மனதில் பட்டதை மேடையில் பகிரங்கப் படுத்தும்ரவிமாஸ்ரரின் பக்குவம் எனக்குப் பிடித்திருக்கிறது.
பொன்.புத்திசிகாமணி,யேர்மனி.
அன்புச் சகோதரனே! 29.03.2025 உங்கள் மணிவிழாவில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை, ஆனாலும் இதயபூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். கொஞ்சம் சதை,குள்ளமான அத்தத் தோற்றம்,கும்பலாக அடர்த்தியான தலைமயிர்,கண்ணனின் கருமை.இன்னும் தான் என்மனக்கண்ணில் நிற்கிறது. முதல் முதலில் உங்களை நான் பார்த்தது. டோட்முண்டில். ஒரு கலை நிகழ்வில் இருவரும் சந்தித்தோம்,அப்போது நடைபெற்ற கவியரங்கில் ஒரு கவிதை வாசித்தேன். அரங்கில் தொகுப்பாளராகி புகழ்ந்து தள்ளினீர்கள். என்னைப் பற்றி அன்றைய அறிமுகம் இன்றுவரை தொடர்கிறது.தூண்டில் பார்த்திபன் அவர்களின் நிகழ்வொன்றிலும் கலந்து நிகழ்ச்சி செய்த போதும் சந்தித்து மகிழ்ந்தோம். அந்தக் காலத்தில் என்மீது அவ்வளவு மரியாதை வைத்திருந்தீர்கள். இது ஒரு சகோதரனாக இருந்தது.பின்னாளில் கொஞ்சம் நட்போடு சேர்ந்தது.
எனக்கு அதில் மனநிறைவே இருந்தது.இளையவர்கள் எங்களை தங்கள் வயதோடு ஒப்பிட்டுக்கதைக்கும் போது மனம் சந்தோசமடையும்,எங்களையும் இளையவர்களாக நினைக்கத் தோன்றும். எங்கும் எதிலும் ரவிமாஸ்ரர் இருப்பார்.விதவிதமான தோற்றத்தில்.கடுகடுப்பிருக்கும்,கோபம் கலந்திருக்கும்,கல கலப்பிருக்கும், நகைச்சுவையும் கலந்து வரும். அப்போதெல்லாம் நான் நன்றாக ரசித்திருக்கிறேன். கொதித்து தள்ளும் ரவிமாஸ்ரரை பல சந்தர்ப்பங்களில் கண்டிருக்கிறேன். உடனேயே குளிர்ந்த நீரோடையாக மாறிய ரவிமாஸ்ரையும் பார்த்து வியந்திருக்கிறேன். மனதில் பட்டதை மேடையில் பகிரங்கப் படுத்தும் பக்குவம் எனக்குப் பிடித்திருக்கிறது. இனிமேல் இந்த மனிதர் அவருடன் கதைக்க மாட்டார் என்று நினைப்பதுண்டு. ரவி அந்த வேடத்தில்,மாத்திரம் அப்படித்தான்.பல சந்தர்ப்பங்கள் இதற்கு உதாரணமாக அமைந்திருக்கிறது. வானொலியில் ஒரு நிகழ்ச்சியை எடுத்துச் செய்யும்படி எவ்வளவு தடவைகள் என்னை வற்புறுத்தினீர்கள், நான் தான் சோம்பலில் மறுத்திருக்கிறேன். சொன்ன நேரத்தில் செய்திருந்தால் எங்கேயோ போயிருக்கலாம். நன்றி ரவி மாஸ்ரர்.
உங்கள் மணிவிழாவில்;. “வெற்றிமணி” ஆசிரியர் தலைமை தாங்குகிறார். அந்த மணியின் சத்தம் இன்று சங்கீதமாக ஒலிக்கும். அவரைப் பெருமைப் படுத்த நீங்கள் அவரது விழாக்களில் பங்கு பற்றி மகிழ் வித்தீர்கள். இன்று அவர் உங்களைப் பெருமைப் படுத்தி மகிழ்விக்கிறார். இதனால் நானும் மகிழ்கிறேன். ஐரோப்பிய வானொலி அதிபர்,அகரம்,அகரதீபம் சஞ்சிகைகளின் பிரதம ஆசிரியர் என்ற பெருமைக் குரியவர் நீங்கள். இந்தப் பெருமை உங்கள் உழைப்பிற்குக் கிடைத்தது.யாரையும் பகையாக நினைக்காத பண்பு எனக்குப் பிடித்திருக்கிறது. ஒரு சின்ன மனிதர்,ஆனாலும் சிறந்த சேவையாளன்.என்றும் வாழ்வில் உயர்வு கிடைக்க ஒரு சகோதரனாக உளமார வாழ்த்துகிறேன்.
![]()
