வரலாறு ஒரு விசித்திரமான அரக்கன், அவன் தூங்குவது போல்பாசாங்கு செய்யும் நல்ல நடிகன் அவன்; சாதுவாக விழித்துக் கொண்டான்
செம்மணி….அணையா விளக்கு
ஜூட் பிரகாஷ் மெல்பேர்ண்
1985 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையம் கிட்டரின் தலைமையிலான இயக்கத்தால் வெற்றிகரமாக தாக்கி கைப்பற்றப்பட்டது. இங்கிலாந்தின் பிரதமர் Margaret Thatcher இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நாட்களை குறிவைத்து, சர்வதேச ஊடகங்களின் கவனத்தை அதிகளவில் ஈர்க்கும் நோக்கோடு நடாத்தப்பட்ட இந்தத் தாக்குதலின் பின்னர், யாழ்ப்பாண தீபகற்பகத்தில் அங்கும் இங்குமாக இருந்த குட்டி குட்டி இராணுவ முகாம்கள் மூடப்பட்டு, கோட்டையும் நாவற்குழியும் பலாலியும் பருத்தித்துறையும் பாரிய இராணுவ உயர் பாதுகாப்பு வலயங்களாக உருமாறின.
கோட்டையிலும் பலாலியிலும் நாவற்குழியிலும் பருத்தித்துறையிலும் நிலைகொண்டிருந்த இராணுவத்தை முகாம்களில் இருந்து வெளியே வராது தடுத்து நிறுத்தி பெடியள் என்று சனம் பொதுவாக அழைத்த இயக்கங்கள் தாக்குதல்கள் நடாத்துவது அப்போது யாழ்ப்பணத்தில் நாளாந்த செய்தி. இராணுவ முகாம்களை சூழவும் சென்ரி நிலைகள் அமைக்கப்பட்டிருக்கும், சென்ரிகளில் காவலுக்கு முறையாக பயிற்சியெடுத்த இயக்கக்காரரோடு பள்ளிக்கூடங்களில் படித்துக் கொண்டிருந்த பெடியளும் இரவில் காவலிற்கு போவார்கள். ஊயஅp இற்கால வெளிக்கிட ஆமி அழஎந எடுக்குது என்ற சிலமன் தெரிஞ்சால், சென்ரியில் இருக்கும் பயிற்சி எடுக்காத பெடியள் கிரனைட்டின் கிளிப்பை கழற்றி எறிந்து விட்டு ஓடிவிட வேண்டும். சென்ரியில் இருந்து வோக்கிகளில் தகவல்கள் பறக்க, இயக்க முகாம்களில் தயாராக இருக்கும் தாக்குதல் அணிகள் களத்துக்கு விரைந்து ஆமியை அடித்து துரத்தி மீண்டும் முகாம்களுக்குள் முடக்குவார்கள்.எங்கட பள்ளிக்கூடத்தில் எனது வகுப்பில் படித்துக் கொண்டிருந்த சில நண்பர்களும் இப்படித் தான் இரவில் நாவற்குழி முகாம் சென்ரிக்கு போகத் தொடங்கிய நாட்களில் எமக்கு அறிமுமாகத் தொடங்கிய இடம் தான் செம்மணி.
1995 இறுதியில் சனமே இல்லாத வெறுமையான யாழ்ப்பாணத்தை இலங்கை இராணுவம் கைப்பற்றியது. பலாலியில் இருந்து முன்னேறிக் கொண்டிருந்த இலங்கை இராணுவத்தின் செறிவான ஷெல் தாக்குதல்களில் இருந்து மக்களைக் காப்பாற்ற, யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறுமாறு 31 ஒக்டோபர் 1995 இல் இயக்கம் விட்ட அறிவிப்பை ஏற்று முழு யாழ்ப்பாணமும் இடம்பெயர்ந்தது வரலாறு. வீட்டையும் வளவையும் விட்டு விட்டு மூட்டை முடிச்சுகளுடன் இரவோடு இரவாக யாழ்ப்பாணம் இடம்பெயர்ந்த காட்சிகளை கவிஞர் புதுவை இரத்தினதுரையின்
பூவும் நடக்குது பிஞ்சும் நடக்குது
போகும் இடம் அறியாமல் – இங்கு
சாகும் வயதினில் வேரும் நடக்குதே
தங்கும் இடம் தெரியாமல்
என்ற பாடல்வரிகள் காலத்துக்கும் காவிச் செல்லும். பூவும் நடக்குது பிஞ்சும் நடக்குது பாட்டைக் காட்சிப்படுத்திய ஒளிவீச்சு; வீடியோவின் காட்சிகளில் செம்மணி வெளியும் நாவற்குழி பாலமும் வந்து போனதாகவும் ஞாபகம்.
1996 களின் ஆரம்பத்தில் வன்னிக்கும் கொழும்பிற்கும் இடம்பெயர்ந்தோர் போக, மண்ணையும் தோட்டத்தையும் வீட்டையும் வளவையும் விட்டு பிரிந்திருக்க மனமில்லாத யாழ்ப்பாணத்தார் மெல்ல மெல்ல யாழ்ப்பாணத்தில் மீளக் குடியமரத் தொடங்கினார்கள். சமாதான தேவதையாக அரிதாரம் பூசி ஆட்சியில் அமர்ந்திருந்த சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சியில், அப்படி எந்தக் கெடுதலும் கொடுமையும் நடக்காது என்று நம்பி வந்த அப்பாவி சனத்தை அம்மையாரின் இராணுவம் இரவு வேளைகளில் வாகனங்களில் வந்திறங்கி கடத்திக் கொண்டு போகத் தொடங்கியது. அப்படிக் கடத்திக் கொண்டு போகப்பட்டவர்களை ஆமி கொன்று புதைத்துக் கொண்டிருப்பதாக சனம் குசுகுசுக்கத் தொடங்கியது.
அப்போது தான் கிருஷாந்தி குமாரசுவாமி கொடூரம் நடந்தது.
செப்ரெம்பர் 7, 1996 ஆம் திகதி சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவியான கிருஷாந்தி, உhநஅளைவசல பாடத்திற்கான MCQ உயர்தர பரீட்சை எழுதிவிட்டு, சில வாரங்களிற்கு முன்னர் இராணுவ வாகனத்தில் மோதுண்டதால் இறந்த தனது வகுப்புத் தோழியின் செத்த வீட்டிற்கு சென்று விட்டு, கைதடியில் இருந்த தனது வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்த கிருஷாந்தியை, செம்மணி சோதனைச் சாவடியில் இராணுவம் தடுத்து நிறுத்தி விசாரித்துக் கொண்டிருந்ததை அந்த வழியால் போய்க் கொண்டிருந்த ஊரவர்கள் காண்கிறார்கள்.
பரீட்சைக்குப் போன பிள்ளை பிற்பகல் இரண்டு மணியாகியும் வீடு திரும்பாததால் கவலையடைந்து அக்கம் பக்கத்தில் விசாரிக்கத் தொடங்கும் கிருஷாந்தியின் தாயார் இராசம்மாவிற்கு அவரது மகளை ஆமி செம்மணி சோதனைச் சாவடியில் நிற்பாட்டி விசாரிக்கப்பட்டதை கண்டவர்கள் கண்டதை சொல்லிவிடுகிறார்கள். உடனே தனது மகனான 16 வயதான பரி.யோவான் கல்லூரி மாணவன் பிரணவனின் சைக்கிளில் ஏறி செம்மணி இராணுவ முகாமிற்கு மகளைத் தேடி வெளிக்கிட்ட ஆசிரியை இராசம்மாவிற்கு துணையாக 38 வயதான அயலவரான கிருபாவும் தனது சைக்கிளில் போகிறார். செம்மணி இராணுவ முகாமிற்கு போன கிருஷாந்தியும் இராசம்மாவும் பிரணவனும் கிருபாவும் 45 நாட்களிற்கு பின்னர் செம்மணி இராணுவ முகாமிற்கு அருகாமையில் இருந்த புதைகுழியில் இருந்து சடலங்களாக மீட்கப்பட்டார்கள். மிகவும் உருக்குலைந்த நிலையில் இருந்த சடலங்களை அடையாளம் காண கொலையுண்டவர்களின் உடைகளில் சலவைத் தொழிலாளியால் இடப்படும் சலவைக் குறியீடே (laundry marks) பயன்படுத்தப்பட்டது.
தன்னையும் தனது பிள்ளைகளையும் உதவிக்கு வந்த அயலவரையும் ஆபத்தில் இருந்து காப்பாற்ற ஆசிரியை இராசம்மா கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவிற்கு இலஞ்சமாக கொடுத்த இராசம்மாவின் தாலி, சோமரத்தினவின் சகோதரியிடம் இருந்து மீட்கப்பட்டு வழக்கில் சாட்சியுமானது. கைதடியில் இருந்த சைக்கிள் கடையில் இருந்து மீட்கப்பட்ட பிரணவனின் சைக்கிள் chain cover இல் ஒட்டப்பட்டு இருந்த தனித்துவமான Honda sticker உம் வழக்கில் சாட்சியமாகிறது. விசாரணைகளின் போது அந்த chain cover ஐ செம்மணி சோதனைச் சாவடியடியில் இருத்து எடுத்ததாக சைக்கிள் கடைகாரர் சாட்சி வழங்கினார். ஏப்ரல் 1997 இல் தொடங்கிய கைதடி நால்வர் கொலை வழக்கு கொழும்பு உயர்நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த போது, நவம்பர் 1997 இல் Amnesty International அமைப்பு யாழ்ப்பாணத்தை இலங்கை இராணுவம் கைப்பற்றிய பின்னர் 540 அப்பாவி பொதுமக்கள் காணாமல் போயிருப்பதாக பெயர் விபரங்கள் குறிப்பிட்டு அறிக்கை விட்டது.
ஜூலை 1998 இல் கொழும்பு உயர்நீதிமன்றம் ஆறு இலங்கை இராணுவ சிப்பாய்களிற்கு அவர்கள் புரிந்த கற்பபழிப்பு மற்று கொலைகளிற்காக மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மரணதண்டனை தீர்ப்பை அறிவிக்க முன்னர் எதிராளிகளை ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என்று நீதிமன்றம் வினவ, முதவாவது எதிரியான கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ “நாங்கள் நால்வரை கொன்றதற்காக தூக்கில் போடப்பட்டிருக்கிறோம், ஆனால் செம்மணியில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான உடல்களை நான் உங்களுக்குக் காண்பிக்க முடியும்” என்று நீதிமன்றத்தையும் உலகையும் அதிரவைத்தார்.
சர்வதேச அழுத்தங்களிற்கு முகம் கொடுக்க முடியாமல் தடுமாறிய சந்திரிக்காவின் அரசு, சோமரத்ன ராஜபக்ஷவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் செம்மணியில் புதைகுழிகளை தோண்ட ஜூன் 1999 இல் நீதிபதி இளஞ்செழியன் தலைமையில் விசாரணைகள் ஆரம்பித்தது. கிருஷாந்தியும் தாயும் தம்பியும் அயலவரும் கொன்று புதைக்கப்பட்ட பிரதேசத்தில், கோப்ரல் சோமரத்தின நேரடியாக வந்து அடையாளம் காட்டிய இடங்களில், நிகழந்த அகழ்வுகளில் 15 என்புத் தொகுதிகள் கண்டறியப்பட்டன. ஆனால் இந்த விசாரணைகளும் காலப் போக்கில் மூடி மறைக்கப்பட்டு, கொன்று புதைக்கப்பட்ட எங்கள் சனத்தைப் போல, தமிழ் மக்கள் காணாமல் ஆக்கப்பட்டது சம்பந்தமான விசாரணை அறிக்கைகளும் காணாமல் ஆக்கப்பட்டு விட்டன.
வரலாறு ஒரு விசித்திரமான அரக்கன், அவன் தூங்குவது போல் பாசாங்கு செய்து கொண்டிருக்கும் நல்ல நடிகன். இன்று செம்மணி மீண்டும் தோண்டப்படுவதற்கும் 65 என்புத் தொகுதிகள் மீட்கப்பட்டதற்கும் தூங்குவது போல் பாசாங்கு செய்து கொண்டிருந்த வரலாறு எனும் அரக்கன் சாதுவாக விழித்துக் கொண்டதே காரணமெனலாம்.அரியாலை சித்துபாத்தி இந்து மயானத்தில் மின்சாரத்தில் இயங்கும் தகனக்கிரியைகள் செய்யும் கட்டிடம் கட்ட பிரதேச சபை முடிவெடுக்கிறது. பெப்ரவரி 2025 இல் தகனக்கிரியைகளிற்கான கட்டிடம் அமைக்க கட்டிட ஒப்பந்தக்காரர் அத்திவாரம் அமைக்க நிலத்தை தோண்டத் தொடங்க செம்மணியில் எலும்புக் கூடுகள் வெளிக்கிளம்பத் தொடங்கின. கிருஷாந்தியும் மற்ற மூவரும் கொன்று புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து மேற்கு பக்கமாக சுமார் 100 மீட்டர் தூரத்தில் தான் இப்போது தோண்டப்பட்டுக் கொண்டிருக்கும் மனித புதைகுழி கண்டறியப்பட்டுள்ளது.
செம்மணியில் கொன்று புதைக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாமா? விசாரிக்கப்படமாலே கிடப்பில் இருக்கும் குற்றங்கள் ஒரு புறமும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விசாரிக்கப்பட்டும் உண்மைகள் கண்டறியப்படாமல் உறங்கிக் கொண்டிருக்கும் குற்றங்களும் மலை மேல் குவிந்திருக்கையில், செம்மணியில் தோண்டப்படும் புதைகுழிகளின் குற்றவாளிகள் யாரென்று தெரிய வருமா? வரலாறு என்பது வெற்றி பெற்றவர்களால் உருவாக்குபடுவது. வென்றவர் எழுதுவது தான் வரலாறு; வீழ்த்தப்பட்டவர்களிற்கு வழமையாக வரலாற்றில் இடமிருப்பதில்லை. ஆனால், வீழ்த்தப்பட்டவர்களின் வரலாறு அவர்கள் சார்ந்த இனக்குழுமங்களில் இலக்கியங்களாகவும் கதைகளாகவும் பாடல்களாகவும் ஆவணங்களாகவும் திரைப்படங்களாகவும் தலைமுறைக்கு தலைமுறை கடத்துப்பட்டுக் கொண்டே இருக்கும், கடத்துப்பட்டுக் கொண்டு இருக்கவும் வேண்டும். ஏனெனில், வரலாறு தனது நாயகர்களை அவ்வப்போது தேர்ந்தெடுத்துக் கொள்ளும். வரலாறு தனது தேவையை புரிந்து கொண்டு அதனை நிறைவு செய்யும் தலைவனை தானே தேர்ந்தெடுத்துக் கொள்ளும். தமிழர் வரலாற்றில், இராஐராஜ சோழனும், இராஜேந்திர சோழனும் எங்கள் கரிகாலனும் அவ்வாறு வரலாறு தேர்ந்தெடுத்த நாயகர்களே. 13 ஆம் நூற்றாண்டில் தோற்றுப் போன சோழ சாம்ராஜ்ஜியத்தின் கதைகள் 20 ஆம் நூற்றாண்டில் வல்வெட்டித்துறையில் பிறந்த தேசிய தலைவருக்கு வழிகாட்டியாக அமைந்தது.
ஆனபடியால் தான், எங்களிற்கு இப்போது இருக்கும் தேவை, வரலாறு எங்களிற்கு மீண்டும் ஒரு தலைமையை தரும்வரை, எங்கள் வரலாற்றை, நாங்கள் எங்கள் தாயகப் பிரதேசங்களில் சுயகௌரவத்துடன் வாழ சுயநிர்ணய உரிமையும் கேட்டு நடாத்திய போராட்டத்தின் கதைகளை, செம்மணியின் கதையை, செஞ்சோலையின் கதையை, வந்தாறுமூலையின் கதையை, ஒதியமலையின் கதையை, ஓயாத அலைகளின் கதையை, குடாரப்பின் கதையை, இத்தாவிலின் கதையை, கடலை ஆண்ட கதையை, வானிலும் பறந்த கதையை எங்களுக்குள் புதைத்து வைத்திராமல், அடுத்து அடுத்து வரும் தலைமுறைகளிற்கு கதைகளாகவும், பாடல்களாகவும, திரைப் படங்களாகவும் ஆவணங்களாகவும் கடத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
ஜம்பது அறுபது எழுபது ஆண்டிகளிற்கு முன்னர், எங்களின் முன்னோர்கள் ஏற்றி வைத்த தாயகம், தேசியம், சுயநிர்ணயம் எனும் கோட்பாடுகளைத் தழுவிய எங்கள் இனத்தின் விடிவிற்கான போராட்டம் எனும் விளக்கை அணையாமல் காத்து வைப்பது காலம் எமக்கு விட்டுச் சென்றிருக்கும் கடமை. அதனால் தான் என்னவோ செம்மணியில் அண்மையில் நடந்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு, அணையா விளக்கு என்று பெயரிட்டிருந்தார்கள்.
![]()
