தமிழ் தலைமைகளின் போராட்டங்கள்தமிழர்களுக்கு பெற்றுத்தந்தவை எவை?
‘ஒடுக்குமுறை இருக்கும் வரை ஒடுக்கப்படும் சமூகம் தொடர்ந்து போராடும்’ என்ற வாக்கியம் யாருக்கு பொருந்துமோ இல்லையோ ஈழத்தமிழர்களுக்கு பொருந்தும்.போராட்டம் என்பது ஈழத்தமிழர்களுடன் பிறந்த ஒன்றாக 80 ஆண்டுகளுக்கு மேலாக பின்தொடர்ந்து வருகிறது. இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து தமிழ் அரசியல் தலைவர்களுக்கு பின்னே நின்று தமிழர்கள் போராடி வருகிறார்கள். அகிம்சை வழி போராட்டங்களால் எதனையும் சாதிக்க முடியாத சூழல் தோன்றியபோது இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராட துணிந்தார்கள்.தமிழ் மக்களும் ஆயுதப் போராட்டத்தின் பின்னே நின்றார்கள். 2009 இல் அந்த போராட்டமும் முடிவுக்கு வந்தது.
தமிழ் மக்களின் போராட்டங்களை எடுத்துப்பார்த்தால் இனப்பிரச்சினை மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான பல்வேறு போராட்டங்களை அவர்கள் முன்னெடுத்திருக்கிறார்கள். இதில், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம், இனப்படுகொலைக்கு எதிரான போராட்டம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டங்கள் என அவை நீண்டு சென்றாலும், 2009 இற்கு பின்னரான தமிழர்களின் போராட்ட வடிவங்கள் என்பது ஒரு பலம்வாய்ந்ததாகவோ அல்லது அந்த போராட்டங்கள் சிங்கள அரசுகளையும் சர்வதேச சமூகத்தையும் திரும்பி பார்க்க வைக்கும் போராட்ட வடிவங்களாக இருந்ததா என்றால் அதில் பல கேள்விகள் தொக்கி நிற்கின்றன.அதேபோல், தமிழரசு கட்சி தனிச் சிங்களச் சட்டத்துக்கு எதிராக நடத்திய சத்தியாக்கிரக போராட்டம் முதல் சுமந்திரன் தலைமையில் கடந்த திங்கட்கிழமை (18) வடக்கு-கிழக்கு தழுவிய ரீதியில் நடத்திய ஹர்த்தால் வரை ஈழத்தமிழர்கள் பெற்ற நன்மைகள் என்ன என்ன என்பது தொடர்பில் ஆராய்வது அவசியமாகும்.
தமிழ் அரசுக் கட்சியினரின் பொருத்தமற்ற நேரத்தில் பொருத்தமற்ற போராட்டங்களும் இளைஞர்களை உணர்ச்சிவசப்படுத்தக் கூடிய பொருத்தமற்ற பேச்சுகளும் தமிழ் மக்களுக்கு எதுவுமே பெற்றுக் கொடுக்கவில்லை என்பது மாத்திரமல்ல, எதிர்மறைவான விளைவுகளையே இந்த போராட்டங்கள் ஏற்படுத்தின என்பதை வரலாற்று நிகழ்வுகள் புடம்போட்டு காட்டி நிற்கின்றன.கடந்தவாரம் சுமந்திரன் தனது சுயநல அரசியலுக்கு பரிசோதனை வைப்பதற்காக அழைப்பு விடுத்திருந்த ஹர்த்தால் இன்று சிங்கள தலைவர்களின் கேலிப்பேச்சுக்கு உள்ளாகியிருப்பதை அவதானிக்க முடிகிறது.
ஒட்டிசுட்டான் பகுதியில் இராணுவத்தினரால் அடித்துக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞனின் மரணத்துக்கு நியாயம் கோரி தமிழ் மக்களை ஒருங்கிணைத்து எதிர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்த வேண்டியது காலத்தின் தேவை. அதனை மறுக்கமுடியாது. ஆனால்,அந்த போராட்டம் என்பது தமிழர் தேசத்தை ஒன்றிணைத்ததாக முன்னெடுப்பதிலேயே அதனுடைய தாற்பரியம் தங்கியிருக்கிறது. தன்னிச்சையாக, தான்தோன்றித்தனமாக சுமந்திரன் கதவடைப்புக்கு அழைப்பு விடுத்தமை என்பது தமிழ் மக்களுடைய போராட்ட களத்தை சிறுமைப்படுத் தியிருப்பதுடன்,சிங்கள தேசத்துக்கு தமிழர்களின் போராட்டத்தை நகைப்புக்கிடமான ஒரு விடயமாக பதிவு செய்திருக்கிறார். அதைவிட 80 ஆண்டுகளாக தமிழ் தலைமைகள் முன்னெடுத்த சத்தியாக்கிரக போராட்டம், கதவடைப்பு போராட்டம் போன்றவற்றால் சாதித்தவை எவை அல்லது தமிழர்களுக்கு பெற்றுக்கொடுத்தவை எவை என்பது தொடர்பில் தமிழ் மக்களும் அரசியலில் உலாவருபவர்களும் சிந்திப்பது காலத்தின் தேவையாகும். ஆயுத பலத்தில் பலம்பொருந்தி சமூகமாக ஈழத்தமிழர்கள் போராடிய போதே கிடைக்காத ஒன்று இந்த சிறுபிள்ளைத்தனமான செயற்பாடுகளால் கிடைத்துவிடும் என நம்புவது முட்டாள்தனமாகும்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூடவிருக்கும் நேரத்தில், இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட – முன்னெடுக்கப்பட்டுவரும் அநீதிகள் மற்றும் தமிழின படுகொலைகளுக்கு ஒரு நீதியைப் பெற்றுக்கொள்ளவும் தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழும் சூழ்நிலையினை ஏற்படுத்துவதற்கும் போராடவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.ஆனால் அந்த போராட்டங்கள் சிங்கள தேசத்தையும் சர்வதேச சமூகத்தையும் விழிப்படைய வைக்கும் போராட்டங்களாக-சிங்கள தேசத்துக்கு தலையிடியை கொடுக்கும் போராட்டங்களாக முன்னெடுக்கப்படுவதே காலத்தின் தேவையாகும்.
தமிழர்களின் பிரச்சினைகளை வலியுறுத்தி ஒரு பொது இணக்கப்பாட்டுடன் ஒரே நேரத்தில், தமிழர் தாயகமெங்கும் புலம்பெயர் தேசமெங்கும் ஒரு போராட்டத்தினை நடத்த முடியாத ஒரு பிளவுண்ட சமூகமாகவே ஈழத்தமிழர்கள் இன்று வாழ்ந்துவருகிறார்கள். தமிழ்த் தேசியப் போராட்டம் என்பது தனிப்பட்ட நலன்களை முன்வைத்து எழுந்தது அல்ல. அது, பௌத்த – சிங்களப் பேரினவாத சிந்தனைக்கு எதிராக எழுந்தது. பெரும் அர்ப்பணிப்புகளினால் நிலைபெற்றது. ஆனால், இன்றைக்கு தமிழ்த் தேசிய அரசியலை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பவர்களில் பெரும்பான்மையானோர் தனிப்பட்ட நலன்களை குறிவைத்த தரப்பினர். அவர்களிடத்தில் சுயநலம், அதிகார மோகம் என்ற விடயங்களைத் தாண்டி சமூக அக்கறையோ விடுதலை வேட்கையோ இல்லை.இவர்களுடைய போராட்டங்கள் அனைத்தும் தேர்தல் அரசியலை சுற்றியே இருந்திருக்கிறது; இருக்கிறது. இதில் அவரவர் தனிப்பட்ட நலன்களும் கட்சி நலன்களுமே தங்கியிருக்கிறது என்பதை வரலாற்று நிகழ்வுகள் காட்டிநிற்கின்றன.அந்த அடிப்படையில்தான் சுமந்திரனின் ஹர்த்தால் அழைப்பையும் பார்க்க முடிகிறது.
ஒரு சமூகமாக-ஒரு இனமாக உலகமெங்கும் பரந்துவாழும் ஈழத்தமிழர்கள் என்று ஒரு குடையின் கீழ் திரள்கிறார்களோ அன்றுதான் அவர்களுக்காக விடிவுப்பாதை திறக்கப்படும்.அதற்கு பகுத்தறிவுள்ள -இராஜதந்திரமுள்ள -சர்வதேச நகர்வுகளை உன்னிப்பாக அவதானித்து அதன் பாதையில் செல்கின்ற பக்குவமுடைய-ஒட்டுமொத்த தமிழனத்தையும் ஒன்றிணைக்கின்ற ஒரு கட்டமைப்பு உருவாக்கப்படாதவரை எமது போராட்டங்கள் சிதறியதாகவும் சின்னாபின்னமானதாகவும் கேலிக்குரியதாகவும் சிங்கள தேசமோ சர்வதேச சமூகமோ கண்டுகொள்ளாதவையாகவுமே அமையும்.அவ்வாறான போராட்டங்களால் ஈழத்தமிழர்கள் முன்னால் இருக்கின்ற ஒரு சிறிய பிரச்சினைக்கு கூட தீர்வை பெற்றுக்கொள்ள முடியாது என்பதை ஞாபகத்தில் கொண்டு ஒரு தேசமாக திரள்வதற்கான முன் ஆயத்தங்களில் ஒட்டுமொத்த தமிழர்களும் ஈடுபடவேண்டும்.அதுவே காலத்தின் தேவையும், காலம் எதிர்பார்த்து நிற்கும் களமுமாகும்.
![]()
