ஏன் மலைப்பிரதேசத்தில் குளிர் அதிகமாக இருக்கிறது?
Dr.நிரோஷன் தில்லைநாதன் யேர்மனி
நெருப்பை எடுத்துக்கொள்வோம். அந்த நெருப்பில் அருகே நமது விரலைக் கொண்டு சென்றால் என்ன நடக்கும்? எங்களால் அதன் வெப்பத்தை உணர முடிகின்றது. இதுவே அந்த நெருப்பில் இருந்து நமது விரலைக் கொஞ்சம் கொஞ்சமாக விலத்தும் போது, வெப்பம் குறைந்துகொண்டு போகின்றது என்பதை உணர்வோம். சரி, இது மிகவும் இலகுவான இயற்பியல் ரீதியான சிந்தனை ஆகும். ஆனால் ஒரு விஷயத்தைக் கவனித்து இருக்கின்றீர்களா? சூரியனும் ஒரு விதமான பெரும் நெருப்பு தானே? நாங்கள் மலைப்பிரதேசத்தில், அதாவது சூரியனுக்குக் கொஞ்சம் அண்மையில் இருக்கும் போது, நமக்குக் குளிராக இருக்கும், ஆனால் மலைப்பிரதேசத்தை விட்டுக் கீழ் நோக்கிச் செல்லும்போது, அதாவது சூரியனை விட்டு விலகும் போது, வெப்பம் அதிகரிக்கின்றதே? அது எப்படி?
ஆரம்பத்தில் நான் நெருப்பை வைத்துச் சொன்ன உதாரணம் போல், நாம் மலைப் பிரதேசத்தில் மேல் நோக்கிப் போகும் போது வெப்பம் அதிகமாகவும், கீழ் நோக்கிச் செல்லும் போது வெப்பம் குறைவாகவும் தானே இருக்க வேண்டும்? ஆனால் ஏன் அப்படி இருப்பதில்லை? இதற்குக் காரணத்தை நான் அறியத்தர முன்பு, முதலில் வெப்பநிலை என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். நம்மைச் சுற்றி இருக்கும் காற்று எண்ணற்ற துகள்களைக் கொண்டது. இலகுவாகச் சொல்லப்போனால் இந்தத் துகள்கள் அசைந்து ஒன்றுடன் ஒன்று உரசி மோதுவதால் தான் வெப்பம் ஏற்படுகின்றது. எனவே இந்தத் துகள்கள் ஒன்றுடன் ஒன்று உரசுவதன் வேகம், அதிகரிக்கும் போது வெப்பநிலையும் அதிகரிக்கின்றது. இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், காற்றின் அழுத்தத்தைப் பொறுத்து இந்தத் துகள்களின் வேகம் அதிகரிக்கின்றது. அழுத்தம் அதிகரித்தால் துகள்களின் வேகமும் அதிகரித்து, அத்துடன் வெப்பநிலையும் அதிகரிக்கின்றது. காற்றின் அழுத்தம் குறையும் போது, துகள்களின் வேகம் குறைந்து வெப்பநிலையும் குறைகின்றது.
சரி, இது இப்பொழுது உங்களுக்கு நன்றாகவே புரிந்து இருக்கும், எனவே மலைப் பிரதேசத்தில் ஏன் வெப்பநிலை குறைவாக இருக்கின்றது என்பதும் நன்றாகவே புரியும் அல்லவா? அதற்குக் காரணம் நாம் மலை ஒன்றில் ஏறி மேலே செல்லச் செல்ல காற்றின் அழுத்தமும் குறைந்துகொண்டே போகின்றது. காற்றின் அழுத்தம் குறைந்தால், துகள்களின் வேகமும் குறைந்து விடும். எனவே துகள்களின் வேகம் குறைந்தால், வெப்பநிலையும் தானாகக் குறைந்துகொண்டே போகும். ஆனால், இதுவே மலையில் இருந்து கீழ்நோக்கிச் செல்லும் போது மறுபடியும் காற்றின் அழுத்தம் அதிகரித்து, துகள்களின் வேகமும் அதிகரித்து அத்துடன் வெப்பநிலையும் அதிகரிக்கின்றது.
எனவே மலை பிரதேசத்தில் வெப்பநிலை குறைவாக இருப்பதற்குச் சூரியன் காரணம் இல்லை. அங்கே காற்றின் அழுத்தம் குறைவாக இருப்பது தான் காரணமாக இருக்கின்றது.
![]()
