நேற்று நீங்கள்தானே வந்துமூன்று சில்லு புட்டு வாங்கி போனீங்கள்!

0
07.pagebamboo-puttu-maker

-மாதவி யேர்மனி

ஒரு சனிக்கிழமை மாலை 4.00 மணி இருக்கும், அவசரம் அவசரமாக மோலில் காரை நிறுத்திவிட்டு இலங்கை உணவகம் ஏதும் இருக்கிறதா என்று நோட்டமிட்டேன்.
நல்ல கடை ஒன்று இந்த மோலில் (Mall) உள்ளது என பலர் சொன்னதால்தான் இந்த மோலுக்கு வந்தேன்.
அந்த நேரத்தில் நெத்தலி பொரியல் வாசம் மூக்கை துளைக்க ஒருவர் உணவு பாசலுடன் வந்து நான்
நிறுத்திய காருக்கு அருகில் உள்ள கார்க்கதவை திறந்து ஏறினார்.

அவரிடம் சட்டேன எங்கே அந்த உணவகம் இருக்கு என்றேன். நேரே பாருங்கள் சைனீஸ் கடை தெரியுது, அதில் இருந்து வலப்பக்கம் போங்கோ மூலைக்கடை அதுதான். சுடச் சுட வாங்கலாம் நல்ல சாப்பாடு என்றார்.
உண்மையில் ஒரு பத்திரிகையில் அல்லது அடிக்கடி யூரிப்பிலோ வரும் பெரும் விளம்பரத்திற்கு மேலாக ஒரு வாடிக்கையாளரான அவர் சொன்ன “சுடச் சுட நல்ல சாப்பாடு” என்ற வார்த்தை மனதை ஈர்த்தது.

நேராக கடைக்குச் சென்றேன். சுடச் சுட என்று சொன்வர் வார்த்தை இன்னும் ஆறவே இல்லை.
அப்படியே கடையில் உணவுகள் சுட்டபடி இருந்தது.

எனக்கு ஒரு குழல் பிட்டு தாருங்கள், என்ன கறி, சம்பலோ அதிலும் கொஞ்சம் போடுங்கள் என்றேன்.
ஒரு குழல் புட்டு போதுமா என்றார்.

ஓம் அம்மாவுக்கு ஒரு சில்லு புட்டே கூட, ஆனால் புட்டு என்றபடியால் விரும்பி சாப்பிடுவா என்று சொன்னேன்.
பேசிக்கொண்டு போகப்போகப் போக பிட்டு புட்டாக மாறியது.

விரைந்து புட்டு பாசலை தந்தார். நானும் பெற்றுக்கொண்டு திரும்பினேன்.

“அட பிள்ளை நேற்றும் நீங்கள்தானே மூன்று சில்லுப்புட்டு வாங்கிப்போனீங்கள் “என்று ஒரு குரல் அருகில் கேட்டது.

திரும்பி பாரத்தேன். என் பெரியப்பாவின் வயதிருக்கும் ஒரு ஐயா.
அவருக்கு சற்று இருகில் சென்று இல்லை ஐயா நான் இன்றுதான் முதல் இந்தக் கடைக்கு வந்தேன்.

நான் நேற்று வரவில்லை என்பதனை அவருக்கு உறுதிப்படுத்த முயன்றேன்.

ஆனால்
அவர் நான் சொல்வதை எதுவும் காதில் விழுத்தியதாக தெரியவில்லை, அவர் தான் ஊரிலை அந்த ஊர், பிள்ளைகள் எல்லம் திக்காலுக்கு திக்கால் இருக்கினம் என்று தொடர்ந்தார்.

அவர் நேற்றும் நீங்கள் தானா? மூன்று சில்லு புட்டு வாங்கினீங்கள் என்ற கேள்வி பேச்சுக்கு முன் மெயின் உணவுக்கு முன் ஆரம்பிக்கும் ஸ்ராட்டர் போன்றது என்பதை இப்போ புரிந்துகொண்டேன்.

இப்போது புட்டு வாங்க வந்தவள் என்பதுபோல் அல்லாமல் ஐந்து நிமிடம் ஐயாவையே பார்க்க வந்ததுபோல் அவருடன் கதைத்தேன்.

படத்தை போனில் சூம்பண்ணி மணிக்கணக்கில் பார்த்தாலும் தெரியாத ஒரு பூரிப்பை அவர் முகத்தில் கண்டேன்.

பிள்ளை இன்று முழுக்க இதில் இருக்கிறேன். 12 மணிக்கே இங்கு வந்து ஏதும் வேண்டி சாப்பிட்டுவிட்டு இருப்பேன். பலரோடும் கதைக்க தொடங்குவேன் எவரும் காது கொடுக்க மாட்டார்கள். பிள்ளை நீ மட்டும்தான் நிண்டு கதைத்தாய். என் தாய் போல நீ அம்மா என்றார்.

நான் ஐயா உங்களிடம் போன் இருந்தால் தாருங்கள் நான் தினமும் ஒரு பத்து நிமிடம் என்றாலும் கதைக்கிறேன் என்றேன்.
பிள்ளை எனக்கு போனிலை கதைக்கிறதிலை இஸ்டம் இல்லை. காதும் பெரிதாக கேட்காது என்றார்.

சரி ஐயா இனி சுடச் சுட புட்டு என்ன
ஆறின புட்டு என்றாலும் இனி இந்தகடைக்கே வருகிறேன்.

வரும்போது எல்லாம் கதைக்கிறேன் என்று சொல்லிவிட்டு வாங்கின புட்டை எடுத்து சென்று தனிமையில் இருக்கும் வயதான அந்த அம்மாவிடம் கொடுத்தேன்.

அம்மா புட்டு சுடச் சுடத்தான் வாங்கினேன் ஆனால் கொஞ்சம் ஆறிப்போச்சு என்றேன்.

பிள்ளை உண்மையைச் சொன்னால் கோவிப்பியா. இந்தப்புட்டு நான் நாளைக்கு காலமைதான் சாப்பிடுவேன், ஆனால் உன்னை ஒரு முறை மாலையில் பார்த்தால்தான் எனக்கு இரவு நித்திரையே வரும் என்றா.
நாலு வார்த்தை நின்று நிதானமாக நேருக்கு நேர் நின்று வயதானவர்களுடன் பேசினால் எவ்வளவு மகிழ்ச்சி. நீங்கள் பேசவே வேண்டாம், அவர்கள் பேசுவதைக் கேட்டாலே போதும் அவர்கள் அடையும் ஆனந்தம் சொல்லமுடியாது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *