உணர்வு அற்புதமானது. ஜம்புலன்களிற்கும் விடுமுறை அறிவித்து விட்டு மனதை இளக்கி மேகத்தில் நீச்சலடிப்பது போன்ற ஒரு உன்னதமான உணர்வு. திரைப்படங்களில் வரும் அபரிதமான வர்ணணைகள் சிலநேரங்களில் அந்த பரிசுத்தமான உணர்வை கொச்சைபடுத்தி விடும். அதேவேளை சில திரையிசை பாடல்கள் பெடியளின் காதல் உணர்வை அப்படியே தத்ரூபமாக பதிவுசெய்வது மட்டுமன்றி அரும்பும் காதலெனும் செடியை தண்ணீரூற்றி செழிப்பாக்கும்.

தொண்ணூறுகளில் நாங்கள் உயர்தரம் படிக்கும் போது வெளிவந்த இரு பாடல்கள் காதல் உணர்விற்கு தண்ணீர் மட்டுமல்ல, நல்ல பசளையும் போட்டும் வளர்த்து விட்டவை. வாலி-இளையராஜா-ஜேசுதாஸ் கூட்டணியில் இதயம் படத்தில் அமைந்த “பொட்டு வைத்த வட்ட நிலா” பாடல் அதில் முதன்மையானது. அடுத்தது வைரமுத்து-ரஹ்மான்-உன்னிகிருஷ்ணன் படைப்பில் காதலன் படத்தில் மலர்ந்த “என்னவளே அடி என்னவளே” என்ற பாடல். இந்த இரண்டு பாடல்களையும் படத்தில் காட்சியமைத்த விதம் அநியாயத்திலும் அநியாயம். இதயம் படத்திலாவது ஹீராவை கொஞ்சம் ரசிக்கலாம். “என்னவளே” பாட்டு திரையில் வரும்போது நக்மாவை பார்க்க சகிக்காமல் கண்ணை மூடிக்கொண்டு பாடலை மட்டும் கேட்டு ரசிக்கலாம்.

அந்த வயதில் கண்களின் பார்வைக்குள் வந்து போகும் பல நூற்றுக்கணக்கான பெட்டைகளில் அந்த ஒருத்தியை சுற்றி தான் மனம் மையல் கொள்ளும், இதயம் சுழன்றடிக்கும். இதயத்தில் வாலி தான் அதை வடிவாய் சொல்லுவார்
“இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா”
மனதை எட்ட நின்று தொட்ட அந்த வட்ட நிலவை எப்படி நெருங்குவது என்று மனம் பதைபதைக்கும். நெருங்க ஒரு காரணம் வேண்டாமா ? நிலவு கடுப்பாகி எங்கள் நெற்றியில் பொட்டு வைத்துவிட்டால் என்னாகும் ? எட்ட நிற்கும் நிலவிற்கு கிட்டபோக காதலனில் வைரமுத்து ஒரு ஐடியா தருவார்

“எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இரண்டையும் மறந்து விட்டேன்
உந்தன் கால் கொலுசில் அது தொலைந்ததென்று
உந்தன் காலடி தேடி வந்தேன்”

தொலைத்த இதயத்தை தேடும் சாக்கில் அவளது காலடி தேடி வந்ததோடு வைரமுத்து நிற்பாட்டியிருந்தால் பரவாயில்லை. நிலவின் காலடி தேடி வந்த பெடியளை வைரமுத்து இன்னும் உசுப்பேத்துவார். பெடியளிற்கும் வெட்கத்தையெல்லாம் விட்டு விட்டு இன்ன இன்னதெல்லாம் செய்யுங்ககோடா என்று ஒரு லிஸ்ட் போட்டுத் தருவார்.

“கோகிலமே நீ குரல் கொடுத்தால்
உனைக் கும்பிட்டுக் கண்ணடிப்பேன்
கோபுரமே உனைச் சாய்த்துக்கொண்டு
உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்
வெண்ணிலவே உனைத் தூங்கவைக்க
உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்
வருடவரும் பூங்காற்றையெல்லாம்
கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன்”

ச்சா.. காதல் வந்தா மானம் காற்றில் பறந்திடுமோ என்ன?

சுழற்றும் பெட்டை வாற வழியைப் பார்த்து பெடியள் மணித்தியால கணக்காக காவல் இருப்பதற்கும் இந்த வைரமுத்துவைத்தான் ஜெனிவாவிற்கு இழுத்துக்கொண்டு போய் போர்க் குற்றவாளிக் கூண்டில் ஏற்றவேண்டும்

காதலை சொல்ல ஒரு துணிவு வேண்டும் என்பார்கள். அந்த துணிவு வராததால் வரும் சோகத்தையும், ஆற்றாமையும், ஏக்கத்தையும், அந்த தவிப்பையும், அந்த சோகத்தையும் வைரமுத்து தான் அழகாக பதிவு செய்வார்

“யாப்போடு சேராதோ பாட்டு
தோப்போடு சேராதோ காற்று”

யாப்பையும் தோப்பையும் இழுத்த வைரமுத்து, உயர்தரம் படிக்கிற பெடியனை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவும் ஒரு வரி இழுத்து விடுவார்..

“வினா தாள் போல் இங்கே
கனா காணும் காளை
விடை போலே அங்கே
நடை போடும் பாவை”

பரீட்சையை ஞாபகப்படுத்தியதும் பெடிக்கு வாழ்க்கையின் முக்கியத்துவம் முன்னுரிமை பெற காதல் இரண்டாம் நிலைக்கு தள்ளப்படும்.

“நான் வாழ்வதும் வீழ்வதும்
உந்தன் வார்த்தையில் உள்ளதடி”

என்ற வேதாங்கம் வெற்று கோஷமாய் விளங்க, படிக்க வேண்டிய புத்தகங்கள் விடிவெள்ளியாய் துலங்கும்.

கண்மூடி கர்த்தரே என்று ஜெபித்துவிட்டு, புத்தகத்தை திறந்து முதல் பந்தியை வாசிக்கத் தொடங்க, வைரமுத்து என்ற சாத்தான் துரத்தி கொண்டு வரும்.

“ஒன்றாய் கூடும் ஒன்றாய் பாடும்
பொன்னாள் இங்கு என்னாளோ”

பதின்மத்தில் காதலித்த பொழுதுகளும் அந்த உணர்வை அழகாக்கிய அற்புதமான பொற்காலப் பாடலகளும் பொக்கிஷங்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *