படியுங்கள், சிந்தியுங்கள், கேள்வி கேளுங்கள்.அதுவே சமூக மாற்றத்தின் முதல் எழுத்து.
-கண்மணி-
மலையகத்தில் பிறந்த ஒரு குழந்தை, உலகின் எந்த மூலையில் சென்றாலும், அவன் பெயருக்கு முன்னால் ஒரு சொல்லே ஒட்டிக்கொடுக்கப்படுகிறது “தேயிலை தொழிலாளி சமூகத்தைச் சேர்ந்தவன்”. அந்த ஒரு சொல்லே அவன் கல்வி, பொருளாதாரம், மரியாதை, அடையாளம், கனவுகள் என அனைத்தையும் கட்டிவைக்கும் சங்கிலியாக மாறிவிட்டது.
ஒரு இனத்தைத் தலைமுறை தலைமுறையாக ஒரே தொழிலில் அடைத்து வைக்கும் பணி என்பது வெறும் தொழில் சார்ந்த கட்டுப்பாடு அல்ல அது மனவளக் கட்டுப்பாடும் ஆகும். “நீ இதைத்தான் செய்யவேண்டும்” என்ற திணிப்பிலிருந்து “நான் இதைத்தான் செய்யவேண்டும்” என்ற உட்பார்வை உருவாகும்போது, அடிமைத்தனம் நிலைபெறும். மலையகத் தமிழரின் வரலாறு இதன் சாட்சி. நூற்றாண்டு பழமையான தேயிலை வாசனைக்குள் மனித உழைப்பின் வியர்வையும் துன்பங்களும் கலந்து கிடக்கின்றன. ஆனால், அவர்கள் இன்னும் “வெறும் தேயிலை தொழிலாளர்கள்” என்ற அடையாளத்திலிருந்து முழுமையாக விடுபடவில்லை.தேயிலை என்பது உலக பொருளாதாரத்தின் ஒரு முக்கியப் பொருள். ஆனால் மலையகத்துக்கு அது பொருளாதார வளர்ச்சியின் அடையாளமாக அல்ல, அடிமைத்தனத்தின் அடையாளமாகவே பதிந்திருக்கிறது.
தற்போதைய கணக்கெடுப்புகளின்படி சுமார் ஒரு மில்லியன் மலையகத் தமிழர்கள் இலங்கையில் உள்ளனர். ஆனால், இதே சமூகத்தின் ஒரு பகுதி சுமார் 2 லட்சம் பேர் மட்டுமே இன்று தேயிலைத் தோட்டங்களில் முழுநேர தொழிலாளர்களாக உள்ளனர். இதன் பொருள் என்னவென்றால், பெரும்பாலானோர் தேயிலை தொழிலைத் தாண்டி தங்கள் வாழ்வாதாரத்தைக் காண ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் இன்னும் வெளிநாட்டு ஊடகங்கள், அரசியல் கட்சிகள், மற்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கூட “மலையகம் ஸ்ரீ தேயிலை தொழிலாளி” என்ற ஒரே வட்டத்தில் சிந்திக்கிறார்கள். இதன் பின்னணியில் இரண்டு முக்கிய நோக்கங்கள் உள்ளன:
தேயிலை வியாபாரத்தின் தொடர்ச்சி. மலையக அரசியலில் ஆட்சிக் களத்தை தக்கவைத்துக் கொள்ளும் முயற்சி. ஒரு சமூகத்தை “உழைக்கும் சமூகமாக” அடையாளப்படுத்துவது வெளிப்படையாக மரியாதையானதாகத் தோன்றினாலும், அதில் ஒரு மறைமுக தந்திரம் இருக்கிறது. உழைப்பை மட்டுமே மதிப்பிட்டு, அறிவை, கல்வியை, சுய சிந்தனையை புறக்கணிக்கச் செய்வது தான் அந்த தந்திரத்தின் நோக்கம்.
தோட்டங்களுக்குள் வசிக்கும் மக்கள் கல்வியையும் அடிப்படை வசதிகளையும் பெறும் வழியை தடுக்க வேண்டும் என்றால், அவர்கள் “இந்த சமூகத்தை விட்டுப் போகக் கூடாது” என்ற உள்நோக்கத்தை நெஞ்சுக்குள் விதைக்க வேண்டும். இதையே அரசியல்வாதிகளும் நிறுவனங்களும் நூற்றாண்டாகச் செய்து வருகின்றனர்.தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் குடும்பங்களுக்கு இலவச வீடு, சிறிய மருத்துவம், குறைந்த சம்பளம், மற்றும் வேலை உறுதி என்ற நாலு விஷயங்களை கொடுத்தால் போதும் அவர்கள் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கட்டுப்பாட்டில் இருக்கும். இதுவே “நவீன அடிமைத்தனம்” என்று அழைக்கப்பட வேண்டிய நிலை.
அரசியலும் கம்பெனிகளும் வேறுபட்டவைகளல்ல. இரண்டும் மக்கள் சிந்திக்கவிடாமல், கேள்வி கேட்கவிடாமல், சுயமாக வளர்வதைத் தடுக்கின்றன. சிந்திக்கத் தொடங்கினால், கல்வி பெற்றால், அரசியல் மாறிவிடும் என்பதை அவர்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள். மலையகத்தில் சாதி வேறுபாடு என்பது இந்தியாவில் இருந்து வந்த ஒரு பாரம்பரிய சுமை. தேயிலை தோட்டங்களோடு வந்தது ஒரு “சமூக வரைமுறை”. அதனை அரசியல் தன் நன்மைக்காகப் பயன்படுத்தியது. இன்றும் சில ஆலயங்களில், விழாக்களில், நகர நிகழ்வுகளில் “இந்தக் குழு மட்டும் பங்கேற்க வேண்டும்”, “சாமி தூக்குவதற்கு இந்த சாதி மட்டுமே உரிமை பெற்றது” என்ற நிலைகள் நிலவுகின்றன.ஒரு சாதி அமைப்பின் ஆட்சி வெளிப்பாடாக மாறும் போது, சமூக ஒற்றுமை உடைந்து போகிறது.அதுவே இன்னும் சில மலையக அரசியல்வாதிகளின் தந்திரம்.
பத்து வருடங்களுக்கு முன் ஒரு மலையக மாணவர் பத்திரிகையைக் காண, அல்லது ஒரு தொலைக்காட்சி விவாதத்தைப் பார்க்க, அல்லது இணையதளத்தைப் பயன்படுத்துவது அரிதாக இருந்தது. ஆனால் இன்று இணையம், மொபைல், சமூக ஊடகங்கள் மலையகத்தின் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்றுவிட்டன. இணையம் மக்களுக்கு சிந்தனை அளித்தது. “ஏன் நாங்கள் இன்னும் இதே நிலைமையில் இருக்கிறோம்?”, “எதற்காக எங்கள் ஊரில் நல்ல பாடசாலை கிடைக்கவில்லை?”, “எதற்காக எங்கள் உழைப்புக்கு ஏற்ற சம்பளம் கிடைக்கவில்லை?” என்ற கேள்விகள் எழத் தொடங்கின. இந்தக் கேள்விகளே மாற்றத்தின் தொடக்கம்.கல்வி என்பது வெறும் பாடம் அல்ல அது சிந்தனைக்கான கதவாகும். கல்வி பெற்ற இளைஞர்கள் இன்று ஆசியர்களாகவும், பொறியாளர்களாகவும், வக்கீலர்களாகவும், வியாபாரிகளாகவும், அரசு மற்றும் தனியார் துறை அதிகாரிகளாகவும் உருவாகியுள்ளனர்.
இவர்கள் தங்களைத் தாங்களாக உருவாக்கிக் கொண்டார்கள். அது நிகழ்ந்தது அவர்களே சமூக கட்டமைப்பிலிருந்து வெளியே வந்தபோது தான். இன்றைய மலையகத்தில் சுமார் ஐந்து லட்சம் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை தேயிலைத் தொழிலில் அல்லாத துறைகளில் இருந்து பெற்றுக்கொள்கிறார்கள். இது ஒரு பெரிய சமூக மாற்றம். வெறும் சம்பள தொழிலாளி நிலையை விட்டு, சுய தொழில், சிறு வியாபாரம், கைவினை, கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் அவர்கள் தங்கள் அடையாளத்தை உருவாக்கிக் கொண்டுள்ளனர்.
இது “மலையக எழுச்சி” என்று சொல்லக்கூடிய ஒரு மறைமுகப் புரட்சி.ஆனால் இன்னும் பல குடும்பங்கள் கல்வி பற்றாக்குறையால் அதிலிருந்து விலக முடியாமல் தேயிலை தொழிலில் சிக்கிக் கிடக்கின்றன. அவர்களுக்கு கல்வி மற்றும் தொழில்முனைவு ஆதரவு கிடைத்தால் மட்டுமே முழுமையான சமூக மாற்றம் சாத்தியம். மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கினால், பழைய அரசியல் சிந்தனைகள் தகர்க்கப்படும். அதுவே மலையக அரசியலில் இன்று நடக்கிறது. சமூக ஊடகங்கள், கல்வி, தகவல் பரிமாற்றம் ஆகியவை மக்கள் மத்தியில் புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளன. இன்றைய இளம் தலைமுறை சாதி, மதம், தோட்டம், ஊர் என்ற வரையறைகளைத் தாண்டி “நான் யார்?” என்ற அடிப்படை கேள்வியை எழுப்புகிறது.இந்த கேள்வி தான் எதிர்கால அரசியலை மாற்றப்போகிறது.
தேயிலை மலையகத்தின் அடையாளமாக இருக்கலாம், ஆனால் அது அதன் விதியல்ல. இன்று காலம் மாறிவிட்டது. மலையக மக்கள் இன்று சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்; அதுவே மிகப்பெரிய மாற்றத்தின் அறிகுறி. அரசு உண்மையாக கல்வி, அடிப்படை வசதிகள், மற்றும் சமமான பொருளாதார வாய்ப்புகளை வழங்கினால், மலையகத்தின் முகம் மாறிவிடும்.தேயிலை தோட்டம் நமக்கு உணவு கொடுத்திருக்கலாம், ஆனால் அதே சமயம் நம் கனவுகளை கட்டிப்போட்ட சங்கிலியும் அதுவே. அந்த சங்கிலியை உடைக்கும் சக்தி கல்வியில் உள்ளது.
![]()
