மதிய உணவும், மதிக்கு விருந்தும்ஒன்றாகப் பந்திவைத்த ஒன்றுகூடல்.
MK TAMIL lUNCHU CLUB
- மாதவி. யேர்மனி
கடந்த மாதம் 30ம் திகதி மில்ரன் கேன்ஸ் (Milton Keynes) நகரத்தில் உள்ள MK tamil lunch Club.UK அமைப்பின் ஒன்று கூடலில் அதன் தலைவர் திரு.தி.விஷ்வேந்திரன் அவர்கள் அங்கு மிகுந்த சுறுசுறுப்புடன் இயங்கிவருவதை நேரில் காணமுடிந்தது.
எனது சகோதரி திருமதி கலாநிதி லோகதாசன் அவர்கள் இந்த அமைப்பின் உறுப்பினராக உள்ளதால், எனக்கு அக்காவுடன் சென்று அவர்களது செயற்பாடுகளைக் காணும் சந்தர்ப்பம் கிடைத்தது. நான் அவர்கள் கூடும் மண்டபத்தினுள் நுழைந்ததும் ஒரு சிலர் அங்கு நின்றனர், சிலர் வந்துகொண்டு இருந்தனர். எவரது வேண்டுதலையும், எதிர்பாராமல், வந்தவர்கள் மள,மள என்று தங்கள் கைப்பைகளை ஒரு புறம் வைத்துவிட்டு, அங்கு மண்டபத்தில் இருந்த மேசைகளை ஒரு பகுதியனரும் மறு அறையில் இருந்த கதிரைகளையும் ஒரு பகுதியினரும் எடுத்துவந்து ‘ப’ வடிவில் மண்டபத்தில் அடுக்கினர்.
எனக்கு யேர்மனியில் விழாக்கள், ஒன்று கூடலுக்கு மண்டபம் ஒழுங்கு செய்வது ஞாபகம் வந்தது. ஒருபக்கம் ஒழுங்கு படுத்த, மறுபுறம் ஒன்று கூடல் நிகழ்வில் கலந்து கொள்ள வந்தவர்கள் வந்து ஒழுங்கு செய்பவர்களுடன் இணைந்தபடி இருந்தனர். நான் ஒரு முதியோர் ஒன்று கூடல் இது, என்ற எண்ணத்துடன் சென்று இருந்தேன். அந்த எண்ணம் சென்று ஒரு சில விநாடிகளுக்குள் தலைகீழாக மாறியது. அவர்களின் செயற்பாடுகள் அப்படி அமைந்து இருந்தது. பல வயதினரும் அங்கு கூடி இருந்தனர்.
இதனால் இளையவர்களது துடிப்பான செயல்கள், சற்று வயதானவர்கள் செல்களையும் இளமையுற வைத்தது. இளையவர்களுக்கு முதியவர்களது அனுபவங்கள் ஒளிபாச்சியது. 40,வயது,50 வயது, 60,வயது,70 வயது 80 வயது என பலரும் வயதைத்தொலைத்து மகிழ்ந்த காட்சிகண்டு நெகிழ்ந்தேன்
திரு.விஷ்வேந்திரன் அவர்கள் இந்த அமைப்புப் பற்றிக் கூறுகையில், 2008ம் ஆண்டு Tamil senior’s coffee club என ஆரம்பிக்கப்பட்டது, பின்னர் 2012 ஆண்டுமுதல் Tamil senior’s lunch club எனவும் (2023 முதல் )தற்போது MK Tamil lunch club எனவும் தொடர்ந்து இயங்கி வருவதாக குறிப்பிட்டார். உண்மையில் இந்த அமைப்பில் சீனியேஸ் என்ற வார்த்தை பிரயோகம் நீக்கப்பட்டமை ஒரு சிறந்த மருந்தாகும்.
ஆம் மனதினை இளமையாகவும் தைரியமாக வைத்து இருக்க அன்றாடம் எமது பேச்சில் உள்ள வார்த்தைப் பிரயோகங்கள் எத்துணை துணையாகிறது என்பதனை உணரமுடிந்தது. அந்தவகையில் ஆமு வயஅடை டரnஉh உடரடி சிறப்பானதாக உள்ளது. நாற்பதிற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். ஒவ்வோரு புதன் கிழமையும் ஒன்று கூடுவார்கள். சராசரி ஒவ்வொரு ஒன்று கூடலிலும் 20 பேர்கள் வரை கலந்து கொள்வார்கள். புதுவருடத்திற்கு முன்னைய வாரம், புதுவருடத்திற்கு பின்னையவாரம், மற்றும் ஆவணி மாதம் முழுவதும் ஒன்றுகூடல் நிகழ்வது இல்லை.
மண்டபத்தின் பின்புறத்தில் பச்சைப் பசேல் என்ற விளையாட்டு மைதானம் உண்டு,அதில் உடற்பயிற்சி செய்வார்கள். மற்றும் இங்கிலாந்து நாட்டுக்குள் சுற்றுலா ஒழுங்கு செய்து செல்வார்கள். ஒன்று கூடலின் போது மதிய உணவு ஏற்பாடு செய்து கூடி உண்டு மகிழ்வார்கள். பின்னணியில் பழைய பாடல்கள் பாடிய படியும் இருக்கும். சிலர் நேரில் பாடிப் பழைய நினைவுகளை மீட்டியவண்ணமும் இருப்பார்கள். பாடும் போது நான் தென்னங்காற்று பருவ மங்கையோ தென்னங்கீற்று என்ற பாடலை ரவி பாடடியபடி இருந்தார். என்ன குரல் வளம். சுப்பர் சிங்கர் மேடைகளும் யாவருக்கும் கிடைப்பதில்லை. கிடைக்காதவர்கள் எல்லோரும் குரல்வளம் குறைந்வர்களும்; அல்ல, என்பதனை பாடும்போது நான் தென்னங்காற்று பாடல்; எனக்கு நினைவூட்டியது. அங்கு உள்ளவர்களுக்கு ஒத்தாசையாக ஆசையுடன் உதவும் பல இளையோரையும் காண முடிந்தது.
அந்த அமைப்பின் சேவைகள் சில…
பிற இடங்களில் இருந்து இடம்பெயர்ந்த தமிழர்களின் உடல் நலம் மற்றும் நலன்கள் சிறப்பாக கவனிக்கப்படு வதற்கும், தேவையானபோது தனிநபர் அடிப்படையிலும், குழுவாகவும் உதவி செய்வதற்கும் இந்த அமைப்பு முனைப்புடன் செயல்படுகிறது.
உறுப்பினர்களுக்கு மருத்துவர்கள் முதல் வர்த்தகர்கள் வரை அனைவரும் மதிப்புடன் ஆதரவு வழங்குகிறார்கள். மொத்தத்தில் MK Tamil lunch club மதிய உணவுடன், வாழ்வை மதியுறுவண்ணம் மகிழ்வுடன் வாழ வழிகாட்டும் அமைப்பாக திகழ்கிறது. அங்கு ஒருவருக்குகொருவர் கலந்து பேசிமகிழ்வதால் வீடு திரும்பும்போது நோய்விட்டுப் போகிறது. புத்துணர்ச்சி பிறக்கிறது.
![]()
