‘முதலமைச்சர் கதிரை’ஓய்வெடுக்கும் இடமல்ல

0
vm301

இலங்கையினுடைய அரசியல் களத்தை எப்பொழுதும் ஒரு பரபரப்பான கொதிநிலையில் வைத்திருக்கவேண்டுமென்பதில் அரசியல் தலைவர்கள் தெளிவாக இருப்பது இன்று நேற்றல்ல கடந்த 70 ஆண்டுகளாக தொடர்ந்தவண்ணமே உள்ளது. 2 கோடி மக்களை கொண்ட ஒரு சிறிய தீவு, ஒரு சிறிய தொகையினரான அரசியல்வாதிகளை நம்பியே இருக்கிறது என்ற எழுதப்படாத வரலாறு தொடர்ந்தவண்ணமே உள்ளது. அதனது வடிவம் காலத்துக்கு காலம் மாறினாலும் அதனுடைய உள்நோக்கம் ஒன்றாகவே இருக்கிறது.மக்கள் தங்களது வலைக்குள் சுழன்றுகொண்டே இருக்கவேண்டுமென்பதே அந்த உள்நோக்கம். அதன் ஒரு வடிவமே தற்போதைய பேசுபொருளாக மாறியிருக்கும் மாகாணசபை தேர்தல் தொடர்பான கதையும் தேர்தல் நடைபெற்றால் வடமாகாண சபைக்கு யாரை முதலமைச்சராக நிறுத்தவேண்டுமென்ற கதையும்.

இலங்கைத்தீவில் வாழ்கின்ற சமூகங்களில் ஈழத்தமிழர்களது வரலாறு சற்று வேறுபட்டதொன்று. காரணம் அவர்கள் நீண்டகாலமாக தங்களது தாயக மீட்சிக்காகவும் உரிமைகளுக்காகவும் போராடிவரும் ஒரு இனம். அந்த போராட்டத்திற்காக பல ஆயிரம் உயிர்களை தியாகம் செய்திருக்கிறார்கள்; பல இலட்சம் சொத்துக்களை இழந்திருக்கிறார்கள்; பல இலட்சம் உறவுகள் புலம்பெயர் தேசங்களுக்கு தஞ்சம் கோரி சென்றிருக்கிறார்கள்; தங்களது கலை -கலாசார-பண்பாட்டை காப்பாற்றுவதற்காக இந்த நிமிடம் வரை போராடிக்கொண்டிருக்கிறார்கள்; பல கல்விமான்களையும் அறிவுஜீவிகளையும் புத்திஜீவிகளையும் இழந்திருக்கிறார்கள். ஆகவே ஈழத்தமிழரது அரசியல் பரப்பு என்பது ஏனைய இனங்களை விட சற்று வேறுபட்டது மாத்திரமல்ல, அவர்களது போராட்ட தளம் இன்றும் கொதிநிலையிலேயே இருந்துவருகிறது.

ஆகவே அப்படிப்பட்ட ஒரு இனத்தினுடைய அரசியல் தளம் என்பது ஏனைய சமூகங்களுடைய அரசியல் தளம் போன்று இருக்கமுடியாது. அதேபோல் அவர்களது அரசியல் களத்தை ஒரு விளையாட்டாக எடுத்துக்கொண்டு செல்ல முயற்சிப்பதும் ஒவ்வாத செயற்பாடாகும்.யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னரான கடந்த 16 வருடங்கள் ஈழத்தமிழர்கள் சரியான ஒரு தலைமையின் கீழ் வாழவில்லை என்பது கண்கூடு.2009 இற்கு பின்னர் உருவான தலைவர்கள் அனைவரும் பேரினவாத சிங்கள அரசுகளின் நிகழ்ச்சி நிரலை வலிமைப்படுத்தும் தலைமைகளாகவும் அவர்களது நிகழ்ச்சி நிரலுக்கு அடிபணிந்து செல்வோராகவுமே இருந்துவந்தனர். குறிப்பாக சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு ஈழத்தமிழரின் அரசியலை 14 வருடங்களாக சிங்கள பேரினவாதிகளிடம் அடகுவைத்தே அரசியல் செய்தார்கள். அதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. அதனால் அவர்கள் பெற்றுக்கொண்ட நன்மைகள் ஏராளம். ஆனால், ஈழத்தமிழர்கள்?

இன்று ஈழத்தமிழர்களுக்கு இருக்கின்ற ஒரே ஆறுதல் மாகாண சபை முறை மாத்திரமே. அதனையும் இல்லாமலாக்குவதற்கு பேரினவாத சிங்கள தலைமைகள் பெரும் பிரயத்தனம் எடுத்து வருகிறார்கள்.இலங்கை-இந்திய ஒப்பந்தமான 13 ஆவது திருத்த சட்டமானது 1987 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட காலத்திலிருந்து அது ஒரு வேண்டா வெறுப்பான விவகாரமாகவே சிங்கள பேரினவாதிகளாலும் தமிழர்களில் ஒரு சிலரால் பார்க்கப்பட்டுவந்தது .ஆனால்,நடுத்தெருவில் நிற்கும் ஈழத்தமிழருக்கு இன்று இருக்கின்ற ஒரே ஒரு ஆறுதலான விடயம் இந்த மாகாண சபை முறை மாத்திரமே. அதனை பலப்படுத்துவது என்பது இந்த நாட்டில் முடியாத காரியமாக இருந்தாலும்,இருக்கின்ற சொற்ப அதிகாரங்களையாவது பலமாக வைத்திருக்கவேண்டிய தேவை ஈழத்தமிழர்களுக்கு உரிய கடமையாகும்.அந்த அடிப்படையில் வைத்து பார்த்தால் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு தொடர்ந்தும் தமிழ் தலைமைகள் அரசுக்கும் இந்தியாவுக்கும் அழுத்தம் கொடுத்தவண்ணம் இருப்பது அவசியமாகும்.இன்று சர்வதேச அரங்கில் ஈழத்தமிழர்கள் தொடர்பான விவகாரம் ஒரு ஏமாற்று நாடகம் என்பது நிரூபணமாகியிருக்கும் சூழ்நிலையில், இலங்கைக்குள் எங்களால் என்ன செய்ய முடியும்?என்பது தொடர்பில் ஈழத்தமிழர்கள் சிந்திப்பதே காலத்தின் கடமையாகும்.

இந்நிலையில் அடுத்தவருடம் மாகாண சபை தேர்தல் நடைபெறலாம் என்ற பேச்சுக்கள் அரசல் புரசலாக இலங்கையின் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டுவரும் நிலையில் வடமாகாண முதலமைச்சருக்கான போட்டித்தளம் சூடுபிடித்திருக்கிறது.இன அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்காது,தேர்தல் அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தமிழர் தாயக அரசியலில் இது ஒரு பொருட்டாக இல்லாவிட்டாலும் எங்களுக்கு (தமிழர்களுக்கு) இருக்கின்ற ஒரே ஒரு தளத்தை சரியவர்களிடம் கொடுக்கவேண்டிய பொறுப்பு ஈழத்தமிழர்களுடைய கைகளிலேயே உள்ளது. ‘முதலமைச்சர் கதிரை’ என்பது ஓய்வெடுக்கும் காலத்தில் நிம்மதியாக ஓய்வெடுக்கும் இடமல்ல என்பதை முதலமைச்சர் போட்டியில் களமிறங்க போராடும் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.அதுவும் பெரும் இன்னல்களை கண்ட ஒரு இனம்-பெரும் சுமைகளை சுமந்துகொண்டு வாழும் ஒரு இனம்-பல தேவைகளுக்காக காத்துக்கொண்டிருக்கும் இனம்-மண்ணுக்காகவும் உரிமைக்காகவும் போராடிக்கொண்டிருக்கும் ஒரு இனத்துக்கு தலைமை தாங்க வர துடிப்போர் தாங்கள் இந்த இனத்துக்கு என்ன செய்தோம்?;வந்தால் என்ன செய்வோம் என்பதை சற்று நிதானமாக மனசாட்சியை கேட்பது அவசியமாகும்.

முதலமைச்சர் பதவி என்பது இலங்கையை பொறுத்தவரை ஒரு பெரும் பதவியோ அல்லது பெரும் கொடையோ அல்ல. ஆனால், தமிழர் தாயகத்துக்கு அந்த பதவி என்பது பெரும் சுமைகளை கொண்ட ஒரு பதவியாகும்.அந்த பதவி ஒரு சமூகத்தின் விடியலை-உரிமைகளை-அபிவிருத்தியை-சுமக்கும் ஒரு கனதியான பதவியாகும்.அந்த கதிரையில் வந்து இருப்பவர் நீண்டகால போராட்டத்தால் துவண்டு போயிருக்கும் ஒரு இனத்தின் பிரதிநிதியாக இருப்பது அவசியமாகும்.இப்படித்தான் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபை தேர்தலில் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை கொண்டுவந்து தமிழர்கள் அமர வைத்தார்கள். ஆனால், அவரால் அந்த சபையை ஒரு கனதியான சபையாக நடத்த முடியாமல் போனது ஈழத்தமிழர்களின் இருண்ட வரலாறாகும். நீண்டகாலமாக தமது மண்ணுக்காகவும் உரிமைக்காகவும் பல உயிர்களை தியாகம் செய்த ஒரு இனத்துக்கு தலைமை தாங்குபவர் அல்லது அந்த இனத்தின் முக்கியமான கதிரையில் அமர்பவர் ஒரு மகாத்மா காந்தி போன்று நெல்சன் மண்டேலா போன்று இருக்கவேண்டுமே தவிர ஓய்வு எடுக்கும் ஒரு கதிரையாக அதனை தலைக்கிரீடமாக வைத்துக்கொண்டு இருக்கமுடியாது.

எனவே,எவரும் தேர்தல் அரசியலில் போட்டியிடும் உரிமை இருக்கிறது என்றாலும்,யாரை அந்த கதிரையில் அமரவைக்கவேண்டும்;அதற்கு யார் தகுதியானவர் என்பதை ஒரு அறிவார்ந்த சமூகமாக சிந்திக்கவேண்டிய கடமை ஈழத்தமிழர்களுக்கு இருக்கிறது.அந்த வரலாற்று கடமையை மீண்டும் மீண்டும் செய்ய தவறும் பட்சத்தில் ஈழத்தமிழினம் தன்னுடைய போராட்டத்தை இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு இழுத்து செல்லவேண்டிய சூழலை தாங்களாகவே ஏற்படுத்திக்கொள்வார்கள் என்பதை மனதில் நிறுத்திக்கொண்டு ஒரு படித்த-அறிவார்ந்த சமூகமாக வரும் தேர்தல்களையும் செயற்பாடுகளையும் முன்னெடுப்பதற்கு தமிழ் மக்கள் தயாராகவேண்டும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *