இலங்கை சினிமாவை உலகத் தரத்துக்கு எடுத்துச்செல்லக் கூடிய இளம் படைப்பாளி நவயுகா குகராஜா

0
15.page.headline


–ராஜலிங்கம் சுபாஷினி-இலங்கை

இலங்கைச் சினிமாவில் புதிதாகக் கேட்டுக் கொண்டிருக்கும் குரல்களில் குறிப்பிடத்தக்கவர், நவயுகா குகராஜா. சமூகத்தைச் சிந்திக்கச் செய்வதற்கான ஒரு கருவியாக சினிமாவை அணுகும் இவர், சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் இளம் பெண் கலைஞர்களுக்கான சிறந்த முன்மாதிரி எனலாம். கலை என்பது பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல, சமூகப் பிரச்சினைகளை வெளிப்படுத்தி மாற்றத்திற்கான உரையாடலைத் தொடங்கவும் பயன்பட வேண்டும் என்பதில் உறுதியான நம்பிக்கையோடு செயற்படும் ஒரு பெண் ஆளுமை. கவிதாயினி, எழுத்தாளர், நடிகை, இயக்குனர் என பன்முக திறமைகளுடன் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன் விளங்கும் நவயுகாவின் திறமை இலங்கை சினிமாவுக்கு கிடைத்த பெரும் உந்து சக்தி என்றால் அது மிகையல்ல.

யாழ்ப்பணம், தெல்லிப்;பளையில் பிறந்த நவயுகா, தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் இராமநாதன் கல்லூரியிலும், தொடர்ந்து வவுனியா இறம்பைக் குளம் மகளிர் மகாவித்தியாலத்திலும் கற்றுத் தேர்ந்தவர். இந்தியாவில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் வணிகப் பட்டதாரியான இவர், தொழில்நுட்பத்துறையில் ஆசிரிய டிப்ளோமா முடித்துள்ளதோடு, தமிழ், சிங்கள மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர்.அத்துடன், நிவ்யோர்க் பல்கலைக்கழகம் – டிஷ் கலைப் பள்ளியில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறை சார்ந்து கற்றிருப்பதுடன், ‘நியூ சவுத் வேல்ஸ்’ பல்கலைக்கழகத்திலும் தன் துறைக்குத் தேவையான கற்கை நெறியை பூர்த்தி செய்துள்ளார்.

பாடசாலைக் காலத்தில் இருந்தே நாடகம், இசை, நாட்டுக்கூத்து போன்ற கலைகளில் ஈடுபாடுடைய நவயுகா, எழுத்தாளராகவே ஆரம்பத்தில் தன்னை அடையாளப்படுத்தியுள்ளார். 10க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள இவர், இலங்கைப் பெண்கள் நடிப்புத்துறையில் தங்களை நிலை நிறுத்திக்கொள்ளத் தயங்கும் ஒரு சூழலில் நடிப்புத் துறையை பிரதானமாகக் கொண்டு செயற்படுகின்றார். குறுந்திரைப்படம் ஒன்றின் ஊடாக தன் பிரவேசத்தை ஆரம்பித்தவர், ‘ஆறாம் நிலம்’, ‘ஒற்றை பனை மரம்’ போன்ற பல திரைப்படங்களில் பிரதான கதாபாத்திரத்திலும், ‘கோமாளிகிங்ஸ்’ திரைப்படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

இதில், ‘ஒற்றைப் பனை மரம்’ பல விருதுகைளை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. தவிர இலங்கை திரைப்படத்துறையில் மிகப்பெரிய பொருட் செலவில் தயாரான ‘கிரிவெசிபுர’ என்னும் சிங்கள திரைப்படத்திலும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். மும்மொழியும் பயன்படுத்தப்பட்ட இத்திரைப்படமானது, சிறந்த வரலாற்றுப்படமாகும். வுhந குசழணநn குசைந – (னுசைநஉவழச யுரெசரனனாய துயலயளiபொந) எனும் திரைப்படத்துக்கான தமிழ் உபதலைப்புக்களை செய்துள்ள நவயுகா, ‘மாசறு’, ‘வினவு’ ஆகிய இரு குறுந்திரைப்படங்களிலும் தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருந்தார். இப்படங்கள் பாலியல் சுரண்டல்களைப் பற்றிப் பேசும் படங்களாகும்.

எழுத்துத் துறையிலும் ஆற்றல் மிகுந்த நவயுகா, பல புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். ‘மன்மதம் நீ’ , ‘வனயட்சி’ ,‘சூப்பனகையும் ஒரு பவளத்தீவும்’, ‘உயிர் உடையும் ஓசைகள்’ போன்ற பல தமிழ் கவிதை புத்தகங்கள் இவரின் கைவண்ணத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. ‘கோமாளி கிங்ஸ்’ மற்றும் ‘கின்னேன் உபன் சீத்தல’ ஆகிய படங்களுக்கான தமிழிலிருந்து சிங்களம் மற்றும் சிங்களத்திலிருந்து தமிழுக்கான உப தலைப்பு மொழிபெயர்ப்புகளைச் செய்துள்ளார். அதைவிட இலங்கை சினிமாவுக்காக 15க்கும் மேற்பட்ட தமிழ் பாடல்களை எழுதியுள்ள நவயுகா, 800 இலங்கை-இந்திய தமிழ் திரைப்படத்தில் இணை டப்பிங் இயக்குனராகவும் செயற்பட்டவர்.

“பெட்டைக் கோழிக் கூவி”
2021ஆம் ஆண்டு நவயுகாவின் இயக்கத்தில் வெளியான குறுந்திரைப்படமான “பெட்டைக் கோழிக் கூவி” (Pநவவயமை முழணாi முழழஎi) இலங்கை மட்டுமின்றி சர்வதேச ரீதியிலும் பெரும் கவனத்தை ஈர்த்தது. சமூக வலைத்தளங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் அவதூறு, அவமதிப்பு மற்றும் அதனால் ஏற்படும் மன உளைச்சல்களை மையமாகக் கொண்ட இந்த ஆவணப் படம், பெண்களின் குரலை வலுப்படுத்தும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மொழி வேறுபாட்டைக் கடந்து ஒரே பிரச்சினையை சமூகத்துக்கு முன்வைத்திருந்தமை, நவயுகாவின் விரிவான பார்வையை வெளிப்படுத்தியிருந்தது என்று தான் கூறவேண்டும். குறும்படத்தின் குறுகிய நேரத்தில், அவர் சுருக்கமான காட்சிகளின் வழியாக வலுவான செய்தியை அளித்திருந்தமை சிறப்புக்குரியது.

புதிய அடையாளமாக மாறிய நவயுகா

இவரின் படைப்புக்களை பார்க்கையில், அவரின் பார்வையில் சினிமா என்பது சிரிப்பையும் மகிழ்ச்சியையும் அளிப்பதற்கே அல்ல சிந்திக்கவும் கேள்விகளை எழுப்பவும் செய்ய வேண்டும் என்பதையே அவர் நோக்கமாகக் கொன்டு செயற்படுகின்றார் என்று தான் எண்ணத் தோன்றுகின்றது. அதனால் தான் அவரது ஒவ்வொரு படைப்பும் பொழுதுபோக்குடன் கூடிய விழிப்புணர்வு உரையாடலாக அமைகின்றன.

இவர் பெற்ற விருதுகள்

தேசிய ரீதியிலும், சர்வதேச அளவிலும் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு போன்றவற்றுக்கு, கிட்டதட்ட 35க்கும் மேற்றபட்ட விருதுகளை வென்று குவித்துள்ளார் நவயுகா. இவர் பெற்ற விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள் குறித்த பட்டியலை பார்க்கையில், ஒரு சொற்ப காலத்தில் இத்தனை சாதனைகள் சாத்தியமா என்றே எண்ணத் தோன்றுகின்றது.

சர்வதேச அளவில் பேசப்படும் ‘பொம்மை’
இலங்கை சினிமாவைப் பொறுத்த வரை, சர்வதேசத்தை தாண்டி தேசிய அளவில் சற்று பிரபலமடைந்தாலே சற்று ஆறுதல் தான். இந்திய, அமெரிக்க சினிமாவில் மட்டுமே மூழ்யிருக்கும் நம்மில் பலர், நம் நாட்டு படைப்புக்களை ஏனோ தொட்டுக்கூட பார்ப்பது கிடையாது. நமது கதைகளை சொல்ல வேண்டுமென்ற முயற்சியில் நமக்கான சினிமா மெதுவாக முளைத்து வளரத் தொடங்கியிருக்கிறது. இதற்கு, நவயுகா உள்ளிட்ட இலங்கை கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவாகி, சர்வதேச ரீதியில் பேசப்பட்டு வரும் ‘பொம்மை’ சிறந்ததோர் எடுத்துக்காட்டு. ஐடீஊ தமிழ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள ‘பொம்மை’ நவயுகா மற்றும், யசோதா, திருமலை பிரணவன், சுகிர்தன் கிறிஸ்துராஜா, ரெக்சன் விக்கி, மல்லிகா கீர்த்தி, ஐங்கரன் ஜெனொஷியா போன்ற நம் நாட்டின் திறமை மிகு கலைஞர்களின் கூட்டு முயற்சியில் உருவாகி உள்ளமை பெருமைக்குரியது. இத்திரைப்படமானது சுவீடன் நாட்டின் ‘லுலீயா’ சர்வதேச திரைப்பட விழாவிலும் ‘போடன்’ சர்வதேச திரைப்பட விழாவிலும் தமிழக சர்வதேச திரைப்பட விழாவிலும் விருதுகளை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு சினி ரோயல் சர்வதேச திரைப்பட விழாவிற்கும் தெரிவாகியுள்ளது.

நவயுகா இயக்கத்தில், மதுனி ஹிரன்யா அழகக்கோனின், வற்சு ஆகியோரது ஒளிப்பதிவில், ஆ.ரஜனிகாந்த் இசையமைத்துள்ளார். மாருதி.மு படத்தொகுப்பையும், ஜோசுவா ஹெபி தயாரிப்பு வடிவமைப்பையும், சிக பூபதிராஜா ஒலி வடிவமைப்பும் செய்துள்ளனர். இப்படத்தின் முதன்மை நிர்வாகத் தயாரிப்பாளராக விக்கி களமிறங்கியுள்ளார்.
இத்தனை திறமை மிகு இளம் படைப்பாளர்களின் கைவண்ணத்தில் உருவாகியுள்ள ‘பொம்மை’; செப்டெம்பர் 19 இலங்கைத் திரையரங்குகளில். இத்தனை திறமைகளுடன் வலம் வரும் நவயுகா குகராஜா வெற்றிமணியின் மாண்புறு மங்கையாக மிளிர்கிறார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *