ஆடி மாதமும் நம்பிக்கைகளும்

0
vm295


புதுமணத் தம்பதியரைப் பிரித்து வைத்தல்

  • பொலிகையூர் ரேகா இங்கிலாந்து

ஆடி மாதமானது தன்னகத்தே பல சிறப்புகளையும் காரணமறியா மனிதர்களால் பல குழப்பங்களையும் தன்னகத்தே கொண்டதாகும்.

ஒரு வருடத்தில், தை மாதப் பிறப்பு முதல் ஆனி மாத முடிவு வரை “உத்தராயணம்” என்றும், ஆடிமாதப் பிறப்பு முதல் மார்கழி மாத முடிவு வரை “தட்சிணாயனம்” என்றும் கூறப்படுகிறது. சூரிய சக்தியானது உத்தராயணத்தில் நேர்மறை சக்தியையும் தட்சிணாயனத்தில் எதிர்மறை சக்தியையும் கொடுக்கிறது.

ஆடி மாதம் முழுவதுமே சிறப்புதான். ஒரு ஆண்டு போக சம்பிரதாயம், யோக சம்பிரதாயம் என இரண்டாகப் பிரிப்பர். போக சம்பிரதாயம் என்பது தை மாதம் முதல் ஆனி வரை உள்ள காலம். யோக சம்பிரதாயம் என்பது ஆடி முதல் மார்கழி வரை. போக சம்பிரதாயக் காலத்தில் கல்யாணம், விருந்து, நிகழ்வுகள் என்று மகிழ்ச்சியாக இருக்கும் காலம். யோக சம்பிரதாயம் என்பது , யாகம், வழிபாடுகள், பிரார்த்தனைகள் செய்யக்கூடிய காலம். யோக காலத்தில் முதல் மாதம் ஆடி என்பதால் தெய்வீகப் பண்டிகைகள் அதிகம். ஆடி பிறப்பு, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை, ஆடிப் பவுர்ணமி, ஆடித்தபசு, ஆடிப் பெருக்கு, ஆடிப்பூரம் என்று மாதம் முழுவதுமே விசேஷமாக உள்ளது. ஆடி மாதத்தில் சந்திரன் சொந்த வீட்டில் இருக்கிறார். அந்த சொந்த க்ஷேத்திரத்தில், சூரியனுடன் சம்பந்தம் ஏற்படும் பொழுது, அதற்கு விசேஷம் அதிகம் உண்டு.

ஆடி மாதத்தையொட்டி நிலவி வரும் சில நம்பிக்கைகளையும் அதற்கான காரணங்களையும் பார்ப்போம்.

1.ஆடி மாதத்தில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகள் நடத்தக் கூடாது.
அந்நாட்களில் விவசாயத்தை நம்பித்தான் வாழ்க்கை நடந்து கொண்டிருந்தது. “ஆடிப்பட்டம் தேடி விதை’ என்று பழமொழியே உண்டு. ஆடியில் விதை விதைத்தல், விவசாயம் செய்தல், துணி நெய்தல், குடிசைத் தொழில் செய்தல், போன்ற வருமானத்திற்கு வழி ஏற்படுத்திக் கொள்ளும் முக்கியமான வேலைகளில் ஈடுபடுவார்கள்.

ஆடியில் விவசாய வேலைகளைத் தொடங்கினால்தான் ஒருவருக்கு, பயிர் அறுவடை கார்த்திகை மற்றும் தை மாதத்தில் உண்டாகும். அந்தச் சமயத்தில்தான் கையில் பணமும் வர வாய்ப்பு இருக்கும். அதனால் இந்துக்களின் முக்கிய பண்டிகைகளான தீபாவளி, பொங்கல் மற்றும் திருமண வைபவங்களுக்குப் பணத்தட்டுப்பாடு இல்லாமல் இருந்து வந்தது.

ஆடி மாதம் விவசாயத்திற்காக செலவு செய்யும் காலமாக இருந்ததால் அந்தச் சமயத்தில் வேறு செலவுகள் செய்யப் பணம் இருக்காது. அதனால்தான் வீட்டில் நல்ல காரியங்கள் நடைபெறாமல் இருந்ததே ஒழிய, ஆடியில் திருமணங்கள் செய்யக் கூடாது என்று எந்த சாஸ்திரத்திலும் சொல்லப்படவில்லை.

இறைவனை வழிபடுவதற்காகவே ஒதுக்கப்பட்ட மாதம் என்பதாலும், இறை வழிபாடு செய்வதில் கவனம் சிதறலாம் அல்லது தடை படலாம் என்பதால் தான் திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகள் இந்த மாதத்தில் நடத்தப்படுவதில்லை.

2.புதுமணத் தம்பதியரைப் பிரித்து வைத்தல்
ஆடி மாதத்தில் கர்ப்பம் தரித்தால் கோடை காலமான சித்திரையில் குழந்தை பிறக்கும்.சித்திரை மாதமானது அக்னி நட்சத்திம் என்னும் வெப்பமான மாதம் ஆகும். இம்மாதத்தில் குழந்தை பிறந்தால் பெரியம்மை போன்ற தோல் சம்பந்தமான நோய்கள் குழந்தையை எளிதில் தாக்கி உடல் பலவீனமடையும்.குழந்தைகள் அடிக்கடி நோய்வாய்ப்படும் என்பதால்தான் ‘சித்திரையில் குழந்தை பிறந்தால் சீரழியும்” என்ற சொல்வழக்கும் உள்ளது. இதன் காரணமாக தான் ஆடிமாதத்தில் தம்பதியர் சேருவது நல்லதல்ல என்கின்றனர்.

3.மருமகன் ஆடி மாதத்தில் மாமியாரைப் பார்த்தால் மாமியாருக்கு ஆகாது.

மேலே சொன்ன அதே காரணம்தான்.
இதற்கும். சித்திரையில் கருத் தரிப்பதைத் தவிர்ப்பதற்காகத் தாய் வீட்டிற்குக் பெண்களை அனுப்பும் வழக்கம் இருந்தது. மாமியார் வீட்டிற்கு பெண்களின் கணவர்கள் செல்வதைத் தவிர்ப்பதற்காக இவ்வாறு கூறப்பட்டுள்ளது. சித்திரையில் குழந்தை பிறந்தால் பிரசவித்த பெண்ணையும் பேரக் குழந்தையையும் பார்க்கும் மாமியாருக்குத்தான் சிக்கல் என்பதால் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

4.ஆடி மாதத்தில் குழந்தை பிறந்தால் ஆட்டிப் படைக்குமா?
ஒரு ஆண்டில் எந்த மாதம் வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம். இதில் எந்தவிதமான சிக்கலும் இல்லை.ஒருவரது வாழ்க்கையைப் பிறந்த மாதமோ, நட்சத்திரமோ, ராசியோ, கிழமையோ முடிவு செய்வதில்லை.அவர்கள் மதியே முடிவு செய்கிறது.ஆடி மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தால் ஆட்டிப் படைக்கும் என்பது எதுகை, மோனையுடன் அமைந்த பேச்சு வழக்கே ஆகும்.முன்னர் சொன்னது போல ஆடி மாதத்தில் பிறக்கும் குழந்தையால் வெயிலைத் தாங்க முடியாது ஏற்படும் நோய்த் தாக்கங்களால் பிறந்த போது உடனிருப்பவர்களை ஆட்டிப் படைக்கும் என்பதைக் கொண்டு கூறியிருக்கலாம். ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் நல்ல நிலையில் இருப்பதை நாம் எப்போதுமே பார்க்க முடியும்.

ஆடி மாதத்தில் குளிர் நாடுகளில் இடம்பெயர்ந்திருக்கும் எம்மூர் மக்கள் இதைப் பின்பற்றுவதால் எந்த நன்மையுமில்லை. நம் முன்னோர்கள் நம் நாடு மற்றும் அயல் நாடுகளின் காலநிலைக்கேற்ப வகுத்த சில முறைகளும் நம்பிக்கைகளும் எல்லாமே எல்லா நாட்டினருக்கும் பொருந்திப்போகாது என்பதைக் கருத்தில்கொண்டே நாம் இவற்றின் சரி பிழையை ஆராய்ந்து பின்பற்ற வேண்டும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *