திருவாசகத்தில் அறிவியல்

0
vm278

சிவகரன் அபிசாய்ராம். மகாஜனாக் கல்லூரி (வகுப்பு 12.விஞ்ஞானம்)

 நரியைப் பரியாக்கி விட்டதும்; பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படி பட்டதும்; இறைவனே இறங்கிவந்து எழுத்தாணி தொட்டதும்; வள்ளலார் சன்மார்க்க நெறி பெற்றதும்; மனிதன் கடவுளுக்குச் சொன்னதுமான ஓர் அறிவாசக நூல் திருவாசகம். கடவுளின் கருணையைப் பாடிய நூல்களுக்கு மத்தியில் கருணையையே கடவுளாகப் பாடிய நூல் திருவாசகம்.

  “திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார்”
என்றால் அது சாதாரண வாக்கல்ல. 

ஏகன் அனேகன் இறைவன் அடி வாழ்க, ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்து ஆடும் தீர்த்தன்; நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீ ஆடும் கூத்தன்இ ஏது அவன் ஊர்? ஏது அவன் பேர்? ஆர் உற்றார்? ஆர் அயலார்? ஏது அவனைப் பாடும் பரிசேல் ஓர் எம்பாவாய் என மணிவாசகர் ஈசனைக் கண்ட அதே நூலில் ஜி.யு. போப் யேசுவைக் கண்டார் என்றால் திருவாசகம் மதம் சார்ந்த நூல் அல்ல் மதங்களைத்தாண்டி மனிதனை மனிதனாக்கும் ஓர் அற்புத நூலாகும். நாயிற்கடையாய் கிடந்த வாதவூரர் விளம்பிட தாயிற்சிறந்த தயாவான அம்பலவன் எழுதிய நூல் திருவாசகமாகும்.

51 பதிகங்களையும் 658 பாடல்களையும் கொண்டு இந்நூல் அமைந்துள்ளது. நமசிவாய வாழ்க என ஆரம்பமே ஐந்தெழுத்து மந்திரத்துடன் அமைந்துள்ளது. இவ்வாறு தொடங்கிய வாதவூரர் இறுதியாக அச்சோப்பதிகத்தில் திருவாசகத்தின் இறுதிப் பாடலில் அம்மையெனக்கு அருளியவாறு ஆர் பெறுவார் அச்சோவே என்று அப்பனில் தொடங்கி அம்மையில் முடிகின்ற அறிவுநூல் திருவாசகமாகும். திருவாசகத்தின் முதற் பகுதியான சிவபுராணத்தில் திருவாசகத்தின் ஒரு பொழிப்புரை இடம்பெற்றுவிடுகிறது. நமசிவாய வாழ்க என்று தொடங்கி ஆறு இடங்களில் வாழ்க என்றும், வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க என்று தொடங்கி ஐந்து இடங்களில் வெல்க என்றும், ஈசன் அடி போற்றி என்று தொடங்கி எட்டு இடங்களில் போற்றி என்றும், பாடப்பட்டுள்ளது. இது எதைக் குறிக்கின்றது எனில் ஆறு ஐந்து எட்டு என்றும் சேர்த்துப் பார்க்கும் போது அறுநூற்று ஐம்பத்து எட்டு பாடல்களைக் குறித்து நிற்கின்றது. தீர்க்தரிசியான வாதவூரர் தன் முக்திப்பேறு முப்பத்திரண்டாவது வயதில் என்பதை சிவபுராணத்தின் முப்பத்திரண்டாவது வரியில் மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன் என்று பாடுகிறார். ஏகம் ஸத் விப்ரா பஹ_தா வதந்தி என்று ஒன்றே இறைவன் அதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி உரைப்பார்கள் என்று இருக்கு வேதத்தில் அமைந்த சுலோகத்தை ஏகன் அனேகன் இறைவன் அடி வாழ்க என்று திருவாசகத்தில் பாடுகின்றார்.

மாணிக்கவாசகர் அறிவியலையும் ஆன்மீகத்தில் கலந்து பாடியுள்ளார். அதாவது மருத்துவம், வானியல், இரசாயனவியல், உயிரியல் போன்ற பல்துறை சார்ந்து 18ம் நூற்றாண்டுகளில் விஞ்ஞானிகள் முன்வைத்த கருத்துக்களை மாணிக்கவாசகர் 9ம் நூற்றாண்டிலேயே முன்வைத்து விட்டார். அரிஸ்டோட்டில், தியோபிரஸ்ரஸ், றொபேட் விற்றேக்கர், காள் வூஸ், சாள்ஸ் டார்வின் என்று பல விஞ்ஞானிகள் முன்வைத்த பாகுபாட்டு மற்றும் கூர்ப்பு வரலாறை Short and sweet ஆக புல்லாகிப் பூடாகிப் புழுவாய் மரமாகி பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகி கல்லா மனிதராய் பேயாய்க் கணங்களாய் வல்லசுரராகி முனிவராய்த் தேவராய் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் என்று ஏழு பிறவிகளைக் கூறியுள்ளார். இங்கு மனித வளர்ச்சியையும் தாண்டி மண்ணிலும் விண்ணிலும் இருக்கும் கண்ணுக்குப் புலப்படும்; கண்ணுக்குப் புலப்படாத தேவர்களையும் வல்லசுரர்களையும் சேர்த்துப்பாடியுள்ளார்.

இதுமட்டுமல்ல, மேலும் பிரிக்க முடியாத மிகச்சிறிய துணிக்கைகளை அணுக்கள் எனக்கூறிய டால்ற்றன் இற்கு முன்னரே சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து ஒன்றாம் என்று ஒவ்வொன்றாக பிரித்தெடுத்தால் ஒன்று எஞ்சும் அதுவே அணு என்பதை வாதவூரர் அன்றே கூறினார். இப்பரந்த உலகானது கோள வடிவானது என்று கலிலியோவும் கொப்பநிக்கல்ஸ் உம் முன்வைக்க முன்னரே அண்டப்பகுதியின் உண்டைப்பிறக்கம் அளப்பரும் தன்மை என்று பாடிவிட்டார். இதுமட்டுமல்லாது நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன இல்நுழை கதிரின் துன் அணுப்புரைய என்று ஒரு வீட்டிலுள்ள சிறு துளையினூடாக செல்லும் சூரிய ஒளியில் தென்படும் தூசுத்துணிக்கைகள் போல இந்த அண்டப்பகுதியிலும் கோடிக்கணக்காண கோள்கள் வலம்வருகின்றன என்று பாடுகின்றார்.

ஜகத்தின் உற்பத்தி பற்றிக் கூறும் போற்றித்திரு அகவலில் மனிதனின் பிறப்பு எடுத்துக்கூறப்பட்டுள்ளது. ஒருதாய் குழற்தையை பத்து மாதங்களாய் சுமக்கும் போது உருவாகும் துன்பங்களையும் அதிலிருந்து பிழைத்துக்கொண்டு ஒரு குழந்தை பிறப்பதையும் அழகாக மாணிக்கவாசகர் பாடியுள்ளார். பெரிய கடல் சூழ்ந்த உலகினில் வாழ்கின்ற யானை முதல் எறும்பு ஈறாக உள்ள பெரியனவும் சிறியனவுமாகிய வடிவமுடைய உயிரினங்கள் அனைத்தும் யாதொரு குறையுமில்லாத தாயின் கருப்பையில் தாம் செய்த வினைகளுக்கு ஏற்றாற்போல போராடி வெற்றி பெற்று பின் வாழ்த்தி வணங்குதற்கு எளியவனாய் மானிடப்பிறப்பு எய்துகின்றன. உயிர்கள் மானிடப்பிறப்பு எய்துவதற்கு பத்து மாதங்கள் தம் தாயின் கருவறையில் தங்கி வாழ்கின்றன. அவ்வாறு தங்குவதற்கு முன்பு பெண்ணின் கருப்பையிலுள்ள முட்டைகள் பலவற்றுள் ஒன்றுடன் ஆணின் விந்தணுக்கள் பலவற்றுள் வினைப்பயனுக்கேற்ப யாதாயினும் ஒன்று மட்டும் புகுந்து கலந்து கருவாகி சிறிது சிறிதாக வளர்கிறது. முதலாம் மாதத்தில் ஒரு தான்றிக்காயின் அளவு வளர்ச்சியுற்று இரண்டாம் மாதத்தில் தன் அளவில் வலுப்பெற்று நின்று மூன்றாம் மாதத்தில் கருப்பையில் சுரக்கும் கொழுப்பு நீர்ப்பெருக்கில் அழியாது பிழைத்தும் நான்காம் மாதத்தில் தன்னைச்சுற்றியுள்ள இருளிலிருந்த பிழைத்தும் ஐந்தாம் திங்களில் கருக்கலைதல் வாய்ப்புக்களால் உருவாகும் கேடுகளினின்று பிழைத்தும் ஆறாம் திங்களில் கர்ப்பத்திலுள்ள பிண்டத்தில் உடலுறுப்புகள் தோன்றுவதால் உண்டாகும் அசைவுகளினின்றும் பிழைத்தும் ஏழாம் திங்களில் தாய்க்கு உண்டாகும் அச்சத்தின் தாக்கத்திலிருந்து பிழைத்தும் எட்டாம் ஒன்பதாம் திங்கள்களில் தோன்றும் துன்பங்களிலிருந்து பிழைத்தும் பத்தாம் திங்களில் தாயும் தானுமாக மிகப்பெரும் துன்பங்களை அனுபவித்து தாய் சேயைப் பெற்றெடுக்கின்றாள்.
வார்கடல் உலகினில்
யானை முதலா எறும்பு ஈறாய
ஊனமில் யோனியின் உள்வினை பிழைத்தும்
மானுடப்பிறப்பினுள் மாதா உதரத்து
ஈனமில் கிருமிச் செருவினில் பிழைத்தும்
ஒருமதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்
இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களில் உறு அலர் பிழைத்தும்
ஏழு திங்களில் தாழ் புவி பிழைத்தும்
எட்டுத்திங்களில் கட்டமும்பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தச மதி தாயோடு தான் படும்
துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்
என்றவாறாக பாடியுள்ளார்
கடவுளாகப்பார்க்கும் போது திருவாசகமாகவும் ஆழமாக நோக்கும் போது அறிவாசகமாகவும் விளங்கும் இந்நூலின் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்பவர்க்கு இம்மையில் பெருவிருந்தாகவும் மறுமையில் அருமருந்தாகவும் அமைகின்றது.
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *