கண்ணீர் வரும் நினைவுகள்!இது ஊர் நினைவுகளில் ஒன்று.!
பொன்.புத்திசிகாமணி,யேர்மனி.
புலம்பெயர்ந்து வாழும் ஒவ்வொருவருக்கும் அடிக்கடி ஊர் நினைவுகள் வந்து போகும்.சில நினைவுகள் இன்பத்தையும்,சில நினைவுகள் கவலையையும் தரும். கடந்த கால கவலைதரும் சம்பவங்கள் மனதில் நிலைக்க வழியில்லை.அவை கடந்து போனவை. சில உறவுகளின் இழப்புகள் நினைக்கும் தோறும் வேதனை தருபவை. சுமைகளைத் தவிர்த்து சந்தோசத்தைத் தரும் நிகழ்வை இந்த பகிர்வின் மூலம் தருவதற்கு முனைகிறேன்.
எங்கள் ஊர் மழைகாலத்தில் மகிழ்ச்சியைத் தரும்.சுகமான வசந்த காலம் .இப்போது நினைத்தாலும் மனதிற்கு இதமாக இருக்கும். சில உறவுகள் அவர்கள் தந்த உணவுகள், அதன் சுவைகள், நினைக்கும்தோறும், நாவில் எச்சிலை ஊற வைக்கும். தெய்வானை மாமியின், கோதுமை மா புட்டும், காரமான செத்தல்மிளகாய் தேங்காய்ச் சம்பலும். என்றைக்கும் என்னை விட்டு நீங்காது. இதன் சுவையை வாசகர்களுக்கும் சுவைக்கக் கொடுக்க வேண்டும் என்கிற பொது நல நோக்கோடு இந்தப்பதிவைத் தருகிறேன்.
இதனை பிரசுரிக்கும்,”வெற்றிமணி “க்கு எனது நன்றிகள். சுவைமிகுந்த இந்தச் செய்தி “வெற்றிமணியின் 350 வது இதழில் வெளியாகி எனக்கும் சுவையை அதிகரித்திருக்கிறது. நெடுங்கால வரலாற்றில் என்றும் புதிய வடிவத்தில் தன்னை வளர்த்துக்கொள்ளும் “வெற்றிமணி”க்கு இவ்வேளை எனது வாழ்த்துகள்.
நாங்கள் ஊரில் எப்போதும் அந்த இடத்தில் தான் கிளித்தட்டு விளையாடுவோம்.பக்கத்தில் செல்வபுரம் செல்லும் கிரவல் பாதை. அதற்கும் அப்பால் நாலைந்து வீடுகள். அந்த வீட்டைச் சேர்ந்தவர்கள் தான்,எங்கள் தீவிர ரசிகர்கள். கொஞ்சம் தள்ளி மேற்குப் பக்கமாக எங்கள் ஊர்க்கோவில். கொஞ்சம் மேட்டில்தான் எங்கள் கிளித்தட்டு மைதானம். சற்று உயரமானது. இறக்கத்தில் பரந்தன்,புதுக்குடியிருப்பு பாதை.மேற்காக நந்திக்கடலையும்,வடக்காற்றையும் பிரித்து நடுவாக செல்கிறது.வடக்காறு என்றுமே வற்றுவதில்லை. இந்த நீர்நிலைகளில் இருந்து வரும் சீதளக் காற்று மாலை நேரத்தில் இதமாக இருக்கும்.
அன்றும் நாம் விளையாடிக் கொண்டிருக்கும்போது தெய்வானை மாமி அங்கு வந்தா. எங்களை அழைத்த மாமி “தம்பியளா எனக்கு நீங்கள் எனக்கொரு உதவிசெய்ய வேணும்.என்ன மாமி என்ன உதவி என்று நான் தான் கேட்டேன்.நாளை காலை என்ர காணிக்கை புதுக்கொட்டில் ஒன்று கட்டியிருக்கிறன்,அந்த கொட்டிலை ஒருக்கா மேய்ஞ்சு தாறியளோ !என்று கெஞ்சிக் கேட்டா.அவரிடம் இருந்து வந்த வார்த்தைகளால் மறுப்புச் சொல்ல முடியவில்லை.அதுக்கென்ன மாமி நாங்கள் வாறோம்.”கூலி இல்லையையா ,எனக்கு அந்த அளவிற்கு வசதியில்லை நல்ல சாப்பாடு வேணுமென்றால் தாறேன்”எங்களுக்கு ஒன்றும் தரவேண்டாம் மாமி நாங்கள் வாறம் என்று கூறினோம்.
தெய்வானை மாமிக்கு இப்ப 75 வயதிற்கு மேல் இருக்கும். இரண்டு பிள்ளைகள். ஆணொன்று பெண்ணொன்று.பிள்ளைகள் சின்ன வயதாக இருந்த போதே கணவர் இறந்து போனார்.
பிள்ளைகளை வளர்ப்பதற்கு அவர் பட்ட கஸ்ரம் கொஞ்ச நஞ்சமில்லை. அவர்களும் ,பிள்ளை குட்டிகள் குடும்பம் ,என்று தங்கள் பாடு.சிலகாலம் மகனுடனும்,சிலகாலம் மகளுடனும் இருந்து பார்த்தார். ஒத்து வரவில்லை.இருந்த காணிபூமிகளை பங்கிட்டுக் கொடுத்தபின் இந்த வேறுபாடு தெரிஞ்சிது. இந்தக் காணித்துண்டை வைச்சிருந்த படியால் தனக்கென்று ஒரு குடிலைக்கட்டி வாழ முடிவு செய்தார்.அதையும் எழுதித் தரும்படி மகன் பெரிய பாடு.ஆனால் அதற்கு கிழவி ஒத்துக் கொள்ளவில்லை.அதன் பலன் ,தாய் என்றும் பாராமல் வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டான்.
மறுநாள் காலையில் நாங்கள் எல்லோரும் அங்கு போயிருந்தோம்.சின்னப்பாவும் அங்கு வந்திருந்தார்.அவர் அனுபவசாலி.அவரது வழிகாட்டலில் நாங்கள் உதவிசெய்ய வேண்டும்.
இந்த நிலம் எங்களுக்கு பரீட்சையமானது தான். நல்ல வெண்மணல் பரப்பு. கிழக்குப் பக்கம் ஓங்கி வளர்ந்திருக்கும் மாட்டு வாகை மரங்கள்.மேற்குப் பக்கம் வரிசையாய் பனை மரங்கள். இந்த இடத்தில் தான் நாங்கள் குடிசை கட்டி விளையாடுவோம். மழைகாலத்தில் சில இடங்களில் நிலம் நனைந்து பள்ளங்களில் நீர் நிறைந்து காணப்படும். ஆழமான பகுதி நீலமாகத் தெளிவாகத் தெரியும். அது எங்களை நீந்தி விளையாட அழைக்கும். இன்று தெய்வானை மாமிக்காக வீடுகட்ட வந்திருக்கிறோம்.
காணி அமைந்திருக்கும் அழகான, இந்த இடம்.வடக்குப்பக்கம் மீனாட்சி அக்காவின் ஆத்தியாந்தோட்டம்.நிறைய தென்னை மரங்கள் காய்ச்சுத் தொங்கின. இந்தத் தோட்டத்தில் ஓலைவாங்கி வடக்காற்றில் ஊறப்போட்டு கிடுகு பின்னியதாக மாமி சொன்னா. உழைப்பால் உரமேறிய தேகம் அவருடையது.யாருக்கும் தீங்கு நினைக்காத நல்ல மனம். அதனால் ஊரவருக்கு அவரைப் பிடிக்கும்.எங்களையும் சேர்த்துத்தான். இங்கேதான் தெயவானை மாமி குடில் போடுகின்றா.பொறியியலாளர் சின்னப்பா தான்.அவர் ஒரு அனுபவ சாலி. நாங்கள் அவருக்கு உதவியாளர்கள்.மேலே மூன்று பேர் கிடுகை வாங்கி வேய. இரண்டு பேர் கிடுகை கீழே நின்று எடுத்துக் கொடுக்க வேணும். வேய்தல் ஒரு பக்கம் வெகு விரைவாகச் சென்றது.
பக்கத்தில் நின்ற வேப்பமர நிழலில் தெய்வானை மாமி மதிய நேர சாப்பாட்டைத் தயாரித்துக் கொண்டிருந்தா. பக்கத்தில் நின்ற எங்களுக்கு வாசம் மூக்கைத் துளைத்தது. இதற்கென்று இழைத்த புதுக்கடகத்தில் பக்குவமாய் புட்டை அடுக்கி வைத்தார். மேல் நின்று பார்க்க தங்க நிறத்தில் நேர்த்தியாக அழகாக இருந்தது. குழைத்த மாவிற்கு இடையில் போடுகின்ற இளம் தேங்காய்ப்பூ அடுப்பில் வேகும்போது அந்த ஏரியாவே மணத்தது. எங்களுக்கு எப்படி இருந்திருக்கும். எப்போது சாப்பிடுவோம் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது.இரண்டு பக்கமும் வேய்ந்து முடிய.கொட்டிலின் உள்ளே மாமி ஏற்கனவே பின்னி வைச்சிருந்த பன்னாங்கை விரிச்சு எங்களை அமர வைச்சார்.
வரிசையாய் இருக்கவிட்டு வாழை இலையைப் பரப்பி புட்டுக்கடகத்தை தூக்கி வைச்சார்.காற்றோடு கலந்து வந்த புட்டு வாசம் பக்கத்தில் இருந்து எச்சில் ஊற வைத்தது. ஒரு பேசனில் செத்தல் மிளகாய் சம்பல்.கரும் சிகப்பில் காணப்பட்டது. வாயில வைச்சால் கொண்டெழுப்பும் அவ்வளவு உறைப்பு.அதற்குள் மாசிக்கருவாடு போட்டிருந்தா. எவ்வளவு புட்டு எடுத்துச் சாப்பிட்டேன் என்று எனக்குத் தெரியாது. நான் மாத்திரமல்ல மற்றவர்களும் தான்.போய்க் கொண்டே இருந்தது.அவ்வளவு சுவை.உணவின் சுவை அதனைத் தயாரிக்கும் கைப்பக்குவத்தைப் பொறுத்தது என்று சொல்லுவார்கள். அது உண்மைதான் போலும். எங்கள் ஊர் கோதுமை மாவுக்கு இவ்வளவு ருசி இருக்குமா? என்ன! அவ அன்போடு பரிமாறிய அந்தப்பக்குவமா? என்ன!மாமியின் கையை பிடித்து முத்தமிட்டேன். குழைத்த புட்டு நேர்த்தியாக இருந்தது. எல்லாம் ஒரே அளவில்,இதுவும் ஒரு கலையே. தெய்வானை மாமி வயசில் முதிர்ந்தவர்தான் அழகானவர்,”கந்தையானாலும் கசக்கிக் கட்டு, கூழானாலும் குளித்துக் குடி” என்பதற்கேற்ப. அவ்வளவு சுத்தமானவர். வசிக்கும் வீடு சட்டி பானை அனைத்திலும் தான். நான் ,நாட்டைவிட்டு வெளியில் வந்த பின்பு அம்மா எழுதும் புதினங்களில் தெய்வானை மாமியைப் பற்றியும் இருக்கும். நானும் ஒவ்வோரு கடிதத்திலும் கேட்டு எழுதுவேன்.
ஒருநாள் வந்த கடிதம் அப்படியே என்னை உட்கார வைத்தது. தம்பி உன்ர தெய்வானை மாமி போய்ச் சேந்திற்றா தம்பி.கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. மனக்கண்ணில் என்றும் தெய்வானை மாமி.சுவையான அப்பம் சுட்டபடி,நல்ல தோசை சுட்டபடி வெள்ளை சேலை கட்டியிருக்கும் வெள்ளை மனம் கொண்ட அழகான அந்தக் கிழவி எங்கள் மனதில் என்றும் வாழுவாள். சில பாத்திரங்கள் எங்களை விட்டு மறையாது.இன்று தெய்வானை மாமியில்லை.ஆனால் இத்தனை ஆண்டுகள் கழித்தும் அந்தச்சுவை இன்னும் தொண்டைக்குள் நிற்கிறது.
![]()
