தமிழ் இனத்தின் அடையாளங்கள் அனைத்தும்திட்டமிட்டு பறிக்கப்பட்டு வரும் ஆபத்து.
ஜெனீவாவும் ஈழத்தமிழர்களும்.
என.;அசோக்
2009 இல் நடந்த முள்ளிவாய்க்கால் அவலம் நிகழ்ந்து 16 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இந்த 16 ஆண்டுகளில் ஈழத்தமிழர்கள் எதிர்கொண்ட சவால்கள்,போராட்டங்கள் ஏராளம்.யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் நிலத்துக்கான போராட்டம், முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்களுக்கான போராட்டம், கலை-கலாசார-பண்பாட்டுக்கான போராட்டம், மரணித்த தங்களது உறவுகளை நினைவேந்துவதற்கான போராட்டம் என ஈழத்தமிழர்களுடைய கடந்த 16 ஆண்டுகள் போராட்டத்துடனேயே கழிந்திருக்கிறது.
அதில் குறிப்பாக முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்களுக்கான நீதிக்கான போராட்டத்தில் ஈடுபட்டுவந்த பல உறவுகள் மரணித்திருக்கிறார்கள். சில உறவுகள் சர்வதேசத்தின் மீதான நம்பிக்கையை இழந்து போராட்ட களத்திலிருந்து ஒதுங்கியிருக்கிறார்கள்.ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை அரசாங்கத்தின் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைகள் சர்வதேச அரங்கின் பார்வையில் 2012 ஆம் ஆண்டில் வந்த காலம் முதல் அதன் மீது நம்பிக்கை வைத்த உறவுகள் இன்று அதன்மீதும் நம்பிக்கையிழந்து வருகிறார்கள்.
ஈழத்தமிழர்கள் ஜெனீவாவை 2012 ஆம் ஆண்டில் நாடியவேளையில், பெரும் நம்பிக்கை தமிழ் மக்களிடத்தில் இருந்தது. 2012 ஆம் ஆண்டு 30ஃ1 தீர்மானம் அதாவது ‘இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம்’ தொடர்பாக கொண்டு வரப்பட்ட அந்த தீர்மானம் கடந்த 13 ஆண்டுகளாக தனியே ஒரு பேசுபொருளாக மாத்திரமே இருந்து வருகிறது. 2012 இல் 30ஃ1 தீர்மானம் அதன் பின்னர் 2022 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 51ஃ1 தீர்மானம் வரை மனித உரிமை பேரவை அங்கத்துவ நாடுகளினாலேயே சமர்ப்பிக்கப்பட்டு, ஜெனிவா அரங்கில் உறுப்பு நாடுகளிடையே பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெற்று நிறைவேற்றப்பட்டாலும் இலங்கையின் அரசாங்கத்தையோ அல்லது சம்பந்தப்பட்ட தரப்புகளையோ ஒரு அடிகூட அந்த தீர்மானங்களாலோ மனித உரிமை சபையினாலோ நகர்த்தமுடியவில்லை. 2022 ஆம் ஆண்டு 51ஃ1 தீர்மானம் இங்கிலாந்து, கனடா, மலாவி, மாண்டினீக்ரோ, வடக்கு மாசிடோனியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்டது. 47 நாடுகளில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா மற்றும் ஜேர்மன் உட்பட 20 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்ததுடன், சீனா, கியூபா மற்றும் பாகிஸ்தான் உட்பட 7 நாடுகள் நிராகரித்திருந்தது. மேலும் இந்தியா உட்பட 20 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது தவிர்த்திருந்தது.
உண்மையில்,ஜெனீவா விவகாரம் கடந்த 13 வருடங்களாக ஒரு பேசுபொருளாக மாத்திரமே இருப்பதற்கான காரணத்தையும் அந்த சபையில் ஈழத்தமிழர்கள் விவகாரம் அடுத்த கட்டத்துக்கு நகராமல் இருப்பதற்கான காரணத்தையும் ஈழத்தமிழ் மக்கள் தெரிந்துகொள்வது அவசியமாகும். நீண்டகாலமாக தன்னுடைய மண்ணுக்காகவும் உரிமைகளுக்காகவும் ஒன்றுதிரண்டு போராடிய ஒரு இனம்,அந்த போராட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டதன் பின்னரும் தங்களுடைய போராட்டத்தை வலிமையுடனும் முன்னர் போராடிய வீரியத்தை இன்னும் இன்னும் அதிகரித்து போராடுவதிலேயே அந்த இனம் போராடியதற்கான காரணம் வலிமை பெறும். ஆனால், ஈழத்தமிழர்களுடைய போராட்ட வரலாற்றை எடுத்துக்கொண்டால் முள்ளிவாய்க்காலுக்கு முன்னர் அவர்களுடைய போராட்டம் வேறொன்றாகவும் முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் வேறொன்றாகவும் இருந்தது.
2009 இற்கு முன்னர் ஈழத்தமிழர்கள் என்ற இனம் சிங்கள அரசுகளிடம் மண்டியிடாத -எதற்கும் துணிந்த ஒரு இனமாகவும் தன்னுடைய இலக்கில் மாத்திரம் கவனத்தை செலுத்தி வந்திருந்தது.ஆனால் 2009 இற்கு பின்னர் தமிழ் மக்களின் தலைமைகள் என்று கூறிக்கொண்டோர் சிங்கள அரசுகளிடம் மண்டியிட்டார்கள்; அவர்களுடன் உறவாடினார்கள்;தங்களது சுயநல அரசியலுக்காக தமிழ் மக்களை சிங்கள தேசத்திடம் கொண்டுசென்று அடகுவைத்தார்கள்.தமிழ் மக்களுக்கு எதிராக மிகப்பாரிய இன அழிப்பை செய்த சரத் பொன்சேகாவை 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தமிழர் மண்ணில் கொண்டு சென்று நிறுத்தி ஒரே மேடையில் ஏறி நின்று கையசைத்த நொடியிலிருந்து ஈழத்தமிழருடைய போராட்டம் சுக்குநூறாக்கப்பட்டது.ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்ற வெறியுடன் 2009 இல் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேரை கொலைசெய்த ஒரு இராணுவத்தளபதியுடன் அந்த வெறிச்செயல் நடந்து 1 வருடத்துக்குள்ளாக அவரது கையை பிடித்துக்கொண்டு ஒரே மேடையில் நட்புறவு பாராட்டிய வரலாறு உரிமைக்காக போராடிய எந்த ஒரு இனத்தினது வரலாற்றிலும் இடம்பெற்றிராத ஒரு கறைபடிந்த வரலாற்றை தமிழ் தலைவர்கள் என்று கூறிக்கொண்டோர் செய்திருந்தார்கள்.அன்றே ஈழத்தமிழருடைய போராட்டம் சிங்களவர்களின் மண்ணில் புதைக்கப்பட்டு விட்டது.
2009 இற்கு பின்னர் வடக்கு, கிழக்கில் செயல்படுகின்ற அரசியல் இயக்கங்கள் தனிப்பட்ட இருப்புக்காகத்தான் போராடிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதற்கு பல நிகழ்வுகள் நடந்தேறியிருக்கின்றன.இவர்கள் ஒருபோதும் தமிழர்களுக்கு விமோசனங்களைப் பெற்றுத் தருவார்கள் என்று நம்புவதற்கு இவர்களுடைய செயல்பாடுகள் இருந்ததில்லை.தமிழர்கள் நலன்களைவிட இவர்கள் தமது அரசியல் இருப்புக்குத்தான் முன்னுரிமை கொடுத்து போராடி வருகின்றார்கள்.அந்த அடிப்படையில் தான் சர்வதேசத்தை கையாள்வது எப்படி என்பதை தமிழ் மக்கள் சிந்திப்பது அவசியமாகிறது.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களது விவகாரம் சர்வதேச அரங்கில் பேசப்படுகிறது என்றால் அது ஜெனீவாவில் அமைந்திருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் மாத்திரமே.ஆகவே அந்த சபையில் தமிழர் விவகாரம் அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கு எவ்வாறான நகர்வுகளை முன்னெடுப்பது,எவ்வாறான இராஜதந்திர முன்னெடுப்புகளை முன்னெடுப்பது என்பது தொடர்பில் ஒரு சட்ட குழுவொன்றை சர்வதேச ரீதியில் ஸ்தாபிப்பது தொடர்பில் பாதிக்கப்பட்டோர் கவனம் செலுத்துவது அவசியமாகும்.அது மாத்திரமல்ல, சர்வதேச அரங்கில் ஈழத்தமிழரது விவகாரம் கூடிய கவனத்தைப் பெற வேண்டுமாயின் பாதிக்கப்பட்ட சமூகம் புத்துணர்ச்சியுடன் செயற்படுவது அவசியமாகும். அவர்களுடைய போராட்டங்கள் மற்றும் அவர்களுடைய செயற்பாடுகள் பெரும் வீச்சுடன்-தொடர்ச்சியாக- சோர்ந்துபோகாத செயற்பாடுகளாக இருப்பது அவசியமாகும்.
அதேபோல், ஐ.நா மனித உரிமைகள் பேரவையை கையாளும் முழுமையான பொறுப்பையும் பாதிக்கப்பட்டவர்களை தங்களுடைய கையில் எடுக்கவேண்டும்.அரசியல்வாதிகளை நம்பி அவர்கள் பின்னால் செல்லும் போக்கை மாற்றி புலம்பெயர் சமூகத்தில் வாழும் அறிவுஜீவிகளுடன் கைகோர்ப்பது அவசியமாகும். அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரை சரியான முறையில் கையாள தமிழர்கள் தவறியிருக்கிறார்கள். செம்மணி மாத்திரம் தான் தமிழர்களின் இனஅழிப்புக்கான அடையாளம் என்ற போர்வையில் அதனை சுற்றியே ஈழத்தமிழரது நகர்வுகள் வரையறுக்கப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.இனியும் இவ்வாறான சிறுபிள்ளைத்தனமான செயற்பாடுகளை நிறுத்தி வைப்பதே இனத்தின் விமோசனத்துக்கு சரியான நகர்வாக இருக்கும்.
வடக்கு, கிழக்கில் இயங்கி வருகின்ற அரசியல் கட்சிகளும் அவற்றின் மக்கள் பிரதிநிதிகளும் தமிழர் விமோசனங்களைப் பெற்றுத்தர முடியாது நிலையிலேயே இருக்கிறார்கள். அவர்கள் செல்லாக் காசுகள் என்பதனைப் புரிந்து புதிய வியூகங்களுடன் ஒரு பலமான அரசியல் இயக்கம் தமிழர்களுக்கு தேவையாக இருக்கிறது. அதைவிட தமிழர் தேசம் ஒன்றாக அணிதிரள்வதும் அவசியமாகும். ஒரு இனமாக போராடிய ஒரு இனம் இன்று சின்னாபின்னமாக்கப்பட்டிருக்கிறது. அதிலும் கொடியது இளந்தலைமுறையின் கவனங்கள் திட்டமிடு சிதறிக்கப் பட்டிருக்கிறது.
இன்று வடக்கு-கிழக்கில் வாழ்கின்ற இளந்தலைமுறையினர் காளியாட்டத்துக்கும் போதைவஸ்துகளுக்கும் பின்னால் செல்லும் ஒரு சூழல் திட்டமிட்டு நகர்த்தப்பட்டிருக்கிறது. ஒரு காலத்தில் கல்வியில் உயர்ந்த இடத்தில் இருந்த வடக்கு மாகாணம் அண்மையில் வெளியாகியிருக்கும் க.பொ.த.சாதாரண தரப்பரீட்ச்சை பெறுபேற்றில் இறுதி மாகாணமாக தரவரிசைப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆகவே தமிழ் இனத்தின் அடையாளங்கள் அனைத்தும் திட்டமிட்டு பறிக்கப்பட்டு வரும் மிக ஆபத்தான சூழலை ஈழத்தமிழர்கள் புரிந்துகொள்வது அவசியமாகும்.படித்த -பண்பாடான-தெளிவான சமூகம் ஒன்று இருக்கும் பட்சத்தில் மாத்திரம் தான் அந்த சமூகத்திற்கு மதிப்பும் மரியாதையும் பயமும் சர்வதேச அரங்கில் இருக்கும்.அது என்று இல்லாமல் போகிறதோ அன்றே அந்த இனம் இந்த பூமியில் வாழ்வதற்கு அருகதையில்லாத இனமாக மாறிவிடும்.ஆகவே ஈழத்தமிழர்களை சுற்றி நடக்கும் திட்டமிட்ட நிகழ்வுகளை கவனத்தில் கொண்டும் எமது போராட்டங்களுக்கும் ஒரு நீதியை பெற்றுக்கொள்வதற்கும் ஒரு தேசமாக-ஒரு இனமாக அணி திரள்வது காலத்தின் கட்டாயமாகும்.
![]()
