யேர்மனியில் கலைவிளக்கு சு. பாக்கியநாதன் அவர்களின் பவளவிழா விழாவும்’வேர்களும் பூக்கின்றன’ நூல் வெளியீடும்.

0
vm293

யேர்மனியில் நாற்பது வருடங்களுக்கு மேலாக தமிழ், கலை, இலக்கியம், மற்றும் பொதுநலச் சேவை என இடைவிடாது ஆற்றிவரும் கலைவிளக்கு சு. பாக்கியநாதன் அவர்களின் பவளவிழா 12.07.2025 சனிக்கிழமை டோட்முண்ட் நகரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மேற்படி விழா யேர்மனியில் தமிழர் அரங்கம், மற்றும் ஊடகங்களான வெற்றிமணி பத்திரிகை, அகரம் சஞ்சிகை, தமிழ்ரைம்ஸ் யாவும் இணைந்து மிக சிறப்பாக முன்னெடுத்திருந்தன. பவளவிழா நாயகன் சு.பாக்கியநாதன்,திருமதி பாக்கியநாதன் தம்பதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் மு. நித்தியானந்தன் கலந்து சிறப்பித்தார்.
மாலை 4.00 மணிக்கு அரங்கத்தில் மக்கள் எழுந்து நின்று கரவொலி செய்ய பவளவிழா நாயகனும், பிரதம விருந்தினரும் மண்டபத்திற்குள் மக்கள் புடைசூழ அழைத்து வந்தனர். மங்கல விளக்கேற்றல், அக வணக்கம் இவற்றுடன் விழா ஆரம்பமானது. வரவேற்புரை திரு ஏலையா க.முருகதாசன் அவர்கள் வழங்கினார். தொடர்ந்து கனகசபைகலாயம், எசன் தமிழ் பாடசாலை மாணவிகளின் வரவேற்பு நடன நிகழ்வுகளுடன் விழா களைகட்டத் தொடங்கியது. நடனம் ஆடிய செல்விகள் பவளவிழா நாயகனிற்கு மாலை அணிவித்து வரவேற்று மகிழ்ந்தனர்.

அதனைத் தொடர்ந்து விழாவின் சிறப்பினை அறிவிப்பாளர்கள் அவைத்திலகம் பாலா, மற்றும் நடன ஆசிரியர் சாந்தினி துரையரங்கன் ஆகியோர் அழகு தமிழில் பவளவிழா நாயகன் சு.பாக்கியநாதன் அவர்களை மேடைக்கு அழைத்தனர். அவர்களைத் தொடர்ந்து சிறப்புரைகள் வழங்க தமிழர் அரங்ககம் பொறுப்பாளர் எழுத்தாளர் வி. சபேசன், வெற்றிமணி பத்திரிகை ஆசிரியர் மு.க.சு.சிவகுமாரன், அகரம், சஞ்சிகை ஆசிரியர் இதழியல் கலை வேள் த. இரவீந்திரன், தமிழ் ரைம்ஸ் பிரதம ஆசிரியர் திரு செ.தவா. ஆகியோரை அழைத்தனர்.

மேடையில் நாயகன் அமர்ந்து இருக்க வெற்றிமணி பத்திரிகை ஆசிரியர் மு.க.சு சிவகுமாரன் அவர்கள் தலைமையேற்று நெறிப்படுத்தினார். சிவகுமாரன் 1975ம் ஆண்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஆரம்பித்தபோது முதல் தொகுதி மாணவர்களில் ஒருவரான திரு.சு.பாக்கியநாதன் அவர்களின் சிறப்பு இயல்புகளை எடுத்து உரைத்தார். புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் பணியுடன் தன் பட்டப்படிப்பையும் முடித்தவர் திரு. பாக்கியநாதன் என்றார். எழுத்தாளர் வி. சபேசன் அவர்கள் யேர்மனியில் ஒவ்வொரு கல்வி கலை சார்ந்த செயல்களுக்கும் முக்கியமான ஒருவராக பாக்கியநாதன் இருந்துள்ளார். என்றார். அடுத்து உரையாற்றிய அகரம் சஞ்சிகை ஆசிரியர் திரு.த. ரவீந்திரன் பாக்கியநாதன் அவர்களின் கனிவான பேச்சையும் செயலையும் எடுத்துரைத்தார். தமிழ் ரைம்ஸ் ஆசிரியர் திரு.செ. தவா தமிழ் ரைம்ஸ் தொடர்ந்து வெளி வர முக்கிய காரணம் திரு பாக்கியநாதன் அவர்களின் உண்மையான உழைப்பு என்றார்.

அடுத்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் மு. நித்தியானந்தன் அவர்கள். உரையாற்றினார். அவர் தன் உரையில் 1976,1977 ஆண்டு காலப்பகுதியில் திரு பாக்கியநாதன் அவர்கள் மாணவனாக இருந்தபோது அவரை நன்கு அறிவேன். அந்தக்காலம் மாணவர்கள் மாணவிகள் சிறகடித்து திரிந்த அழகிய காலம். குறிப்பாக மாணவிகள் சேலைகளுடன் வரும் அழகு இதனை இனி என்றும் காணமுடியாது. பரமேஸ்வராக் கல்லூரியாக இருந்ததை ஒரு பல்கலைக்கழகம் ஆக கட்டியெழுப்பியதில் முக்கி பங்காற்றியவர்கள் மாணவர்களும் என்றால் மிகையாகாது. படிப்போடு ஒரு பல்கலைக்கழகத்திற்கு எது எது தேவை என்பதை உணர்ந்து செயற்பட்டனர். அந்தக்காலத்தில் வெளியிடத்து மாணவர்களுக்கு யாழ்ப்பாண மக்கள் தமது வீடுகளில் தங்க ஒரு அறை கொடுக்க மாட்டார்கள். பயப்படுவார்கள். அந்தநேரம் திரு பாக்கியநாதன் அவர்கள் வீடு வீடாக சென்று கதைத்து வெளிமாநில மாணவர்களுக்கு இருக்க வீட்டு வசதிகள் செய்து கொடுத்துள்ளார். அவரது சேவை இன்றும் யேர்மனியிலும் தொடர்கிறது. யாழ்பாணம் பல்கலைக்கழகம் பொன் விழா காணும் நேரம் இங்கு இவர் பவளவிழா காண்பது மேலும் சிறப்பு. என்றார்.

ஆடற்கலாலயம் ஆசிரியர் நிமலன் சத்தியகுமார் அவர்களின் மாணவி மாயா மகீரா ஆனந்தராஜாவின் நடனம், திருமதி மீனா. உதயா அவர்களின் பாடல் இடம்பெற்றது. அதனை தொடரந்து வெற்றிமணி பத்திரிகையின் 31வது வெளியீடாக “வேர்களும் பூக்கின்றன” என்ற நூல் வெளியீட்டு செய்யப்பட்டது. தொடர்ந்தது சலங்கை ஒலி நர்த்தனாலயம் திருமதி சாவித்திரி சரவணன் அவர்களின் மாணவிகள் அக்சரா ஜதீஸ், ஆதனா குகபிரகாஸ் ஆகியோரின் நடனம் இடம்பெற்றது.வேர்களும் பூக்கின்றன என்பது வித்தியாசமான தலைப்புடன் நூலின் சில பகுதிகளை ஆவணப்படமாகவும் காட்சிப்படுத்தியிருந்தார் வெற்றிமணியாசிரியர். அடுத்து தமிழர் அரங்கம் மாணவர்களின் நடனம் இடம்பெற்றது. புதிய தொழில்நுட்ப உத்தியில் திரு.சபேசன் அவர்களின் இயக்கத்தில் திரு. சிவவினோபனின் தொகுப்பில் “மனிதருள் மாணிக்கம்” என்ற பெயருடன் ஆவணப்படம் வெளியிடப்பட்டது.பின்னர் மனிதருள் மாணிக்கம் என்ற விருதினை விழாக்குழுவினர் திரு பாக்கியநாதன் அவர்களுக்கு வழங்கி மாண்பேற்றினார்கள். அடுத்து பவளவிழா நாயகன் பற்றிய உரையில் தமிழ் மணி திருமதி.நகுலா.சிவநாதன், திரு. எழுத்தாளர் சுப்பிரமணியம், தமிழருவி வானொலி நயினை விஜயன், மண் சஞ்சிகை ஆசிரியர் வ.சிவராஜா, யேர்மனி தமிழ்க்கல்விச்சேவை திரு.ஜீவகன், ஆன்மிகச் சொற்பொழிவாளர் திருமதி கரிணி கண்ணன், யேர்மனி டோட்முண்ட் பெண்கள் அமைப்பு திருமதி கலைநிதி சபேசன் ஆகியோர் உரையாற்றினர். அடுத்து தமிழர் அரங்கம் மாணவர்களின் நடனம் இடம்பெற்றது.

விழாவில் கலந்து கொண்ட உறவுகள், நட்புகள் பலர் புடைசூழ்ந்து வாயாரா வாழ்த்தி, வாழ்த்துப்பாக்கள் வழங்கி, பொன்னாடைகள் அணிவித்து , பூங்கொத்துகள் கொடுத்து தங்கள் அன்பு பரிசுகளை வழங்கியிருந்தமை கண்ணுக்கு நல் விருந்தாக அமைந்திருந்த போது இராப்போசனமும் உண்டிக்கு நல்விருந்தாக பரிமாறப்பட்டது. இறுதியில் பவளவிழா நாயகனின் ஏற்புரை இடம் பெற்றது. தன் உரையில் ‘தான் செய்த சிறு பணிக்கு நீங்கள் காட்டும் அன்பு என் தளர்ந்த நரம்புகளை மேலும் முறுக்கேற்றி தைரியம் தருகிறது” என்றார். செய்தி.சாந்தினி துரையரங்கன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *