என் கண்மணி என் காதலி கதை சொல்கிறேன்.

0
vm340

இளமைக்காலம், கல்லூரியில், படித்தோம் என்பதை விட வாழ்ந்த காலம் அல்லவா அது.

ஐங்கரன் ஆதவன் என் இளமையின் வசந்தகால நினைவுகளுடன் ஒட்டிக் கொண்டவன்.

அவன் எனது வகுப்பு மாணவன் அல்ல, என்னை விட ஜூனியர். ஆனால் அவன்தான் என் நண்பன். அவன் தன் பெயரை எப்போதுமே ஐயங்கரன் என்று சொல்வதில்லை தன் தந்தை பெயருடன் இணைத்தே சொல்வான்.

காலத்துக்கு ஏற்ப தன்னை புதுப்பித்துக் கொள்வதால் அவனை எனக்குப் பிடிக்கும் . எவருக்கும் புதுமை மீது பற்று உடன் வந்திடாது. வெறுப்பார்கள், பழசுகளுடன் ஒப்பிட்டு ஒப்பிட்டு, கதைப்பார்கள். சில சமயம் சிலர் வாந்தியே எடுப்பார்கள். மெல்ல மெல்ல, புதுமைக்குள் நுழைந்த பின், ஒரு வித வெட்கம் கலந்த முகத்துடன், தம்மையும் அதற்குள் கரைத்துக் கொள்வார்கள். எவருக்கும் தீமை இல்லையென உணர்ந்தவன் எப்போதும் தன்னை புதுப்பிப்பதில் பின் வாங்க மாட்டான். அவன் இந்த இரகம்.

எல்லோரும் முழுப்பெயர் சொல்லும் போது, அவனை நான் மட்டுமே தந்தை பெயரிலும், அவன் பெயரிலும் உள்ள முதல் எழுத்துகளை மட்டும் இணைத்துக் கூறி அழைப்பேன்.

அது எப்படி என்பதை கடைசியில் சொல்கிறேன்.

இப்போது என் கதைக்குள் வருகின்றேன்.
நான் வளர்ந்தது எனது மாமி வீட்டிலிருந்து. மாமியின் பிள்ளைகள் எவரும் ஒழுங்காக படித்தவர்கள் இல்லை படிப்பு வாசனையும் இல்லை. காரணம், மாமா இளவயதில் இறந்தபடியால் பிள்ளைகளை ஒழுங்காக வளர்க்க முடியாத நிலை. வழிகாட்டவும் யாரும் இல்லை. எனது கல்விக்காக மாமி வீட்டிலிருந்து கல்லூரி செல்ல ஒழுங்கு செய்து விட்டார்கள்.

பதின்மூன்று வயதிலேயே பல முடிவுகளை பல நேரங்களில் நானே எடுக்க வேண்டிய சூழல்.

கல்லூரி முடிந்து வீடு போனால் ஒரு வித தனிமை. வீட்டில் உள்ளவர்கள் யாவரும் இருபது வயதைக் கடந்தவர்கள்; கடைகளிலும் வேறு வேறு வேலை செய்பவர்களாகவும் இருந்தார்கள். குடிப்பழக்கம், சிகரெட், இன்னும் இன்னும் தங்களுக்கு எது பிடிக்குமோ, அந்தந்த வாழ்கை நெறியில் அலையும் கூட்டத்தின் மத்தியில் இந்த மான்குட்டி.

இந்தச் சூழலில் என் தோழியாக என் வாழ்வில் நுழைந்தவள் சுகந்தினி.

நானும் அவளும் ஒரே ஊர்தான். ஆனால் நாம் கண்பதும், வாழ்வதும் கல்லூரியில்தான். நாம் இருவரும் காதலர்கள் என்பதனை, அன்று உணர எம்மால் முடியாமல் போனதற்கு காரணம் எமக்குள் இருந்த அன்பு ஒரு தாயன்புபோல் அமைந்ததுதான்.

இன்று மணிக்கணக்கில் என் நண்பனுடன் கதைப்பேன். அன்று காதல் பற்றி கதைக்காத நாம், இன்று நம் காதல் பற்றி மட்டுமே அதிகமாக கதைப்போம். நானும் அவளும் அன்று கல்லூரியில் வாழ்ந்த காலத்தை நண்பனுக்கு காட்சி காட்சியாக விபரிப்பேன்.

எங்கள் முதல் சந்திப்பு இப்படித்தான் அமைந்தது.

என் வீட்டுக்கு முன் வீடுதான் கிருஷாந்தியின் வீடு. அவளும் சுகந்தினியும் கல்லூரியில் ஒரே வகுப்பு.

அவள் ‘கண்ணனின் பெற்றோர் வெளிமாநிலங்களில் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். அக்கா ஹாஸ்டலில் இருந்து படிக்கிறார். கண்ணன் மட்டும் எதிர்வீட்டில் மாமியுடன் இருந்து படிக்கிறார் . வீடு கண்ணனின் தகப்பனார் கட்டியதுதான். ஆனால் ஆட்சியோ மாமியின் பிள்ளைகள்தான்’ என்று சுகந்திக்கு சொல்லியதுடன்,
அந்த இடத்தில் எப்படி இவன் இருந்து படிப்பான் என்ற பரிவு உணர்வினையும் சுகந்தியின் மனதில் பதித்து விட்டாள்

சுகந்தி கல்லூரிக்கு காரில் செல்லும் போது என் வீட்டைக் கடந்து போக வேண்டும். அப்படி ஒரு நாள் என்னைப் பார்த்தபடி காரில் சென்றதை பார்த்தேன். அன்றே கல்லூரியிலும் என்னை அந்தப் பார்வையின் தொடர்ச்சியாக பார்த்தாள். எல்லாத் தீக்குச்சிகளுமே ஒரு உரசலில் தீப்பற்றிக் கொள்வதில்லை. நாம் அதற்கு விதி விலக்கானோம்.

என் மனதில் மீண்டும் மீண்டும் அதே பார்வை என்னைக் கடந்து சென்றது. அவளாலும் என்னைக் கடக்கமுடியவில்லை என்பதனை உணர்ந்திருப்பாள். அந்தக் காட்சியை அப்படியே என் நண்பனிடம் கூறினேன். அவன் தன் கண்களை மூடி ஏதோ பதிவுசெய்வதுபோல் சமிக்கை செய்தான். அதன் பின் என் முதுகிலும் தட்டி “இன்னும் தொடரு” என்பதுபோல் கூறினான்.

அவள் என்னைக் கேட்ட முதல் கேள்வி? “உங்களுக்கு யார் ஷர்ட் துவைத்துதருவது, யார் ஐயன் செய்வது?” என்பதே. நான் சற்றும் எதிர்பாராத ஒரு கேள்வி. “நான்தான்” என்றேன். அவள் “என் அண்ணனும் இருக்கிறானே” என முணுமுணுத்தாள்.

அடுத்த கேள்வி ?
“என்ன சாப்பாடு லஞ்சுக்கு கொண்டு வருவீங்கள்?” என்றாள். நான் “இங்கு கல்லூரி ஹாஸ்டல் சாப்பாடு” என்றேன். “தினமும் எப்படி ஒரே உணவு? முட்டைக் கூடக் கிடையாது?” என்றாள்.

அவளுக்கு 15 வயது. ‘எனக்கு அவள் காதலியா இல்லை அம்மாவா’ என்ற குழப்பம்.

அந்த நேரத்தில்தான் பாலும் பழமும் படம் வந்தது. அதுவும் அவள்தான் சொன்னாள்.“நல்ல படம். அதில் நான் பேச நினைப்பதெல்லாம் – பாட்டு அருமை,” என்றாள். அதன் பின் எந்த தேத்தண்ணி கடையிலும் அந்த பாட்டு வந்தால் நின்றுடுவேன். அதில் ஒரு வரி என் நெஞ்சைப் பிழிகிறது என்று என் நண்பனுக்கு சொன்னேன்.

“அடித்தாலும் அணைத்தாலும்
நான் உந்தன் பிள்ளை,
நான் உந்தன் பிள்ளை.

மடி மீது விளையாடும்
சேயாக வேண்டும்
நானாக வேண்டும்

பாவை உன் முகம் பார்த்து
பசியாற வேண்டும்
பசியாற வேண்டும்.”

“அப்படியா?” என்று அந்த கணத்தை மனதில் பதிவு செய்து கொண்டு, “சொல்லடா, அப்புறம்?” என்றான் என் நண்பன். அவன் வார்த்தைகளில் ஒருவித நெகிழ்ச்சி இருந்தது. அவன் நன்கு மனித உணர்வுகளைப் புரிந்தவன். இல்லை என்றால் எம் நட்பு இவ்வளவு தூரம் வளர்ந்து இருக்கமுடியுமா!

நான் என்கதையைத் தொடர்ந்தேன். ஒருநாள் அவள் நடந்துவர, நான் சைக்கிளில் வந்தேன். பின்பு அவளாகவே சொன்னாள், “எவரும் இல்லை, என்னை ஏற்றி செல்,” என்றாள். நண்பன் – “அட அப்படியா! சொல், சொல்!” என்று உற்சாகப்படுத்தினான்.

மேலும் சொன்னேன் :
பின் ஒருநாள் பஸ்சில் நானும் அவளும். பஸ்சில் வேறு பயணிகள் இல்லை. ஊரை அண்மித்த போது நாம் இருவர் மட்டுமே. திரும்பி ஒரு பார்வை பார்த்தாள். மறுகணம் நான் அவள் அருகில்.

“அவளுக்கு பரதநாட்டிய என்றால் உயிர். எத்தனைபேர் ஆடினாலும், அவள் மட்டும் எனக்கு, தெரிவாள்! எனக்கானவளாகவும் தெரிவாள்’ என்றேன்.

பின்பு என்னடா! என்றான். அவள் வாரத்தில் மூன்று நாள் என் வகுப்பறையில் உள்ள என் மேசையில் உணவை வைத்து செல்வாள்.

ஒருநாள் என்னை லஞ்ச் டைம் கல்லூரிக்கு பின் உள்ள ஒரு இடத்திற்கு தனியாக வரும்படி கூறினாள். என்ன துணிச்சல் அவளுக்கு!

நான் அவளுக்கு முன் சென்று ஒரு மரக்குற்றில் அமர்ந்து இருந்தேன்.

என் நண்பன் “அவள் வந்தாளா? எப்படி வந்தாள்? அன்று என்ன உடை உடுத்திருந்தாள்?” என்று ஏதோ “காணாமல் போனவள் பற்றிய விசாரணை“ போல் என்னைத் துளைத்துத் துளைத்து கேட்டான்.

நான் “அவள் சோகமாக வந்து என்னருகில் இருந்தாள். ஒரு வார்த்தை சொன்னாள் – ‘கண்ணன், நான் இந்த கல்லூரியை விட்டு நகரத்தில் ஒரு பெரிய மகளிர் கல்லூரிக்கு போகிறேன்’ என்றாள்.”

அன்று என்னை முதல் முறையாக மெல்ல அணைத்து விலகிச் சென்றாள். அந்த கணநேர அணைப்பில் காதலை உணர்ந்தேன்.

நண்பன் என்னைவிட அக்கறையாக நான் சொல்வதை எல்லாம் மனதில் பதிவு செய்து கொண்டான்.
நண்பனின் ஆர்வத்தை பார்த்தபோது எனக்கு ஒரு சந்தேகம்! ‘நண்பனுக்கும் என்னவள் மீது ஒரு கண்ணோ“ என்று.

அவள் பிரிந்தவள் பிரிந்தவள்தான்; தொடர்புகள் மெல்ல மெல்லக் குறைந்தன.

காதலுக்கு பலரும் பச்சைக்கொடி காட்டாத ஒரு கொடிய காலத்தில் நாம் அன்று வாழ்ந்து கொண்டிருந்தோம். “அப்பா, அம்மா, பெரியப்பா, சித்தப்பா, அண்ணா, தம்பி எல்லோரிடமும் விசா எடுத்துதான் காதல் தேசம் போகவேண்டும்,” என்றேன்.

நண்பன் சிரித்தான்.
“அது காதல் அல்ல, அது தடுமாற்றம் – உனக்கு மட்டுமல்ல, இருவருக்கும்,” என்றான். மேலும் நண்பன் சொன்னான்:

“இன்று என்னோடு கதைத்தவை எல்லாம், அன்று ஒரு போன் இருந்தால் நீ காட்சியாக்கி இருப்பாய். ஆனால் நான் உன் நண்பன் – என்னால் முடிந்ததை செய்தேன்,” என்று நீட்டினான்.

என் நண்பனை ஐயங்கரன் ஆதவனை முன் எழுத்துக்கள் சொல்லியே அழைப்பேன் என்று ஆரம்பத்தில் சொன்னேன்.

அவன் இவன்தான் – ஆதவன் (யு) ஐயங்கரன் (ஐ)
நண்பனை நான் யு.ஐ. என்றே அழைப்பேன்.
இப்போது நான் மட்டுமல்ல யாவருமே
யுஐ என்றே அழைக்கின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *