தாத்தாக்கள் வாழும் வீடு

0
vm288

தாத்தாக்களின் மௌனம் வெற்றிடத்தின் அடையாளமல்ல,
சொல்லப்படாத கதைகளின் புதையல்.

  • சேவியர்
    தாத்தாக்கள் வாழும் வீடுகள் ஆசீர்வாதங்களின் அரண்மனைகள். தலைமுறைகளை தன் கிளைகளின் கதகதப்பில் காத்து மகிழ்கின்றனர் தாத்தாக்கள். அவர்களின் வேர்களிலிருந்தும் மன்னிப்பின் மலர்கள் மேலெழும்பிப் பறக்கின்றன. அன்பொன்றே அறிகின்ற அவர்களின் தளிர்களில் கனவுகளின் நிறங்கள் உலராமல் இருக்கின்றன. பழைய தலைமுறையின் கதைகளையும், எதிர்கால தலைமுறைக்கான விதைகளையும் தாங்கியபடி அவர்கள் மௌனித்திருக்கிறார்கள். மறந்து போன பால்யக் கனவுகளுக்கு அவர்களின் நினைவூட்டல் கதைகள் தான் வெளிச்சமடிக்கின்றன.

காலங்களின் புன்னகையும், கவலைகளும், கனவுகளும், இழப்புகளும் ஓடிய நதியாய் அவர்களுடைய முகத்தின் சுருக்கங்கள் சிரிக்கின்றன. அவை சரித்திரத்தின் சரிவுகளில் கடந்த காலக் கதைகளைக் கரைகளில் ஒதுக்குகின்றன. அவர்களின் மௌனம் வெற்றிடத்தின் அடையாளமல்ல, சொல்லப்படாத கதைகளின் புதையல். அவர்களின் அருகில் அமர்ந்து பொறுமையின் பாய்மரக் கப்பலில் பயணிப்பவர்களுக்கே அந்தக் கதைகள் கிடைக்கும் !அவர்களின் பெருமூச்சுகள் வரலாற்றின் தாழ்வாரங்களில், குடும்பத்தின் குளிர் கதைகளுக்கு வெப்பம் அளிக்கின்றன. தாத்தாவுடனான பேரனின் உறவு அலாதியானது. அது வேறெந்த உறவுகளை விடவும் தனித்துவமானது! கவித்துவமானது! அவர் தனது முதுமையின் கரத்தினால் ஒரு தளிர் கரத்தைப் பற்றும் போது நேற்றைய கனவுகளும், நாளைய நம்பிக்கைகளும் ஒரே புள்ளியில் தைக்கப்படுகின்றன.

அவர் பேரனுடன் கதைக்கும் போது அந்த உலகங்களுக்குள் நழுவி விழுகின்றனர். அந்தக் கதாபாத்திரங்களில் வாழ்கின்றனர். அவர்கள் புலம் பெயர்ந்த வலிகளையும், புலன் பெயரும் மொழிகளையும் அடுத்த தலைமுறைக்கு பகிர்ந்தளிக்கின்றனர். அவர்களுடைய சுருக்கங்கள் கனவுகளின் நெருக்கங்கள். இழப்புகளின் உருக்கங்கள்.

பேரனுக்கும் தாத்தாவுக்குமான அன்பு,இரண்டு கள்ளம் கபடமற்ற இதயங்களின் உறவுப் பரிமாற்றம். அனுபவங்களைக் கடந்த அமைதியின் நதியும், அனுபவங்களைத் தொடாத நதியின் துவக்கமும் சந்தித்துக் கொள்ளும் அற்புத அனுபவம் அது. அவர்கள் புன்னகைத்துக் கொள்ளும்போது கடத்த காலமும் எதிர்காலமும் கைகுலுக்கிக் கொள்கின்றன. அவர்கள் தழுவிக் கொள்ளும் போது இரண்டு காலங்கள் உயிர் தழுவிக் கொள்கின்றன.

தாத்தாக்கள் மீது வைக்கப்படும் குற்றசாட்டு ஒன்றுண்டு, பேரப் பிள்ளைகளைக் கெடுப்பது அவர்கள் தான் என்று ! ஒளித்து வைத்திருக்கும் சாக்லெட்கள், பரிசுப் பொருட்கள் என அவர்கள் ஒரு புது உலகில் உலவுவார்கள். ஒரு தந்தை கண்டிப்புடன் பிள்ளையை வளர்ப்பார், ஒரு தாத்தா மன்னிப்புடன் பேரனை அணைப்பார். எந்த ஒரு பேரனுக்கும் தன் தாத்தா ஒரு ஹீரோ தான் ! பிடித்தமானதை வாங்கித் தரும் சூப்பர் மேன். பட்டம் பறக்க விடுவதற்கும், சைக்கிள் ஓட்டுவதற்கும், ஓடையில் குளிப்பதற்கும், கடை வீதியில் நடப்பதற்கும் எல்லாவற்றுக்கும் தாத்தாவே அவர்களின் ஆதர்ஷ நாயகன். தாத்தாக்களின் சட்டைப் பை தான் பேரன்களின் முதல் ஜாயிண்ட் அக்கவுண்ட் !

ஒரு பேத்தி, தாத்தாவின் முதல் இளவரசி ! தாத்தா பேத்தியின் உற்சாகப் பங்காளி. அவரது தோளே அவளது சிம்மாசனம். அவரது கைத்தட்டலே அவளது ஆஸ்கர் விருது. ஒரு தாத்தா பேத்தியை வாரியணைக்கையில் உலகம் தனது இதயத்துடிப்பை ஒரு வினாடி நிறுத்தி புன்னகைத்துக் கடக்கிறது. தன் மகன் அடையாத உயரங்களைத் தன் பேரனின் வாழ்வில் கண்டு மகிழ்வார் தாத்தா. ஏன், தான் அடையாத உயரங்களை, தான் தழுவாத நிகழ்வுகளை, தான் அனுபவிக்காத வாய்ப்புகளை தன் பேரன் அனுபவிக்கையில் உளமார குதூகலிப்பார் அவர். ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் பேரனை சான்றோன் எனக் கேட்ட தாத்தா ! எனலாம். பேரனின் பாதைகளே, தாத்தாக்களின் எல்லைக் கோடுகள்.

பேரன்களைத் தீர்ப்பிடாமல் அவர்களைத் தூக்கிச் சுமப்பவர்கள் தாத்தாக்கள் தான். அவர்களே எந்த விதமான நிபந்தனைகளும் இல்லாமல் பேரன்களை அங்கீகரிப்பவர்கள். அப்பாக்களைப் போல அடிக்கொரு அறிவுரையுடன் தாத்தாக்கள் பேரன்களை பயமுறுத்துவதில்லை. அவர்களின் அறிவுரைகள் அழகிய கதைகளாய் மனதுக்குள் ஊன்றப்படும். தாத்தாக்கள் உடல் வலிமையால் எதையும் சாதிப்பதில்லை, ஆனால் ஒரு தாத்தா இருக்கும் போது யாருக்கும் இல்லாத வலிமையை பேரப்பிள்ளைகள் பெற்று விடுகிறார்கள். நமக்காக ஒருவர் இருக்கிறார் எனும் நினைப்பே அந்த அசாதாரண வலிமையை அளித்து விடுகிறது.

தாத்தாக்களின் கேள்விகள் நிற்பதில்லை, தொடர்ந்து கொண்டே இருக்கும். அவை பதில்களுக்கான கேள்விகளல்ல, அவை பாசத்துக்கான கேள்விகள்.

இன்றைய உலகம் தாத்தாக்களை உதாசீனம் செய்கிறது. அவர்களை அதிகப்படியான சுமையாய்க் கருதுகிறது. அதனால் தான் முதியோர் இல்லங்கள் முண்டியடித்துக் கொண்டு முளைக்கின்றன. ஒரு காலத்தில் தூண்களாய் இருந்தவர்கள் இன்றைக்கு துரும்புகளாய் இருக்கிறார்கள். ஒரு காலத்தில் கரன்சிகளை எண்ணியவர்கள் இப்போது உதிர்ந்து விழும் இலைகளை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அமைதியாய் பால்கனியிலோ, படிக்கட்டுகளிலோ அமர்ந்து மௌனத்தைத் தின்று கொண்டிருக்கிறார்கள்.

நாம் பழைய புகைப்படங்களைப் பார்த்து சிலிர்க்கிறோம், ஆனால் பழைய மனிதர்களை புறக்கணிக்கிறோம். வாச்டப்களில் வரும் கதைகளைப் படிக்கிறோம், நம் வாசல்களில் இருக்கும் கதைகளைப் படிக்க மறுக்கிறோம். நமது வேகத்துக்கு அவர்கள் ஈடு கொடுப்பதில்லை என்பதால் அவர்களுக்கு நாம் கை கொடுப்பதில்லை. நமக்கு ரீல்ஸ்களின் மீது இருக்கும் மோகம் ரியல்களின் மீது இல்லாமல் போய்விடுகிறது.

தாத்தாக்களை உதாசீனம் செய்யும் இல்லங்கள், சாவான பாவத்தைச் சம்பாதித்துக் கொள்கின்றன. அவர்களை வாழ்வில் இணைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய குடும்பப் புகைப்படங்களுக்கு மட்டுமல்ல, குடும்ப முடிவுகளிலும் அவர்களை இணைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் உங்கள் பந்திகளிலும் புன்னகை செய்யட்டும். மரத்தின் கனிகளை உண்ணும் தாம் அதன் வேர்களையும் விசாரிக்க வேண்டும். தாத்தாக்களின் கதைகள் முற்றுப் புள்ளியை நோக்கிய கடைசி கால சாமரங்கள். அவற்றை ரசியுங்கள், கேளுங்கள். சேட்ஜிபிடிகள் தராத வாழ்வியல் அனுபவங்களை தாத்தாக்களின் உடல்மொழிகள் கற்றுத் தரும்.

தாத்தாக்கள் எப்போதும் நம்மோடு இருப்பதில்லை. அவர்கள் இருக்கும் வரை வாழ்க்கையை கொண்டாட்டமாய் அனுபவியுங்கள். அவர்களுக்கும் வாழ்க்கையைத் திருவிழாவாய்த் திருப்பிக் கொடுங்கள். இன்றைக்கு நீங்கள் அவர்களைத் தழுவ மறுத்தால், காலம் நழுவியபின் குற்ற உணர்வில் கலங்குவீர்கள். தாத்தாக்களை நேசிப்போம். அவர்களின் கடந்த காலம் இனிமையாய் இருந்ததா, எதிர்காலம் இனிமையாய் இருக்குமா என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. ஆனால் இந்தக் கணத்தை இனிமையாய்க் கொடுக்க நம்மால் முடியும். அதைச் செய்வோம். ஏனெனில் இன்றைய பேரன் நாளைய தாத்தா ! தாத்தாக்களே நீண்டகால வாழ்வின் ஆசீர்வாதங்கள். நரைகளே இறைவன் அளிக்கும் கிரீடங்கள்.

கலைவிளக்கு சு. பாக்கியநாதன் அவர்களின் பவளவிழாவில் நறு மணம்வீசிய நூல்
‘வேர்களும் பூக்கின்றன ‘

“வேர்களும் பூக்கின்றன” என்ற நூல் 11.07.2025 பவளவிழா வில் வெளியீட்டு செய்யப்பட்டது. வெற்றிமணி ஆசிரியர் திரு மு.க.சு.சிவகுமாரன் அவர்கள் கலைவிளக்கு திரு. சு.பாக்கியநாதன் அவர்களின் பல்கலைக்கழகக் காலத்து வேர்களின் நினைவுகளை அசைபோடுவதாகவும், அந்த வேர்களின் சிறப்பால்; பூத்துக் குலுங்கும் மலர்களை பற்றியதுமான ஒரு உரை நடையில் அமைந்த நூலாகும்.

எழுத்தாளர் திரு.வி.சபேசன் அவர்கள் வேர்களும் பூக்கின்றன நூலில் வேர்களின் ஆழம்பற்றி உரையாற்றினார். “நூலாசிரியரின் தேடுதல் ஆழமாக இருக்கிறது. படங்கள் மூலம் பல செய்திகள் வெளிப்படுகின்றன. இது ஒரு சிறந்த ஆவணமாக தாயாரிக்கப்பட்டு உள்ளது’ என்றார். மேலும் ‘ ஒரு பரமேஸ்வராக் கல்லூரியை இனி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்’ என்று சொன்னால், அதனை ஒரு பல்கலைக்கழகமாக உருவாக்க எவ்வளவு உழைப்பு வேண்டும். அந்த உழைப்பைக் கொடுத்த முதல் தொகுதி மாணவர்களில் ஒருவர்தான் இங்கு மேடையில் அமர்ந்து இருக்கும் திரு.பாக்கியநாதன் அவர்கள் என்றார்.

இதழியல் கலை வேள் திரு.த.ரவீந்திரன் நூல் பற்றி தம்கருத்தைக் கூறுகையில் இது ஒரு சிறந்த ஆவணமாக இருக்கின்றது. நூலின் இடம் பெற்ற படங்கள் கறுப்பு வெள்ளைப் படங்களாக அமைந்து இருப்பதால் கவனம் சிதறாது எழுதப்பட்ட கருத்தின் மீது கவனம் செல்ல வழிசொல்கிறது.அது மட்டுமன்றி ஒரு பிறந்தநாள், ஒரு பவளவிழா இப்படிக் கொண்டாடும் பொழுது ஒரு வரைப்பற்றி வாழ்த்துக்களுடன் ஒரு மலர் வெளியீடு செய்வார்கள். அனால் இங்கு அவர் கற்ற பல்கலைக்கழக ஆரம்பகால வரலாறும், திரு பாக்கியநாதன் அவர்களின் செயற்பாடுகளும், அங்கும் இங்கும் ஆவணப்படுத்தப்பெற்றது ‘ மேலும் சிறப்பு என்றார்.

பேராசிரியர் மு.நித்தியானந்தன் நூல் பற்றி கூறுகையில் இந்த நூல் ஒரு சிறந்த ஆவணம். 1974 ஆண்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஆரம்பித்த வேளை அங்கு பேராசிரியர்களாக இருந்தவர்கள், மாணவர்கள் இவர்களின் ஒன்று பட்ட உழைப்பு எப்படிப் பட்டது என்பதை காணமுடிகிறது. பேச்சு நடையில் இந்த நூல் அமைந்து உள்ளது, நூலாசிரியர் மு.க.சு. சிவகுமாரன் அந்த நடையில் வெற்றி பெற்றுள்ளார் என்றே சொல்ல முடிகிறது என்றார்.

பேராசிரியர் மு.நித்தியானந்தன், வெற்றிமணி மு.க.சு சிவகுமாரன் இணைந்து நூலை வெளியிட்டுவைத்தனர். சிறப்பு பிரதிகளை கலைவிளக்கு சு.பாக்கியநாதன், திருமதி விக்கினா பாக்கியநாதன் ஆகியோர் இணைந்து மேடையில் வழங்கினர். வெற்றிமணி வெளியீட்டகத்தின் 31 வது வெளியீடுடாக “வேர்களும் பூக்கின்றன’ நூல் நறுமணம் வீசியதில் மட்டற்ற மகிழ்ச்சி.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *