இது காலம் எனக்களித்த வரம்.
பேராசிரியர்.சி.மௌனகுரு.
‘பீஸ்மப் பிரதிக்ஞை’ஓரங்க நாடகம்
கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடத்தும் அரங்கியல் கருத் தரங்கில் இடம்பெற்ற கலை நிகழ்வுகளுள் ஒன்று இது. கடந்த மாதம் இடம் பெற்றது. கூத்து அசைவிலும் இசையிலும் பாத்திர உருவாக்கம் என்னும் நிகழ்வு. இதை அளித்தவர்கள் யாழ்ப்பாணம் ஆரோஹணா அரங்கக்கல்லூரியினர்.
இது இரண்டு பகுதிகளைக் கொண்டிருந்தது. இரண்டாவது பகுதி கூத்தின் சாயல் கொண்டு ஓர் ஓரங்க நாடகம் பீஸ்ம பிரதிக்ஞை பிரதியை நான் எழுதிகொடுத்தேன்.
என்னையே பீஸ்மபாத்திரம் ஏற்கும் படி கேட்டுகொண்டதோடு எனக்கான ஒப்பனைகளையும் செய்து விட்டான் அயூரன். அதற்கான அனைத்தையும் அவன் கொண்டு வந்திருந்தான். அவன் கை வண்ணம் அன்று கண்டேன் மாணவ ரோடு சேர்ந்து நடிப்பது மஹா இன்பம். அதனை நான் நீண்ட நாட்களின் பின் அன்று அனுப வித்தேன். இது ஓர் வாசிப்பு அரங்காக அரங்கியல் அம்சங்களுடன் இடம் பெற்றது.
தன் தொடை மீது வைத்து,பாலூட்டி, தனு வித்தையூட்டி, அர்ஜுனனையும் பாண்டவ கௌரவர்களையும் வளர்த்தவர் தாத்தா பீஷ்மர்.
தன்னோடு பதினாறம் நாள் மஹபாரதப் போரில் தன்னோடு மோத வரும் அர்ஜுனப் பேரப் பிள்ளையை எதிர் பார்த்து நிற்கும்தருணம் அது. பெருமூச்சோடு அவர் தன் கடந்த காலங்களை நினைவு கூருகிறார். கடந்த கால தன் உணர்வுகளை கூறியபடி தன்னை விமர்சனமும் செய்தபடி யுத்தத்துக்கு ஆயத்தமாகின்றார்.
அவரது இறப்பு அன்று நிச்சயம் என்று அவருக்கு தெரியும்.அவர் கடைசி வார்த் தைகள் இவ்வாறு ஒலிக்கின்றன. தன்னோடு இன்று அமர் புரிய வருபவனுமான அர்ஜுன பேர பிள்ளையை எதிர்நோக்கி அவர் கூறுகிறார்.
எத்தனை எத்தனை வியூகங்களைக் கண்டவன் நான்.ஒன்றா இரண்டா? எண்ணில் அடங்கா எனைச் சுற்றிப் போடப்பட்ட வியூகங்களை, உடைத்து உடைத்தே வளர்ந்தவன் நானடா. வியூகம் தகர்த்தல் எனக்கொரு விளையாட்டு. நீங்கள் அதை அறியீர்.எத்தனை வியூகங்களைக் கற்பித்திருப்பேன் உங்களுக்கு, என் அனுபவத்தையே பாலாக்கி ஊட்டி வளர்த்தேனே!தீட்டிய மரத்தில் கூர் பார்க்க வந்தவரே. இது குரு வம்சத்திற்காகத் தூக்கிய தனுசடா. அவ்வம்சம் காக்கப் பிரதிக்ஞை எடுத்துள்ளேன்.
அது பீஸ்ம பிரதிக்ஞை! நான் இருக்கும் வரை குரு வம்சத்தை அழிய விடேன்.என் கரமும் தனுசும் நான் இறக்கும் வரை எதிரிகளைத் தடுத்துக்கொண்டே இருக்கும். வாருங்கள் மோதுங்கள்! கனத்த மனதோடு யுத்தத்தை எதிர்கொள்கிறேன். தர்ம யுத்தம் எனக்குப் புதியதல்ல.
யுத்த பேரிகை முழங்குகிறது.யுத்த சங்கநாதம் கேட்கிறது. கையிலே தனு தாங்கி படைகளை எதிர்கொண்டு கம்பீரமாக நிற்கிறார் அக்கிழவர்.
புராண இதிகாச பாத்திரங்களுடன் பீஷ்மர்.
01.மாரியம்மாளோடு பீஷ்மர்
02.மண்டோதரியோடு பீஷ்மர்
03.இராவணோடு பீஷ்மர்
04.இந்ரஜித்தோடு பீஷ்மர்
மாணவர்களோடு நடிப்பது மகா இன்பம்.இவர்கள் அனைவரும் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் எனக்கோ அவர்கள விட நான்கு மடங்கு வயது அதிகம். இது காலம் எனக்களித்த வரம்.
![]()
