உடல் கடிகாரம்

0
vm258

பாக்குப் பாட்டி (யேர்மனி)

ஏன் இந்த எண்ணங்கள் அறுபது வயதின் பின் ஏற்படுகிறது? அதற்கு காரணம் வாழும் ஆசை மட்டும் தான். ஐம்பது அறுபது வயதானவுடன் ஐயையோ வயதாகிவிட்டதே, நோய்கள் வந்துவிடுமோ, எழுபது வயதுக்குமேல் இருப்போமா? சாகப்போகிறோமே எனும் எண்ண அலைகள் ஓட வெளிக்கிடும்.

நான் சொல்லும் எண்ண அலைகள் இந்தக் கால தைரியசாலிகள் மனதில் அல்ல. எங்கள் கால தெய்வங்கள் மனதில் மட்டுமே. அதுகூட சில பலவீனப்பட்டவர்களிடம் மட்டுமே. இந்த எண்ணத்தைத்தான் உடல் கடிகாரம் (Bioclock) என்பார்கள். எழுபது வயதானாலே ஏதோ வாழ்வு முடிந்துவிட்டதாக எண்ணுவது. இப்படி எண்ணியே சிலர் எழுபது வயதுக்குள் இறந்துவிடுவார்கள்.

எங்கள் பெற்றோர் காலங்களில் வாழ்வின் வயது எல்லை அறுபது அறுபத்தைந்து தான். தப்பினால் எழுபது வயது. பல தடவை நான் என் மனதுக்குள் கேட்டுள்ளேன். “எமது நாட்டில் எமது முன்னோர்கள் அறுபத்தைந்து எழுபது வயதுக்குள் இறந்துவிடுகிறார்களே, அப்படியானால் நாங்களும் அப்படியா?” என்று. ஆனால் அதன் உண்மை வேறு.

நாட்டில் உள்ளவர்கள் தங்கள் உடம்பை வைத்தியர்களிடம் சென்று காட்டுவது குறைவு. மேலை நாடுகளில் அப்படி இல்லை. மூன்று மாதத்துக்கு ஒருமுறை உடல் பரிசோதனைகள் செய்து கொண்டு இருப்பார்கள். சில பல குறைகளையும் சரிபடுத்துவார்கள். மேலை நாடுகளில் வைத்திய வசதிகள் அதிகம். இதுதான் முதல் காரணம் முதுமையிலும் சுகதேகிகளாக வாழ்வதற்கு. ஆனாலும் இந்த காலத்தில் நமது தாய்நாடு உட்பட எல்லா நாட்டிலும் எல்லோரும் சுகதேகிகளாகவே இருக்கிறார்கள்.

விடிகாலை ஐந்து மணிக்கு நித்திரைவிட்டு எழும்ப வேண்டும் என்று கடிகாரத்தில் அலாரம் வைத்து படுப்போம். ஆனால் அலாரம் அடிக்குமுன்பே நாங்கள் நித்திரையிலிருந்து விழித்து எழுந்தும் விடுவோம். எங்கள் எண்ண ஓட்டங்கள் எங்களை விழிப்படைய செய்துவிடும். இதைத்தான் உடல் கடிகாரம் என்பார்கள்.

அப்போ யோசித்துப் பாருங்கள் மக்களே, ஐம்பது அறுபது வயதில் வயோதிபத்தையும் இறப்பையும் யோசித்தால் எங்களுக்கு அதே வயதில் நோய்கள் வரத் தொடங்குமா தொடங்காதா? தொடங்கும். அதுவும் என்ன நோய்? இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், கொழுப்பு இவையெல்லாம் வேண்டா விருந்தாளிகளாக உடலில் வந்து ஒட்டிக்கொள்ளுவார்கள். இவையெல்லாம் நோயா? யார் சொன்னது?

இளம் வயதினரோ வயோதிபர்களோ கூடி பேசும்போதெல்லாம் சிலர் எனக்கு சர்க்கரை நோய் , எனக்கு இரத்த அழுத்தம், எனக்கு கொழுப்பு என்றெல்லாம் பேசுவார்கள். சீனி சாப்பாட்டை அளவுக்கு அதிகமாக சாப்பிட்ட படியால்தானே அதே சீனி எங்கள் உடம்பில் போய் இரத்தத்தில் கலக்கிறது. அதேபோல் கொழுப்பும் உடலில் சேரும். உலகத்தில் உள்ள வேதனையெல்லாம் நான்தான் அனுபவிக்க வேண்டும். என் பிள்ளைகளை படிப்பிப்பேன், நல்ல நிலைக்கு கொண்டுவருவேன். அதனால் அவர்கள் சின்னவர்களாக இருக்கும்போதே அவர்களுக்காக நேரம் காலமின்றி ஓடி ஓடி உழைப்பேன். டென்ஸன் டென்ஸன். அப்போ இரத்த அழுத்தம் ஏற்படாதா?

அதையும்விட இவையெல்லாம் பரம்பரை நோய்களாக வைத்தியர்கள் சொல்லிவிடுவார்கள். ஏன் எங்கள் பெற்றோரும் இதே செயலை பின்பற்றிதானே எங்களை இந்நிலைக்கு கொண்டு வந்தார்கள். அதனால்தான் நோய்கள் அவர்களுக்கும் ஏற்பட்டது. அது பரம்பரை நோயாகியது.

இவையெல்லாம் நோயே இல்லை என்பதை புரிந்து அதன் வழி நடந்தாலே இந்த உடல் கடிகாரத்தை உடம்பிலிருந்து தூக்கி எறிந்துவிடலாம். நாங்கள் உண்மை ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். மனநிலை சரி இல்லாதவர்கள், குழந்தை உள்ளம் கொண்டவர்களுக்கு இந்த எண்ணங்கள் தோன்றாது இல்லையா? அவர்கள் உடலில் கடிகாரமே இருக்காது.

யப்பான், சீனா மக்கள் எல்லோரும் நூறு வயதுக்கு மேல் வாழ்வார்கள். காரணம் நூறு வயதானாலும் தங்கள் வேலையை தாங்களே செய்வார்கள். வெளியே செல்லும்போது அநேகமானவர்கள் மிதிவண்டியே பாவிப்பார்கள். சிற்றுந்து பாவனையே குறைவு. தோட்ட வேலையெல்லாம் வயோதிபரே பார்ப்பார்கள். அவர்கள் அப்படி வாழ்வதற்கு அவர்கள் மனநிலையே காரணம்.

ஆனால் எங்கள் மக்களுக்கோ, எழுபது வயதுக்கு முன்பே வேலைகள் செய்வதற்கு ஒரு உதவியாள். நடையில் ஒரு தள்ளாட்டம். வீட்டில் குஷியாக இருந்து தொலைக்காட்சி பார்ப்பதற்கு ஒரு குஷி இருக்கை. நடந்தால் நாரி நோ, முழங்காலில் சில்லு தேய்வனவு, கால் உளைவு. இருந்தால் எழுந்து நிற்க முடியாது. பக்கத்தில் நாளாந்தம் உடம்புக்குள் அனுப்பும் மாத்திரைகள் நிரம்பிய பெட்டி. எங்களை நாங்களே அனுப்ப உடல் கடிகாரத்தை பக்கத்திலே வைத்திருப்போம்.

ஏன் நாங்கள் யப்பான் சீன மக்களாக மாறக்கூடாது? நடந்து திரிவதைவிட்டு ஓடிப் பார்க்கலாம். அழகான உடை அழகாரங்கள், முக அழகாரங்கள், தலைமுடி அழகாரங்கள் செய்து நாங்கள் இளமையானவர்கள் என்ற எண்ணங்களை நாங்களே எங்களுக்குள் கொண்டுவரலாம். வாகனங்களில் சென்று தரிப்பிடங்களைத் தூரங்களில் செய்துவிட்டு செல்ல வேண்டிய இடத்துக்கு நடந்து செல்லலாம். மாத்திரை பெட்டிகளை எறிந்துவிட்டு அளவான ஆரோக்கியமான உணவு, தேகப் பயிற்சிகள் செய்து எந்த நோய்களும் எங்களை அண்டாதபடி வாழலாம். வகை வகையான உணவுகளை செய்து பார்க்கலாம். (சும்மா சொல்லக்கூடாது, சமையல் விடயத்தில் எங்களை அடிக்க ஆள் இல்லை.)

சுறுசுறுப்பாக இருப்போம். வாசித்தல், பேசுதல், பார்த்தல், கேட்டல் போன்ற பயிற்சிகளை அளவுக்கு அதிகமாக்கி நினைவாற்றலை ஊக்குவிப்போம். என்ன செய்வது? நானே அதிக நாளாக அந்த கடிகாரத்தை உடம்புக்குள் வைத்துக்கொண்டுதான் திரிந்து இருக்கேன். இப்ப ஒரு வருசத்துக்கு முன்னாடிதான் எறிஞ்சேன். அதுதான் எல்லோரும் சொல்லுவார்கள், எதிர்மறையான எண்ணங்களை தூக்கி எறிந்துவிட்டு நேர்மறையான எண்ணங்களை வளர்த்தால் அது அப்படியே நடக்கும் என்று. எல்லாம் பட்டுத்தான் திருந்த வேணும்போல.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *