எங்கடை ஆச்சி 6
எங்கடை ஆச்சி 6
முந்தி எங்கட ஊரில மாடு வளத்தவையின்ர வீடுகளிலை அனேகமாக மத்து இருக்கும். தயிரைக் காலமையில இந்த மத்தால கடைஞ்சுதான் வெண்ணெய் எடுக்கிறவை. வெண்ணெய் எடுத்து மிஞ்சிற கொழுப்பில்லாத தயிரைத்தான் மோர் எண்டு சொல்லுறவை.எங்கட ஆச்சி கையாலதான் ரெண்டு உள்ளங்கையளுக்கும் இடையில மத்தைப் பிடிச்சுக்கடையிறவ. சிலர் மத்தைச் சுத்திறதுக்கு கயிறைப்பாவிக்கிறவை. எங்கட வெளிநாட்டில உள்ளவை புரொசெசரில போட்டு அடிச்சா டக்கெண்டு வெண்ணெய் பிரிக்கலாம் மத்தால கடையிறது வீண்வேலை எண்டுவினம்.
எங்கட ஆச்சி மத்தால தயிர் கடையிறது உடம்புக்கு நல்ல பயிற்சி எண்டுவா. கைத்தசையளுக்கு நெஞ்சுத்தசையளுக்கு நல்ல பயிற்சி எண்டுவா. குறிப்பா பெண்டுகளுக்கு முலை தொய்யாது முலை சம்பந்தமான கண்ட கிண்ட வருத்தம் ஒண்டும் வராது எண்டுவா. ஆச்சி சொல்லுறது உண்மைதான் ஏனென்டால் அவ கடைசிவரையும் உள்சட்டை எண்ட பிறா போடாம இருந்தவ. உண்ணான அவவுக்கு அது தேவைப்படேல்லை.
அது மட்டுமில்லை குந்தி இருந்து மத்தால தயிர் கடையிறது இடுப்புக்கு காலுக்கு எல்லாம் நல்ல பயிற்சி. மூட்டு வருத்தம் வராது இடுப்பு எலும்பு நல்ல பலமா வரும். உப்பிடி இடுப்பு நல்ல பலமா இருந்தா வயித்தில பிள்ளை இருக்கேக்கை பாரமா இருக்காது அதோட கஸ்ரப்படாம பிள்ளைப் பெறலாம் எண்டுவா. முந்தி இப்பிடிப் பலதும் பத்துமான வேலைகளை வீடுவழிய செய்த படியால முந்தி எங்கட பெண்டுகள் நல்ல ஆரோக்கியமா மட்டுமில்லை அஞ்சாறெண்டு பஞ்சிப்படாமல் பிள்ளையளைப்பெத்து வளத்து ஆளாக்கினவை எண்டுவார் அப்பு. இப்ப ஒண்டைப் பெறுகிறதுக்கே முக்கு முக்கு எண்டு முக்குகினம் எண்டுவார்.
உந்த தயிரால மத்து கடையிற விசயம் எங்கட புராணத்திலையும் வருகுது. தேவர்களும் அசுரர்களும் மேரு மலையை மத்தாகவும் வாசுகி எண்ட பாம்பைக் கயிறாகவும் பாவிச்சு பாற்கடலைக் கடையேக்கை அவங்கள் போட்டி போட்டு கடைஞ்ச வேகத்தில வாசுகி ஏலாம நோவில கத்தி நஞ்சைக் கக்கினதெண்டும் அந்த நஞ்சைச் சிவபெருமான் தன்ர கண்டம் எண்ட கழுத்தில எடுத்து வைச்சவராம். அதால அவற்றை கழுத்து நீலம்பாரிச்சு இருந்ததால திருநீலகண்டர் எண்டு பெயர் வந்தது எண்டு முந்தி அப்பு சின்ன வயசில சொன்ன ஞாபகம் இருக்குது.
திருநீலகண்டப்பதிகம் பாடினா வருத்தங்கள் குறையும் தற்செயாலா வருத்தங்கள் வந்தாலும் அந்த வருத்தங்களால வாற விளைவுகள் குறையும் இல்லாட்டில் இல்லாமல் போகும் எண்டது சைவர்களின் நம்பிக்கை எண்டு ஆச்சி நெடுகவும் சொல்லுறவ.
உந்தப் பாற்கடலைக் கடைஞ்ச கதையை இளங்கோவடிகள் நல்ல வடிவாச் சொல்லுறார் எண்டு அப்பு சொன்ன ஞாபகம்.
“வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்
கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே
கலக்கியகை அசோதையார் கடைகயிற்றாற் கட்டுண்கை
மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே”
உந்தக்கதையைக் கம்பரும்,
“மத்து மந்தரம்; வாசுகி கடை கயிறு; அடை தூண்
மெத்து சந்திரன்; சுராசுரர் வேறு வேறு உள்ள
கொத்து இரண்டு பால் வலிப்பவர்; ஓடதி கொடுத்து,
கத்து வாரிதி மறுகுற, அமிழ்து எழக் கடைமின்”
எண்டு அகலிகையைப்பற்றிக் கதைக்கேக்கை கதைக்கிறார் எண்டு ஆச்சி சொல்லுறவ. கம்பர் இன்னும் கன இடங்களில உந்த மத்து பற்றிய விசயங்களை கதைக்கிறார். இதுமாதிரி மத்து பற்றிய செய்தியள் சீவகசிந்தாமணி மாதிரி பழைய இலக்கியங்களில இருக்கெண்டு எங்கட ஆச்சி சொல்லுறவ.
நாங்கள் இப்ப மறந்து போன விசயங்களிலை உந்த மத்தும் ஒண்டு. இப்பத்தே பெடி பெட்டையளை மத்து எண்டால் என்ன எண்டு தெரியுமோ எண்டு கேக்கேக்கை அதுகள் தெரியாமல் முழிக்கேக்கை போட்டு மொத்த வேணும் போல இருக்கும்.
![]()
