மலைக்க வைத்த மலையகம்
மலைத்தேன் .02
தூக்கம் தெளிந்தவொரு காலையில்..கையில் தேனீருடன் வந்து நிற்கிறாள்.
ஆண்டுகள் பலவாய் நான் சுவைத்த தேனீர்.
-நல்லா தூங்கினீங்களா- அவள். -ஓம்- என்றேன் நான்.
100 வகுப்புகளாய்..-வேருக்குநீர்- அமைப்பினூடாக என்னிடம் படித்த மாணவிதான் அவள்.
மலைக்காற்று ஒரு தென்றலை வீசி எறிந்து விட்டுப் போனது. ஒரு பிளாஸ்ரிக் கதிரையில் அமர்ந்து கொண்டிருந்தேன். அருகில் மாணவி கையில் தேனீருடன்.
விழித்தபோது…என் முன்னே மலை. கீழேயும் மேலேயும் கொழுந்துச் செடிகள். ஓடிப்போய்ச் செடிகளைத் தடவலாமா…அச் சிற்றருவியில் என்னுடல் நனைக்கலாமா என்பதே என் எண்ணமாயிருந்தது.
ஓடு! இதற்காகத்தானே காத்திருந்தாய். உள் மனம் ஓங்கிச் சொல்லிற்று.
-அங்கே நான் போகலாமா- என்று கேட்டேன்.
போய்ட்டு வாங்க சேர். தம்பியைக் கூடக் கூட்டிட்டுப் போங்க. சறுக்கும் என்றாள். தம்பி கையைப் பிடிக்க.. இறங்கலானேன்.
இறங்குதல் இலகு ஏறுதல் தான் சிரமமென அந்நாளில் ஆர் ஒரு தமிழ் வாத்தி சொன்னது நினைவில் வருகிறது.
இறங்கினேன்.குளித்தேன்.அச்சிற்றருவியிற்றான் ஆயிரம் ஆண்டு அடிமை வாழ்வு இருந்திருக்கிறது.ஆயிரம் ஆண்டு என நான் சொல்வது…இரு நூறாண்டு.
குளித்து, பல்துலக்கி,பள்ளிக்கூடம் போய்,சீருடையணிந்து,பட்டம் பெற்று, இப்போ ஒரு ஆசிரையாய்..கையில் தேனீருடன்
நன்றாகத் தூங்கினீர்களா எனக் கேட்கும் என் மாணவியின் அன்பை …
அவ்வாழ்வைக் கண்டு மலைத்தேன். பிறகு,அந்தமலையும் மாருதமும் பிடித்துப் போயிற்று. அவளின் தம்பியும் அவனின் நண்பர்களும் நானும் நண்பர்களானோம். மலையும் கொழுந்துகளும் போல. இளரத்தம் கொண்டவனொருவன் திறீ வீலர் வைத்து தன் குடும்பத்தையும் தன்னையும் ஓட்டிக்கொண்டிருந்தான்.
சாகசப் பயணங்கள் செய்தோம். சாமத்தில் கொழுந்திடை நெருப்பு மூட்டினோம், தொண்டை கிழியக் கத்தினோம், மலை எதிரொலிக்குமா எனப் பரிசோதித்தோம், உண்மையில் சிறுத்தைப்புலி இங்கிருக்கா என்று தேடினோம். தான் கண்டதாக ஒருத்தன் சொன்னான். உண்மை என்பதை வத்தேகம பலதெனிய போகும் போது பின்னர் நான் உறுதி செய்தேன். நேரே காணவில்லை காற்றடங்களைப் பார்த்தேன். அவ்வூர் மக்களும் சொன்னார்கள். அவர்களுடன் ஆடிப்பாடிப் போகும் வழியில் ஒரு எஸ்ரேற்றைக் காட்டி! சேர் இது பொல்லாத எஸ்ரேற் இங்கு பல கொடுமைகள் நடந்திருக்கு என்று சொன்னார்கள். தங்கள் மூதாதையர் சொன்னதாகச் சொன்னார்கள். என்ன கொடுமை,என்ன அடிமைத்தனம் என அங்கிருக்கும் நாட்களில் சுற்றித்திரிந்து விசாரித்தேன். கொடுமை நடந்திருக்கு என்கிற கருத்தை எல்லோரும் சொல்கிறார்கள்.
தெரியாத மர்மங்கள். (தொடரும்)
![]()
