திருமணம்
:
கௌசி.சிவபாலன். யேர்மனி.
“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
நிமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவதில்லையாம்”
பெண்களுக்கோ ஆண்களுக்கோ திருமணம் அவர்களுடைய வாழ்க்கையைத் திருப்பிப் போடும் ஒரு ஒப்பந்த சாசனம்.
மேலும் சிந்தித்தால், ஒரு ஜெனிடிக் ஒப்பந்தம் என்று சொல்லலாம். இரண்டு பாலினருடைய மரபணுக்கள் கலந்து ஒரு ஆரோக்கியமான அடுத்த தலைமுறை உருவாக சமுதாயம் ஏற்படுத்திய ஒரு சடங்கு. அப்பா அம்மாவை திருப்திப்படுத்தவும், அம்மா அப்பாவை திருப்திப்படுத்தவும், ஒருவரை ஒருவர் பராமரித்துக் கொள்வதற்காகவும், உதவி புரிவதற்காகவும் திருமணம் செய்கிறார்கள் என்றால் அவர்கள் தங்களுடைய மரபணுக்களை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதற்கு முக்கியத்துவம் தரவில்லை என்று தான் கருத வேண்டியுள்ளது. ஆரோக்கியமான மரபணுவைக் கடத்த வேண்டும் என்பதே முக்கிய காரணமாக இருப்பது என்றால், அது திருமணத்தாலேதான் முடியும் என்றும் கூற முடியாது. ஒன்றாக வாழுகின்றோம் ஒன்றாகவா வாழுகின்றோம் என்று எத்தனையோ குடும்பங்கள் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தங்களுடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டு செல்கின்றார்கள். காலம் கடந்து என்னை மதுரையில கேட்டாக, மன்னார்குடியில் கேட்டாக, அந்த மாயாவரத்தில கேட்டாக என்று புலம்பித் தள்ளுவதைக் கேட்டிருக்கின்றோம்.
மனிதஇனம் விலங்கினமாய் வாழ்ந்த காலத்தில் உறவு முறையற்ற உடலுறவு மேற்கொண்டனர். சமூகம் என்னும் ஒரு அமைப்பு உருக்கொள்ளாத காலத்தில் யாரோடும் சேரலாம் என்றிருந்தது. சமூகமெனும் அமைப்பு உருப்பெற்ற காலத்தில் ஒரு சிலர் ஒரு சிலரோடு சேர்ந்து வாழும் போக்கு உருவாகிப் பின் விரும்பியவர் விரும்பியவரோடு சேர்ந்து வாழ்ந்தனர். இச்சேர்க்கை வாழ்க்கை ஓர் சமூக அமைப்பாக உருவாகும் வரை திருமணம் என்ற நடைமுறை வழக்கில் இருந்ததில்லை. விலங்குகளாய் மனிதன் எந்தவித உடைமைகளுமற்று உணவைத்தேடி அலைந்த காலத்தில் திருமணம் தேவைப்படவில்லை. பின் ஆண்கள் கால்நடைகளை உடைமைகளாக்கப் பெண்கள் நிலங்களை உடைமைகளாக்கினர். நிலங்களில் பயிர் செய்வதற்கு ஆள்களின் துணை தேவைப்பட்டது. ஆள்களைப் பெருக்கவும் நிலங்களைப் பாதுகாக்கவும் பெண்களுக்கு ஆண்களின் துணை நிரந்தரத் தேவையாகப்பட்டது. இதனால் திருமணம் அவசியமாக்கபட்டது. நிலங்கள், கால்நடைகள் உடைமைகள் ஆகியது போல் ஆள்களும் உடைமைகளாக ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைகளை (குழந்தைச்செல்வம்) உடைமைகளாக்கினர். இதற்குத் திருமணம் அவசியமாகியது.
விலங்குகளுடன் இணைந்து பகுத்தறிவில்லாது வாழ்ந்த மனிதன் ஆதிகாலத்தில் அவற்றைப் போலவே உறவு கொண்டான். சகோதரன் சகோதரி, தாயும் மகனும், தந்தையும் மகளும் உறவு கொண்டனர். கணவன் இறந்தபின் மூத்தமகனைத் திருமணம் செய்துகொண்டநிலையையும் அறியக்கூடியதாக இருக்கின்றது. (J.G.Frager, Totemism&Progancy-1970 Vol. IVP .28).
இவ்வாறு வரன்முறையற்ற காட்டுமிராண்டி நிலையிலிருந்து குழுமணமுறை உருவாகிற்று. ஒரு குழு ஆடவர் ஒரு குழு பெண்கூட்டத்தை மணந்து கொண்டு வாழ்ந்தனர். இக்குழுமணமுறையிலிருந்தே பல கணவன் முறை உருவாகியிருக்கலாம். ஆனால் இங்கு சொல்ல வருவது இளைய தலைமுறைப் பெண்கள் திருமணத்தை வெறுக்கின்றார்கள் என்னும் கசப்பான உண்மை. அவர்களின் பார்வையை இங்கு பதிவிடுகின்றேன்.
ஆண்கள் தம்முடைய ஆவேசத்தை எந்த சந்தர்ப்பத்திலும் குறைப்பதில்லை. அதைப் பொறுத்துப் போகின்ற பக்குவத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் எமக்கு இல்லை. ஒரே வாழ்க்கை அதை எம்மால் தனித்து வாழமுடியும்;. மகிழ்ச்சியாக வாழ முடியும்.
நேரம் சென்று இரவில் வீட்டைவிட்டு வெளியே போக வேண்டாம். ஏனென்றால், நாலு பேர் தப்பாகப் பேசுவார்கள். தப்பாகப் பேசினால், திருமணம் பேசும் போது கெட்ட பெயர் வரும். இரவில் வெளியே போகின்ற போது ஏதாவது நடந்து விட்டால்! அதாவது ஆண்களால் பிரச்சினை வரும். அதன்பின் யார் உன்னைத் திருமணம் செய்யப் போகின்றார்கள். இங்கு எல்லாவற்றுக்கும் திருமணமே காரணம். அதனால், “திருமணத்தை வெறுக்கின்றோம். “ஏன் இரவில் வெளியே போகின்றீர்கள்” என்றால், “ஆண்கள் ஏன் போகின்றார்கள்” என்னும் கேள்வி பந்து போல் வந்து விழுகின்றது. இக்காரணத்தால் விரும்பிய ஆடை அணிய முடியாது, விரும்பிய இடத்துக்குப் போக முடியாது, ஆண் நண்பர்களுடன் வெளிப்படையாகப் பழக முடியாது. இவ்வாறு கவனமாக இருந்து திருமணம் செய்து விட்டால், இஷ்டம் போல் வீட்டில் வாழ முடியாது. எதற்கும் விட்டுக் கொடுத்தல், எதிர்பார்த்தல், வேலைச் சுமை என்று அனுசரித்து வாழ்வது கசப்பாக இருக்கிறது. அனுசரிக்கும் போது மோசமான ஒரு ஆண் என்று தெரிந்த பின்னும் அவனுக்கு மேலும் பிள்ளைகளைப் பெறுகின்ற மோசமான முடிவு எடுப்பது. பிடிக்காது என்று விவாகரத்து எடுக்க முயற்சித்தால், பலவிதமான நடைமுறைகள். அதன்பின் வாழாவெட்டி என்ற அவப்பெயர். எப்போது இந்த சமுகம் இல்லாத பூமி அமையப்போகின்றதோ என்ற அங்கலாய்ப்பு.
பெண்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் ஆண்களே அவள் தன்னைவிட உயரத்துக்குச் சென்று விட்டால், பொறாமை அடைந்து விடுகின்றார்கள். பொறுப்பான பதவியை நேரம் எடுத்துச் செய்து முன்னேற்றத்தை அடைய முடிவதில்லை. மனிதனுடைய வாழ்க்கையில் எல்லோரும் போல் திருமணம் செய்தே வாழ வேண்டுமா? அதைவிட மனிதர்களுக்கு வாழ்க்கை இல்லையா? இவ்வாறான பல கேள்விகளைச் சுமந்து இளம் பெண்கள் திரிகின்றார்கள். உண்மையில் திருமண நிகழ்விலே பெண்ணைத் தத்தம் செய்து கொடுப்பது ஆணுக்கு உரிமைச் சாசனம் எழுதிக் கொடுப்பது போல் அவளை அடிக்கலாம் உதைக்கலாம். ஏனென்றால் தத்தம் பண்ணிக் கொடுத்த பொருளை திரும்பப் பெற முடியாது. அவனுக்கு உரிமைச் சாசனம் எழுதிக் கொடுத்தாயிற்று.
வடநாட்டில் பெண்களுக்கு முகத்திற்குத் திரை போடும் பழக்கம் இருந்து வந்தது. அங்கே யுத்தங்கள் அடிக்கடியும் அதிகமாகவும் நடந்து வந்தன. அந்தப் போர்களில் முதலில் பெண்களைத் தான் சூறையாடுவார்கள். அதன் பின்பே பொன், பொருள் இவைகளைக் கொள்ளையடிப்பது என்ற நிலை இருந்தது. எனவே பெண்களின் பாதுகாப்பைக் குறித்து, முகத்தைக் காண்பிக்காமல் திரை போட்டார்கள். போர்க்காலத்தில் மட்டுமல்ல, பிற்காலத்திலும் அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்களிடம் இருந்து பெண்களுக்குப் பாதுகாப்புத் தேவைப்பட்டது. சிற்றரசர்கள், ஜமீன்தார்கள் இவர்களாலும் பெண்களுக்கு ஆபத்து இருந்து வந்தது. ஒரு குடும்பத்தில் மனைவி, அண்ணி, தம்பியினுடைய மனைவி இவர்களெல்லாம் இருக்கின்ற போது முகத்திற்குத் திரை போட்டு இருப்பதால் காலைப் பார்த்து அடையாளம் கண்டு கொள்ள, திருமணத்தின்போது மணப்பெண்ணுக்கு மெட்டி போட்டு காலை அடையாளம் கண்டு கொள்ள மணமகன் அம்மி மேல் மணமகளின் காலைத் தூக்கி வைப்பது என்ற சடங்கை ஏற்படுத்தினார்கள். இதுதான் காலுக்கு மெட்டி போடுவது. இவ்வாறான சடங்குமுறைகள் இந்தக் காலத்திற்குத் தேவையில்லாத ஒன்றாகிவிட்டது. ஆயிரம் பேரை அழைத்து அன்றைய நாள் முழுவதும் திருமண விழாவை நடத்தி ஆண்கள் கடனாளியாகவே திருமணத்தை ஆரம்பிக்கின்றார்கள்.
இவ்வாறு குற்றச்சாட்டுக்களால் பெண்கள் மனது நிரம்பி வழிகின்றது. இதற்கு ஆண்கள் என்ன பதில் சொல்லப் போகின்றார்கள்?
![]()
