அவள் ‘இருக்கின்றாள்’ என்பதே எனக்கின்பம்!
அன்பும் கோபமும் மனிதப் பண்புகள்
மனத்தையுடையவன் மனிதன். அந்த மனிதனில் ஆட்சி செய்யும் மனம் ஒரு குரங்கு. ஒரு மனிதனிடம் அன்பும் உண்டு. ஆத்திரமும் உண்டு. இரண்டும் கலந்த வாழ்வில் அன்பே உருவான மனிதனிடம் பெட்டிப்பாம்பாக அடங்கியிருக்கும் ஆத்திரம் சந்தர்ப்பம் சூழ்நிலைக்கேற்ப வெளிவரும். அதில் அன்பை வளர்க்கவும், ஆத்திரத்தை அடக்கவுமே உலக இலக்கியங்கள் போதிக்கின்றன.
‘‘அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு‘‘
என்பது திருக்குறள். உயிருள்ள உடலென்றால், அங்கு அன்பு இருக்கவேண்டும். இல்லையென்றால், அவனுடைய உடல் எலும்பும் தோலும் போர்த்தப்பட்ட ஒரு ரோபோவே என்னும் வள்ளுவரின் வாக்கின் பிரகாரம் மனிதனுக்கு மாத்திரமன்றி அனைத்து ஜீவராசிகளுக்கும் அன்பு என்னும் இந்தப் பண்பு மேலோங்கி இருக்கின்றது.
அன்பின் மூலம் அர்ப்பணிப்பு, தியாகம், பொறுப்புணர்ச்சி, ஆகிய மனிதப்பண்புகள் மேலோங்குகின்றன. அன்பான ஆணும் பெண்ணும் கூடி வாழ்வதினாலேயே பாலுறவின் முழுமையான பயனையும் நுண்சுவையினை அடைய முடியும். ‘‘மலரினும் மெல்லிய காமம். சிலர் அதன் செவ்வி தலைப்படுவர்‘‘ சிலரே அதன் பயனை அடைவார்கள். மற்றையவர்கள் ஆத்திரக்காரனுக்குப் புத்தி மத்திமம் என்பதால் அன்பின் வலிமையை இழந்து விடுகின்றார்கள்.;
அன்பின் வலிமையை நோக்கும் போது உதாரணமாக, பறவை இனங்களிலே கேரளாப் பகுதிகளில் வாழுகின்ற இருவாச்சிப் பறவையின் அன்பின் இறுக்கத்தைப் பார்ப்போம். இப்பறவை இனமானது மேலான இல்லறவாழ்வில் உருவான ஒரு கருவை வளர்;த்து அன்போடு வெளியுலகுக்கு கொண்டுவருகின்றன. ஆணும் பெண்ணும் கூடி கருக்கட்டிய தாய்ப்பறவைக்கு முட்டையிடும் காலம் வரும்போது, கூடற்ற இப்பறவை இனம் பொருத்தமான மரப்பொந்தைத் தேடி எடுக்கும். அங்கு தாய்ப்பறவை நுழைந்து கொள்ள தந்தைப் பறவையானது களிபோன்ற மணலைக் கொண்டு வந்து அந்த மரப் பொந்தைத் தன்னுடைய அலகு செல்லும் அளவு வழியை மட்டும் வைத்து அடைத்துவிடும். உள்ளே எவ்விதமான பாம்புகளும் உள்நுழையாமல் பாதுகாத்துவிடும். தாய்ப்பறவையானது உள்ளே குளிர்மையாக வாழ்ந்து கொண்டு தன்னுடைய அலகால் கொத்திக் கொத்தித் தன்னுடைய இறகுகள் அத்தனையையும் பிய்த்து மெத்தைபோல் அமைத்து அதன்மேல் அமர்ந்து கொண்டு முட்டையை அடைகாத்துக் குஞ்சு பொரிக்கும். இக்காலங்களில் தாயின் குஞ்சின் அழுக்குகளை எல்லாம் தன்னுடைய அலகால் தந்தைப் பறவை துப்பரவு செய்து வெளியே எடுத்துவிடுவது மட்டுமன்றி வெளியே இருந்து புழு, பூச்சிகள் கனிகள் போன்ற உணவு வகைகளைத் தாய்க்கும் குஞ்சிக்கும் அன்போடு வழங்கிக் கொண்டிருக்கும். இறகு முளைத்த குஞ்சு பொந்தின் பாதையை உடைத்து வெளியே வந்து பறந்து போகத் தந்தைப் பறவையானது அத்திப்பழம் ஒன்றைத் தாய்ப்பறவைக்கு வழங்கித் தன் இணையை அழைத்துக் கொண்டு அங்கிருந்து பறந்து செல்லும்;. இந்த அன்பின் இறுக்கம் வியக்க வைக்கின்றது.
இதேபோல் மருத்துவமனையில் காலுடைந்து சிகிச்சை பெற்று வந்த ஒரு கன்றுக் குட்டிக்குத் தாய்ப்பசு காலையும் மாலையும் இருவேளையும் தனியாக நடந்து வந்து பால் கொடுத்துவிட்டுப் போகின்ற தாய்ப்பாசத்தை எண்ணி வியந்து போகின்றோம். இவ்வாறு அன்பு உணர்வு உயிரினங்களில் புதைந்து கிடக்கின்றது.
இந்த அன்பு வயது கடந்தும் வாழும்
‘‘புதுமலர் அல்ல காய்ந்த
புற்கட்டே அவள் உடம்பு!
சதிராடும் நடையாள் அல்லள்
தள்ளாடி விழும் மூதாட்டி
மதியல்ல முகம் அவட்கு
வறள்நிலம்! குழிகள் கண்கள்!
எது எனக்கின்பம் நல்கும்?
‘இருக்கின்றாள்’ என்ப தொன்றே!
என்று பாரதிதாசன் மூதாட்டியானாலும், தோற்றப் பொலிவு குன்றினாலும், அவள் என்னோடு இருக்க வேண்டும் என்பதே அன்பின் வெளிப்பாடு.
இந்த அன்பான இதயத்தை உடைத்தெறியும் ஆயுதமே ஆத்திரம். 60 கடந்தால் நாய்க் குணம் என்பார்கள். அந்த நாய்க்குணத்தாலேயே முதியவர்கள் பலர் விவாகரத்துப் பெற்றிருக்கின்றார்கள் என்பதை அறியக்கூடியதாக இருக்கின்றது. புலம்பெயர்வில் தனிமனிதன் வயது கடந்தாலும் துணையின்றி வாழ வாய்ப்புக்களை அந்நாடுகள் செய்து கொடுத்திருக்கின்றன. அதனால், சுடுதண்ணீரைக் காலில் ஊற்றியதுபோலத் துள்ளுபவர்களைத் தாங்க எவ்வளவு காலம் குளிர் தண்ணீராக வாழ முடியும் என்று முடிவெடுக்கின்ற பாங்கே விவாகரத்து. சாம்பல் பூத்த ஆத்திரத்தைப் போக்க அன்புதான் நீரென்பதை உணர்ந்தால் வாழ்க்கை இனிக்கும்.
அதாவது உண்மையான அன்பு உள்ள மனிதர்களிடம் இறுக்கமாகக் கோபத்தை பிடித்திருந்தாலும் அதைத் தளர்த்திவிடுவதுதான் சிறப்பு. அதனாலே எந்தக் கேடும் வரப்போவதில்லை.
இதைத்தான்
‘‘உன்னைப் பார்த்ததும் உன்மீதான கோபம்
இறுகப் பிடித்த உள்ளங்கையில் இருந்த
குறுமணல் போல நழுவுகிறது‘‘
என்று அப்துல் ரக்மான் எழுதியுள்ளார். சிலருக்குக் கோபம் புஷ் வானம் போல தோன்றி உடனே மறைந்து விடும். தோன்றும் போது தள்ளி நின்றால், மறையும் போது தண்மையாக உணரலாம். இதைத்தான் ஊடல் என்பார்கள். அன்பு கணவன் மனைவி, காதலன் காதலி, நண்பன் நண்பி, சகோதரன் சகோதரி. தோழன் தோழி என்று உறவின் இணைப்பிலே இருப்பதுபோல கோபமும் உண்டு. ஒருவர் கூறுவதை மற்றவர் செவிடமடுத்தாலே, கூறுவதைக் கிரகித்தாலே கோபத்தை விரட்டிவிடலாம். அதனால், மனமென்னும் குரங்கைத் தாவவிடாமல், தப்பியோட விடாமல் எம்முடைய கைக்குள்ளே வைத்துக் கொள்ள வேண்டும்.
அப்போது அன்புதான் எந்நாளும் வெல்லும்.
![]()
