இலண்டனில் மைக்கல் ஜக்சனின் இசைநாடகம் (The MJ Musical)
Prince Edward Theatre, West End, London.
எமது கூத்துப் பாரம்பரியத்திற்கும் இசை நாடகங்களுக்குமான ஒற்றுமை– வேற்றுமை என்ன?
பூங்கோதை
உலகப் புகழ் பெற்ற நாடகங்கள், பாடல் அரங்குகளுக்குப் பெயர் போன இலண்டனின் West End இல் Prince Edward Theatre இல் மைக்கல் ஜக்சன் மியூசிக்கலை இரசிப்பதற்கான சந்தர்ப்பம் ஒன்று கிடைத்தது.
சக ஆசிரியை ஒருவரின் குட்டி மகன் ஒருவர் The MJ Musical ( The Michael Jackson) இல் குட்டி மைக்கலாக நடிப்பதற்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தான். இதில் மூன்று மைக்கல்கள் இடம் பெற்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. ( 11 வயது மைக்கல், இருபதில் இருந்த மைக்கல், இறுதிக்கட்டத்தில் இருந்த மைக்கல்).
நாட்டுக்கு நாடு நாம் பாவிக்கும் சொற்களின் பாவனை வேறுபடுகிறது. இங்கு தியேட்டர் ( theatre) என்பது நாடகம், இசைநாடகம், நடனம், ஓபரா போன்ற நேரடியாக மேடையில் நடக்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் இடத்தையும், அந்தக் கலையைச் சொல்வதற்கும் பயன்படுகிறது.
சினிமாத் தியேட்டர் அல்லது. சினிமா என்பது படம்பிடித்து தயாரிக்கப்பட்ட திரைப்படம் திரையில் காண்பிக்கப்படும் இடமாகக் கருதப்படுகிறது. சினிமா தியேட்டர் என்கின்ற திரைப்பட மண்டபத்துடன் இவ்வகை தியேட்டர்கள் வித்தியாசப்படுவதற்கு காரணம் தியேட்டரில் நேரடியாக நடைபெறும் நிகழ்வுகள் இடம் பெறுவதே. இங்கே நடிகர்கள், இசைக்கலைஞர்கள், நடனக் கலைஞர்கள் போன்றவர்கள் நேரடியாக மேடையில் தோன்றுவர்.
லண்டனில் முக்கியமான தியேட்டர்கள் இருப்பது வெஸ்ட் என்ட் ( West End) ஆகும். இது லண்டனின் “Broadway” போல, உலகப்புகழ்பெற்ற நாடகங்கள் மற்றும் மியூசிக்கல்கள் நடைபெறும் பகுதி. உதாரணமாக Lyric Theatre, Prince Edward Theatre, Shaftesbury Theatre போன்றவற்றைச் சொல்லலாம்.
இசை நாடகம் -Musical (மியூசிக்கல்) என்பது தமிழ் கலை வடிவங்களில் ஒன்றான கூத்து வடிவத்தைப் போன்றதாயினும், இது மேற்கத்தேய நவீன தொழில் நுட்பத்தை உள்வாங்கிக் கொண்ட கலை வடிவமாகும்.
ஆகவே, Musical theatre என்பது நாடகத்தையும் (acting), பாடல்களையும் (songs), நேரடி இசையையும் (orchestra/band), நடனத்தையும் (dance) ஒருங்கிணைக்கும் ஒரு மேடை, கலை வடிவம் எனலாம்.
இதன் சிறப்பம்சங்களாகக் கதை சொல்லும் போது, உரையாடல்களுடன் பாடல்கள், மற்றும் நடனங்கள் முக்கிய பங்கு வகிக்கும். உணர்வுகளை மேம்படுத்திக் காட்சிப்படுத்த மேடையில் நவீன தொழில் நுட்பத்தோடு இசை பயன்படும். அண்மைக்கால இசை நாடகங்களாக (பிரபலமான மியூசிக்கல்கள்) The Phantom of the Opera, • Les Misérables, • The Lion King, • Hamilton,• MJ The Musical போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
MJ The Musical பற்றி சிறு குறிப்பொன்றைக் கூறுவதாயின் , மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கையும் இசையும் மையமாகக் கொண்ட, அவரது பிரபலமான பாடல்கள், நடன பாணிகள், மற்றும் கலைப்பயணத்தை கதை வடிவில் மேடையில் காட்சிப்படுத்துகிறது எனலாம்.
இதில் முக்கிய அம்சங்களாக Billie Jean, Beat It, Smooth Criminal போன்ற ஹிட் பாடல்கள் நேரடி இசையுடன் தரப்படுவதோடு மைக்கேல் ஜாக்சனின் “moonwalk” உள்ளிட்ட நடன அசைவுகள், அவரது சவால்கள், வெற்றிகள், மற்றும் படைப்பாற்றலின் கதையைக் கூறிச் செல்கிறது எனலாம்.
பிரின்ஸ் எட்வெர்ட் மண்டபத்தின் (Prince Edward Theatre) வரலாறு சிறப்பானது.
இது 3ஆம் திகதி ஏப்ரல் 1930 கலைகளுக்கான அலங்கார வடிவமைப்பில் பிரபலமான Edward A. Stone என்ற கட்டிடக் கலைஞரால் வடிவமைக்கப்பட்டு ஆரம்பிக்கப் பட்டது. இதன் முதல் நிகழ்ச்சியாக Rio Rita என்ற அமெரிக்க இசைநாடகம் காட்சிப்படுத்தப்பட்டது.
தொடக்கத்தில் இது பெரிய இசைநாடகங்கள் மற்றும் நடன நிகழ்ச்சிகளுக்கானதாக பயன்பட்டாலும் பலமுறை மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டது. உதாரணமாக, நாடக அரங்காக 1930–1935 ஆண்டுகளில் பெரும்பாலும் இசை நாடகங்களுக்காக பயன் பட்டாலும், 1935–1940ம் ஆண்டுகளில் London Casino என்ற பெயரில் பெரிய நடன அரங்காக மாற்றப்பட்டது.
அதைத் தொடர்ந்து, துரதிஸ்டவசமாக இரண்டாம் உலகப் போரில் 1940-ல் குண்டுவீச்சில் சேதம் அடைந்தது.
போர்க் காலத்தில் இராணுவத்திற்கான கலை, சமூக நிகழ்வுகள் நடைபெறும் இடமாகப் பயன்படுத்தப்பட்டது. ஆனாலும் போரின் பின்னர், 1946–1954 ம் ஆண்டு வரையான காலத்தில் மீண்டும் மியூசிக்கல் தியேட்டராக மாற்றம் பெற்றது.
சினிமாத் தியேட்டரிற்கான காலமாகவும், 1954–1978ம் ஆண்டு வரை ‘Casino Cinerama Theatre’ என அழைக்கப்பட்டு, 70mm பெரிய திரைப் படங்களைக் காட்டும் சினிமா திரை அரங்காக இருந்தது. இருப்பினும் ‘West End’ திரும்புதலே அதன் முதன்மை நோக்காகக் கொள்ளப்பட்டதால் 1978 இல் பெரும் புதுப்பித்தலோடு மீண்டும் நேரடி மேடை நிகழ்ச்சிகளுக்காக திறக்கப்பட்டது.
அதன் பிறகு Evita (Andrew Lloyd Webber), Mary Poppins, Miss Saigon, Aladdin போன்ற உலகப்புகழ்பெற்ற இசை நாடகங்களுக்கு இல்லமாக இருந்தது.
தற்போது 2024–2025 இல், MJ The Musical நடைபெறும் முக்கிய மேடையாக 1,600க்கும் மேற்பட்ட இருக்கைகள், அழகிய Art Deco அலங்காரம், நவீன ஒலி–ஒளி வசதிகளோடு, West End-இல் மிகவும் பெருமைமிக்க சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் தியேட்டர்களில் ஒன்றாக, நவீனமும், பாரம்பரியமும் ஒன்றாய் இணைந்த இடமாகக் காட்சியளிக்கிறது.
ஏற்கனவே மேலே குறிப்பிட்டபடி தமிழ் பாரம்பரியக் கூத்திற்கும், இசை நாடகங்களிற்கும் (Musicals) இடையேயான ஒற்றுமைகள், வேற்றுமைகளை கீழ் வரும் அட்டணை வடிவில் பார்ப்பது சுவாரசியமானதாய் இருக்கக் கூடும்.
:
| அம்சம் | கூத்து | இசை நாடகங்கள் Musical |
| கலை வகை | பாரம்பரிய தமிழர் மேடை கலை | மேற்கத்திய நவீன மேடை கலை |
| நடிப்பு | நாட்டுப்புற நடிப்பு முறைகள் | நாடகக் கலையுடன் தொழில்முறை நடிப்பு |
| இசை | நாட்டுப்புற இசை, தாளம் (பறையிசை, தப்பாட்டம் போன்றவை) | மேலைநாட்டு இசைக்கருவிகள், நவீன இசை வடிவங்கள் |
| பாடல் | கதையை முன்னெடுக்கும் நாட்டுப்புற பாடல்கள் | கதையை முன்னெடுக்கும் நவீன/சங்கீத பாடல்கள் |
| நடனம் | பாரம்பரிய, நாட்டுப்புற அசைவுகள் | நடன வடிவமைப்புடன் (choreography) தொழில்முறை நடனம் |
| மேடை | திறந்த வெளி அல்லது எளிய மேடை அமைப்பு | தொழில்நுட்ப வசதிகள் கொண்ட மூடிய மேடை |
| பொருள் | புராணம், வரலாறு, மக்கள் கதை | கற்பனை, காதல், சமூக பிரச்சினைகள் போன்ற பல்வேறு கருப்பொருட்கள் |
| பார்வையாளர்கள் | உள்ளூர் மக்கள், கிராமப்புற மக்கள் | நகர்ப்புறம் மற்றும் சர்வதேச பார்வையாளர்கள் |
| முக்கிய நோக்கம் | பாரம்பரியத்தை பரப்புதல், மக்களை மகிழ்வித்தல் | கதையை கலை நயத்துடன் பரிமாறி மகிழ்வித்தல் |
![]()
