தாளம்

0
vm250

சிலிர்த்தெடுத்த மேகங்களுள் சிக்கிக் கொண்டு உலவுகிறது சின்னச் சின்ன கனவுகள். அவற்றில் சிலவற்றையேனும் மெய்ப்பிக்கும் நம்பிக்கையை கொண்டு வந்த மழையோடு தோழமை கொண்டு, நீள் விசுப்பின் நித்திய எழிலை நீண்டு நோக்கி இருந்தேன்.

நாட்டிய அவிநயங்களில் அசைந்திருந்த மேகங்களை வெட்டியடித்துப் பாய்ந்த மின்னல் ஆடல் கோலங்கள் கண்ணில் பட்டுத் தெறித்த மறு கணமே, சட்டச்சட சட்டச்சட டட்டா என்று தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்;

இந்த இயற்கை கற்றுத் தரும் கலை , மிக நுண்ணியமானது . பார்க்கும் இடமெல்லாம் பஞ்ச ஜாதிகளின் பிரவாகம் நிறைந்திருக்கும். மும்மை ( 3 ), நான்மை ( 4 ), ஐம்மை ( 5), எழுமை ( 7 ), ஒண்மை ( 9) என்ற எண்ணிக்கையில் இயற்கையின் அசைவுகளும் , வடிவங்களும், கோலங்களும் நிறைந்திருப்பதை அவதானிக்கலாம்.

சக்திக் கூத்திலே ஒளி ஒரு தாளம் !

இவ்வகையான அடிப்படை ஐந்து தாளங்களும் முப்பதைந்து தாளங்கள் , நூற்று எழுபத்தைந்து தாளங்கள் என விரிகின்றன . இவை மட்டும் அன்றி அபூர்வ தாளங்கள் , 108 தாளங்கள் , மேளகர்த்தா தாளங்கள் , இன்னும் பலவகை தாளங்களின் சமுத்திரத்தை கூத்த நூல் , பஞ்ச மரபு , சிலப்பதிகாரம் போன்ற உன்னத நூல்களில் காணலாம்.

பாரதியை சிக்கெனப் பிடித்தால் போதும் அவன் முழு பிரஞ்சத்தையுமே காட்டித் தருவார். எத்தனையோ நன்னூல்களை நாடித்தேடிக் கற்கவும் பாரதியின் சில சொல்லாடல்களே தூண்டியாக செயல்படுகின்றன. பாரதி, தனக்கு முன் தோன்றியவற்றையும் தீண்டச் செய்கிறார். தனக்குப் பின் படைக்கவிருப்பதையும் தீர்க்கதரிசியாக சொல்லிச் செல்கிறார். பாரதியின் ஒவ்வொரு சொல்லாடல்களுமே ஒரு இயலாக பிரவாகிக்கக் கூடியது.

தாளமும் அவ்வண்ணமே.தாய்மையைப் போற்றுவதற்கும் பெண்மையைக் கொண்டாடுவதற்கும் கூட தாளம் கொட்டியவர்.

‘போற்றி தாய்’ என்று தாளங்கள் கொட்டடா!

மனித மனங்களின் மலர்விற்கும் , இவ்வாழ்வினை எவ்வாறு இனிமையாகவும் இலகுவாகவும் அமைத்துக் கொள்ளாலாம் என்பதற்கும் இரு பெரும் யுக்திகளை கற்றுத் தருகிறார்.

  1. இசை
  2. அன்பு
    “ பாட்டினில் அன்பு செய் “

அன்பாகி இருக்கவும், இசையினில் இழக்கவும் தெரிந்தால் போதும் உள்ளம் நித்திய தாளமிட்டுக் கூத்தாடிப் பறந்திடும் !

அன்பென்று கொட்டு முரசே! – மக்கள்
அத்தனைப் பேரும் நிகராம்.
இன்பங்கள் யாவும் பெருகும் – இங்கு
யாவரும் ஒன்றென்று கொண்டால்.

இயற்கையின் மூலமாய் நிற்கும் சூரியக் கதிர்களில் நின்று பிரகாசிக்கும் ஒளியை தாளம் என்கிறார்.
உயிர்களுகெல்லாம் மூலமாய் இருக்கும் தாய்மையை போற்றிடத் தாளம் கொட்டச் சொல்கிறார்.
உணர்வுகளுக்கெல்லாம் மூலமாய் இருக்கும் அன்பிற்கு
தாளம் கொட்டுகிறார்.

ஆக, நம் வாழ்வியலோடு பிரிக்க முடியாத பேருண்மை, தாளம் !

நண்ணும் பாட்டினொடு தாளம் – மிக
நன்றாய் உளத்தழுந்தல் வேண்டும் – பல
பண்ணில் கோடிவகை இன்பம் – நான்
பாடத் திற நடைதல் வேண்டும்’

தாளம் என்பது கலையோடு மட்டும் கலந்த விடயமல்ல.
தாளம் என்பது நம் ஒழுக்கம் ,நம் இயக்கம் , உறுதி , தெளிவு , சீர்மை , நேர்த்தி , வாழ்வின் பண்பு. நம்மையும் நம்மைச் சூழ்ந்தோரையும் இன்பமாக வைத்திருக்க , முரண்கள் இல்லாத நாட்களாக நகர்த்திச் செல்ல , இடையின்றி இயங்கிக் கொண்டிருக்க இவை அவசியம். ஆனால் தாளம் பிசகினால் வரும் விளைவு மிக அதிகம்.
அறம் கெட்ட பின் அழுதென்ன லாபம் ? தாளம் என்பதும் நம் தமிழோர் கற்றுத் தந்த பெரும் பாடங்களின் கூறு. உள்ளத்தினுள்ளே ஆழப் பதிய வேண்டிய மந்திரச் சொல் !

தாளம் தாளம் தாளம்
தாளத்திற்கோர் தடையுண்டாயின்
கூளம் கூளம் கூளம்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *