எண்ணுவது உயர்வு

0
vm339

காலப் பெருங்களத்தில் கணம் தோறும் மாறும் நிகழ்வுகளில் களி வரினும், கலி வரினும் எது வரினும் , காரணம் ஏதுமின்றி அன்பினைக் கைக்கொண்டால் இவாழ்வு எத்தனை இனிதெனவும் இலகு எனவும் கற்றுத் தந்த பாரதி , இப்புவிமிசை வாழும் மனிதர்க்கெல்லாம் பெரும் துணை. அதிலும் இடைவிடாது இயங்கி கொண்டிருக்கும் கலைஞர்களுக்கு பேசரும் தெய்வம்.

ஒரு கலைஞனின் சிறப்பு அவர்கள் படைப்பின் வழியே புலப்படும். செழிப்பான படைப்பிற்கு கற்பனை வளம் அவசியம். சிறந்த கற்பனையின் இருப்பிடம் தன்னை இழந்த நிலை. தன்னை இழக்கும் தன்மையை இயற்கை இலகுவில் தந்துவிடும். இயற்கையோடு கலந்தால் போதும் இவ்வுலகும் அதற்கப்பால் உள்ள அனைத்தும் அருகணையும். இயற்கையோடு எப்படியெல்லாம் உறவாடலாம் என்பதை பாரதியைத் தவிர வேறு யார் எமக்கு கற்றுத் தரமுடியும் ?

“காக்கை, குருவி எங்கள் ஜாதி — நீள்

கடலும் மலையும் எங்கள் கூட்டம் “

இவ்வாறு இயற்க்கையோடு கலந்து , கற்பனை வெள்ளத்தால் பிறந்த படைப்பினை தாங்கி நிற்க அடிப்படையானது உடலும் உள்ளமும்.

உடலினை உறுதி செய்’, ‘ஊண் மிக விரும்பு’, ‘ரூபம் செம்மை செய்’ என்று நம் உடலினை எவ்வாறு பேண வேண்டும் என்றும் புதிய ஆத்திச்சூடியில் அறிவுறுத்துகிறார்.

நசையறு மனம் கேட்டேன்; இன்று புதிதாய்ப்பிறந்தோம் என்று நீவிர் எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு: அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி; இன்பம் நிற்கும் மனமும்; நன்றை நாடு மனமும் என்று பலவாறும், பலவகையிலும் உள்ள உறுதியை மொழிகிறார்.

ஒரு கலைஞனின் உடலையும் உள்ளத்தையும் பதப்படுத்தும், பட்டைதீட்டும் மகா சிற்பியோ மருத்துவனோ பாரதி.

உடலும் உள்ளமும் வேண்டிய படி செல்லும் வரம் பெற்றால் , நித்தம் நவமெனச் சுடர் விடும் உயிர். உயிரினிடத்தினின்று வெளிப்படும் எந்தக் கலையும் , காண்போர் உயிரினைத் தீண்டும். நெகிழ் மகிழ்வு எய்தச் செய்யும். உன்னத நிலை பெற்ற உடல், உள்ளம், உயிர் இவை மூன்றும் முக்திக்கு யுக்தி.

ஆன்ம ஒளிக்கடல் மூழ்கித் திளைப்பவர்க்கு
அச்சமும் உண்டோடா? – மனமே!

ஆசையும், அவாவும், ஆணவமும், அடுத்தவனை வீழ்த்தும் கீழ்மையும், முரணும் , திருப்தியின்மையும் , எதிர்பார்ப்பும் உள்ள மனிதன், இயற்க்கையின் வரங்களை உணர போவதும் இல்லை , இறை தந்த அருளை பெறப்போவதும் இல்லை. அத்தகு கீழோர்க்கு அஞ்சி வாழ்வானோ எண்ணுவது உயர்வெனக் கொண்டவன்?

ஜாதிக் கொடுமைகள் வேண்டாம் என்று கோஷமிட்ட பாரதி மனித குலத்தினர்க்கு கீழோர் மேலோர் என்று இரு பிரிவுகள் வகுக்கிறார். நீதியுடன் இருந்து பிறர்க்கு உதவுவோர் மேலோர். மற்றைய எல்லோரும் கீழோர் .

“நீதி நெறியினின்று பிறர்க்கு உதவும் நேர்மையர் மேலவர் கீழவர் மற்றோர்”

தன்னை வென்று , பிரபஞ்ச சக்தியைப் போற்றி , செயல்கள் அனைத்தும் சக்தியின் லீலை என்று உணர்ந்து , அன்புருவாகி அனைவர்க்கும் உதவிடும் ஆன்மா, கீழோர்க்கு அஞ்சி நின்று வீழுமோ ?
சும்மா இரு, சொல் அற’ என்று அருணகிரிநாதர் இயம்பியது போல , தான் அற்ற நிலை பெற்றால் , தடுத்து நிற்பது தெய்வதமேனும் வெற்றி நிச்சயம்.
மாநிலம் பயனுற வாழ்வதற்கு தம் வாழ்வினை அர்ப்பணித்து வாழும் கலைஞர்கள் விண்ணை அளக்கும் ஒளி போல் மண்ணில் வாழ பாரதி மிகச் சிறந்த வழிகாட்டி.
கணந்தோறும் நவநவமாய் களிப்புத் தோன்றும்; கருதிடவும் சொல்லிடவும் எளிதோ? என்று உள்ளக் களியேறிக் கூத்தாடும் கலைஞன் தன்னையும் , இவ்வுலகையும் வென்று நிற்கவும் , எதுவரினும் உளச் சோர்வின்றி இடையின்றி இயங்கவும் , அறம் காக்கவும், அன்பு செய்யவும் பாரதி கற்றுத் தருகின்றான். குருவிற்கும் குருவாகின்றான். மந்திரச் சொற்களால் மாயை நீக்குகின்றான் , மாயம் செய்கின்றான்.

வியனுல கனைத்தையும் அமுதென நுகரும்
வேத வாழ்வினைக் கைப் பிடித்தோம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *