The fantasy of single life
தனித்து வாழ விரும்பும் இளைய தலைமுறை!
தீபா ஸ்ரீதரன் (தைவான்)
கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக, தனித்து வாழும் வாழ்க்கையின் சிந்தனை உலகம் முழுவதும் அதிகரித்து வருவதைக் காணலாம். இதைப் பெரும்பாலான மூத்த தலைமுறையினர், இன்றைய இளைஞர்களுக்கு உறவின் மீது இருக்கும் உறுதிப்பாட்டின் குறைவு என்றும் உறவுகளை மதிக்காத தன்மை என்றும், இன்றைய தலைமுறையினர் சகிப்புத்தன்மையற்றவர்கள் என்றும் பார்க்கிறார்கள். ஆனால் இதை மற்றொரு கோணத்திலிருந்து பார்க்கும் போது, இந்தத் தலைமுறை உறவுகளை அவமதிக்கும் நிலைப்பாட்டில் இல்லை, மாறாக உறவுகளை மாறுபட்ட முறையில் எதிர்பார்க்கின்றனர் என்பது விளங்கும். அவர்கள் தங்களின் உணர்ச்சி நலனுக்கும் ( emotional well being) தனித்துவத்திற்கும் முன்னுரிமை கொடுக்கும் பாதுகாக்கும் உறவுகளுடன் இணைந்து வளரும் சூழலையே விரும்புகிறார்கள் என்பதே என்னுடைய புரிதல். இவர்கள் பெரும்பாலும் “வாழ், வாழவிடு (Live, let live) ” என்ற கோட்பாட்டில் வலுவான நம்பிக்கை கொண்டிருக்கின்றனர் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.
முந்தைய காலங்களில், தனியுரிமை (Privacy) என்பது வேறு விதமாகவே இருந்தது. குழந்தைகள் வாலிபத்திற்குப் பிறகும் பெற்றோருடன் அறையைப் பகிர்ந்து வாழ்வது கூடப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டது, அது தனியுரிமைக்கு எதிரானதாகக் கருதப்படவில்லை. ஆனால், காலப்போக்கில் நிலைமைகள் மாறிவிட்டன. இன்று, மக்கள் தங்கள் தனிப்பட்ட முடிவுகளையும் தேர்வுகளையும் மிகவும் பொக்கிஷமாகப் பார்க்கிறார்கள். முன்பெல்லாம் புதிதாகத் திருமணமான தம்பதிகளிடம் குழந்தைகள் குறித்துக் கேட்கப்படுவதோ அல்லது படிப்பு முடித்த ஆண் பெண்களிடம் திருமணத் திட்டங்கள் பற்றிக் கேட்கப்படுவதோ இயல்பாகவே இருந்தது. ஆனால் இப்படிப் பட்ட கேள்விகளை இன்றைய தலைமுறையினர் தொல்லையாக உணர்கிறார்கள். தேவையில்லாமல் மூக்கை நுழைக்கும் நாகரிகமற்ற செயலாகக் கருதுகின்றனர். குழந்தைகளும் சிறிய வயதிலேயே தனிப்பட்ட இடத்தையும் தனித்துவத்தையும் நோக்கிய பார்வையில் நகரத் துவங்கியிருக்கின்றனர். (இன்றைய குழந்தைகளுக்கு முன்பிருந்த தலைமுறையை விட மிகவும் சீக்கிரமே தனியுரிமை தேவைப்படுகிறது, மேலும் அவர்கள் சிறிய வயதிலேயே தனித்துவத்தைக் கோருகின்றனர்)
இவையெல்லாம் சரியா தவறா என்ற கேள்விகளுக்கு முன் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலையில் தான் நாம் இன்று இருக்கிறோம். ஒரு மாற்றம் ஏற்படும் பொழுது அதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனப்பான்மை ஒவ்வொரு தலைமுறையினரும் எதிர்கொள்ளும் சவால்தான். எனவே இதை எதிர்மறையாகப் பார்ப்பது என்பதிலிருந்து விலகி இந்தமாற்றங்களுக்கான காரணங்களைப் பகுத்தறிந்து பார்க்கும்பொழுது அதற்கான தீர்வு சற்று எளிமையாகக் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
இன்றைய தலைமுறையினர் தனிநிலை வாழ்க்கையைத் தேர்வு செய்வதற்கான முக்கியமான காரணங்களாக நான் பார்ப்பது:
தனிநிலைத் தேர்வும் சுதந்திரமும்-
நவீன வாழ்க்கை அதிகமான செலப்ஃ- எக்ஸ்ப்லோரேஷன், வேலை வளர்ச்சி, பயணம், மற்றும் பொழுதுபோக்கு வாய்ப்புகளை வழங்குகிறது. பலர் உறவுகளில் சமரசம் செய்வதை விடத் தங்களின் ஆற்றலை, தனித்துவத்தை முன்வைக்கும் செயல்பாடுகளுக்கு முதலீட்டாக்குவதை விரும்புகிறார்கள். இதற்கு இன்னொரு முக்கியக் காரணம் அவர்களின் சொந்த அடையாளத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற மன அழுத்தம். பல தலைமுறைகள் ஒரே சமுதாயத்தில் இணைந்து வாழும் இன்றைய சூழலில், நடுத்தர வயதினர் தங்கள் தனித்துவத்தை நிரூபிக்கப் போராடுகிறார்கள். மேலும் இன்றைய உறவின் உருவம் பல அடுக்குகளில் மாறிவிட்டது, அதில் பொருந்துவதற்கான முயற்சி பலருக்குக் கடினமாக மாறியுள்ளது. எனவே தனித்து வாழும் வாழ்வை நோக்கிப் பலரும் நகர்கின்றனர்
இவ்வாழ்க்கையைத் தேர்வு செய்வதற்கான பிற காரணங்கள்:
உணர்ச்சி நலன் (emotional well being) – உறவுச் சிக்கல்களிலிருந்து விடுபட்டு அமைதியாக இருக்க விரும்புகிறார்கள்.
பொருளாதார மேலாண்மை – தங்களின் சொந்தப் பொருளாதாரத்தை விரிவு படுத்தி அதைத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். பலருக்கும் லௌகீக வாழ்க்கை மீதான விருப்பம் அதிகரித்துள்ளது.
தொழில்நுட்ப மற்றும் இணையதள உறவுகள் – சமூக ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் பொழுதுபோக்குகள், தனி மனிதரின் வாழ்க்கையைப் பெரிதும் ஆக்கிரமித்துள்ளன. முகம் தெரியாத மனிதர்களுடன் சமூக வலைத்தளங்களில் தங்களை இணைத்துக் கொண்டு கருத்தியல் ஒற்றுமை இருப்பவர்களிடம் பொது விஷயங்களைப் பேசிவிட்டு, விலகிக் கொள்வதைப் பெரும்பாலும் விரும்புகிறார்கள். இதில் பெரிய உணர்வு சிக்கல்கள் இருப்பதில்லை. எங்கேயோ இருக்கும் ஒரு நபரிடம் அறிவு சார்ந்த விஷயங்களையும் உணர்வு சார்ந்த விஷயங்களையும் பேச்சளவில் நிறுத்திக் கொள்வதால் அதில் பெரிய மன அழுத்தம் ஏற்படுவதில்லை என நினைக்கிறார்கள்.
பரிணாமம் – முந்த காலங்களில் உறவுகள் என்பது மனித இனத்தின் பாதுகாப்பிற்கும், இனப்பெருக்கத்திற்கும், பொருளாதார நிலைத்தன்மைக்கும் அவசியமாக இருந்தன. ஆனால், நவீன உலகில் உயிர்வாழ்தல் (Survival) என்பது பெரும்பாலும் நவீனங்களைத் தழுவிக் கொள்ளும் தன்மை ( Adaptability) புத்திசாலித்தனம் மற்றும் உணர்ச்சி நிலைத்தன்மையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. ஆனால் இவை அனைத்துமே திருமணஃ காதல் உறவுகளின்றிச் சுயாதீனமாகவும் அடைந்து கொள்ளும் நிலையும் உருவாகியிருக்கின்றது.
என் பார்வையில், ஆண்களை விடப் பெண்கள் தனித்து வாழும் வாழ்க்கையை அதிகமாகத் தேர்வு செய்கிறார்கள் என நினைக்கிறேன். இதற்குப் பல்வேறு சமூக, பொருளாதார, மற்றும் வளர்ச்சி சார்ந்த காரணங்கள் உள்ளன.
(ஆனி மாத இதழில் மேலும் விபரமாக கட்டுரை தொடரும்.)
![]()
