எங்கட ஆச்சி 4
முந்தி எங்கட வீட்டுக்கு வீடு ஜிம் இருந்தது
இப்ப வீட்டுக்கு வீடு ஜிம்முக்குப் போகினம்.
காரைக்கவி கந்தையா பத்தமநாதன்.இலங்கை.
எங்கட ஆச்சி முந்தி நெடுகவும் அம்மியில அரைச்சுத்தான் கறி வைப்பா. மல்லி மிளகாயை அம்மியிலை அரைச்சுப்போட்டு பேந்து தேங்காய்ச் சொட்டை சின்னன் சின்னனா உடைச்சு அதோடை சேத்து இழுத்து அரைச்சு நல்ல விழுதா உருட்டி எடுத்து வைக்கிற கறியள் வலு உருசை கண்டியளோ . அரைச்சு வைக்கிற வெள்ளைக் கடல் மீன், நண்டு, இறால் கறியள் முருங்கைக்காய் பிரட்டல் கறி எண்டால் தனி உருசை. அதிலும் கொஞ்சம் கூனி இறால் போட்டு அரைச்சு வைக்கிற முருங்கைக்காய் கறியை அடிக்க ஆளே கிடையாது எண்டுதான் சொல்லுவன் .ஆச்சி முருங்கைக்காய் பால் கறி வைக்கேக்கையும் அம்மியிலை கூடு அரைச்சு எடுத்துத்தான் வைப்பா . ஆச்சி அரைச்சு வைக்கிற வெள்ளைக் கடல் கயல்மீன் குழம்பும் இல்லாட்டால் மணலை மீன் குழம்பும் மொட்டைக்கறுப்பன் அரிசிச் சோறும் தாற அந்த உருசையை எந்தப் பெரிய ஹோட்டலிலும் எவ்வளவு குடுத்தாலும் ருசிக்கேலாது. உப்பிடி அரைச்சு வைக்கிற குழம்பு கொதிக்கேக்கை வாற மணமே ஆக்களுக்கு வாயிலை எச்சில் ஊற வைக்கும் . அதுகும் உந்த மணம் வேலிக்கு மேலாலை மட்டைக்காலுக்காலை எண்டு பூந்து வெளிக்கிட்டு ஒழுங்கை எல்லாம் போய் வரும். அப்பிடி போய் வரேக்கை ஒழுங்கையிலை போறவை வாறவைக்கு எல்லாம் வாயில எச்சில் ஊறும்.
அது மாதிரி ஆச்சி அம்மியில அரைக்கிற இஞ்சிச் சம்பலுக்கு கொஞ்ச ஊர் நல்லெண்ணையும் ஊத்திக் குழைச்சு எடுத்தால் சோத்தைச் சாப்பிட வேற கறி ஒண்டும் தேவைப்படாது. அதமாதிரி பழஞ்சோத்துக்கும் உந்த அம்மியிலை அரைச்ச சம்பல் போட்டு ஆச்சி குழைச்சு உருண்டை உருண்டை ஆக்கித்தர பூவரசம் இலையிலை வாங்கித் திண்டு முடிய குழைச்ச சட்டியையும் வழிச்சுத் துடைச்சு நக்கிப்போட்டுத்தான் மற்ற வேலை பாப்பம். சில வேளை உந்த சட்டி நக்குறதுக்கு ஆர் நக்கிறது எண்டு சண்டையும் வரும்.அதை மாதிரித்தான் பிள்ளைப்பெத்த பெண்டுகளுக்கும் சாமத்தியப்பட்ட பெட்டையளுக்கும் முந்தி இஞ்சி, சாறணை, உள்ளி, மிளகு, மல்லி , நற்சீரகம் எல்லாம் போட்டு அம்மியில அரைச்சு பத்தியக்கறி வைச்சுக் குடுப்பினம். அப்பதான் வயித்துப் புண் மாறும் எண்டு ஆச்சி சொல்லுறவ.
உத மாதிரி ஆற்றையும் வீட்டில பிள்ளைப்பெத்து வரப்போகுது எண்டால் மருந்துக்கடையளிலை ஊறல் சரக்கு வாங்கியந்து வெய்யில்லை காய வைச்சு காஞ்ச அம்மியிலை அரைச்சு எடுத்து சாராயப்போத்தில் வாங்கி அதுக்குள்ளை உந்த ஊறல் சரக்குத்தூளைப் போட்டு மூடி நெல்லுச்சாக்குக்குள்ளை ஒரு ஆறுமாதம் வைப்பினம்.பிள்ளைப்பெத்தவைக்கு அவை அண்டண்டைக்கு தோஞ்சதும் உந்த ஊறலிலை கொஞ்சம் ஊத்திக்குடுக்க அவை மூக்கைப் பொத்திக் கொண்டு குடிப்பினம்.உந்த அரைச்சபத்தியக்கறியும் உந்த ஊறலும் கைகண்ட மருந்து பிள்ளைப் பெத்த பெண்டுகளுக்கு இருக்கிற எல்லா நோக்களும் பலகீனமும் இருந் இடம் தெரியாமல் ஓடிப்போகும் எண்டு ஆச்சி சொல்லுவா.
அதமாதிரி அம்மியில இருந்து அரைக்கிறது கை, கால், இடுப்பு,முதுகு, நெஞ்சுக்கு நல்ல பயிற்சி எலும்புகளும் தசையளும் நல்ல பலமா வரும் எண்டு ஆச்சி சொல்லுவா. அதோட அம்மியிலை குந்தி இருந்து அரைச்சா பெண்டுகள் ரெண்டொரு முக்கலோடை வலு சுளுவா ஆக்கினை வேதினை ஒண்டும் இல்லாமல் பிள்ளைப் பெறலாம் எண்டுவா . டாக்குத்தர்மார் ஆசுப்பத்திரி எண்டு அலைஞ்சு திரிஞ்சு வயித்தை வெட்டி காசையும் கரியாக்கத் தேவையில்லை கண்ட கிண்ட வருத்தம் வாதையளையும் வாங்கத் தேவையில்லை எண்டுவா . அதிலும் நெடுக அம்மியில அரைக்கிற பெண்டுகளுக்கு பிள்ளைப் பெறுகிற காலத்தில நல்லாப்பால் சுரக்கும் எண்டு சொல்லுவா. எங்கட அம்மா கோவிந்தி பள்ளிக்கத்தில அரிவரி படிக்கேக்கை பள்ளிக்கம் போக முந்தியும் பேந்து பள்ளிக்கத்தால வந்த பிறகும் பால் குடிச்சவ எண்டு ஆச்சி பெருமையாச் சொல்லுவா. அது மாதிரி அம்மியில நெடுக அரைச்சா உந்தப் பெண்டுகளுக்கு நெஞ்சில வாற கண்ட வருத்தம் ஒண்டும் வராது வெட்டுற அறுக்கிற வேலை ஒண்டும் வராது எண்டு சொல்லுவா.
ஆச்சி உப்பிடிச் சொன்னதிலையும் ஒரு உண்மை இருக்கத்தான் செய்யுது. ஏனெண்டால் முந்தி அம்மியிலை அரைச்சு ஆட்டுக்கல்லிலை அரைச்சு உரலிலை நெல்லுக்குத்தி மா தூள் இடிச்சு கிணத்திலை தண்ணி அள்ளிக் குடத்திலை காவியந்த திருவலையில குந்தி இருந்து திருவின ஆக்கள் விடியக்காலமையே எழும்பி வயல் வேலை ஆட்டடி மாட்டடி வேலை எண்டு செய்த ஆக்கள் எல்லாம் கண்ட கிண்ட வருத்தம் எண்டு ஆசுப்பத்திரியளுக்குப் போறது குறைவு. அவை ஒருத்தரும் பாயிலை கிடந்தது இழுபட்டது வலு குறைவு எண்டு நான் சொல்லுறதை எல்லாரும் ஏற்றுக்கொள்ளுவியள் . இப்ப நாகரீகம் முத்திப்போய் காசு பணம் புழக்கம் கூடி சனத்துக்கு வீடுவழியை வேலை செய்யப் பஞ்சி . எல்லாத்துக்கும் கண்டறியாத மிசின்களை வாங்கி வைச்சு வேலை செய்யினம் . உண்ணானச் சொன்னால் தின்னுறது குடிக்கிறது பெய்யிறது பேலுறது படுக்கிறது எழும்பிறது மட்டுந்தான் எங்கட ஆக்கள் கனபேர் இப்ப தங்கட பாட்டிலை செய்யினம் மாற்றும்படி எல்லாம் மிசிந்தான் செய்யுது.உதாலதான் அவைக்கு கண்ட கிண்ட வருத்தங்கள் எல்லாம் வந்து சீக்காளியளாகி டாக்குத்தர்மாருக்குப் பின்னாலை திரியினம். சில வேளை உதுகளுக்கும் மிசின்கள் வந்தா வாங்கிகிப்போட்டுப்போட்டு பேசாமல் இருப்பினம் போல.
சுருக்கமாச் சொன்னா முந்தி எங்கட வீட்டுக்கு வீடு ஜிம் இருந்தது இப்ப வீட்டுக்கு வீடு ஜிம்முக்குப் போகினம்.
![]()
