வானவில் போலொரு வாலிபம்
- ரஞ்ஜனி சுப்ரமணியம் – கொழும்பு
‘பக்கத்து வகுப்பில பவித்திரா என்னை பாக்கும் போது வெக்கப்பட்டு சிரிக்கிறா…அவ அழகில நயன்தாரா அந்த மந்திரிச்ச முட்டைக்கண்ணில்மயக்கிறா… ‘
‘எங்கட பெடியளின்ரை’ ராப் சோங் காதில வந்து மோத மனம் இறக்கை கட்டி எங்கெல்லாமோ போச்சுது. சோக்கான பாட்டு. அவங்கள் மூண்டு பேரும் நல்லாத்தான் பாடுறாங்கள். தமிழ் தண்ணி மாதிரி கொட்டுது . நல்லா டான்சும் ஆடுறாங்கள். நல்ல செந்தழிப்பான பெடியள். சொன்னாப்போல, வட்ஸ்அப்பில இந்தப் பாட்டை எழுதி எனக்கு இப்ப ஞாபகப் படுத்தினது ஒரு இளந்தாரிப் பெடியன். ஆனா அதுக்கு முதலே நான் ‘எங்கட பெடியளின்ரை’ விசிறி.
என்ன விசயமெண்டால்…அவனுக்கு இதைக் கேக்க பழைய ஞாபகமெல்லாம் வந்திட்டுதாம். படிக்கிற காலத்தில தன்னை பாத்து சிரிக்கிற பெட்டையெல்லாம் தனக்கு சிநேகாதானாம். ஆனா… எண்டு இழுத்தான்
அதுக்கு நான் என்னடாப்பா செய்யிறது? படிக்கிற வயசில மனசில் பட்டாம்பூச்சி பறக்கிறதெல்லாம் சகஜமடாப்பா. இல்லாட்டிதான் ஏதோ பிரச்சனை இருக்கெண்டு நீ பயப்பிட வேணும். இந்த வயசில போய் இந்தப் பாட்டை ஞாபகப் படுத்தி எனக்கெல்லோ விசரைக் கிளப்பி போட்டான் எண்டு மனசுக்குள் சிரித்தபடி ….
நான் எழுதினன், “எனக்கும் இந்த பாட்டு நல்லாப் பிடிக்கும் மகன். நாங்களும் இந்த வயசைக் கடந்துதானே வந்திருக்கிறம். அப்ப எங்களை சுத்தாத பெடியங்களோ? அல்லது ஒருத்தருக்கும் தெரியாம நாங்கள் கண் வைக்காத பெடியங்களோ? இப்படியெல்லாம் இல்லாட்டி யௌவனம் பாழ் என்னடா உதயன் ?”
“ஓமோம் தாயே…! இந்தப் புரிதல் எனக்கு நல்லாப் பிடிச்சிருக்கு. உங்களோட நான் கதைக்கிறதே எந்த வயசுக்கும் ஒத்துப் போற மாதிரி நீங்கள் கதைக்கிறதால தான்”. அவனுக்கு சரியான குஷியாப் போச்சுது. வீட்டில மனிசிட்டை இதுகளை சொல்லி பேச்சு வாங்காம தன்ரை பழைய கதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா அவிட்டு விடத் தொடங்கினான்.
சிநேகிதப் பெடியளிட்டை சொன்னாலும் கதை வீட்டுக்குப் போயிடும் எண்ட பயமும் இருக்கும் போல.எனக்கும்பொழுது போக வேணுமே. “சொல்லு மகன் சொல்லு ” எண்டு நல்லா உசாரேத்தி விட்டன்.
ஐயையோ கொஞ்சம் பொறுங்கோ . மனிசி அடிக்கிறா.
இதெண்ணடாப்பா கொடுமை. உன்னில கைவைக்கற லெவலுக்கு ஏன் இடம் குடுத்தனி. இப்பிடி ஒரு மருமகள் எனக்கிருந்தா கையை காலை முறிச்சு அடுப்பில போட்டிடுவன். அட.. நீங்கள் வேற. மனிசி கோல் அடிக்கிறா எண்டவன் தொடர்ந்தான்.
சரி. மிச்சத்தை கேளுங்கோ…நீங்கள் கேக்கிறதால நான் சொல்லுறன். ஆனா ஒரு விசயம்…எண்டு நிறுத்தினான். சரி நான் சொன்னா நீங்களும் உங்கட இளம் வயசுக் கதையில ஒண்டு ரெண்டாவது சொல்லோணும் எண்டு பெரிய கொண்டீசனா போட்டுட்டான்.
பயல் நான் நினைச்சமாதிரி ஒண்டும் இளிச்சவாய் இல்லை.சரி சரி எங்கை நீ சொல்லு பாப்பம்
நான் முதல்லை கண் வைச்சது எட்டாம் வகுப்பில. அவளின்ரை பேரை சொல்ல மாட்டன். இன்னும் மனசில இடது பக்கத்தில கீழ் ஓரமா பத்திரமா வச்சிருக்கிறன். நாங்கள் படிச்சது போஸ் ஸ்கூல். அவள் கேள்ஸ் ஸ்கூல்.. ஆனா டியூஷனுக்கு ஒரே இடத்துக்கு போவம். அவள் எப்பவும் கிளாசில வலது பக்க முன்வரிசையில இடது கை வழமா இருப்பாள்.
சொல்லு சொல்லு லெட்டர் ஏதும் குடுத்தனியோ? அவசரப்படாதேங்கோ…நான் அவளை ஆரும் மறைக்காம பாக்குறதுக்கு வசதியா இடது பக்க வரிசையில வலது மூலையில இருப்பன். அப்பதான் அவள் தொண்ணூறு பாகை திரும்பி என்னை கடைக்கண்ணால பாக்கலாம். ஆனா நான் நாற்பத்தைஞ்சு பாகை திருப்பினா காணும். ஏன் எண்டால் சேர் அடிக்கடி கேள்வி கேப்பார் எண்டு போட்டு மூண்டாவது வரிசையில தான் எப்பவும் இருப்பன்.
நீ கணக்கில புலிதான். அப்ப அவள் உன்னை திரும்பி பாத்திருப்பாளே! ஓமோம் அடிக்கடி பின்னலை இழுத்து, முன்னால பின்னாலை விடுற மாதிரி பாப்பாள். அல்லது பேனை மூடியை கீழ போட்டு எடுப்பாள். இடைக்கிடை மோகனமா சிரிக்கவும் செய்தாள் .பிறகு பக்கத்தில இருக்கிற தோழிட்டையும் வெக்கப்பட்டு கொண்டு என்னவோ சொல்லுவாள் . என்னைப் பற்றி என்ரை வடிவு பற்றி ஏதாவது ரசிச்சு சொல்லுவாள் போல.
நீ ஒண்டும் செய்யிறேல்லையோ
ஏன் இல்லை ? நான் கொம்பாஸ் பெட்டியில ஏதாவது ஒண்டை சத்தமா கீழ போட்டு திரும்பி பாக்க வைப்பன். ஆனா இரண்டாம் வாங்கில இருக்கிற மரமண்டையன் சில வேளை அந்த நேரம் பாத்து தன்ரை தலையாலை மறைச்சு போடுவான்.
இன்ரெஸ்டிங், மேல சொல்லு ஆனா அந்தக் கதை …கனவு கண்ட காதலாச்சு தாயே. ஏண்டாப்பா!
நான் கண்ணதாசன்ரையும் வாலியின்ரையும் பாட்டில கொஞ்சம் கொஞ்சம் கலந்து உல்டா பண்ணி, கடல்புறா சாண்டில்யன்ரை படு கிக்கான வசனமும் ஒன்றிரண்டை கலந்துகட்டி, ஒரு வசன கவிதைய றோஸ் நிற பேப்பரில எழுதி, அதுக்குள்ளை வாசத்துக்கு இரண்டு மல்லியைப் பூவும் வச்சு, கவரில போட்டு ஒழுங்கை மூலையில வந்து கொண்டிருந்த அவளிட்டை குடுக்கப் போனன்.
ம்…ம்..ம்…ம்..கெதியா…
அப்ப விர்ரென்று, பைக்கில நிண்டபடி ஓடிக்கொண்டு வந்து, படாரெண்டு காலால பிரேக் போட்ட அந்த இரண்டாம் வாங்கு தடியன் பொக்கற்றுக்குள்ளால ஒரு கடிதத்தை எடுத்து சிரிச்சுக் கொண்டு குடுக்க, இவள் பின்னால இருந்த பின்னலை முன்னால எடுத்து விட்டுக் கொண்டு அதே மோகனப் புன்னகையோட கடிதத்தை வாங்கிக் கொண்டாள்.
என்னடாப்பா? இப்பிடியாப் போச்சுது. அவன் உன்னை விட நல்ல வடிவோ ? ச்சாச்சா….குரங்கு …மந்திக் குரங்கு மாதிரி . இன்னும் இருக்கு கேளுங்கோ .
பிறகு, தான் ரெடியா சட்டைக்குள்ள செருகி வச்சிருந்த கடிதத்தை எடுத்து அவன்ரை கையிக்குள்ள திணிச்சாள். அவன் அதை எடுத்து மூக்கில உறிஞ்சி வாசம் பாத்து ஸ்டைலா முத்தம் குடுத்திட்டு பொக்கட்டில வச்சுக் கொண்டான்.
எனக்கு அழுகை அழுகையா வந்திட்டுது. நல்ல வேளை அவள் என்னைக் கவனிக்கேல்லை.
அப்ப நீ கடிதத்தை கிழிச்சுப் போட்டியோ ? கவலையுடன் நான்
சீச்சீ…பத்திரமா வச்சிருந்தனான். இன்னொருக்கா கவிதை எழுதி மினக்கட ஏலுமோ? வேற பெட்டை ஒண்டு அம்பிடாமலோ போயிடும். ஆனா அந்தக் காஞ்சு போன மல்லியப்பூ மட்டும் இப்பவும் என்னட்டை பத்திரமா இருக்கு.
அது சரி. நீயும் அழகன்தானே? கிரிக்கட் அடிக்கிற உனக்கு இந்தப் பெட்டையை அடிச்சு விழுத்தேலாம போயிட்டுது பார். நல்லா கணக்கு விடுவியே. அதுகும் எடுபடாம போச்சுது. உதயன், அதுதான் பாட்டிலையே எங்கட பெடியள் பாடியிருக்கிறாங்களே
‘பொண்ணு ஒண்ணு உன்ன பாத்து சிரிச்சா அது எல்லாம் காதல் எண்ணு இல்லை, மச்சான்’ எண்டு. இப்ப எனக்கும் மனசுக்குள்ள ஒரு பாட்டு கேட்டுது.
‘ஒரு முறைதான் காதல் வரும் தமிழர் பண்பாடு – அந்த ஒன்று எது என்பது தான் கேள்வி இப்போது’ நனவிடை தோய்ந்து கொடுப்புக்குள்ள சிரிச்சுக் கொண்டேன்.
சரி உதயன். பின்ன பிறகு கதைப்பம் என்ன . இப்ப சமைக்க வேணும்
நில்லுங்கோ. நில்லுங்கோ. உந்த விளையாட்டு எல்லாம் என்னோட வேண்டாம். உங்கட கதை எங்கை ? நல்ல ஆளாயிருக்கிறியள். என்னட்டை நல்லா புடுங்கி புடுங்கி கதை கேட்டுப் போட்டு இடாச்சுக் கொண்டு ஓடப் பாக்கிறியள்.
அடப்பாவி, விட மாட்டானோ?
பத்தாம் வகுப்பு வரைக்கும் என்னை ஒருத்தரும் சைடு அடிக்கேல்லை எண்டு எனக்கும் சரியான மனவருத்தமடா. நானும் ஆள் கொஞ்சம் கறுப்புதானே. ஆனா என்னண்டா, இப்ப எனக்கு இன்னொரு கோல் வருதடாப்பா . ஏதாவது இருந்தா பிறகு யோசிச்சு சொல்லுறன் என்ன ?
மொபைலை அவசர அவசரமாக அணைத்தேன். நினைவு ஒரு பறவையாய் மேலெழுந்தது.
பதினோராம் வகுப்பு படிக்கும் போது பஸ்ஸில் தெல்லிப்பளைச் சந்தியில் இருந்து இரண்டாவது ஹோல்டில் ஏறுகிற, கல்பனாவின் ஓவியத்தை ஒத்த சிவத்த ஸ்டைலான பெடியன் ஞாபகத்தில் வந்து போனான். அதுக்குப் பிறகு யாழ்ப்பாணம் சந்திக்கடையில குமுதம் கல்கி வாங்கப் போகும் போது புத்தகக் கடையில கையை தொட்டுத் தாற சுருட்டை முடி இளந்தாரியையும் ஞாபகம் வருகுது. அடடா முக்கியமான ஆளை மறந்திட்டேன். அந்தக்கால பொப் சிங்கர் நித்தி கனகரட்னத்தில கூட ஒரு கண் இருந்ததே. இப்பிடி எங்கட தலைமுறைக்கும் எத்தினை எத்தினை கதை இருக்கு.
என்ன ஒண்டு…?
இப்ப இவங்கள் எல்லாம் சொல்லிக் கொண்டு திரிகிற மாதிரி ஒண்டையும் சொல்லேலாம கிடக்குது.
டிவியில நல்ல பாட்டொண்டு போகுது.
‘ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே…’ஓம்ம்மா , என்ன எடுவைடாப்பா உது?
( பொறுப்புத் துறப்பு – உண்மையென்று யாரும் நம்பினால் கம்பனி பொறுப்பல்ல.)
![]()
