விடுமுறைகளும், விதிமுறைகளும்.
பயணங்கள் நமது ஆயுளை நீட்டிக்கும்
மன அழுத்தத்தை விலக்கும்
சேவியர் தமிழ் நாடு.
‘அவசர உலகம்’ என்று தான் இன்றைய வாழ்க்கையை அழைக்க வேண்டியிருக்கிறது. அவசரமாய் எழும்பி, அவசரமாய் ஓடி, அவசரமாய் வீடு வந்து, அவசரமாய் தூங்கி, அவசரமாய் எழும்பி என வாழ்க்கை ஓடுகிறது. நின்று நிதானித்தால் ஏதோ உலகமே இடிந்து விழுவது போல எல்லாரும் பாவிக்கிறார்கள்.
ஒரு நண்பரைப் பார்த்தால் உற்சாகமாய்க் கட்டியணைத்து அரை மணி நேரம் பேச யாருக்கும் நேரம் இருப்பதில்லை. “ஹாய்… வாட் எ சர்ப்ப்ரைஸ்..” என ஒரு வார்த்தை பேசிவிட்டு. அதிகபட்சம் அவருடைய எண்ணை வாங்கி வாட்ஸப்பு வாங்குவோம். அல்லது “பேஸ்புக்ல என்ன நேம் ல இருக்கே ?” என கேட்டு வாங்கி விடைபெறுவோம்.
நமது உறவுகள் டிஜிடல் மயமாகிவிட்டன. இதயங்களின் இறுக்கத்தை இணையத்தின் இருப்பு பறித்துக் கொண்டு விட்டது. எல்லோருமே நெருக்கமாய் இருப்பது போன்ற ஒரு மாயைக்குள் சிக்கிக் கொள்ளப் பழகிவிட்டோம். நமது பிள்ளைகள் காலையில் எழும்பி போகோ சேனல் பார்த்து விட்டு, ஸ்கூல் சென்று திரும்பி டோரேமான் பார்த்து சாப்பிட்டு, ஹோம் வர்க் முடித்து ஐபேட்களில் ஐக்கியமாகி விடுகின்றனர். அவர்கள் தூங்கிய பின் தான் பாதி பெற்றோர் வீடுகளுக்கே திரும்புகிறார்கள்.
கணவன் மனைவியிடையேயான உரையாடல்களை வாழ்க்கையின் பொருளாதாரத் தேவைகள் பறித்து விட்டன. குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் இடையேயான உரையாடல்களை மொபைல் ஆப்ஸ்கள் பறித்து விட்டன. இத்தகைய சூழலில் எல்லோருக்கும் தேவையான ஒரு விஷயம் விடுமுறையில் ஒரு பயணம்.
ரயில் பயணங்களில் பார்த்திருக்கிறேன். ஒரு குடும்பம் ரயிலில் பயணம் செய்யும். அப்பா ஒரு ஓரமாய் அமர்ந்து வாட்ஸப்பிக் கொண்டிருப்பார், அம்மா ஃபேஸ் புக்கிக் கொன்டிருப்பார், பிள்ளைகள் க்ளேஷ் ஆஃப் கிளான்ஸ் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு இடையே இருக்க வேண்டிய சிரிப்பும், உற்சாகமும், அடித்துப் பேசி மகிழும் கணங்களும் எல்லாமே டெக்னாலஜி கருவிகளில் சமாதியாகி விடுகின்றன.
பயணங்கள் விடுமுறையின் ஒரு முக்கியமான அம்சம். அதில் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயம் எல்லா கேட்ஜெட்களையும் தூக்கி மூட்டை கட்டி வீட்டிலேயே போட்டு விட்டுக் கிளம்புவது தான். அவசரத்துக்குப் பேச ஒரு போன் கையில் இருந்தால் போதுமானது.
பயணங்கள் முதலாவது நமது குடும்பத்தினரிடையே ஒரு ஆழமான புரிதலை உருவாக்க வேண்டும். என் பையன் எவ்வளவு அழகா பேசறான் என்பதையே பல பெற்றோர்கள் இத்தகைய பயணங்களில் தான் புரிந்து கொள்கிறார்கள். மனைவியோடு மனம் விட்டுப் பேசும் தருணங்களும், குழந்தைகளோடு குழந்தையாய் புரளும் தருணங்களும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகின்றன. இந்த பிணைப்பைத் தான் விடுமுறைப் பயணங்கள் தரவேண்டும்.
வாழ்க்கை என்பது வரப்போகும் நாட்களிலல்ல, கடந்து செல்லும் கணங்களில் இருக்கிறது
பயணங்கள் நமது ஆயுளை நீட்டிக்கும் என்றும், மன அழுத்தத்தை விலக்கும் என்றும் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. விட்டு விடுதலையாகி ஒரு சிட்டுக் குருவியைப் போல பறந்து திரியும் ஒரு ஆனந்த அனுபவத்தை அனுபவித்துப் பாருங்கள். வாழ்க்கை என்பது வரப்போகும் நாட்களிலல்ல, கடந்து செல்லும் கணங்களில் இருக்கிறது என்பதே வாழ்க்கையின் தத்துவம்.
விடுமுறை பயணங்கள் செல்லும் பல பெற்றோர் செய்யும் தவறு கூடவே தாங்கள் யார் எனும் அடையாளத்தையும் கூடவே தூக்கிச் சுமப்பது தான். நான் ஒரு மேனேஜர், நான் ஒரு முதலாளி, நான் ஒரு அப்பாடக்கர் போன்ற சிந்தனைகளைத் தூக்கிக் கொண்டு பயணம் செல்லாதீர்கள். உங்களுக்கு உள்ளே ஒளிந்து கிடக்கும் உங்களுடைய மழலைக்கால முகமோ, அல்லது யாருக்கும் தெரியாத உங்களுடைய ரசனை முகமோ வெளியே வரட்டும்.
“அங்கே ஓடாதே”, “இங்கே போகாதே”, ” அது அழுக்கு அதெல்லாம் தொடாதே” எனும் தொடர் கட்டுப்பாடுகளை இட்டு விடுமுறையை கறையாக்கி விடாதீர்கள். மணல் வீடு கட்டுங்கள், அலையில் புரளுங்கள். ஆடை அழுக்காவது தான் மனது சுத்தமாவதன் அடையாளம். மனதின் கவசங்களைக் கழற்றாமல் தும்பி பிடிக்க முடியாது. விடுமுறை என்பது நீங்கள் எப்படி இருக்க வேண்டுமென நீங்கள் முடிவெடுப்பது. அடுத்தவர்களுக்காக எதையும் போலித்தனமாகச் செய்யாதீர்கள்.
“நோ எலக்ட்ரானிக் டே”
சரி, விடுமுறைக்கு பயணம் எதுவும் போக முடியவில்லை என வைத்துக் கொள்ளுங்கள். பரவாயில்லை. ஒரு நாளை முழுமையாய் “நோ எலக்ட்ரானிக் டே” என அழைத்து குடும்பமாய் விளையாடுங்கள். லேப்டாப், போன், டேப்லெட் எல்லாமே அறைகளில் அடங்கிக் கிடக்கட்டும். அவை விரல்களால் பேசும் ஊடகங்கள். விரல்களால் பேசுவதை விட விழிகளால் பேசுவது அழகானது என்பதை உணருங்கள்.
வீட்டிலேயே ஒரு குட்டி மீட்டிங் போடுங்கள். பாடல், ஆடல், உரையாடல், பகிர்தல், விளையாடுதல் என ஏதேனும் சுவாரஸ்யமாய் செய்து கொண்டே இருங்கள். நேரத்தைப் பற்றியோ, வேறு எதைப் பற்றியோ சிந்தனையற்று இருங்கள். நீங்கள் அப்படிச் செலவு செய்யும் நேரத்தில், உறவையும் அன்பையும் மகிழ்வையும் சம்பாதிப்பீர்கள்.
கடைசியாக எப்போது உங்கள் பெற்றோரைச் சென்று பார்த்தீர்கள், அல்லது சற்றுத் தொலைவில் இருக்கும் உங்கள் சகோதரனையோ, சகோதரியையோ சென்று பார்த்தீர்கள் ? இந்த விடுமுறை அத்தகைய ஒரு வாய்ப்பை நல்கலாமே. குடும்பத்தோடு கிளம்பி உறவினர்களைச் சந்தித்து ஒரு இனிமையான அன்புப் பரிமாற்றத்தை நடத்துங்கள். அல்லது நீண்டகால நண்பன், ஒரு உறவினர் என உறவின் எல்லையை அதிகப்படுத்துங்கள்.
இன்னும் அதிக அர்த்தமுள்ளதாக இந்த விடுமுறையைக் கழிக்க வேண்டுமா ? குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஒரு அனாதை இல்லம் செல்லுங்கள். அங்கே உள்ள குழந்தைகளுடன் உங்கள் குழந்தைகளை விளையாட அனுமதியுங்கள். அங்கே உள்ள பெரியவர்களின் அருகே அமர்ந்து கதைகளைக் கேளுங்கள். வாழ்வின் முழுமை இத்தகைய நிகழ்வுகளில் இருக்கிறது. உங்கள் குழந்தைகள் வாழ்வின் உன்னதத்தை உணர்வார்கள். பிறரோடு நேசமாய் இருக்க வேண்டியதன் தேவையை அறிவார்கள்.
வெளியே செல்லும் வாய்ப்பும் இல்லாத சூழல் என வைத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக ஒரு மழை நாள் என நினைத்துக் கொள்ளுங்கள். வீட்டுக்குள்ளேயே செய்யக் கூடிய ஒரு ஹாபியை எடுங்கள். அது ஓவியம் வரைவதாக இருந்தால் எல்லாரும் சேர்ந்து ஓவியம் வரைந்து மகிழுங்கள். அல்லது ஒரு கொலாஜ் செய்து ரசியுங்கள். என்ன செய்கிறீர்கள் என்பதல்ல முக்கியம் எப்படி இணைந்து செய்கிறீர்கள் என்பதே முக்கியம். ஓவியம் அழகாக இருப்பதல்ல முக்கியம், குடும்பம் அன்பாக இருப்பதே முக்கியம்.
இப்போதெல்லாம் வீடியோ கேமராக்கள் கையடக்க போனிலேயே ஹைடெக் முறையில் வந்து விட்டன. வீட்டுக்குள்ளேயே ஒரு குட்டி நாடகம், நடனம், பாட்டு என எதையாவது ரெக்கார்ட் செய்து மகிழலாம். அது உங்களுடைய அந்த விடுமுறையின் இனிமையை டிஜிடல் கனவாக தனக்குள் பதுக்கியும் வைத்துக் கொள்ளும்.
வீட்டில் சின்னக் குழந்தைகள் இருந்தால் நல்ல கதைகளை வாசிக்கலாம். கதைகள் சொல்ல குழந்தைகளை உற்சாகப் படுத்தலாம். ஒருவர் கதையை ஆரம்பித்து, அடுத்தவர் அதைத் தொடரும் படி பிள்ளைகளின் கற்பனை வளத்தை ஊக்குவிக்கலாம். அதெல்லாம் இல்லையேல் குறைந்தபட்சம் கேரம், சீட்டு போல எல்லாரும் உட்கார்ந்து விளையாடும் ஏதோ ஒரு விளையாட்டையேனும் விளையாடலாம்.
விட்டுக் கொடுத்தலும், பிறருடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தலும், பெரிய எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லாமல் இருப்பதும் விடுமுறை காலத்தில் மிக அவசியம். அதுவும் நீங்கள் வேறு குடும்பத்தினருடன் சேர்ந்து விடுமுறையைக் கொண்டாடுகிறீர்களெனில் இது நிச்சயம் தேவை.
தூக்கிச் சுமக்காதவரை எந்த சுமையும் நமக்கொரு சுமையல்ல.
விடுமுறையின் முடிவில் இனிய நினைவுகள் மட்டுமே எஞ்சியிருக்கட்டும். ஏதேனும் கசப்பு அனுபவங்கள் இருந்தால் அதை அப்படியே கைகழுவி விட்டு விடுங்கள். தூக்கிச் சுமக்காதவரை எந்த சுமையும் நமக்கொரு சுமையல்ல.
சுருக்கமாக, விடுமுறை என்பது நம்மை புதுப்பிக்கும் காலமாகவும், நமது ரசனைகளின் விளை நிலத்தில் விளையாடும் காலமாகவும், உறவுகளின் இனிமையை உணரும் காலமாகவும், மனித நேயத்தின் கிளைகள் செழிக்கும் காலமாகவும் இருக்கட்டும். விடுமுறையில் டிஜிடலுக்கு விடைகொடுங்கள், உறவுகளுக்கு உயிர் கொடுங்கள்.
நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக
ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகளுக்கு எமது அஞ்சலி.
யாழ்ப்பாணம் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் 01.05.2025 இரவு சித்திரை திருவாதிரை, சுக்ல பக்ஷ (வளர்பிறை) பஞ்சமித் திதியில் எதிர்பாராத வேளையில், தமது 68ஆவது அகவையில் கொழும்பில் சுவாமிகள பரிபூரணம் எய்தியுள்ளார். தம் குருநாதர் தொடங்கிய நல்லை ஆதீனத்தின் அடுத்த மகா சந்நிதானமாக தமது முப்பது நான்கு வயதில் (1981) பட்டமேற்று சுமார் 44 ஆண்டுகள் ( ஏறத்தாழ அரை நூற்றாண்டு ) மகா சந்நிதானமாகப் பணியாற்றியவர். போரும் இடப்பெயர்வுகளும் அவலங்களும் நிறைந்த போராட்டமான இக்காலத்தில் எந்த ஒரு பணபலம், பொருட்பலம், ஆட்பலமும் இன்றி ஆதீன மரபை பேணி சைவ மரபின் தூணாக விளங்கியவர்.
அரசியற் குழப்பங்கள் ஆதீனம் வரை நீளும் சூழல் வந்த போதும் மிகக் கவனமாக பக்கம் சாராமல் நடுநிலை காத்தவர். இவ்வளவுக்கும் பிறப்பு வழி குடும்ப பின்புலம், ஆழமான நவீன கல்வி பெறாத போதும் பெரும் ஆளுமையாக நின்றவர். வாழ்வின் பிற்காலத்தில் நோய் பீடித்த போதும் துவளாமல் பணி செய்தவர்.
இப்படி பின்புலம் ஏதும் இல்லாமல் நின்று நிலைப்பது எப்படி ? என்று நான் பன்முறை எனக்குள் வியந்திருக்கிறேன். அதற்கு ஒரு பெரும் காரணமே உண்டு. அது அவரது குரு பக்தி. மற்றும் அவரது குருவான ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகளின் ஆசீர்வாதம் தான் என்பதில் வேறு கருத்தே இல்லை.
நவீன நகரில் வாழ்ந்த துறவியான அவர் பேரில் நான் அறிந்து துறவொழுக்கம் குறித்து விமர்சனங்களும் இல்லை .இப்படி ஒரு மகான் நம்மிடையே வாழ்ந்து பரிபூரணமடைந்திருக்கிறார். சுவாமிகளுக்கு எமது அஞ்சலிகள்..
அவரை அவரது குருவின் அருள் வழி நடத்தியது போல, இன்னும் நல்லை ஆதீன மரபை அவரது அருள் வழிநடத்தட்டும்!!
பிரார்த்தனைகளுடன்,மயூரகிரிக்குருக்கள்
![]()
