உழைப்பின்றி அமையாது உலகு !
இன்றைய உலகம் இவ்வளவு அழகாக, செழிப்பாக, உயர்வாக இருப்பதற்குக் காரணம் உழைப்பாளிகளே என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மேகத்தை உரசியபடி கதை பேசும் கட்டிடங்களானாலும் சரி, உள்ளங்கைக்குள் வித்தை காட்டும் தொழில்நுட்பங்களானாலும் சரி, நமது உணவு மேஜையில் வந்திருக்கும் உணவுப் பொருட்கள் ஆனாலும் சரி, நம்மை சொசுசாக அழைத்துச் செல்லும் வாகனங்களானாலும் சரி, எல்லா இடங்களிலும் உழைப்பாளர்களின் மூச்சுக் காற்றே நிரம்பியிருக்கிறது.
உழைப்பாளர்கள் தங்களைக் கட்டியெழுப்புகிறார்கள், குடும்பங்களைக் கட்டியெழுப்புகிறார்கள், சமூகத்தைக் கட்டியெழுப்புகிறார்கள், தேசத்தைக் கட்டியெழுப்புகிறார்கள். உழைப்பாளர்கள் இல்லையேல் இந்த உலகம் இல்லை. மனிதன் தோன்றிய காலம் முதல், உழைப்பு அவனது இதயத் துடிப்பாகவே இருக்கிறது.
உழைப்பு பணத்தை மட்டும் வைத்து நிர்ணயம் செய்யப்படுவதில்லை. வீட்டில் காலில் சக்கரம் கட்டியபடி பாய்ந்து வேலை செய்யும் அம்மாக்கள் இரட்டைச் சம்பளத்துக்கு உரியவர்கள். எனில் உழைப்பாளர்கள் மதிக்கப்பட வேண்டும், கொண்டாடப்பட வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும், மரியாதையாய் நடத்தப்பட வேண்டும்.
ஆனால் உண்மையில் இன்றைய உலகம் தொழிலாளர்களை உதறிவிட்டு, முதலாளிகளையே முத்தமிடுகிறது. உழைப்பவர்களின் கூக்குரல் உதாசீனம் செய்யப்படுகிறது, தொழிலதிபர்களின் முனகலும் முக்கியத்துவம் பெறுகிறது. அழகிய சாலைகளைக் கட்டியெழுப்பும் தொழிலாளர்கள் வெறும் கால்களுடன் தான் நடக்கிறார்கள். அழகிய மாளிகைகளைக் கட்டியெழுப்புபவர்களுக்கு தெரு ஓரங்களில் பிளாஸ்டிக் குடிசைகளே கிடைக்கின்றன. உயிர் கொடுத்து விளைச்சலைக் காண்பவர்களுக்கு பட்டினியே பரிசாய்க் கிடைக்கிறது! தேசத்தின் முதுகெலும்புகள், புறக்கணிக்கப்படுகின்றன. முதலாளிகளின் பூஜிக்கப்படுகின்றனர்.
கோவிட் காலங்களில் பல தொழில்கள் டிஜிடல் மயமானபோது பல நூறு மைல்கள் நடந்தனர் உழைப்பாளிகள். குழந்தைகளைத் தோளில் சுமந்தபடி, கால்களில் செருப்புகள் அறுந்து வீழ, உயிரைக் கையில் பிடித்தபடி அவர்கள் நடந்தார்கள். விடாமுயற்சி, பொறுமை, சகிப்புத் தன்மை இவற்றுக்கெல்லாம் ஒரு முனைவர் பட்டம் உண்டெனில் இவர்களுக்குத் தான் தாராளமாகத் தரவேண்டும். ஆனால், உலகம் இவர்களை உதாசீனம் செய்கிறது.
இதெல்லாம் ஒரு புறம் இருக்க,இன்றைக்கு உழைப்பை விளையாட்டாய்ப் பார்க்கின்ற ஒரு தலைமுறை உருவாகியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். வாங்கும் ஊதியத்துக்கேற்ற வேலையைச் செய்ய வேண்டும் எனும் மனநிலை கொஞ்சம் கொஞ்சம் மங்கி வருகிறது.
வெளிச்சத் திரைகளை பெரு விரலால் தேய்த்துத் தேய்த்து பொழுதுகளைப் போக்குகிறது இளைய தலைமுறை. வேலை என்ன ஸ்டேட்டஸில் இருக்கு என்பதைச் சொல்லத் தெரியாதவர்கள் மணிக்கொரு தரம் சமூக வலைத்தளங்களில் ஸ்டேட்டஸ் மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். வேலை நேரங்களை விட அதிகமான நேரங்களை காபி நேரங்களே கபளீகரம் செய்து விடுகின்றன. நிறைய சம்பளம் வேண்டும் என கேட்பவர்கள், நிறைய வேலை செய்வேன் என சொல்வதில்லை.
சமூகம் உழைப்பாளிகளைச் சுரண்டும் போது அவர்களுக்கான உற்சாகம் குறைகிறது. உழைப்பாளிகளே தங்கள் கடமையை உதாசீனம் செய்யும் போது வளர்ச்சி குறைகிறது. செய்யும் தொழிலே தெய்வம் எனும் கூற்று இன்று இளைய தலைமுறையினரால் ‘கிரிஞ்ச்’ எனவும் ‘பூமர்’ எனவும் விமர்சிக்கப்படுகிறது.
ஒரு வித ஃபாஸ்ட் புட் கலாச்சாரமே எங்கும் உலவுகிறது. வளர்ச்சி, லாட்டரி போல் இருக்க வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். என்னால் எவ்வளவு அதிகமாய்க் கொடுக்க முடியுமோ அவ்வளவையும் கொடுப்பேன் என்று தான் நமது முன்னோர்கள் உழைத்தார்கள். ஆனால் இன்றோ, குறைந்த பட்சம் எவ்வளவு வேலை செய்தால் வேலையைத் தக்க வைத்துக் கொள்ளலாம் என்றே நினைக்கின்றனர். வைஃபை ஒன்றிரண்டு புள்ளிகளுடன் இழுத்து இழுத்து வேலை செய்வது போல தான் பலரும் வேலை செய்கிறார்கள்.
வேலை இடங்களெல்லாம் ஒரு மினி தியேட்டர் போல மாறிக்கொண்டிருக்கின்றன. கைகளில் இருக்கும் மொபைல் ஏதோ ஒன்றை காட்டிக் கொண்டே இருக்கிறது. நடப்பவை உரையாடல்களாக, படங்களாக, ரீல்களாக, ஸ்டேட்டஸ்களாக பரிமாறப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
கற்றுக் கொள்ள வேண்டும் எனும் ஆர்வம் மங்கிப் போக, இணையத்திலிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும் எனும் நோக்கமே முதன்மையாய் மாறியிருக்கிறது. யூடியூப் சமையல் குறிப்பு ஓடிக் கொண்டே இருக்கும் போது தான் சமைக்கவே செய்கின்றனர் இளைய தலைமுறையினர்.
சீக்கிரம் பணம் சம்பாதிக்க வேண்டும், ஆனால் கடினமாய் உழைக்கக் கூடாது. இதுக்கு ஏதாச்சும் வழியிருக்கா ? என்று தான் நவீன உழைப்பாளர்கள் தேடுகின்றனர். அதற்காக மூன்லைட்டிங் என ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வேலை செய்யவும் முயல்கிறார்கள்.
ஒரே நேரத்தில் இரண்டு பேரைத் திருமணம் செய்த அவஸ்தையில், வாழ்க்கையைக் குழப்பியடிக்கிறார்கள்.
ஒவ்வொரு பந்தை எதிர்கொள்ளும் முன்பும், அங்கும் இங்கும் நடக்கும் கிரிக்கெட் பேட்ஸ்மேனைப் போல இன்றைய பணியாளர்கள் ஒவ்வொரு சின்ன வேலைக்கும் இடையே பிரேக் எடுத்துத் தள்ளுகிறார்கள். அவர்கள் வேலை செய்யும் நேரத்தை விட அதிகமாய் இந்த ஓய்வு நேரம் வந்து உட்கார்ந்து விடுகிறது. ஏதோ வேலை என்பது ஒரு தண்டனை என்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். இது வளர்ச்சிக்கான வாய்ப்பாய் பலரும் பார்ப்பதில்லை. அதனால் தான் நிறுவனத்திடமோ, தலைமையிடமோ பிடிப்பு இல்லாமல் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். யார் எங்கே இறங்கினால் எனக்கென்ன என வண்டியை ஓட்டும் ஓட்டுநர் போல, பணியாளர்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
அலுவலகங்களில் சந்திக்கும் இன்னொரு மிகப்பெரிய பிரச்சினை, எந்த ஒரு தவறையும் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இன்றைய இளம் பணியாளர்கள் இல்லை என்பது தான். ஒரு சிக்கல் என்றால் அதை தீர்க்க ஓடும் கால்கள் அவர்களிடம் இல்லை. இன்னொருவன் மீது குற்றம் சாட்ட நீளும் கைகள் மட்டுமே இருக்கின்றன. ‘பந்து பெருசா இருக்குப்பா, அதான் கோல் போட முடியல’ என்று கூட சொல்வார்கள் இவர்கள். இவர்கள் தப்பித்தல் மனநிலையும், ஒப்பித்தல் மனநிலையும் மட்டுமே கொண்டிருக்கிறார்கள்.
முன்பெல்லாம் வேலை நேரத்துக்கு முன்னாடியே வந்து, வேலை நேரம் முடிந்தாலும் கடைசி வேலையை முடித்து விட்டுச் செல்வது உழைப்பாளர்களின் வாடிக்கை. இப்போது அதிகாலை வரை போர்வைக்குள் போன் நோண்டிவிட்டு, எப்போதோ தூங்கிப் போய், கொட்டாவியுடன் தான் அலுவலக வாசலை எட்டுகிறார்கள். அலுவலகத்தை விட்டு வெளியேறும் போது மட்டும் ஏதோ ஆம்புலன்ஸ் போல சீறிப் பாய்கிறார்கள்.
தெரியாததைத் தெரியாது என ஒத்துக் கொள்வதில் தான் கற்றல் துவங்குகிறது. அங்கு தான் நம் ஆற்றலும் வெளிப்படுகிறது. தெரியாதவற்றையெல்லாம் தெரியும் என சொல்லும் வறட்டு கௌரவம் இன்றைக்கு தொழில் துறையையும் வெகுவாய்ப் பாதிக்கிறது.
உழைப்பாளர்களால் தான் உலகம் இயங்குகிறது !
உழைப்பாளர்கள் மதிக்கப்பட வேண்டும் !
அதே நேரத்தில் உழைப்பாளர்கள் உழைப்பை மதிக்க வேண்டும், நேசிக்க வேண்டும், அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். எனும் சிந்தனைகள இந்த உழைப்பாளர் தினம் நமக்குக் கற்றுத் தரட்டும்
![]()
