அடங்க மறுக்குதே மனம்.

0
my.sclputure

-மாதவி யேர்மனி

இன்னும் கொஞ்சத் தூரம் போக நிறைய இருக்கும். பொறுங்க ஐயா நான் நல்ல இடமாகப் பார்த்து நிற்;பாட்டுகிறேன்.
அங்கை “நிறைய இருக்கு! “ நிற்பாட்டவும் என்பதற்குள் அந்த இடம் கடந்திடும். நீங்கள் விடுமுறைக்கு இலங்கை சென்றால் பெரும்பாலும் அங்கு ஒரு தனியார் வாகனத்தை வாடைக்கு அமர்த்தி பயணிப்பீர்கள். அப்போது, தெருக்களில் இளநீர், ரம்புட்டான், மாம்பழம் இவற்றை விற்பவர்களைக் கண்டால் வாகனத்தை நிறுத்துங்கள் என்று சாரதியைக் கேட்கும் பொழுதுகளில் ஏற்பட்டும் அனுபவம் இவையாக இருக்கும்.

பெரும்பாலும் நாம் முடிவெடுத்து சொல்வதற்கு முன்போ, அல்லது அரைகுறை மனதுடன் நாம் இருப்பதனாலோ. டக்கென்று வாகனத்தை மறிக்கச் சொல்லமாட்டோம். ஆனால் பயணம் முடியுமட்டும் அந்த இடத்தில் ரம்புட்டான் இருந்தது, இவன் நிற்பாட்டவில்லை, என்று ஒருமையில் அவனைத் திட்டித்தீர்ப்போம். எப்போதுமே நாமே கதாநாயகன் என்பதில் தீர்க்கமாக இருப்போம்.

இந்த அனுபவம் எனக்கு பல தடவை இருந்தபடியால், இம்முறை மலையகத்தில் ஒரு பயணம் சென்ற போது ரம்புட்டான் நிறை தெருவில் விற்பதைக்கண்டு வாகனத்தை நிறுத்தச் சொன்னேன். அவர் வழமை போல நிறுத்தாமல் ‘அங்கால் போக, இன்னும் அதிகம் இருக்கும் மலிவாக்கூட வாங்கலாம்’ என்றான். நான் இந்தச்சாரதிமாரைக் கரைத்துக்குடித்தவன் என்பதால், இல்லை வானைத்திருப்பவும், நேரம் போனால் பறவாய்யில்லை பழத்தை வேண்டுவோம் என்றேன்.

அவன் முகத்தை திருப்பாமல் கடுகடுப்புடன் வானைத்திருப்பிக்கொண்டு கொஞ்சத்தூரம் ஓடி, நான் சொன்ன இடத்திலே நிறுத்தினான். பழங்களை வேண்டிக்கொண்டேன் பயணம் தொடர்ந்தது. அடுத்த வளைவில் எக்கச்செக்கமான பழங்களை வைத்து பலர் விற்றவண்ணம் இருந்தனர். வான் சாரதி வேண்டுமென்றே நான் பார்க்கட்டுமென்று மெதுவாக வாகனத்தை ஓட்டினான். நான் அவனை திசை திருப்ப ‘அந்த தூரத்தில் தெரியும் அருவிக்கு என்ன பெயர்? ’ என்றேன். அவன் ‘றயவநசகயடடள ’ என்றான். பகிடி பிடித்தும் அவனைப் பிடிக்கவில்லை என்பதால் சிரிப்பை அடக்கிக்கொண்டேன்.

தூரத்தில் ஓரு ஆச்சியும், அப்புவும் வருவது தெரிந்தது, அப்பு தலையில் ஒரு பொதியோடு வருகிறார், ஆச்சி ஒரு தடியை ஊண்டியபடி அப்புவின் கரங்களைப்பற்றி நடக்கின்றார். இப்போ எமது வாகனத்திற்கு அருகாக அவர்கள் நெருங்கிய வண்ணம் இருந்தனர். அப்புவுக்கு கண்தெரியாது, ஆச்சிக்கு உடல்நலம் குறைவு, இருந்தாலும் ஆச்சி அப்புவுக்கு கண்ணாக கரம் பிடித்து வரும் காட்சி என்நெஞ்சைத்தொட்டு, கமராவையும் தொட்டது. வாகனம் அவர்களை விலத்துவதற்கு முன் மட மட என்று பல படங்கள் எடுத்தேன்.

அவர்கள் என் மனதைத் தொட்டதற்கு இன்னும் ஒரு காரணம் உண்டு. சுமார் 45 வருடங்களுக்கு முன் ‘உதவி” என்று ஒரு சிலைவடித்தேன். கண்தெரியாத ஒரு மனிதன் தெருவில் நடக்க,அவன் தோழில் ஒரு முடவன் இருந்து வழிகாட்டுவது போன்றது. அச் சிற்பம் பரிசும் பெற்றது.

அவர்களை விலத்தி கால்மைல் தூரம் வந்துவிட்டேன். அவர்கள் மனதைவிட்டு விலகவே இல்லை. அவர்களது கையில் கொஞ்சக்காசை வைத்திருக்கலாம், ஏன் என்மனம் இப்படியாக இருக்கிறது. என என்னை நொந்தாலும் ‘அட இந்த வான்சாரதி சொன்னதும் என்ன நிறுத்தவாபோறான்’, என நான் அவர்களுக்கு உதவாமைக்கு ஒரு காரணத்தை தேடி அமைதியானேன்.

வாகனம் சாரதிக்கு பிடித்த ஒரு தேத்தண்ணி கடையில் நிற்கிறது. நாம் எல்லோரும் தேத்தண்ணியுடன், பொல் ரொட்டியும் சம்பலும் சாப்பிட்டோம். சுப்பராக இருந்தது. பில் தந்தார்கள், பில்காசுடன் அதே அளவு காசு ரிப்ஸ் என்றும் கொடுத்தேன்.வாகனம் மீண்டும் பயணத்தை தொடங்கியது. சாரதி ‘ஐயா உங்களிடம் ஒன்று கேட்கவா?’ என்றான். சொல் என்றேன். சும்மா அவன் கடமையைச் செய்தற்கு இவ்வளவு காசு ஏன் கொடுக்கவேண்டும் என்றான். அது அவன் அழகாக பரிமாறியதற்கு என்றேன். சாரதி அது அவன் தொழில் அது என்றான். அத்தோடு அவன் தன் மனதுக்குள் இருந்த வெடி ஒன்றை கொழுத்திப்போட்டான்.

ஐயா! ‘அந்தக்காசை அப்போ தெருவில் வந்த அந்த கண்தெரியாத அப்புக்கும் ஆச்சிக்கும் கொடுத்து இருக்கலாமே. அவர்கள் தலைமையில் சுமந்து போகும் அந்த தொழிலும், அவர்கள் உறவும் அழகு என்றுதானே என்று விழுந்து விழுந்து படம் எடுத்தீங்கள்.’ என்றான். என்னவோ எமது தவறை பிறர் சுட்டிக்காட்டும்போது வரும் கோவம் அது மிக மிக கேவலமாக இருக்கும்.

இதவரை மனதுக்குள் ‘அவன்’ ‘இவன்’ என்று பேசிய நான் சாரதியை வெளியாக சத்தமாக ‘நீ நான் வாகனத்தை அந்த இடத்தில் நிற்பாட்டச்சொன்னால் நிற்பாட்டியாய் இருப்பாய ?;. ’ என்றேன். இன்னும் கொஞ்சம் போனால் இரண்டு பேருக்கும் கண்தெரியாத ஆச்சி அப்பு வருவர்கள் எண்டல்லவோ சொல்வாய் என்று என் தவறை அவன்மேல் சுமத்தினேன்.

ஐயா ஒரு ரம்புட்டானுக்கு அரைமைல் போனாப்பிறகும் ரவுண்டடிச்சு திருப்பச்சொல்லி வந்து வாங்கி உங்களுக்கு, ஆச்சி அப்புவிடம் திருப்பச் சொல்ல மட்டும் மனம் விடவில்லையே என்றான். நான் அவனுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. என்னிடம் பதிலும் இல்லை. எனக்கு திடமான ஒரு முடிவை விரைவாக எடுக்கும் திறன் எப்ப குறையத் தொடங்கியதோ அப்போதே பிறர்மீது குறையைச் சுமத்த முனையும் குணமும் அதிகரித்ததுவிட்டது என்பது எனக்கு புரிந்தது.

இப்போ சாரதியை அவன் இவன் என்று மனம் நினைக்கவில்லை. தம்பி என்று அழைத்து 2 கி.மீ வந்திட்டோம் வானைத் திருப்ப முடியுமா அந்த ஆச்சி அப்புவிடம் என்றேன். ஐயா திருப்பவேண்டாம் நீங்கள் மனம்விரும்பினால் இன்னும் ரம்புட்டான் இருக்குதோ இல்லையோ ஆனால் அவர்களைப்போல் பலரை உங்களால் காணமுடியும் என்றான்.

பிற்காலத்தில் நம்பியார் கூட வில்லனாக நடிப்பதை விட்டு நல்லவனாக நடித்தார். உண்மையிலும், நல்லவன் என்பதை வாழ்விலும் உணர்த்தினார். எனது பிற்காலம் எதற்குள்ளும் அடங்க மறுத்தது. விடுமுறை முடிந்து வீடு வந்தேன். சுவரில்மாட்டி இருந்த எனது பரிசு பெற்ற சிற்பத்தின் படம் பரிகாசித்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *