ரெய்கி
Shot of beautiful young woman having reiki healing treatment in health spa center
கண்ணை மூடித் தியானம் செய்கின்ற போது ஏதோ ஒரு அருட்சக்தி எமக்குள்ளே இருந்து மேலெழுவது போல எமது ஆற்றல் எழுத்தின் மூலமாக வெளிப்படுகின்றது. எண்ணங்கள் படைப்பாக ஆற்றல் மிக்க சொற்களாக வெளிப்படும் போது அந்த ஆற்றல் நோய் தீர்க்கின்ற சக்தியாக ஏன் வெளிவர முடியாது. மனம் நொந்து போடுகின்ற சாபம் எப்படிப் பலிக்கின்றது? மனம் விரும்பிச் சொல்லுகின்ற வார்த்தைகள் எப்படி மனிதர்களை வாழ வைக்கின்றன? ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும். கொல்வதும் வெல்வதும் மனிதசக்தியால் முடிகின்ற போது நோயைத் தீர்க்கும் சக்தி மட்டும் மனித ஆற்றலுக்கு இல்லையென்று யாரால் சொல் முடியும்? தன்னுடைய கைகள் மூலமாக தன்னுடைய ஆற்றலைச் செலுத்தி நோயாளர்களை இயேசுநாதர் குணமடையச் செய்தார் என்பதை எல்லோரும் படித்திருக்கின்றோம். இயேசுநாதர் மனிதராகப் பிறந்து தெய்வமாக மாறியவரென்றால், அந்த மகத்தான சக்தியை எம்மால் ஏன் முயற்சியின் மூலம் பெற முடியாது. இன்று எம்முடைய கண்முன்னே பல தெய்வமாக்கப்பட்ட மனிதர்களைத் தரிசிக்கின்றோம். அவர்கள் எல்லோரும் தம்முடைய ஆராவைப் பெருக்கிப் பெரு முயற்சியினால் தம்முடைய ஆற்றலைப் பெருக்கியவர்களே. அவ்வாறு பிரபஞ்ச ஆற்றலை எமது கைகள் மூலமாகப் பெற்று எமக்குள் இறை ஆற்றலைச் செலுத்துகின்ற ஒரு கலையே ரெய்கி என்று அழைக்கப்படுகின்றது. அது பற்றி விரிவாக இக்கட்டுரையில் பார்ப்போம்.
ரெய்கி என்னும் சொல் ஜப்பானிய மொழியில் இருந்து வந்தது.
Rei – (Universal Energy – பிரபஞ்சம்)
Ki – (Life Energy – உயிர்ச்சத்தி)
அதாவது உயிராற்றலை ஆற்றுப்படுத்துவது. பிரபஞ்ச சக்தியை எடுத்தே சகல உயிரினங்களும் உயிர் வாழுகின்றன. எனவே பிரபஞ்ச ஆற்றலை எடுத்து சகல பிரச்சினைகளையும் சரி செய்ய முடியும் என்பதை எடுத்துக் காட்டுவதே ரெய்கி. உடலின் பல பாகங்களில் சக்தி மையங்கள் இருக்கின்றன. ஆனால், ரெய்கியில் நாம் கைகளினால் பிரபஞ்ச சக்தியை வாங்கி எம்முடைய ஜீவசக்தியைப் பெருக்கி அதை மற்றவர்களுக்குக் கொடுக்கின்றோம்.
இக்கலையை மிக்கவ் உசுய் Mikao Usui என்னும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவரே கண்டுபிடித்தார். 15.08.1865 இல் பிறந்த இவர் புத்த மதத்தில் ஆர்வம் கொண்டு வாழ்க்கை முழுவதும் புத்தருடைய கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார். தற்காப்புக்கலையைப் பயில வேண்டும் என்பதற்காகச் சில தியான முறைகளையும் ஆற்றுப்படுத்தல் (Healing) முறைகளையும் கற்க வேண்டும் என்பதற்காகப் பல இடங்களுக்குச் சென்று ஆராய்ச்சி மேற்கொண்டார். மருந்து கொடுக்காமல் நோயைத் தீர்க்க முடியுமா என்று அவர் சிந்தித்து, அதற்காக 1922 ஆம் ஆண்டு ஜப்பானிலுள்ள குராமா (Kurama) என்னும் மலைப்பகுதிக்குச் சென்றார். இது கைரோ (kyto) என்னும் நகரத்துக்குப் பக்கத்தில் உள்ளது. அந்த மலைப்பகுதியில் 21 நாள்கள் உணவுகூட எடுத்துக் கொள்ளாமல் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். ஒருநாள் திடீரென்று ஒரு மின்னல் பாய்ந்தது போன்ற உணர்வு அவருக்கு ஏற்படுகின்றது. அப்போது அவர் கண்களை விழித்துப் பார்த்த போது அவரைச் சுற்றி ஒரு வெண்மையான புகைமண்டலத்தை உணர்ந்தார். அச்சமயத்திலே உடலினுள் எல்லா செல்களையும் ஏதோ ஒன்று அழுத்தவதாகவும் அதிலிருந்து விடுபட முடியாத நிலையிலும் அவர் இருந்தார். அந்த நிலையில் ஒரு ஞானம் பெற்றவராக அவரால் உணர முடிந்தது. இவ்வாறுதான் ரெய்கியின் ஆரம்பம் இருந்தது. அன்றிலிருந்து அவர் பெற்ற ஆற்றல் மூலமாக பிறருடைய நோய்களைத் தீர்க்கக் கூடிய சக்தியைப் பெற்றார்.
எப்படி ரெய்கி மற்றைய நாடுகளுக்குப் பரவுகிறது
சுயிரோ ஹயாசி (Chujiro Hayashi) என்பவரே முதன்முதலாக மிக்கவ் உசுய் இடம் இருந்து ரெய்கியைக் கற்றுக் கொண்டு ஜப்பானில் ஒரு ரெய்க்கி மருத்துவமனை ஆரம்பித்தார். அதன்பின் Hawayo Takata என்னும் பெண்மனி இவரிடம் இருந்து கற்றார். இவர் முதன் முதலாக ஜப்பான் நகரத்துக்கு அப்பாலுள்ள ஒரு பகுதியில் ஒரு மருத்துவமனையை ஆரம்பித்துப் பின் இதனை ஒரு கல்வி முறையாக மாற்றினார். அதன் மூலமாக அதிகமான மாணவர்களை உருவாக்கினார்கள். ரெய்கியின் ஆரம்ப கர்த்தா Mikao Usui என்பவர் 09.3.1926 இல் இந்த பஞ்பூத உடலை விட்டபோது அவருடைய மாணவர்கள் 10 அடி உயரத்தில் 4 அடி அகலத்தில் ஜப்பானின் தலைநகரம் ரோக்கியோவில் ஒரு நினைவு ஸ்தூபியை எழுப்பினார்கள். இந்த நினைவுச் சின்னமானது Saihoji Temple இருக்கும் இடத்தில் உள்ளது.
இதனைப் பயிற்சி செய்து ரெய்கி மாஸ்டராக வருகின்ற போது எம்முடைய மனத்தின் திண்மையை, மன வலிமையை, வாழ்க்கைத் தரத்தை இந்த ரெய்கி அதிகரிக்கின்றது. இதனால், நல்ல உறக்கத்தை ஏற்படுத்த முடிவதுடன் வளர்சிதை மாற்றம் ஏற்படும். அவரவர் தம்முடைய நோய்களைத் தாமாகவே சுகமாக்க முடியும். உடலுக்குள் இருக்கும் நச்சுகளை வெளியேற்றுவது. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது, ரென்சன் படபடப்பை எப்படி நீக்குவது, மனதை எப்படி அமைதியாக வைத்திருப்பது. அல்லது அந்த பிரச்சினையை எப்படி எதிர்கொள்வது போன்ற ஆலோசனைகளை ரெய்கிக் கலைமூலம் பெற்றுக் கற்றுக் கொள்ளலாம். உடலின் ஆதார சக்கரங்களைக் இயக்குவதன் மூலமாக எமது சக்கரங்களில் உறுப்புக்களில் இருக்கும் தடைகளையும் நீக்க முடியும். வலிகள் வேதனைகள் ஏற்பட்டால் அதற்குரிய காரணிகளைக் கண்டறிந்து அவற்றிலிருந்து விடுபட முடியும்.
எனவே ரெய்கி என்னும் அற்புதக்கலையைக் கற்று நாமும் பலனடையந்து பிறரையும் பாதுகாப்போம்.
![]()
